நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : எஸ். சிவதாஸ் (மலையாளத்தில்)
தமிழில் : யூமா வாசுகி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 104
விலை : ₹ 70
2003 இல் அமெரிக்காவால் ஈராக்கின் மீது நடத்தப்பட்ட படு பயங்கரமான தாக்குதலின் போது, நூலகத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அழியாமல் காப்பாற்றிய “ஆலியா முகம்மது பேக்” என்ற பெண்மணியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் தான் – “புத்தக தேவதையின் கதை”
ஆலியா – சின்னஞ்சிறு வயதில் தான் காணும் கனவுகளைத் தன் பெற்றோரிடம் குழந்தைத்தனத்தோடு தெரிவிக்கிறாள். அவளின் கற்பனைத் திறனை வியந்து அவளது தந்தை அவளுக்கு நீதிக்கதைகளைக் கூறுகிறார்.
ஆலியாவின் தந்தை, “நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்களைப் போல. அவை உனக்கு நல்லறிவு தரும். நல்ல கனவுகள் தரும். புத்தகங்கள் உன்னை நல்லவளாக மாற்றும்”
என்று கூறி தீர்க்கதரிசியின் வரலாற்றைக் கூறி, திருக்குரானையும் ஆலியாவிடம் வாசிக்க தருகிறார்.
அதில், தேவதை – மலக்கு ஜிப்ரீல் கூறும் ” வாசிப்பீராக” என்ற ஒற்றை வார்த்தை அதன் பின்னணியோடு ஆலியாவை மிகவும் கவர்ந்து விடுகிறது. “வாசிப்பீராக” என்ற அவ்வார்த்தையையே அவள் திரும்பத் திரும்ப தனக்குள் நினைவூட்டிக் கொள்கிறாள்.
அதன் பின், ஆலியாவே நூலகத்திற்குச் சென்று கதை புத்தகங்களை எடுத்து வாசிக்கிறாள். அக்கதைகளின் உலகத்தில் தன்னை தொலைக்கிறாள். புத்தகங்களின் உலகில் நாம் நம்மில் கரைந்து நம்மையே தொலைப்பது இயற்கைதானே. அதே தான் ஆலியாவிற்கும் நடக்கிறது.
தன் வாப்பா (அப்பா), உம்மாவின் (அம்மா) அறிவிரைகளோடு அடுத்தடுத்து நிறைய வாசிக்கிறாள். வயதாக ஆக, அவளின் வாசிப்பின் பார்வையும், கோணமும் விரிவடைகிறது. இறுதியில், தான் விரும்பியபடியே நூலகராக பொறுப்பேற்கிறாள்.
சுகமாய், வாசிப்பே சுவாசிப்பாய் சென்று கொண்டிருந்த ஆலியாவிற்கு அமெரிக்கா, ஈரான் மீது போர் தொடுக்கும் தகவல் இடியாய் இதயத்தில் இறங்குகிறது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஆலியாவின் நகரத்தையும் அமெரிக்க ராணுவம் குண்டு மழை பொழிந்து சிதைக்கையில் நண்பர்களின் உதவியோடு, பெருத்த சிரமங்களுக்கிடையே நூலகத்திலிருந்த அத்தனை நூல்களையும் பல வழிகளில் பிரித்து காப்பாற்றுகிறாள் – நம் புத்தக தேவதை ஆலியா.
ஆலியாவின் கதை திரைப்படமாகவும் வெளிவந்திருப்பதாக நூலாசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதனை அவசியம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் நூலை வாசிக்கையில் எழுகிறது. அதோடு ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கே ஒரு திரைப்படமாக மனக்கண் முன் விரிகிறது.
நூலின் இடையிடையே ஆலியா நூலக புத்தகங்களிலிருந்து வாசிப்பதாய் வரும் கதைகள் அத்தனையும் அருமை. அதிலும் “உணர்ச்சிகள் உல்லாச பயணம் சென்ற கதை” நிச்சயம் நம் அத்தனைப் பேருக்குமான கதை மட்டுமல்ல நல்ல வாழ்க்கை பாடமும் கூட ..
புத்தகங்களை வாசிப்பதையும், வாசிப்பதனால் விளையும் பயன்களையும் ஆலியா, அவளது தந்தை, தாய் ஆகியோரின் வாயிலாய் நூலாசிரியர் ஆங்காங்கே வண்ணக்கோலத்தின் நடுவே மின்னும் பொன் வண்ண புள்ளிகளாய் தூவிச் செல்கிறார்.
“வாசிப்புக்கு ஒரு புனித ஒளிவட்டம் இருக்கிறது. வாசிப்பு நமக்கு அறிவு தருகிறது. சரி எது தவறு எது என்று இனம் பிரித்துக் காட்டுகிறது. வாசிப்பின் மூலம் தான் வளர முடியும்”
“ஆலிஸின் அற்புத உலகத்தை விட பெரிய அற்புத உலகம் தான் நூலகம்”
“சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்து சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். கவனத்தை ஒருமுகப்படுத்த பயில வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது மனதை அதிலேயே ஒன்றச் செய்ய வேண்டும். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும்”
“வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டும். அற்பமான மகிழ்ச்சிகளின் பின்னால் சென்று உட்கூடாகி, சாரமற்று போய்விடக்கூடாது”
அற்புதமான – நாமும் வாசித்து குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ள ஏற்ற சிறந்த நூல் – புத்தக தேவதையின் கதை.
இறுதியாக, உங்களிடம் கூறிக் கொள்ள எனக்கு ஒன்றே ஒன்று உண்டு. அது என்னவெனில்,
…….”வாசிப்பீராக”….
வாசிப்பும்,பகிர்வும்
திவாகர். ஜெ
02/08/2019