என்னுடைய புத்தக அலமாரி
சாக்கு மூட்டைகளுக்குள் இருக்கிறது
படிக்க நினைக்கும் புத்தகத்தை
பத்து மணிக்குள் எடுத்து வைக்கவேண்டும்
எடுத்து வைக்கத் தவறினால்
எலி உருட்டுவதாய்..
எல்லோரும் முழித்துக் கொள்வார்கள்
யாரேனும் முழித்தால்..
பெரிய கலெக்டர் இவரென்று..
எதிர்மறை பட்டம் கிடைக்கும்.
எப்போதும்
அமைதியான உரையாடல்
புத்தகத்திற்கும் எனக்கும் நடந்தாலும்
திடீரென..
கூடுவிட்டுக் கூடு பாயும் விந்தை
நள்ளிரவில் நடக்கும்
கதைத் தேடலில்
கவிதை கிடைக்கும்
தத்துவத் தேடலில்
அபுனைவுகள் கிடைக்கும்
ஒன்று இன்னொன்றை
தேடச் சொல்லும்
எந்த மூட்டைக்குள்
தேடுவது கிடைக்குமோ?
மகளின் பழைய பள்ளிப் பையிலா?
காலியான அரிசி டப்பாவிலா?
ஜோல்னா பையிலா?
டீவி ஸ்டேண்ட் அடியிலா?
மனைவியின்..
தையல் மெஷின் டேபிள் மேலா?
துணிகள் மட்டுமே இருக்கும்
பீரோவின் மேலா?
சிமெண்ட் சாக்கு, சணல் சாக்கு
உரச்சாக்கு மூட்டைக்குள்ளா?
தேடுதல் அகழ்வாராய்ச்சி
தீவிரமாகும் சில நேரங்களில்
குடும்ப யுத்தம் வெடித்துக் கிளம்பும்.
ஆசை -கனவு-லட்சியங்களை
அடுக்கி வைக்க இடமில்லாமல்
மூட்டைக்குள் கட்டிவைத்திருப்பவர்களில்
நானும் ஒருவன்
ஆயினும்
மூட்டைகளைப் பிரிக்கும் போது
உயிர்ப்புடன் இருப்பதாய்
உணரமுடிகிறது….
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.