சஹாராவின் தூசிக்காற்றும் – உங்கள் மூச்சுக்காற்றும்!
ஓர் ஆச்சரிய தொடர்பு!
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 8
ஒரு முறை ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். நீங்கள் சுவாசித்த இந்த மூச்சுக்காற்றின் பின்னணியில் ஒரு பாலைவனம் இருக்கலாம் என்றால் அது ஆச்சரியமாக இருக்கிறதுதானே!
சஹாரா பாலைவனத்திலிருந்து வீசும் தூசிக்காற்று, அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் பல உயிரினங்களின் முக்கிய ஊட்டச்சத்து ஆதாரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கலிபோர்னியா, ரிவர்சைட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு, இந்த தூசிக்காற்றில் உள்ள இரும்பு, நீண்ட தூரம் பயணிக்கும் போது உயிரினங்களால் எளிதில் உறிஞ்சக்கூடிய வடிவமாக மாறுகிறது என்கிறது.
இரும்பு என்பது உயிரினங்களுக்கு இன்றியமையாத ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும், இது சுவாசம், ஒளிச்சேர்க்கை மற்றும் DNA உருவாக்கம் போன்ற பல செயல்முறைகள் நடக்க உதவுகிறது.
கடலில் இரும்பின் கிடைக்கும் தன்மை அதிகரித்தால், பைட்டோபிளாங்க்டன் செழிப்படையும். அதன் மூலம் நிலைநிறுத்தப்படும் கார்பனின் அளவை அதிகரிக்க முடியும். இதனால் உலகளாவிய காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
நதிகள், உருகும் பனிப்பாறைகள், வெப்ப நீரூற்றுகள் மற்றும் காற்று ஆகியவற்றின் மூலம் இரும்பு கடலிலும், நிலப்பரப்பிலும் சேர்கிறது. ஆனால் இரும்பின் அனைத்து வேதியியல் வடிவங்களும் உயிரினங்களால் எடுத்துக் கொள்ளக்கூடியவை அல்ல.
“சஹாராவிலிருந்து மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலுக்கு காற்றில் பயணிக்கும் தூசியுடன் பிணைக்கப்பட்ட இரும்பின் பண்புகள், பயணத்தின் தூரத்துடன் சேர்ந்து மாறுகின்றன. அதாவது, பயண தூரம் அதிகரிக்கும் போது, இரும்பு உயிரியல் ரீதியாக அதிகம் செயல்படும் தன்மையைப் பெறுகிறது.” என்று புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான ஜெரமி ஓவென்ஸ் கூறினார்.
“இந்த உறவு, வளிமண்டலத்தில் உள்ள வேதியியல் செயல்முறைகள், இரும்பினை உயிரினங்களால் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுகின்றன என்பதைக் குறிக்கிறது.”
ஓவென்ஸ் மற்றும் அவரது சக ஊழியர்கள், சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டத்தினால் (IODP) அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதியிலிருந்து துளையிட்டு எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து மொத்த இரும்பின் அளவினையும், உயிரியல் ரீதியாக செயல்படத்தக்க இரும்பின் அளவினையும் அளந்தனர்.
அவர்கள், சஹாரா-சஹேல் தூசி வழித்தடத்தில் அவற்றின் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு பகுதிகளைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மாதிரிகளின் ஐசோடோப் தரவுகள் சஹாராவிலிருந்து வந்த தூசியுடன் ஒத்துப்போயின.
பின்னர் அவர்கள் ஒரு தொகுப்பான வேதிவினைகளைப் பயன்படுத்தி, இப்படிவுகளில் கார்பனேட், கோத்தைட், ஹேமடைட், மேக்னடைட் மற்றும் பைரைட் ஆகிய வடிவங்களில் உள்ள மொத்த இரும்பின் பங்கினைக் கண்டறிந்தனர். இத்தாதுக்களில் உள்ள இரும்பு, உயிரியல் ரீதியாக செயல்படும் தன்மையற்றதாக இருந்தாலும், கடற்பரப்பில் உள்ள புவியியல் செயல்முறைகளின் மூலம் உயிரியல் ரீதியாக செயல்படும் இரும்பின் வடிவங்களிலிருந்து உருவானவையாகும்.
முக்கிய கூறுகள்:
(A) இரும்பு துகள்களின் மூலம் (Source of Dust) – சஹாரா பாலைவனம்.
(B) காற்று (Wind) – இரும்பு துகள்களை எடுத்து கடலுக்கு கொண்டு செல்கிறது.
(C) வளிமண்டலத்தில் இரும்பு மாற்றப்படுதல் (Atmospheric Processing of Fe) – காற்றில் பயணிக்கும் போது இரும்பு துகள்கள் வேறுபட்ட வடிவங்களை எடுக்கின்றன.
(D) கடலில் இருந்து இரும்பு நீக்கப்படுதல் (Removal of Fesol from the system) – கடலில் உள்ள தாவரங்கள் (பைட்டோபிளாங்க்டன்) இந்த இரும்பை உறிஞ்சிக்கொண்டு வளரும்.
(E) அண்மைப்பகுதி கடலடிப்படிவுகள் (Proximal Bottom Sediments) – இரும்பு துகள்கள் கடலின் அடிப்பகுதியில் படிந்துவிடும்.
(F) சேய்மைப்பகுதி கடலடிப்படிவுகள் (Distal Bottom Sediments) – இரும்பு துகள்கள் கடலின் அடிப்பகுதியில் படிந்துவிடும்.
FeT: மொத்த இரும்பு
FeHR: உயிரியல் ரீதியாக செயல்படும் தன்மையுள்ள இரும்பு
FeSol: கடலில் கரைந்துள்ள இரும்பு
ஆய்வின் முடிவுகள், கடலடிப்படிவுகளில் உயிரியல் ரீதியாக செயல்படும் இரும்பின் விகிதம் கிழக்கிலிருந்து மேற்கே செல்லச் செல்ல குறைவாக இருந்ததைக் காட்டியது.
தூசிக்காற்றிலிருந்து கிடைத்த, உயிரியல் ரீதியாக செயல்படும் இரும்பின் அதிக பகுதி, கடல் நீரில் வாழும் உயிரினங்களால் பயன்படுத்தப்பட்டதை இது குறிக்கிறது. இதன் காரணமாக அது அடிப்பகுதியில் உள்ள படிவுகளைச் சென்றடையவில்லை.
“நீண்ட தூர வளிமண்டல பயணத்தின் போது, இரும்பின் தாதுப்பண்புகள் மாறி, உயிரியல் ரீதியாக செயல்படும் தன்மை அதிகரிக்கிறது. இந்த இரும்பு பின்னர் கடலின் அடிப்பகுதியை அடையும் முன்பு பைட்டோபிளாங்க்டன் மூலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது” என்று இந்த ஆய்வின் மற்றுமொரு ஆசிரியர் திமோதி லியோன்ஸ் கூறினார்.
காற்றில் தூசியுடன் பயணித்த இந்த இரும்பு, கடல்களிலும் கண்டங்களிலும் உள்ள உயிரினங்களுக்கு, உரமிடுதலைப் போல, உயிரியல் செயல்முறைகளைத் தூண்டுகிறது. அவற்றை செழுமைப்படுத்துகிறது.
“அமேசான் படுகை மற்றும் பஹாமாஸ் போன்ற பகுதிகளை அடையும் தூசிக்காற்று, அதன் நீண்ட பயணம் காரணமாக, உயிரியல் ரீதியாக செயல்படும் இரும்பை அதிக அளவில் கொண்டிருக்கலாம்” என்று லியோன்ஸ் கூறுகிறார்.
2015 ல் வெளியிடப்பட்ட ஆய்வொன்று, சஹாராவின் தூசிக்காற்றானது அமேசான் ஆற்றுப் படுகைக்கு சுமார் 22,000 டன் பாஸ்பரஸினை உரமாக ஆண்டுதோறும் வழங்குகிறது என்று கண்டறிந்தது.
சஹாராவிலிருந்த கிளம்பிய துசி, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கடலில் உள்ள பைட்டோபிளாங்க்டனுக்கு மட்டுமல்ல, அதற்கப்பால் உள்ள அமேசான் காடுகளின் தாவரங்களுக்கும் ஊட்டம் தருகிறது.
இந்த இரண்டு அமைப்புகளும்தான் நாம் அனைவரும் சுவாசிக்கும் ஆக்சிஜனின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நாம் சுவாசிக்கும் காற்றுக்கு சஹாரா பாலைவனத்துக்கும் கடமைப்பட்டவர்களாகிறோம்.
இந்த ஆய்வு, பூமியின் வெவ்வேறு பகுதிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதையும், ஒரு சிறிய தூசி துகள் கூட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தொடர்ந்து அறிவியல் பேசுவோம்!
கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்
இந்த ஆய்வு 20, செப்டம்பர், 2024 அன்று frontiers இதழில் வெளியிடப்பட்டது.
ஆய்வுக்கட்டுரை இணைப்பு :
https://doi.org/10.3389/fmars.2024.1428621
இத்தொடரின் முந்தைய கட்டுரையைப் படிக்க : “நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!” கூட்டு வேட்டையில் மீன்களைத் தெறிக்க விடும் ஆக்டோபஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.