“நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!”
கூட்டு வேட்டையில் மீன்களைத் தெறிக்க விடும் ஆக்டோபஸ்
புரிதலைப் புதுப்புக்கும் புதிய ஆய்வுகள் – 7
தனித்தே வாழும் ஆக்டோபஸ்கள் உண்மையில் பலவகை மீன்களோடு சேர்ந்து வேட்டையாடுகின்றன. மேலும் அவை அடங்காத தனது வேட்டைத் துணைகளை ஒரு சாதுர்யமான அடியால் ஒழுங்குபடுத்துகின்றன. இந்த தகவல் அறிவியலாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆக்டோபஸ்களின் அற்புதமான புத்திசாலித்தனம், பொதுவாக சமூகமாக இருப்பதோடு தொடர்புடைய ஒரு நடத்தைப் பண்பாகும். ஆனால் இவையோ பெரும்பாலும் தங்கள் சொந்த இனத்தின் தோழமையை நாடுவதில்லை என்பது நீண்டகாலமாக இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது.
ஆக்டோபஸ் ஒரு மீனை அறைகிறது. (Eduardo Sampaio)
இப்போது, ஒரு புதிய ஆய்வு அவற்றின் குறிப்பிடத்தக்க புத்திசாலித்தனத்திற்கு மற்றுமோர் அதிர்ச்சியூட்டும் உதாரணத்தை வழங்குகிறது.
வடகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்திற்கு இடையே உள்ள செங்கடல், ஆக்டோபஸ்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வாழும் இடமாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் இந்த உயிரினங்களின் இலக்கு ஒன்றே.
“அவற்றை விட சிறியதாகவும், அவற்றின் வாயில் பொருந்தக்கூடியதாகவும் இருக்கும் எதையும் அவை சாப்பிட முயற்சி செய்யும்” என்று ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் அனிமல் பிஹேவியரின் நடத்தை உயிரியலாளரான எட்வர்டோ சாம்ப்பையோ கூறுகிறார்.
பெரிய குழுக்களாக பவளப்பாறைகளுக்கு இடையே வெவ்வேறு இனங்கள் ஒன்றாக வேட்டையாடுவதைப் பற்றிய தகவல்களால் அவர் ஈர்க்கப்பட்டார்.
Nature Ecology & Evolution இதழில் 23, செப்டம்பர் 2024 அன்று வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், சாம்ப்பையோ மற்றும் அவரது சக ஊழியர்கள், வேட்டை முடிவுகளை எடுக்கும் போது உயிரினங்கள் தலைமையை பகிர்ந்து கொள்கின்றன என்று வாதிடுகின்றனர்.
இந்த ஆய்வுக்கு முன், ஆராய்ச்சியாளர்களிடையே ஆக்டோபஸ் (குறிப்பாக, பகல் நேர வேட்டையில் ஈடுபடும் Octopus cyanea இனம்) மட்டுமே குழுவில் அனைத்து வேலையையும் செய்து வருகிறது என்று கருதப்பட்டது. மீன்கள் – பொதுவாக வெவ்வேறு வகையான நவரை மீன்கள் (goatfish – Mullidae) – இலவசமாக சாப்பிடுகின்றன என்று கருதிவந்தோம்.

அதாவது, ஆக்டோபஸ் தனியாக வேட்டையாடிக் கொண்டிருக்கும். மீன்கள் ஆக்டோபஸ் வெளியேற்றிய இரையைப் பிடித்து, வெறுமனே பயன்படுத்திக் கொள்ளும் என்று நாம் நினைத்திருந்தோம்.
ஆனால் சாம்ப்பையோ, இந்த முடிவுகள் பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் இருந்து பார்த்ததன் மூலம் எடுக்கப்பட்டன என்று கூறுகிறார். இன்னும் சிக்கலான ஒன்று நடக்கக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். எனவே அவர் ஸ்கூபா டைவிங் செய்து ஆராய முடிவு செய்தார்.
“முதலில் நீங்கள் ஆக்டோபஸ்ஸைக் கண்டுபிடிக்க வேண்டும், இது எளிதாக கண்ணுக்குத் தென்படாமல் வாழும் ஒரு விலங்கு” என்று அவர் கூறுகிறார். “நீங்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும், அது வேட்டையாடுவதைப் பதிவு செய்ய வேண்டும், அது தப்பி ஓடாமல், நீங்கள் அங்கே இல்லாதது போலவே இயல்பாக வேட்டையாடத் தொடங்கும் அளவுக்கு உங்களை அது பழகியிருக்க வேண்டும்.”
ஒரு மாதம் ஸ்கூபா டைவிங்கிற்குப் பிறகு, சாம்ப்பையோ இக்குழுக்களின் மூன்று அல்லது நான்கு மணி நேர வேட்டையை வெற்றிகரமாக பதிவு செய்ய முடிந்தது.
“மீன்களின் குழுக்கள் ஆக்டோபஸ்ஸை வெறுமனே பின்தொடரவில்லை என்பதை நான் உடனடியாக புரிந்துகொண்டேன், ஏனெனில் அவை நிறுத்தி – பின் செல்லுதல் முறையில் நகர்கின்றன என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம்” என்று அவர் கூறுகிறார். “ஒவ்வொரு முறை நிறுத்தம் நிகழும் போது, மீன்கள் இரையைத் தேடிச் செல்லத் தொடங்குவதை நாம் எப்போதும் காணலாம்”

பின்னர் நடத்தப்பட்ட பகுப்பாய்வு அவற்றின் கூட்டு வேட்டையின் சிக்கலான தன்மையை உறுதிப்படுத்தியது.
“மீன்கள் சூழலை ஆராய்கின்றன” என்று சாம்ப்பையோ கூறுகிறார். “அவை இரையைக் கண்டுபிடிக்கின்றன. பின்னர் ஆக்டோபஸ் மீன்கள் பரிந்துரைக்கும் இலக்குகளுக்கு இடையில் தனது விருப்பத்தைத் தேர்வு செய்கிறது – ஆக்டோபஸ் அங்கு சென்று இரையை வெளியேற்றுகிறது. பின்னர் முழு குழுவும் ஆக்டோபஸ் உடன் நகர்கிறது.”
மீன்கள் ஆக்டோபஸ்க்கு சாத்தியமான இலக்குகளை பரிந்துரைக்கின்றன. ஆக்டோபஸ் தான் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கிறது. சாம்ப்பையோ, உயிரினங்கள் தங்கள் பணிகளையும், தலைமையையும் பகிர்ந்து கொள்கின்றன என்று கூறுகிறார்.
“ஆக்டோபஸ் அடிப்படையில் குழுவின் முடிவெடுப்பாளராக செயல்படுகிறது” என்று சாம்ப்பையோ கூறுகிறார்.
உணவு பகிரப்படுவதில்லை. உணவு யாருக்கு அகப்படுகிறதோ, அதுவே சாப்பிடுகிறது. ஆனால் வேட்டையை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பதால், இறுதியில் குழு உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிட முடிகிறது.
சாம்ப்பையோ, இதன் விளைவு மீன்களுக்கு உதவிகரமாக இருக்கிறது என்கிறார்.
“மீன்களால் அடைய முடியாத இரையை அடையும் வாய்ப்பு அவற்றுக்கு கிடைக்கிறது. ஏனெனில் ஆக்டோபஸ் இல்லாமல் அவற்றால் பவள பாறைகளின் இடுக்குகளில் உள்ள இரையை அடைய முடியாது” என்று கூறுகிறார். ஆக்டோபஸ்ஸினால் எளிதாக இரையை இடுக்குகளிலிருந்து வெளியேற்ற முடிகிறது.
குழுவாக வேலை பார்ப்பது ஆக்டோபஸ்-க்கும் நன்மை பயக்கிறது. இது தனியாக இருக்கும்போது உண்பதை விட அதிகம் உண்கிறது, அதுவும் மிகக் குறைந்த முயற்சியுடன். இரையைத் தேடுவதை மீன்கள் எளிதாக்கித் தருகின்றன.

எந்த ஒரு நல்ல விருந்தாக இருந்தாலும், அதனைக் குலைப்பதற்கென்று சில சந்தர்ப்பவாதிகள் இருக்கத்தானே செய்வார்கள். இந்தப் பணியை இந்த விருந்தில் செய்பவை கருந்துடுப்பு களவாய் ( blackfin grouper) மீன்களாகும்.
கருந்துடுப்பு களவாய் மீன்கள் பக்கவாட்டில் காத்திருந்து பார்க்கின்றன. இரையைப் பார்த்தவுடன் அவை விரைந்து அதைப் பெற முயற்சி செய்கின்றன.
ஆனால் இந்த கருந்துடுப்பு களவாய் மீன்கள் இலவசமாக சாப்பிடுவதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட பாதி நேரம், ஆக்டோபஸ் அவற்றை அடிக்கிறது. முதல் முறையாக அதைப் பார்த்தபோது, சாம்ப்பையோ சிரித்துவிட்டார்.
ஆக்டோபஸ் மற்ற மீன்களையும் அடிக்கிறது என்று சாம்பையோ கூறுகிறார், ஆக்டோபஸ் தங்கள் பங்கைச் செய்யாமல் ஏமாற்றும் மீன்களையும் அல்லது மிக நீண்ட நேரம் சோம்பேறித்தனமாக நிற்கும் குழுவினரையும் கூட அடிக்கிறது.
“இந்த அடியின் பின்னர், குழு அதிக சுறுசுறுப்பாக இயங்கத் துவங்குகிறது. பின்னர் ஆக்டோபஸ் அடிப்பதை நிறுத்துகிறது.”
சாம்ப்பையோ, சில மீன் இனங்கள் தங்களுக்குள்ளேயே வேட்டைக்கு பங்களிக்காத மற்ற மீன்களைத் தாக்கியதையும் உற்று நோக்கினார்.
“எனவே இங்கே எந்த மீன்கள் பெரும்பாலும் அடுத்தவர் உழைப்பில் இலவசமாக சவாரி செய்கின்றன என்பதை அவை புரிந்து வைத்துள்ளன” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் மீன்கள் ஆக்டோபஸ்ஸை ஒருபோதும் காயப்படுத்தவில்லை. ஆக்டோபஸ் வலிமையானது என்பதால் அல்ல, மாறாக “ஆக்டோபஸ் போனால் யாருக்கும் எதுவும் கிடைக்காது என்பதை மீன்கள் புரிந்துகொண்டிருக்கின்றன” என்று சாம்ப்பையோ நினைக்கிறார்.

விலங்குகளில் இது போன்ற கலப்பு இன வேட்டை மற்றும் உணவு சேகரிப்பு முறைகளுக்கு ஏற்கனவே உதாரணங்கள் இருந்தாலும், நேரடியாக மற்றவர்களின் நடத்தையை திருத்துகிறதை நாம் இப்போதுதான் பார்த்திருக்கிறோம்.
இந்த ஆய்வு முடிவுகள் தலைமைத்துவம் மற்றும் சமூகத்தன்மை பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகின்றன. இயற்கையில் சமூக தொடர்புகளின் சிக்கலான தன்மை மற்றும் தகவமைத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக இது இருக்கிறது.
குழுவாக வேலைகளைப் பகிர்ந்து செய்வதை நாமும் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்தானே! ஆனால் நண்பர்களே! ஆக்டோபஸிடமிருந்து அடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ளாதீர்கள். என்ன ஒரு அடி!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தொடர்ந்து அறிவியல் பேசலாம்!
வீடியோ இணைப்பு
ஆய்வுக் கட்டுரை இணைப்பு
கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

