புரட்சியின் மகளே வருக! – அ.பாக்கியம்

புரட்சியின் மகளே வருக! – அ.பாக்கியம்




அலெய்டா குவேரா. சேகுவேராவின் மகள் என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் அவரது தந்தை வழியில் புரட்சிகரமான களப்பணிகள் மூலமாக இன்று உலகின் முற்போக்காளர்களால் வரவேற்கப்படுகிறார்.

அலெய்டா குவேரா மார்ச். இதுதான் இவரின் முழு பெயர். எர்னஸ்டோ “சே” குவேரா மற்றும் அவரது இரண்டாவது மனைவி அலெய்டா மார்ச் ஆகியோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளின் மூத்த மகள். குவேரா என்பது தந்தை வழி குடும்பப் பெயர். மார்ச் என்பது தாய் வழி குடும்பப் பெயராகும்.

அலெய்டா ஹவானாவில் உள்ள வில்லியம் சோலார் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். குழந்தை மருத்துவத்துறையில் நிபுணராக செயலாற்றும் திறன் படைத்தவராக உள்ளார்.
ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டிலும் மத்திய அமெரிக்காவின் ஈக்குவடார், நிகரகுவா நாட்டிலும் நெருக்கடியான காலகட்டங்களில் மருத்துவ குழுவிற்கு தலைமையேற்று பணியாற்றி இருக்கிறார்.

அங்கோலாவில் கியூபா மருத்துவ குழுவுடன் சென்று நீண்ட காலம் பணியாற்றியதை நினைவு கூர்ந்து உள்ளார். அங்கோலாவில் பணியாற்றியதை மறக்க முடியாத அடையாளமாக கருதுகிறார்.

“பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. சில சமயங்களில் என்னால் பல குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் துக்கமும், வருத்தமும் என்னுடன் என்றென்றும் இருக்கும். அங்குள்ள இனவெறி, மனித சுரண்டல், மனித உயிர்கள் மீதான அலட்சியம் ஆகியவற்றிற்கு எதிராக என்னை செயல்பட தூண்டியது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல் வளரும் நாடுகளில் மனித உரிமை மீறலுக்கு எதிரான போராளியாகவும் களம் கண்டு வருகிறார்.

“சாவேஸ், வெனிசுலா மற்றும் புதிய லத்தீன் அமெரிக்கா” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இதற்காக 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸை நேர்காணல் செய்தார். இந்த புத்தகம் ஒரு ஆவணப்படமாக மாற்றப்பட்டது.

பொலிவேரியன் புரட்சியைப் பற்றி விவாதிக்கும் சாவேஸின் நேர்காணலின் பகுதிகள், கியூபா மனிதாபிமான மருத்துவர்களின் நேர்காணல்கள், ஏப்ரல் 2002 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைப் பற்றி ஜெனரல் ஜார்ஜ் கார்னிரோவின் நேர்காணல் ஆகியவை முக்கிய ஆவணமாக இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மைக்கேல் மூரின் “சிக்கோ” திரைப்படத்தில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் பின்னணியில் உள்ள தத்துவத்தைப் பற்றி மைக்கேல் மூரிடம் நடத்திய நேர்காணல் புகழ்பெற்றது.

மைக்கேல் மூர் அமெரிக்க பட தயாரிப்பாளர், எழுத்தாளர், இடதுசாரி களசெயல்பாட்டாளர். “சிக்கோ” மைக்கேல் மூரின் 2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் ஆவணத் திரைப்படமாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் வணிகமய சுகாதார அமைப்பை அம்பலப்படுத்திய திரைப்படமாகும்.

நாட்டின் சுகாதார காப்பீடு மற்றும் மருந்துத் துறையில் கவனம் செலுத்துகிறது. திரைப்படம். கனடா, பிரிட்டன், பிரான்ஸ், கியூபா ஆகிய நாடுகளின் லாபநோக்கற்ற உலகளாவிய சுகாதார அமைப்புகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க சுகாதார அமைப்பை அம்பலப்படுத்திய ஆவணப்படம்.

காங்கோவில் புரட்சி நடத்துவதற்காக சேகுவேரா கியூபாவை விட்டு வெளியேறிய பொழுது அலெய்டாவிற்கு நான்கு வயது. பொலிவியாவில் அவர் சாகடிக்கப்பட்ட பொழுது அலைடாவிற்கு 7 வயது.

எனினும் சேகுவாராவை பற்றிய இனிமையான நினைவுகளை அலெய்டா நினைவு கூறுகின்றார். எங்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க என் தந்தைக்கு வாய்ப்பு இல்லை. அவர் வெளியில் இருக்கும் போது, ​​பெரும்பாலான நேரங்களில், அவர் எங்களுக்கு தபால் அட்டைகளில் கதைகள், வரைபடங்களை அனுப்புவார். எங்களுக்கான விலங்கு கதைகளை எழுதி அனுப்புவார்

அலெய்டா தனது தந்தையின் பணிகள் எங்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்தது என்றும், உலகின் பல பகுதிகளில் நான் உரையாற்றுகிற பொழுது அவரது எழுத்துக்களை குறிப்பிடுவதாகவும் அலெய்டா நினைவு கூறுகிறார்.

சேகுவேராவின் நாட்குறிப்புகளும் அதில் உள்ள அரசியல் நுண்ணறிவு, முதிர்ச்சி எனக்கு உதவியாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்.

கிளர்ச்சியின் அடையாளமாகத் தனது தந்தையை பரவலாகப் பயன்படுத்து வதையும், “நான் சே போல இருக்க விரும்புகிறேன், இறுதி வெற்றி வரை போராட விரும்புகிறேன்” என்று ஒரு குழந்தை அவரது படத்தை உயர்த்திப் பிடித்து செல்லும் பொழுது ​​​​எனக்கு பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று உணர்ச்சி வசப்படுகிறார்.

என் தந்தைக்கு எப்படி நேசிப்பது என்று தெரியும். நேசிக்கும் திறனே அவரது மிக அழகான அம்சம். ஒரு சரியான புரட்சியாளராக இருக்க, நீங்கள் ஒரு ரொமான்டிக்காக இருக்க வேண்டும்.

சேகுவாராவின் நம்பிக்கையின் மையமாக இருந்தது மற்றவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது என்பதாகும். நாம் அவருடைய முன்மாதிரியை பின்பற்றினால் மட்டுமே உலகம் அழகானதாக இருக்கும் என்று நினைவு கூறுகிறார்.

தற்போது அலெய்டா குவேரா , கியூபாவில் ஊனமுற்ற குழந்தைகளுக்காக இரண்டு இல்லங்களையும், அகதிக் குழந்தைகளுக்காக இரண்டு இல்லங்களையும் நடத்துகிற பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வருகிறார்.

கிழக்கு கியூபாவில் உள்ள ரியோ காடோவைச் சுற்றியுள்ள அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிற பகுதியில் மருத்துவ உதவியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு பல சூறாவளிகளால் பேரழிவிற்குள்ளான இளைஞர் தீவில் (island of youth) பணியாற்றி இருக்கிறார். இந்தத் தீவு கியூபாவின் இரண்டாவது மிகப்பெரிய தீவு மட்டுமல்ல மேற்கிந்திய தீவுகளில் ஏழாவது பெரிய தீவாகும். கியூபாவின் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் ஒரு நகராட்சியாக இந்த தீவு செயல்படுகிறது. இந்த தீவிற்கு இளைஞர்களின் தீவு என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தீவில் அலெய்டா சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்றினார்.

சர்வதேச மாநாடுகளில் அரசியல் மற்றும் சுகாதாரம் தொடர்பான தலைப்புகளில் பிரபலமான அறிவு ஜீவிகளுடன் இணைந்து சொற்பொழிவு ஆற்றக்கூடிய நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சேகுவேராவின் மகளாக தொடர்ந்து கியூபா புரட்சியை பாதுகாப்பதிலும், சர்வதேச புரட்சிகர சக்திகளுக்கு உதவுவதிலும், மருத்துவ சர்வதேசியத்தை முன்னெடுப்பதிலும், கள செயல்பாட்டாளராக அலைடா சேகுவேரா திகழ்வது உத்வேகம் நிறைந்ததாக இருக்கிறது.

போர்க்கள தேசத்தின் புதல்வியே வருக!
அ.பாக்கியம்
நன்றி: தீக்கதிர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *