பூஞ்சைகள் ஒலியைக் கேட்டு வளருமா?
சூழல் மீட்பில் புதிய நம்பிக்கை!
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 9
இசையைக் கேட்டுக்கொண்டே பணியாற்றுவதும், பயணிப்பதும் நம்மில் பலருக்கும் பிடித்திருக்கிறது. நம்மைப் போலவே, நுண்ணுயிரிகளுக்கும் இசை பிடித்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
புதிய ஆய்வில், தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பூஞ்சைகள் ஒலியினால் தூண்டப்படுகின்றன என தெரியவந்துள்ளது. ஒலி இசைக்கப்படும் போது அவை அதிகமாக வளர்கின்றன மற்றும் அதிக ஸ்போர்களை உருவாக்குகின்றன.
ஆஸ்திரேலியாவின் ஃப்ளின்டர்ஸ் பல்கலைக்கழகத்தின், நுண்ணுயிரியல் சுற்றுச்சூழலியல் நிபுணர் டாக்டர் ஜேக் ராபின்சன் தலைமையிலான குழு இந்த ஆய்வைச் செய்துள்ளது.

டிரைகோடெர்மா ஹார்சியானம் எனப்படும் பூஞ்சையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பூஞ்சைகள் தாவரங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துதல், வளர்ச்சியை ஊக்குவித்தல், மண்ணின் தரத்தை மேம்படுத்துதல் என பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியதாகும். இதன் காரணமாகவே இதனை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டாக்டர் ஜேக் ராபின்சன், The Conversation இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தங்களது ஆய்வினைப் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“நாங்கள் ஆய்வகத்தில் 40 பெட்ரி தட்டுகளில் பூஞ்சையை வளர்த்து, அவற்றில் பாதிக்கு ஒலிப்பதிவை இசைத்தோம். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என ஐந்து நாட்களுக்கு வெள்ளை ஒலியின் (White Noise) உயர் அதிர்வெண் ஒலி பதிவை இசைத்தோம். பின்னர் இரண்டு குழுக்களுக்கும் இடையே பூஞ்சை வளர்ச்சியின் அளவு மற்றும் ஸ்போர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டோம்.
தொழில்நுட்ப ரீதியாக, அதிர்வெண் 8 kHz மற்றும் ஒலி அளவு 80 dB ஆகும். இந்த சத்தம் பழைய பாணியிலான ரேடியோவின் சேனல்களுக்கு இடையில் வெளிப்படும் ஒலியைப் போன்றது.
சோதனை காரணங்களுக்காக நாங்கள் ஒற்றைத்தன்மை கொண்ட ஒலியைப் பயன்படுத்தினோம். ஏனெனில் இதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இயற்கை அல்லது பன்மய ஒலிக்கோர்வைகள் இன்னும் சிறப்பாக இருக்கலாம். இது குறித்து விரைவில் மேலும் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

ஒலி பூஞ்சைகளைத் தூண்டியதைக் கண்டறிந்தோம். ஒலி பயன்படுத்தப்படாத கட்டுப்பாட்டு மாதிரிகளை விட, இவற்றின் வளர்ச்சி விகிதம் ஏழு மடங்கிற்கும் அதிகமாகவும், ஸ்போர்களின் உற்பத்தி நான்கு மடங்கிற்கும் அதிகமாகவும் அதிகரித்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.”
அதாவது, ஒலியானது இந்த பூஞ்சைளின் வளர்ச்சியையும், இனப்பெருக்கத்தையும் தூண்டியுள்ளது. இதைப் பயன்படுத்தி தாவர வளர்ச்சியை ஊக்குவிக்க முடியுமா? மண்வளத்தை மேம்படுத்த முடியுமா? என்ற புதிய கேள்விகளையும் இந்த ஆய்வு எழுப்பியுள்ளது.
ஒலி நுண்ணுயிரிகளின் சவ்வுகளில் உள்ள சிறப்பு ஏற்பிகளைத் தூண்டுகிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த ஏற்பிகள் வளர்ச்சிக்கு பொறுப்பான மரபணுக்களை இயக்குவது அல்லது நிறுத்துவது போன்றவற்றை செல்களில் தூண்டலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டாக்டர் ராபின்சன் கூறுகையில், எங்களது ஆய்வின் அடுத்த படிநிலைகள், ஒலிக்கோர்வைகளுக்கு நுண்ணுயிரிகளின் பதில் வினைகளை ஆய்வு செய்வது, தாவர ஆரோக்கியத்தில் எவ்வாறு இதனைப் பங்களிக்க வைப்பது என ஆய்வது, பின்னர் ஆய்வுக்கூடத்திற்கு வெளியே இதனைப் பெரிய அளவில் முயற்சிப்பது என்பதாகும் என்று கூறுகிறார்.
“சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நன்மை பயக்கும் ஒலிகளின் ‘உயிரியல் பன்மய ஒலிக்கோர்வைகளின் பிளே லிஸ்டை’ உருவாக்குவதை நாங்கள் கற்பனை செய்கிறோம்.”
“நாங்கள் ஒலியினை ரத்து செய்வதிலும் ஆர்வமாக உள்ளோம். இதன் மூலம், சேதப்படுத்தக்கூடிய சத்தங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க விரும்புகிறோம். உதாரணமாக, போக்குவரத்து மற்றும் தொழில்துறை சத்தங்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றனவா என்று கேள்விகளைக் கேட்கிறோம்.” என்கிறார் ஜேக் ராபின்சன்.
இந்த ஆய்வுக்குத் தூண்டுதலாக இவர்கள் ஆஸ்திரேலியாவில் பவளப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆரோக்கியமான பவளப்பாறை சூழலின் ஒலிகளை இசைப்பதன் மூலம் சேதமடைந்த பவளப்பாறைகளுக்கு இளம் மீன்களை ஈர்க்க முடியும். இது பவளப்பாறை மீட்சியைத் தொடங்க உதவுகிறது என ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்டஆய்வு (https://doi.org/10.1038/s41467-019-13186-2) கூறுகிறது.
மரங்கள் ஓடும் நீரால் உருவாகும் ஒலி அலைகளைக் கண்டறிந்து, அவற்றின் வேர்களை இந்த அதிர்வு நோக்கி வளரச்செய்கின்றன (https://doi.org/10.1007/s00442-017-3862-z) என மற்றுமோர் ஆய்வு குறிப்பிடுகிறது. இது போன்று வேறு சில ஆய்வுகளும் உள்ளன.
சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதில், ஒலி ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுவதற்கான வாய்ப்புகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த ஆய்வுக்கட்டுரையின் இணையாசிரியர் மார்ட்டின் ப்ரீட், “இந்த வகையான அணுகுமுறையின் சாத்தியம், உயிரியல் பன்மயத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மீட்டெடுப்பை துரிதப்படுத்துவதற்குமான முயற்சிகளில் முக்கியமானது.” என்று கூறுகிறார்.
சூழலுக்கும் ஒலிக்குமான தொடர்பைப் பற்றிப் பேசும் அறிவியலின் இப்பிரிவு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இதற்கு பெரும் சாத்தியம் உள்ளது.
சூழல் மீட்டெடுப்பின் எதிர்காலம் நாம் பார்ப்பதைப் பற்றியது மட்டுமல்ல, நாம் கேட்பதையும் பற்றியதும் கூட என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தொடர்ந்து அறிவியல் பேசலாம்!
இந்த ஆய்வுக்கட்டுரை நேற்று (02 அக்டோபர், 2024) Biology Letters இதழில் வெளியிடப்பட்டது. ஆய்வுக் கட்டுரை இணைப்பு
https://doi.org/10.1098/rsbl.2024.0295
கட்டுரையாளர் :

த. பெருமாள்ராஜ்
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் தொடரின் முந்தைய கட்டுரையைப் படிக்க : சஹாராவின் தூசிக்காற்றும் – உங்கள் மூச்சுக்காற்றும்! ஓர் ஆச்சரிய தொடர்பு!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: புவியின் ஆதி விவசாயிகள் - எறும்புகள்! - Book Day