“பூர்வாசிரமம்” சிறுகதை
மாம்பலம் ரங்கநாதன் தெருவில் அந்த மனிதரைப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகம் மாதிரியே இருக்கிறதே, யோசித்த கணத்திலேயே வேணுகோபாலாக இருக்குமோ என ஒரு சந்தேகம் தோன்றியது. வேணுகோபால் என் பால்ய கால நண்பன். திருச்சி உறையூரில் அடுத்தடுத்த வீடுகளில் எங்கள் குடும்பங்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். படிக்கிற காலத்தில் வேணுகோபால் படிப்பில் சற்று மந்தம்தான். சற்று விசித்திரமாக போக்குடையவன். கடைசி பெஞ்சில்தான் அவனுக்கு எப்போதும் இடம் ஒதுக்கப்பட்டது. வரிசைக்கிரமம் அவனது உயரம் காரணமாக கடைசி பெஞ்சுக்குத் தள்ளியது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும் போது எங்கேயோ விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பான். அவர்கள் சில சாதாரணக் கேள்விகளைக் கேட்டால் கூட பதில் சொல்ல மாட்டான்.
அவனுடைய அந்தப் பார்வையில்,பயமும் இருக்காது; சுயபச்சாதாபமும் இருக்காது. சிறிய வெறுப்போ,கோபமோ எதுவுமிருக்காது. உணர்ச்சிகள் எதுவுமற்ற பார்வை .ஒரு நாள், கணபதி சார்,”டேய்,வேணு,பை என்பதில் மேலே வரும் எண் என்ன,கீழே வரும் எண் என்ன, சொல்லு பாக்கலாம்…”என்றார். வழக்கம் போல் அவன் எந்தப் பதிலும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். “இங்க வாடா” என்று அவனை வரச்சொல்லி ஸ்கேலால் இடுப்புக்குக் கீழே விளாசித் தள்ளினார்.
அந்தக்காலத்தில், பெற்றோர் “பையனைக் கண்ண மட்டும் விட்டுட்டு தோல உரிங்க சார். அவன் படிச்சாப் போதும்”என்று ஆசிரியர்களிடம் சொல்வது வழக்கம். அவ்வளவு அடிக்கும் அவன் அழவேயில்லை. ஊஹூம்! ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. சிலை போலவே நின்றான். சாருக்குத்தான் கைவலித்திருக்க வேண்டும்; ”போடா, நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று வழக்கமான வசனத்தைச் சொல்லி தன் தோல்வியை மறைக்க முயன்றார்.
வேணுவுக்கு எல்லா விளையாட்டுகளிலும் ஆர்வம் கிடையாது. ஆனால், சில விளையாட்டுகள் பிடிக்கும். கோலிக்குண்டு, பம்பரம், கபடி, கில்லித்தாண்டல் . அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காத விளையாட்டு ஒன்று உண்டு. அது-கிரிக்கெட். காரணம், அது புத்தி சாலித்தனமான விளையாட்டு என்று அவன் நினைத்திருக்ககூடும். மேலும் கவாஸ்கர் என்ற பெயரும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எங்களை விட சீனியர் பாஸ்கர் என்று ஒருவன் இருந்தான். அவன் ஒன்பதாம் வகுப்பு, நாங்கள் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம்.
சைக்கிள் விடக் கற்றுக் கொள்ளலாம் என்று வேணுவிடம் சொன்னேன். அவனுக்கு அதில் விருப்பமில்லை. என் வற்புறுத்தலுக்காகச் சம்மதித்தான். மைதீன் கடை பாயிடம் இரண்டு பேரும் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது பைசா. நானும் அவனும் வீட்டில் காசு வாங்கிக் கொண்டோம்; ஒரு நாள் முழுக்கக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். எதிர்வீட்டில் பாலு மாமா என்றொருவர் இருந்தார். எங்களுக்குச் சைக்கிள் விடக் கற்றுத் தருவதாக அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அன்று எங்களை உட்கார வைத்து சைக்கிள் சாய்ந்து விடாமல் பிடித்துக் கொண்டு எங்கள் பின்னாலேயே ஓடி வந்தார். ஓர் அரைமணிநேரம் இப்படிப் போயிருக்கும். ஒரு சின்னப்பையன் ஓடி வந்தான். பாலுமாமாவின் வீட்டில் அவரைக் கூப்பிட்டு வரச்சொல்லி மாமி அனுப்பினாள் என்று மூச்சிரைக்கச் சொன்னான். எங்களுக்கு பாலு மாமா சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருவதில் ஏனோ மாமிக்கு விருப்பமில்லை.
“போயிட்டு வந்துடறன் பசங்களா! குரங்குப் பெடல் மட்டும் போட்டிண்டிருங்கடா“என்று கூறி விட்டுப் போனார். நான் அதை மட்டும் செய்தேன்.இப்போது வேணுவின் முறை.அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து பெடலை மிதித்தான்.ஓர் ஐம்பதடி தூரம் தடுமாறியபடி போயிருப்பான். விதி பாஸ்கர் ரூபத்தில் குறுக்கே வந்து விட்டது.வேணு நேரே போய் அவன் மீது மோதினான். பாஸ்கர் தடுமாறிக் கேழே விழுந்தான்.அவன் எழுந்ததும் வேணுவைப் புரட்டி எடுத்து விட்டான். இந்தச் சம்பவம் ஒரு சில நண்பர்களுக்கு மாத்திரம் தெரியும். அவனது கிரிக்கெட் ஒவ்வாமைக்கு இதுதான் காரணம் என்று சொன்னார்கள். உண்மையில் அதனால் தானோ என்னவோ, கவாஸ்கர் பெயரைக் கேட்டதுமே வேணுவுக்குப் பாஸ்கரின் ஞாபகம் வந்திருக்கலாம். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டுப் போய்விடுவான். செஸ் விளையாட்டும் அவனைக் கவரவில்லை.
ஒரு முறை நாங்கள் கில்லித்தாண்டல் விளையாடிக் கொண்டிருந்தோம். அன்றைக்கு என்ன மனநிலையோ, அந்த விளையாட்டில் வேணுவும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். ஒண்ணரை அடி நீளத்திற்கு ஒரு மூங்கில் கழி; அதிலிருந்து வெட்டிய நாலு அங்குல கில்லி. ஒரு சிறிய குழி. அதில் கில்லியை வைத்து அதை எவ்வளவு தூரம் அடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் அடிக்க வேண்டும். கில்லியைக் கிரிக்கெட் பந்தை அடிப்பதைப் போல் ஒருவன் அடிப்பான். அது விழுந்த இடத்திற்கு ஓடிப்போய் அவனே திரும்பவும் அடிக்க ஓடுவான். அதற்குள் பின்னால் ஓடி வருபவன் அவனைத் தொட்டு விட வேண்டும். அப்படித் தொட்டு விட்டால் அடிப்பவன் அவுட். இப்போது அவுட் ஆனவன், அடுத்து அடிப்பவன் பின்னால் ஓட வேண்டும். அன்று முதலில் கில்லியை அடிக்க வேண்டிய முறை சண்முகத்திற்கு.
பின்னால் ஓடிப்போய் அவனைத் தொட்டு அவுட் ஆக்க வேண்டிய பொறுப்பு வேணுவுடையது. எவ்வளவு தூரம் கில்லி போகிறதோ அவ்வளவு தூரம் வரை நொண்டி அடித்துக் கொண்டேதான் கில்லிக் குழிக்கு வர வேண்டும். அன்று சண்முகம் கில்லியை அடிக்கத் தொடங்கினான். அவன் கில்லி விளையாட்டில் படிப்பைப் போலவே கில்லாடி. ஆனால், படிப்பைப் போலவே வேணு இதிலும் சற்று சுமார்தான். சண்முகம் கில்லியடித்துக் கொண்டு போய்க்கொண்டே இருந்தான். இருபது முறையாவது அடித்திருப்பான். வேணு ஓடாமல் அவன் பின்னாலேயே நிதானமாக நடந்து வந்து கொண்டே இருந்தான். இப்போது களைத்துப் போய்விட்ட சண்முகம், ”நான் அடிக்க வேண்டிய தூரம் வரை அடித்து விட்டேன். என்னைத் தொட்டு விட்டு நீ திரும்பவும் குழி வரைக்கும் நொண்டி அடிடா “என்றான்.
கில்லி விளையாட்டில் ஒருவன் நொண்டியடிக்கும் போது கூட இருப்பவர்கள் கத்திக்கொண்டே ஓடி வருவார்கள். ”எங்க வீட்டு நாயி,பீ திங்கப் போயி கல்லால அடிச்சு காலு ஒடஞ்சு போச்சு” என்று மற்றவர்கள் கத்தும் போது அவமானம் பிடுங்கித் தின்னும். ஆனால், வேணு திடீரென்று ”டேய், நீ ராத்திரி முழுக்க அடிச்சுகிட்டே புதுக் கோட்டக்கே போனாலும் சரி, நா அங்கருந்து திருச்சி வரைக்கும் நொண்டி அடிச்சுகிட்டே வரேன்” என்றான். வேணு இப்படித்தான் எப்போதாவது சற்று சமயோசிதமாகப் பேசுவான். முகம் சிவந்து போய் சண்முகம், ”போடா அழுகுணிப்பயலே”என்று கத்தினான். கில்லியோ, பம்பரமோ, தோற்று விட்டால் வேணு நிதானமாக வீட்டுக்கு நழுவிப் போய் விடுவது வழக்கம்.
அவன் வீட்டுக்குப் போய்,”வேணு இருக்கானா”என்று கேட்டால். ”டேய், ஒங்க வீட்டுக்குப் போய் படிக்கிற வேலையப் பாருங்கடா. அவனும் உருப்படப் போறதில்ல, நீங்களும் உருப்படப் போறதில்ல”என்று அவனுடைய அப்பா திட்டி அனுப்பி விடுவார். இந்த மாதிரி நேரங்களில், வேணு இருக்கானா என்று கேட்க அவன் வீட்டுப்பக்கம் நான் மட்டும் போகவே மாட்டேன்.
மாம்பலம் ஸ்டேஷனில்,இறங்கி வெளியே வந்ததும் வலது புறம் ஒரு காய்கறிக்கடை. அதன் அருகில்தான் வேணுவின் ஜாடையிலிருந்த அந்த மனிதர் நின்றிருந்தார். பக்கத்தில் சுமார் ஐம்பது வயதைக் கடந்த ஒரு பெண்மணி, கிராப் வெட்டிய தலை, சுடிதாருடன் காய்கறி பொறுக்கிக் கொண்டிருந்தார். வேணுவுக்கும், இந்த மனிதருக்கும் ஒரே வித்தியாசம், வேணுவின் வேட்டி முனை கணுக்காலுக்கு மேல் அரையடி இருக்கும். இந்த மனிதர் வேணுவின் அதே உயரம், வழுக்கைத்தலை, ஜீன்ஸ் பேன்ட் போட்டிருந்தார். டீஷர்ட் வேறு. வேணுவுக்குச் சம்பந்தமில்லாத உடை. கண்ணில் கூலிங் கிளாஸ். ஆனால் வயதென்னவோ என்னைப்போலவே அவருக்கும் சுமார் அறுபதிருக்கும். என் சந்தேகம் வலுத்துக் கொண்டே வந்தது. வேணு என்று கூப்பிடலாமா, வேண்டாமா தெரியவில்லை. வேணுவுக்குத் திருமணமா? சே, அப்படி எதுவும் இருக்காது என்று மனம் நினைத்தது. மனப்பிரமையா யிருக்கும் என்று நடந்து விட்டேன்.
வேணுவைப் பற்றிய ஞாபகங்கள் மனதில் அலையலையாய் வந்து கொண்டேயிருந்தன. எங்கள் பள்ளிப் படிப்பபை முடித்த பிறகு நான் திருச்சியில் ஒரு கல்லூரியில் புகுமுக வகுப்புப் படித்தேன். பட்டப்படிப்பையும் முடித்து விட்டு ஒரு வங்கியில் வேலைக்குப் போய்விட்டேன். வேணுவுக்குப் படிப்பு ஏறவில்லை. இடையே இரண்டு வருடம் பள்ளியில் அவன் பெயிலானான். நான் பட்டபடிப்பு முதல்வருடத்தில் சேர்ந்தபோதுதான் அவன் தன்னுடைய எஸ்.எஸ். எல்.சி.தேர்வை எழுதிப் பாஸ் செய்தான். கல்லூரிக்குப் போனால் அவன் தேறி வரமாட்டான் என்று அவன் தகப்பனார் நினைத்ததால் அவனை ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்து விட்டார். அவனுக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பமில்லை. அவன் டைப்ரைட் டிங்கோடு சுருக்கெழுத்தும் கற்றுக் கொண்டான். அது மட்டும் என்னவோ அவனுக்கு மிகச்சரியாகக் கை வந்தது. மற்றவர்களை விட வேகமாக டைப்படித்து பரீட்சையிலும் தேறினான். தொடர்ந்து டைப் அடித்து வந்ததில் ஆங்கிலமும் பரிச்சயமாகி சுருக்கெழுத்திலும் நிபுணத்துவம் பெற்று விட்டான்.
அவனுக்கு ஒரு தொழிற்சாலையில் வேலையும் கிடைத்தது. அது என்னமோ தெரியவில்லை. வாரத்துக்கு மூன்று நாட்கள்தான் வேலைக்குப் போவான். தினமும் காலையில் அவன் அம்மா,”டேய் வேணு, எழுந்திருடா, வேலைக்கு நேரமாச்சுடா”என்று எழுப்புவார். ஆனால் அவனோ, ”போம்மா, நாளைக்கிப் பாத்துக்கலாம்மா”என்பான். இப்படியே ஒரு வருடம் இந்தக் கதை தொடர்ந்தது. அவன் வேலை பார்த்த கம்பெனி எதனாலோ அவனைப் பொறுத்துக் கொண்டிருந்தது. ஒருக்கால் அவனுடைய வேலைத் திறமை காரணமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இவனால் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியவில்லை. ஒரு நாள் திடீரென்று ‘நான் வேற எங்கயாவது வேலைக்கிப் போறேன். என்னால இனிமேலயும் இங்க இருக்க முடியாது. இங்க வேல பாக்கறதுக்கு எனக்குப் பிடிக்கல’ என்று கிளம்பி விட்டான். அவனது வீட்டில் அவனைத் தடுத்துப் பார்த்தார்கள்; முடியவில்லை. ’சரிடா, எங்க போறங்கிறதயாவது சொல்லிட்டுப் போய்த் தொலை’ என்று கேட்டுப்பார்த்தார்கள். ’எங்க போறேன்னு போயிட்டுச் சொல்றேன்’ என்று கிளம்பிப் போய் விட்டான்.
சரியாக ஒரு மாதம் கழித்து அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் தான் கல்கத்தாவில் இருப்பதாகவும், அங்கே ஒரு மார்வாடி கடையில் டைப் அடிக்கும் வேலை பார்ப்பதாகவும் எழுதியிருந்தான். இப்படியே சரியாக ஒரு வருடம் ஓடியிருக்கும். இரண்டு சூட்கேஸ்களுடன், அழுக்கான சட்டை பேண்ட்டுடன் ஒருநாள் ஊருக்கு வந்து சேர்ந்தான். நான் அப்போதுதான் வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். எனக்கு முசிறியில் வேலை. வேணு கல்கத்தாவிலிருந்து அம்மாவுக்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு ஒரு வேட்டி சட்டையும் வாங்கி வந்திருந்தான். அப்போதெல்லாம் ரெடிமேட் சட்டை அபூர்வம். அவன் அப்பாவுக்கும் அதில் மகிழ்ச்சிதான். தனது தம்பிக்கும், தங்கைக்கும் கூட சட்டை, பிராக் வாங்கி வந்திருந்தான். எனக்கும் கூட ஒரு பேனா வாங்கியிருந்தான். என்னிடம் அதைக் கொடுத்து விட்டு, ’அது ரொம்ப உசத்தியான பேனாடா; பார்க்க்கர் பேனாவுக்கு அடுத்தபடி அதுதான்’ என்றான். அதில் இங்க் ஊற்றி எழுதியபோது மை கசிந்து கொண்டேயிருந்தது.
ஆனாலும் என்ன, வேணு ஆசையோடு வாங்கிக் கொடுத்ததாச்சே?அதைப் பெட்டியில் போட்டு பத்திரப்படுத்தி விட்டேன். மாலையில் வேலை முடிந்து வந்ததும் நானும் அவனும் இரவு உட்கார்ந்து பேசிக் கொண்டேயிருப்போம். அப்போது அவன் கல்கத்தா அனுபவங்களை எல்லாம் சொல்லுவான். தான் ஒரு மார்வாடியிடம் வேலை பார்த்ததாகவும், தன்னிடம் அவர் மிக அன்புடன் நடந்து கொண்டதாகவும் சொன்னான். அங்கே பக்கத்திலேயே இருந்த ஒரு தமிழ் மெஸ்ஸில் வத்தல் குழம்பும், வாழைக்காய்ப் பொரியலும் பிரமாதமாக இருக்கும் என்பான். கல்கத்தாவில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவன் சொல்லும் போது சற்று வித்தியாசமாகவும், நம்ப முடியாதபடியும் இருக்கும்.
அப்படித்தான் ஒரு நாள், அவன் விக்டோரியா மெமோரியல் வெளியே புல் தரையில் படுத்துச் சற்றுக் கண்ணயர்ந்து கொண்டிருந்தானாம். தூரத்திலிருந்து ஒரு கொரில்லாக் குரங்கு அவனை நோக்கி நடந்து வந்ததாம். அது அவனுக்கு மிக அருகில் வந்து விட்டதாம். ஆனாலும் அதைப் பார்த்துத் தான் பயப்படாமல் இருந்ததாகவும் அது தன்னைப்பார்த்து விட்டு அப்படியே நடந்து போய் மறைந்து விட்டதாகவும் சொன்னான். இவனுக்கு என்னமோ ஆகி விட்டதே என்று என் மனம் துணுக்குற்றது. இதை விடவும் அவன் சொன்ன ஒரு விஷயம்தான் ரொம்பவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.அவன் ஒரு முறை கல்கத்தா காளி கோயிலுக்குப் போயிருந்தானாம்; அங்கே ஆடுகள், மாடுகள், எருமைகள் பலி கொடுக்கப்பட்டு, பக்கத்திலேயே அவற்றின் தலைகள் ரத்தச்சகதியில் கிடந்ததாகவும் விவரித்தான். காளியல்லவா? உக்கிரமான தெய்வம். பலி கொடுக்க இவனால் ஒரு கோழியைக்கூட கொண்டு வர முடியாதே? என்ன செய்வதென்று யோசித்தானாம். தன்னுடைய ஆள்காட்டி விரலைக் கடித்தானாம். கசிந்து வந்த ரத்தத்தைக் காளியின் நீட்டிக் கொண்டிருக்கும் நாக்கில் தடவி விட்டு ரத்த பலியைச் செய்து முடித்தானாம்.

இவனுடைய மனநிலையை நினைத்து ஒரு பக்கம் சிரிப்பாகவும், மறுபக்கம் வேதனையாகவும் இருந்தது. ஓர் ஆறுமாதம் இப்படியே போயிற்று. பிறகு ஒரு நாள் திரும்பவும் பேய் புளிய மரத்தில் ஏறியது. ’எனக்கு எங்கேயும் வேலைக்குப் போகப் பிடிக்கவில்லை; வீட்டிற்குப் பாரமாகவும் இருக்க விரும்பவில்லை. எனக்கு மன அமைதி தேவை. நான் எங்கேயாவது போகிறேன்’என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான். ”இல்லைடா, நீ உடனடியா வேலை பாக்காட்டாலும் பரவாயில்லடா. ஏழரை நாட்டுச் சனி இன்னம் ஒரு வருஷத்துக்கு உனக்கு இருக்கு. நீ சும்மா இரு. அப்பறமா யோசிக்கலாம்” என்று அவனுடைய அம்மா எவ்வளவோ சொன்னாள். அவன் கேட்பதாக இல்லை. ”நான் போறேன்; முடிஞ்சா தகவல் சொல்றேன். என்று கிளம்பி விட்டான். அவனுடைய அப்பா,’ நான் சொன்னால் கேக்க மாட்டான். நீ சொல்லுப்பா” என்றார். என் பேச்சும் எடுபடவில்லை. ”சரி, மாமா. விடுங்கள். போய்விட்டு கொஞ்ச மாசங்கழிச்சு திரும்பி வந்துருவான்” என்று ஆறுதல் சொல்லத்தான் முடிந்தது. அவனைச் சென்னைக்கு ரெயில் ஏற்றி விடப் போயிருந்தேன். அவனிடமிருந்து ஏதேனும் தகவல் வரும் என்று எதிர்பார்த்தோம். ஒரு வருடமாகியும் எதுவும் தகவல் இல்லை. அந்த ஒரு வருட முடிவில் அவனுடைய அப்பாவும் இறந்து விட்டார். அவர் இறந்து ஓர் ஆறு மாதங் கழித்து அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் தான் ரிஷி கேஷில் ஓர் ஆசிரமத்தில் இருப்பதாகவும் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும், அங்கு தனக்கு ஸ்டெனோ, டைப்பிஸ்ட் வேலை என்றும் எழுதியிருந்தான்.
‘இங்கே உள்ள இயற்கைச்சூழல், கங்கைக் குளியல் எல்லாம் மனத்துக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது நான் இங்கேயே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டேன். நான் பூர்வாசிரமத்தில் வேணுகோபாலன் ஆக இருந்தேன்; ஆனால்,இப்போது துறவறம் மேற்கொண்டு பெயரை மாற்றிக் கொண்டு விட்டேன். குடும்ப பந்தங்களை நான் அறுத்து எறிந்து விட்டேன். என்னைப் பார்க்க யாரும் வர வேண்டாம்’ என்று வேணு எழுதியிருந்தான். அவனது கடிதம் வந்த போது அவனது அப்பா உயிரோடு இல்லை. தவிரவும் அந்தக் காலத்தில் டெல்லிக்குப் போகும் வசதி இல்லாததால் அவனுடைய குடும்பத்தினர் யாரும் அவனைப் போய்ப் பார்ப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எனக்கும் வேலை மாற்றல் ஆகி சென்னைக்கு வந்து விட்டேன். ஒரு முறை வேலை நிமித்தம் டெல்லிக்குப் போயிருந்தேன். டெல்லியில் என் வேலைகள் முடிந்ததும், பக்கத்தில் இருக்கும் சில இடங்களைப் போய்ப் பார்த்து விட்டு ஊர் திரும்ப முடிவு செய்தேன். அப்போதுதான் எனக்கு இவன் ரிஷிகேஷில் இருக்கிறான் என்ற நினைவு வந்தது.
‘சரி, இவ்வளவு பக்கத்தில் வந்திருக்கிறோம். ரிஷிகேஷ் போய்த்தான் பார்க்கலாமே. அவன் வர வேண்டாம் என்று எழுதியிருந்தாலும் நாம் போகலாமே. நம்மை அவன் பார்க்க மாட்டேன் என்று சொல்லி விடப் போகிறானா’ என்று நினைத்துக் கொண்டேன். என்னுடைய அலுவலகத்தில் பணி புரிந்த ஒரு தமிழ் நண்பரையும் துணைக்கு அழைத்துக் கொண்டேன். அவருக்கு இந்தி நன்றாகப் பேசத் தெரியும். உண்மையிலேயே ரிஷிகேஷ் ரம்மியமாயிருந்தது. கங்கை நதியில் ஓடும் ஐஸ்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் முங்கி எழுந்தது, காவிரியில் முங்கிக் குளித்துப் பழகிய எனக்கு வித்தியாசமான ஓர் அனுபவம். ரிஷிகேஷில் ஏராளமான ஆசிரமங்கள் இருந்தன. நாங்கள் முதலில் போன சில ஆசிரமங்களில் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. கடைசியாக அங்கே இருந்த ஒரு பெரிய ஆசிரமத்தில் முயற்சி செய்து பார்த்து விட்டு, முடியாவிட்டால் கிளம்பி விடலாம் என்று முடிவு செய்தோம். அந்த ஆசிரமத்துக்குப் போய் அங்கிருந்தவர்களிடம் ‘இங்கே வேணுகோபால்ஜி என்ற பெயரில் ஒரு சுவாமி ஜி இருக்கிறார். அவரைப் பார்க்க முடியுமா?’என்று கேட்டோம்.
அங்கே வருபவர்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதற்காக ஒரு மேசை முன் அமர்ந்திருந்த சுவாமி ஜி ஒருவரைக் காட்டி அவரிடம் கேட்கச்சொன்னார்கள். என் நண்பர் எங்கள் தேவையை இந்தியில் சொன்னார். அவர் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபின், ”இங்கே நூற்றுப்பன்னிரண்டு சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் கேட்கும் வேணுகோபால்ஜி என்பவரின் பெயரே இல்லையே”என்றார். நான் என் நண்பரைப்பார்த்து,’அவன் என்னோடு திருச்சியில் படித்தவன் என்று கூறுங்கள். ஆறடிக்கு மேல் உயரமாக இருப்பான். நல்ல சிவப்பு நிறம் என்று அவனது அங்க அடையாளங்களையும் சொல்லுங்கள்’ என்று சொன்னேன்.நண்பர் இந்தியில் அதையெல்லாம் சொன்னார். அவர் உடனே,”ஓஹோ, கேசவானந்த்ஜியைச் சொல்கிறீர்களா?”என்று கேட்டார். ”அவர் இப்போதுதான் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு மாடிக்குப் போனார். முதல் மாடியில் இடதுபுறம் இரண்டாவது அறையின் கதவைத் தட்டுங்கள். சுவாமிஜி இருப்பார், போய்ப் பாருங்கள்” என்றார்.
நாங்கள் அங்கு சென்று கதவைத் தட்டினோம். எனக்கு நெஞ்சில் காரணம்புரியாத ஒரு படபடப்பு. ரொம்ப நாள் கழித்துப் பழைய நண்பனைச் சந்திக்கப் போகிறேன் என்ற சந்தோஷமாகவும் இருக்கலாம் .என்ன சொல்லப் போகிறானோ என்ற சின்ன பயமாகவும் இருக்கலாம். என்னவென்று தெரியவில்லை. இனம் புரியாத உணர்வில் காத்திருந்தேன். கதவு திறந்தது. அதே ஆறடி உயரத்தில் சற்று வயதான தோற்றத்தில் நின்ற வேணுகோபாலன், எங்களைப் பார்த்ததும், ’நீங்கள் யார்?‘ என்று இந்தியில் எங்களைப் பார்த்துக் கேட்டான், அல்ல, கேட்டார். நான் வேணுவைப் பார்த்து, “வேணு, என்னத் தெரியலியா? நான் கோபாலக்ருஷ்ணன். உன்னோட டியர் பிரன்ட்.”என்றேன். அவன் என்னை உற்றுப் பார்த்தான்.மெல்லிய புன்னகையுடன் “அட,கோபாலா? நீயா? இங்க எப்பிடிடா நீ வந்தே?”என்று தான் சுவாமி ஜி என்பதைச் சட்டென மறந்து விட்டு தன் பூர்வாசிரம காலத்துக்குப் போய் விட்டான். நான் அவனைப் பார்த்து,” எங்கள எல்லாரையும் மறந்துட்டியேப்பா”என்று கேட்டேன். அவன் உடனே, ”நாந்தான் துறவியாய்ட்டேனே” என்றான். பிறகு என்னைப் பார்த்து ”நம்ம ஊர்ல பெட்டிக்கடை வெச்சிருந்தாரே, முருகேசன் செட்டியார். அவர் எப்படி இருக்கறார்”என்றான். நாங்கள் இளமைக் காலத்தில் செட்டியார் கடையின் பின்னால் தான் நின்று திருட்டு தம் அடிப்போம். ஆனால் செட்டியார் எங்களது அப்பாக்களிடம் எங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார். வியாபாரத்தில் அப்படி ஒரு நாணயம்.
எனக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அவனுடைய அப்பா அம்மாவைப் பற்றிக் கேட்பான் என்று நினைத்தேன். அப்பா என்ன ஆனார் என்று கேட்பான் என்று நினைத்தேன். அவன் தன் குடும்பத்தினர் யாரைப்பற்றியும் விசாரிக்கவில்லை. நான் தான் அவனுடைய அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்து மூன்று வருஷம் ஆகி விட்டதையும், அவன் அம்மா மட்டும் இப்போது வீட்டில் இருப்பதையும் சொன்னேன். தம்பிக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள்; தங்கைக்கும் இரண்டு குழந்தைகள் என்கிற கதைகளை எல்லாம் சொன்னேன். அவன் ஏதோ யாருடைய கதையையோ கேட்பதைப் போல, ’அப்படியா’ என்று மட்டும் கேட்டு நிறுத்திக் கொண்டான்.
சில நிமிடங்கள் மவுனமாக இருந்தான். பின் சற்று முன்னால் நகர்ந்து வந்தான். கூட வந்திருந்த நண்பர் சற்றுத் தள்ளியே நின்றார். இரண்டு பக்கமும் பார்த்து விட்டு, ஒரு விஷயத்தைக் கேட்டான். ”நான் ஒண்ணு கேட்டால் சொல்வாயா” என்று கேட்டான். என்ன என்றேன். ”நான் சுவாமிஜி ஆனது, இங்கே வேலை பார்ப்பது எல்லாம் உண்மைதான். ஆனால், எனக்கென்னமோ இங்கெதுவும் சரிப்படவில்லை. ஒனக்குத் தெரிஞ்ச யாருடமாவது சொல்லி கல்ஃப் பக்கம் வேலையேதாவது வாங்கித் தர முடியுமா”என்றான். அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் ”நிச்சயமாத் தகவல் தெரிஞ்சா சொல்றேன்”என்று சொல்லி விட்டுத் திரும்பி விட்டேன். இது நடந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. அப்புறம் தொடர்பில்லை.
அந்தக் கேசவானந்த்ஜிதான் எப்படியோ கல்ஃப் போய் மறுபடி வேணுகோபாலன் ஆகியிருப்பானோ என்று இப்போது ஒரு பொறி தட்டியது. ரங்கநாதன் தெருவின் கடைசி வரை சென்றவன் திரும்பி நடந்தேன். அவர்கள் இருவரும் இன்னும் அங்கேதான் இருந்தார்கள். இப்போது அந்த உயரமான மனிதரும் காய்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். சற்றுத் தூரத்தில் நின்று கவனமாகப் பார்த்தேன். இந்த மனிதரின் உடல்மொழி வித்தியாசமாக இருந்தது.
வேணுவின் உடல் அசைவு சற்று மந்தமாக இருக்கும். அவனை விடவும் உயரம் குறைவான நாங்கள் பத்தடி நடந்திருப்போம். அவன் எங்களுக்குப் பின்னால்தான் நடந்து வருவான். சாப்பிடுவதும் அப்படித்தான். மதிய இடைவேளையில் அவன் சாப்பிட்டு முடித்து டிபன் பாக்சைக் கழுவுவதற்கு முன் மணி அடித்து விடும். இந்த மனிதரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? கடைக்காரரிடம் சிரித்துக் கொண்டே பணத்தை நீட்டுகிறாரே? வேணு உம்மணா மூஞ்சியல்லவா?
எனக்கும் அவர்களுக்கும் சுமார் இருநூறு அடி இடைவெளி. அந்த மனிதர் அல்லது மனிதன் கவனிக்க முடியாத மறைவில் நான். ”சரி, உங்கள் பெயர் வேணுவா?” என்று கேட்டுத்தான் பார்த்து விடுவோமா என்றும் நினைத்தேன். அவர் வேணுவாகவே இருந்து விட்டால், அல்லது வேணுவாகவே இருந்தும் கூட, என்னிடம் தான் வேணு அல்ல என்று கூறி விட்டால்? அல்லது வேணுவைப் பற்றி இதுவரை என் மனக்குகையில் உருவாக்கி வைத்திருக்கும் சித்திரம் அழிவதை மனம் விரும்பவில்லையோ? தயக்கங்கள், குழப்பங்களுக்கு நடுவே நான். மனைவி ரங்கநாதன் தெருவில் வாங்கி வர பெரிய லிஸ்டையே கொடுத்திருந்தாள். ஆனால், வேணுவின் சிந்தனை என்னை அங்கே மேற்கொண்டு இருக்க விடவில்லை. நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என மீண்டும் படியேறினேன். ரிட்டர்ன் டிக்கெட் தாம்பரத்திற்கு இருந்தது.
எழுதியவர்:
✍🏻 – சஹஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
