நா.வே.அருளின் "புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை | Puratchikkum GSTya? Tamil Kavithai | சிறந்த தமிழ் கவிதைகள் pdf | www.bookday.in

நா.வே.அருளின் “புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?” கவிதை

“புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?” கவிதை
*********************************
இன்பத்தில் கொடிகட்டும்
இகலோக வாழ்க்கை வேண்டுமா?
என்னுடன் வாருங்கள்!…

கடைசி வரையிலும்
என் கவிதையைக் கேளுங்கள்
இகலோகத்தில்
இன்பம் சித்திக்கும்

என் கவிதை சொல்வதைக்
கடைப்பிடித்து வாழுங்கள்
உங்களுக்கு –
நிகழ்கால இன்பம்
நிச்சயம் உறுதி

“கம்யூனிஸ்டுகளின் கவசம் விரும்பிய
நா.வே.அருள் எனும் தோழன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அரசியல் கணித்து
நேசமுடன் ஒரே நினைவதுவாகி
கம்யூனிஸ்டுகளின் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாருறு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து பேரணிவர
அஷ்ட திக்குள்ளோர் ஆர்ப்பாட்டம் மறியலில்
திசை மக்கள் எல்லாம் சேர்ந்தங்கு வருவார்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்”

*****

இன்பத்தில் கொடிகட்டும்
இகலோக வாழ்க்கை வேண்டுமா?
என்னுடன் வாருங்கள்!…

உழைப்பவன்
உழைப்பைச் சுரண்டுபவன்
இதுவரைக்குமான
இகலோக யுத்தமே
இவர்கள்
இருவருக்கும் இடையில்தான்!

லெனின் கணித்தது
வர்க்கப் போரின் வாய்பாடு

உழைப்பவனுக்கும்
உழைப்பைச் சுரண்டுபவனுக்கும்
என்ன வித்தியாசம்?

உழைப்பவனுக்கு
ஒரு கோடி முகங்கள்
ஆனால்
முகமே இல்லை என்று
முனங்கி அழுபவன்

உழைப்பைச் சுரண்டுபவனுக்கு
முகமே இல்லை
ஆனால்
முப்பத்து முக்கோடி முகமூடிகள்

இன்பத்தில் கொடிகட்டும்
இகலோக வாழ்க்கை வேண்டுமா!
என்னுடன் வாருங்கள்…

பரலோகத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பவன்
உங்கள்
பகைவன்!
நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்

கடவுள் கவனித்துக் கொள்வார் என்பவன்
சாத்தானின் நண்பன்!
கடவுளுக்குத் தெரியாமலேயே
கடவுளுக்குக் குழி தோண்டுபவன்

புரட்சித் தலைவர்
புரட்சித்தலைவி
புரட்சி நாயகன்
புரட்சிக் கலைஞர்
புரட்சிப் புல்டோசர்
புரட்சிப் பொக்லைன்
இத்யாதி இத்யாதி
ஆறடி பேனர்களாக
அங்கங்கும் நிற்கிறார்கள்

அன்று ரஷ்யாவில்
வாழ்க்கையில் இருந்த புரட்சியை
இன்று இந்தியாவில்
வெறும் வார்த்தைகளில்
வரவழைத்துவிடுகிறார்கள்

புரட்சிக்கு
இவர்கள் போட்ட ஜிஎஸ்டிதான்
நரேந்திர தபோல்கர்
கோவிந்த் பன்சாரே
கல்புர்கி
கௌரி லங்கேஷ்
தியாகிகளின் மரணங்கள்

அந்தப் புளுகு மூட்டைகளின் போர்வைகளை
விலக்கிப் பாருங்கள்
வாழ்நாள் முழுவதும்
அவர்களின் முகம் பார்த்த
நிலைக் கண்ணாடிகளை
நீங்களே பாருங்கள்….

புரட்சியைத் தங்கள் பெயருக்கு
முன்னொட்டாய்ப் போட்டவர்கள்
ஏழைகளின் கண்ணீர்த் துளிகளில்
நதிகள் தயாரித்தவர்கள்
ஏழைகளின் ரத்தத்தில்
சாராயம் காய்ச்சியவர்கள்
இவர்கள் எல்லோரும்
உங்கள் இகலோக வாழ்க்கையின்
இரகசியத் திருடர்கள்

அந்தப் பட்டியலைக் கொஞ்சம்
படித்துப் பார்க்கலாம்…

பட்டுக்கோட்டையின் சொற்களைக்
கடன் வாங்கி
பதவிக்கு வந்தவர்

பாடையில் நிற்பதற்கு இடம் கேட்டு
பங்குக்கு வந்தவர்

பாடைப் பங்குக்குப்
பங்காளியாய் வந்தவர்

அதிமுக தோழர்களே

அவரைக்
கனபாடி என்று கணக்குப் போடாதீர்கள்
அவர்
எடைக்குப் போடவேண்டிய
பழைய
இரும்புத் தகரம்!

உங்களை விற்பதற்காகவே அவசர அவசரமாக
கடையைக் கைப் பற்றியவர்!

ஆரியத் தீயால்
அம்மணமாய் எரிகிறது
அவர்கள் கட்சி

அடுத்தொருவர்
முக்கி முக்கிக் காணும்
முதல்வர் கனவில்
நாற்பத்தொரு உயிர்களை
நரபலி கேட்டவர்
களப்பலியானது கரூர்

குஜராத் மாடல் என்று
கொக்கரிப்பவர்களைக்
கேள்வி கேளுங்கள்
“முஸ்லிம்களைக் கொன்றால் என்னவாகலாம்?”

“முதல்வர் ஆகலாம்”

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைப்
பதறாமல் கேளுங்கள்:
“பருப்பு சாதமே பார்க்காத நாங்கள்
பத்து சதவிகிதம் பாயசம் கொடுத்தோமே
உங்களுக்கு
நெஞ்சில் ஏனிந்த
நெருப்பு?”

சாதி
உங்கள் சட்டையைக் கழற்றிக் கொண்டது
மதம்
உங்கள் தோலை உரித்து விட்டது
உங்கள் மிச்சத்திற்காகக்
காத்திருக்கின்றன
சில கழுகுகள்

இவர்களெல்லாம்
கொள்கையில்லா அரசியலின்
கொலையாளிகள்

அரசியலைச்
சாக்கடையாய் ஆக்குவதற்குப்
படையெடுக்கும் பன்றிக் குட்டிகள்

வீடு நுழையக் காத்திருக்கும்
ரத்த வேட்டைக்காரர்கள்

ரஷ்ய ரஸ்புடின்களின்
ரகசிய அவதாரங்கள்!

இப்போதேனும்
கம்யூனிஸ்டுகளைக்
கட்டி தழுவுங்கள்
அவர்கள் தான் மக்களுக்காக மரணத்தைத் தழுவுபவர்கள்
காமராஜர்
அண்ணா
கலைஞர்
இன்று –
கம்யூனிஸ்டுகள்

அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்கள்
பதவி பால்வாடியில் பால் குடிக்காதவர்கள்
ஊழல் சாக்கடையில் புரளாதவர்கள்

டெல்லியில்
விவசாயப் போராட்ட வெற்றியின்
வெண்மணி விதைகள்

சமத்துவபுரம் கருத்துருவை
கலைஞர் யோசித்தார்

தமிழ்நாட்டையே சமத்துவ புரமாக்க
கம்யூனிஸ்ட்கள் யோசிக்கிறார்கள்

இருமடங்குப் புரட்சியால்தான்
இந்திய விடுதலை சாத்தியமாகும்
ஏனெனில் –
ரஷ்யா
வெறும்
வர்க்கப் போரின் வாய்பாடு
இந்தியா
சாதி மத சனாதனத்தின் தாய்நாடு
இங்கு
குறுக்குசால் ஓட்டும்
குட்டிக் குட்டி ஜார் மன்னர்கள்!

திராவிடம் தான் இப்போது
சுரணையுள்ள சொந்த பந்தம்
சுயமரியாதையின் சமூக நீதி ஒப்பந்தம்
வழியெங்கும்
ஏகாதிபத்தியத்தின் கும்மிருட்டு
மறந்து விடாதீர்கள்
சமத்துவபுரம் போய்ச் சேர
மார்க்சியம் தான்
தீப்பந்தம்

கம்யூனிஸ்டுகளைக்
கட்டி தழுவுங்கள்
அவர்கள் தான் மக்களுக்காக மரணத்தைத் தழுவுபவர்கள்

எழுதியவர் : 

✍🏻 நா.வே.அருள்

(நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் நடத்திய பொதுக் கூட்டத்தில் வாசித்த கவிதை)

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ராமச்சந்திர வைத்தியநாத்

    திராவிடம் தான் இப்போது
    சுரணையுள்ள சொந்த பந்தம்
    சுயமரியாதையின் சமூக நீதி ஒப்பந்தம்

    அடிச்சுத் துவைச்சுட்டீங்க தோழரே
    திக்கு முக்காடிட்டேன்

    மேலும் பல புரட்சிகர கவிதைகளை படைத்து எங்கள் அஞ்ஞானத்தை அகற்றிடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *