Puthaga Kadhal (புத்தகக் காதல்) was written by C.Subbarao (ச.சுப்பாராவ்).It publsihed in Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்) - https://bookday.in/

புத்தகக் காதல் – நூல் அறிமுகம்

புத்தகக் காதல் – நூல் அறிமுகம்

நூல் : புத்தகக் காதல்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : ஆகஸ்டு 2024
விலை : ரூ.150
புத்தகத்தை அஞ்சலில் பெற : https://thamizhbooks.com/product/puthaga-kadhal/

வாசிப்பு மனிதனை என்ன செய்யும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும் காவியம் தான் இப்புத்தகம். இந்நூலை வாசிக்கும் யார் ஒருவரும் உலக புத்தகக் காதலர்களை அறிந்துகொண்டு அவர்களைத் தேடி வாசிக்கும் எண்ணம் வருகிறதோ இல்லையோ அக் காதலர்களை மனதளவில் தேடிவிடுவர். அந்தளவிற்கு பல வாசிப்புக் காதலர்களின் புத்தகங்களைத் தேடிப் படித்து நமக்கு வழங்கியிருக்கிறார் தோழர் ச.சுப்பராவ் அவர்கள். இந்நூலில் என்ன இல்லை. நகைச்சுவை, சொற்சுவை, பொருட்சுவை, காதல் அலை (வாசிப்புதான் வேறொன்றுமில்லை), வரலாறு, போர் முனையை விட பேனா முனை வலிமை என்பதைக் காட்டும் கண்ணாடியாய், நாம் வாசித்த சொற்குவியல் ஒருதுளி என்றால் இந்நூல் கொட்டியிருக்கும் சொற்களை அள்ளுவதற்கு உலகில் உள்ள எந்த சரக்கு வாகனமும் போதாது. அவ்வளவு சொற்களைக் குவித்துக் கொட்டியிருப்பதை நமக்கு அள்ளிஅள்ளி குவிக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

இந்நூலில் இருக்கும் எதை எழுதுவது, எவற்றை விடுவது என்று புரியவில்லை. இந்நூலின் பக்கங்கள் 143 தான். ஆனால் சொற்களஞ்சியமோ ஏராளம். அவ்வளவையும் நினைவில் கொண்டுவந்து ஒருபுள்ளியில் நிறுத்துவது சாத்தியமில்லை. ஆனால் இந்நூலின் சாரத்தை புழிந்து ஒரு கோப்பையாக கொடு என்றால் உடனே கொடுத்து விடலாம். அவ்வளவு சொற்களஞ்சியம் இருப்பதை கொண்டாடியும் தீர்க்கலாம். இந்நூலில் இருக்கும் ஒவ்வொரு தலைப்பும் நமக்கு ஒவ்வொரு சுவையை ஊட்டிக்கொண்டே அடுத்த தலைப்பில் நம்மை கொண்டு விடுகிறது. முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்று எதுவும் இல்லாமல் எழுத்தாளரே ஒரு சிறு அறிமுகத்துடன் நம்மை நூலுக்குள் இழுத்துச் செல்கிறார். சும்மா செல்லவில்லை ”என் சக புத்தகக் காதலர்களுக்கு இத்தொகுப்பை சமர்பிக்கிறேன்’’ என்று வாசகர்களுக்கு சமர்பித்து உடன் அழைத்துச் செல்கிறார்.

உள்ளே 23 மூன்று தலைப்புகளில் உலக புத்தகக் காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று அதாவது தோழர் ச.சுப்பாராவ் அவர்கள் உலக அளவில் தீராக் காதலர்களாக விளங்கும் புத்தக வாசிப்பாளர்களின் அனுபவங்களை, அவர்கள் எழுதிய, வாசித்த, புத்தகங்களை சேகரித்து அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாத்துச் சென்ற, இன்றும் நம்மோடு வாழும் புத்தகப் புழுக்களை இல்லையில்லை புத்தகமாய் வாழ்ந்தவர்களை நாம் அவசியம் வாசிக்க வேண்டும் கொடுத்திருக்கிறார். அப்பப்பா நம்ம எழுத்தாளர் உலகளவிலான எழுத்தாளர்களை எப்படித்தான் தேடிப்பிடிப்பாரோ, அவர்களின் எழுத்துகளை எப்படித்தான் வாசித்தாரோ, வாசிப்பாரோ மிகவும் வியப்பாக இருக்கிறது. இந்நூலின் தலைப்பு புத்தகக் காதல் வேறு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்நூலின் ஆசிரியருக்கு மிகவும் பொருந்துகிறது. ஆம் தீரா புத்தகக் காதலாக இருக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் நாமும் புத்தகங்களை வாங்க புத்தக நிறுவனங்களை அல்லது கடைகளை நாடுகிறோம். அப்படி புத்தகம் வாங்கும்போது, அல்லது புத்தக விற்பனையாளருடன் உரையாடும்போது எப்படியான சூழல் இருக்கிறது என்பதை மிகவும் அழகாக படம்பிடித்துக் காட்டி இனி புத்தகக் கடைக்கு போகும்போது எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்பதை அதாவது நமக்குத்தான் எல்லாம் தெரியுமென்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக புத்தகக் கடைக்காரர் முன் காட்டிக்கொள்வோம். அதை உடைத்து தவிடுபொடியாக்கியிருக்கிறார் உலக வாசிப்பாளர்களின், புத்தக விற்பனையாளர்களின் இடத்திலிருந்து.

ஒரு புத்தக தேடல் விரும்பி? செய்த காரியத்தை அவரின் வரிகளில் பாருங்கள்

‘’ஒருநாள் ஒருவர், ‘’இங்கு இவ்வளவு புத்தகங்கள் உள்ளன. நீங்களும் சும்மாதான் இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் படித்திருந்தால்தானே என் மாதிரியான வாடிக்கையாளருக்கு ஆலோசனை சொல்ல முடியும்?’’ என்கிறார். அன்று ஜென்னுக்கு ஏனோ வழக்கமான பொறுமை இல்லை. ‘’நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?’’ என்று அவரைக் கேட்கிறார். அவர் ஜட்டி, பனியன் கடை வைத்திருப்பவராம். ‘நீங்கள் ஓய்வு நேரத்தில் கடையில் இருக்கும் ஜட்டி, பனியன்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்து வைத்துக்கொண்டால்தானே, வாடிக்கையாளருக்கு எது நல்லது என்று சொல்ல முடியும்? கடையில் எல்லா ஜட்டிகளையும் போட்டுப் பார்ப்பீர்களா?’’ என்று கேட்கிறார். வந்தவர் எதுவும் பேசாமல் போய்விடுகிறார். வாடிக்கையாளரை புத்தகக் கடை நடத்தும் ஜென் ஒரு வாடிக்கையாளரை இழந்தாலும் பரவாயில்லை என்றே நமக்குத் தோன்றும். அவரும் அப்படித்தான் இழந்திருப்பார் என்று நம் எழுத்தாளரும் பதிவு செய்திருப்பார். இப்படி புத்தக அறிவு மிகவும் ஜாஸ்தி என்று நினைத்துக்கொண்டு பிறர் முன் தன்னை வாசிப்பு ஜாம்பவனாக காட்டிட நினைக்கும் யார் ஒருவருக்கும் இந்த வரிகள் சப்புன்னு விட்டிருக்கும் ஒரு அறை. ஏன் நானும் வாங்கியிருக்கலாம். நான் புத்தகம் வாங்கிய புத்தகக் கடை அல்லது நிறுவனத்தாரிடம் நானல்லாமல் வேறு யாராவது விசாரித்தால் என்னைப்பற்றி தெரியும் நான் எப்படி உளறிக் கொட்டியிருக்கிறேன் என்று. சுயபரிசோதனை அவசியம் என்கிறது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…’ என்னும் தலைப்பில் உள்ள வரிகள்.

10,00,000 புத்தகங்களை காப்பாற்றியவர்; 4,40,00,000 சொற்கள் தந்த பார்வை; வாசிப்பு போதை நாமறிந்த மெக்காலே லண்டன் சந்து பொந்துகளில் கூட கூட்ட நெரிசலிலும் மிக வேகமாக நடந்துகொண்டே வாசித்துச் செல்வாராம். ஜான் வெஸ்லி என்பவர் தினமும் 100 மைல் குதிரை சவாரி செய்துகொண்டே வாசிப்பாராம். இதெல்லாம் பார்க்கும்போது நாம் பேருந்து, ரயிலில் பயணம் செய்யும்போது எவ்வளவு புத்தகங்கள் படிக்கலாம். அப்படியெல்லாம் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. நாம் டிக்‌ஷனரியில் ஒரு வார்த்தைக்கு பொருள் தேடுவோம். ஒருநாளில் 100 வார்த்தைக்கு அதிகபட்சமாக பொருள் தேடுவோமா. ஆனால் ஒட்டுமொத்த ஆங்கில எழுத்துகளை வாசித்து அதற்கான பொருள் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது , எந்தெந்த மொழிகளில் எழுத்துகளுக்கு அர்த்தம் கிடைத்தது என்பதை வாசித்தபோது மிரண்டே போனேன். பெரும்பாலான எழுத்துகள் லத்தீன் மொழியிலிருந்து பொருள் கிடைத்ததாக அறிகிறோம் ஆசிரியர் வழியில். அப்படி ஆங்கில எழுத்துகளில் அதிக வார்த்தை கிடைக்காத ஒரு எழுத்து உண்டென்றால் அது ‘W’ தானாம். ஏனெனில் லத்தீனில் ‘W’ எழுத்தே இல்லையாம். அதனால் அவ்வெழுத்துக்கு நிறைய பொருள் கிடைக்கவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது மொழிவளம் தான் நம்மை வளப்படுத்தும், வலுப்படுத்தும். அது தேடலுடன் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு புத்தகக் காதலரின் அனுபவத்துடன் நான் எனது பதிவை முடித்துக்கொள்கிறேன். நான் தொடர்ந்து புத்தகங்களை வாங்கும் நிறுவனம் ஒன்று உண்டென்றால் அது 7, இளங்கோ தெரு, சைதாப்பேட்டை. சென்னை என்கிற முகவரியில் இருக்கும் பாரதி புத்தகாலயத்தில் தான். இன்று என்னுடைய சேகரிப்பாக இருக்கும் 2000 புத்தகங்களில் 80 சதவீதம் பாரதி புத்தகாலயத்தில் வாங்கியவையே. அது புத்தகக் கண்காட்சியோ அல்லது, கருத்தரங்கங்களிலோ, புத்தகக் கடைகள் அல்லது அஞ்சலிலோ சேகரித்த நூல்கள் தான் இவ்வளவும்.

ஆனால் ஹெலன் ஹாஃப் என்னும் காதல் கோட்டை நாயகியின் புத்தகத் தேடல் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம் அவர் இருப்பது அமெரிக்கா. இங்கிலாந்தில் ‘84 சாரிங் குறுக்குச்சாலை’யில் உள்ள மார்க் அண்ட் கோ என்னும் பழைய, அரிய புத்தகங்கள் கொண்ட கடையின் ஊழியர்களுடன் ஏற்பட்ட கடிதப் போக்குவரத்து குறித்து அவர் எழுதிய நூல் தான் உலகப் புகழ்பெற்றது. அந்நூலின் பெயரே அக்கடை முகவரி தான். ஆம் ‘84 Charing Cross Road’ என்று எழுதி அவரின் புகழை உலக உச்சிக்குக் கொண்டு சென்றதை இந்நூலை வாசிக்கும்போது அறிந்து மகிழலாம். ஹெலன் 1916ல் பிறக்கும்போது மிகவும் வசதி குறைவு. எனவே அவரால் கல்லூரி பட்டிப்பை பாதியில் விட வேண்டிய சூழ்ல். அவர் பத்திரிக்கைகளுக்கு கதை எழுதி பிழைத்தார். இதற்காக பிழையின்றி ஆங்கிலம் எழுத வேண்டும் என்று கேம்பிரிட்ஜ் போன்ற இடங்களில் படிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. அப்படி தேடலின் பயனாய் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழக பேரா. சர் ஆர்தர் க்வில்லர் என்பவரின் ஆங்கில இலக்கண நூல்களை படிக்கிறார். அதன்மூலம் ஆர்தரின் நூல்களை தேடித் தேடி படிக்கிறார்.ஆர்தர் குறிப்பிடும் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடித் தேடி அலையும்போது தான் அதாவது நேரடியாக அல்லாமல் கேட்டறிந்து தான். அப்படித்தான் இங்கிலாந்தின் அந்த ’84 சாரிங் குறுக்குச்சாலையில் உள்ள அரிய பழைய புத்தகக் கடையான அந்த மார்க் அண்ட் கோ கடை கிடைக்கிறது. எந்த நூலாக இருந்தாலும் கடிதம் வழியிலேயே பெறுவார். இதனால் முகம் தெரியாமலே அவருக்கும், அந்த கடைக்குமான காதல் கோட்டை மிகப் பிரமாண்டமாக வளர்கிறது.

இரண்டாம் உலகப் போரின் விளைவால் இங்கிலாந்தின் பொருளாதாரம் பாதிப்படைந்தபோது உணவுப்பொருட்களை கடை ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கிறார் ஹெலன். பலநாள் முட்டையை பார்க்காமல் இருந்த கடை மேலாளர், ஊழியர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. விளைவு பாசப்பிணைப்பு கூடுதலாகிறது. ஒருநாள் கடை மேலாளர் இறந்துவிட ஹெலனுக்கு பேரதிர்ச்சி. இந்நிலையில் இங்கிலாந்துக்கும், அமெரிக்கா ஹெலனுக்குமான கடிதப் போக்குவரத்தை தொகுத்து புத்தகமாக எழுதுகிறார். படித்துப் பார்த்த ஹெலனின் பதிப்பாளர் அசந்து போகிறார். புத்தகமாக 50-60 பக்கங்களில் வெளிவந்து அமெரிக்காவையே புரட்டிப் போடுகிறது. விளைவு திரைப்படமாக வந்து பலப்பல பெயர், புகழ் வந்துசேருகிறது ஹெலனுக்கு. இப்படியான சூழலில் அவர் இங்கிலாந்து நேரடியாக பயணம் செய்கிறார். மார்க் அண்ட் கோ கடை இருந்த இடத்திற்குச் செல்கிறார். ஆனால் கடை நொடிந்து இடித்துத் தள்ளப்பட்டு அந்த இடத்தை வாங்கிய ரியல் எஸ்டேட் ஓனர் அந்தக் கடையின் பெயர் பலகையை வார்னிஷ் அடித்து ஹெலனிடம் கொடுத்தார். அதுவும் பெரிய விழா எடுத்து. இறுதியில் ஹெலன் கடை மேலாளர், ஊழியர் வீடுகளுக்குச் செல்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவருடைய தீரா வாசிப்புக் காதல் கோட்டை தானே.

இந்நூலின் ஆசிரியருக்கும் கடிதப் போக்குவரத்து ஆம் மின்னஞ்சல் வழியாகத்தான் 7, இளங்கோ சாலையில் இருக்கும் பாரதி புத்தகாலயத்துடன் தான். அப்படி எழுதிய கடிதங்களை தொகுத்து படமாக எடுத்தால் தமிழ்நாட்டில் இருக்கும் நமது எழுத்தாளர் தோழர் ச.சுப்பாராவ் அவர்களும் ஹெலன் போல புகழ் பெறுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என நினைக்கிறேன்.

நீங்கள் கடிதப் போக்குவரத்தை தொகுத்து புத்தகம் வழங்குங்கள் தோழர் ச.சுப்பாராவ் அவர்களே.

இன்னும் ஏராளம் இந்நூலில் கொட்டிக்கிடக்கிறது. போருக்குச் செல்பவருக்கு புத்தகம் ஆயுதமாக இருந்தது என்றால் மிகவும் வியப்பு அல்லவா. ஆம் அமெரிக்க போர் வீரர்களுக்காக இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் ஹிட்லருடன் போர் புரிய புத்தகங்களே துணைபுரியும் என்பதை உணர்ந்து பல லட்சகணக்கான புத்தகங்களை சேகரித்தும், அச்சிட்டும் கொடுத்தது அமெரிக்க இராணுவம். எவ்வளவு பெரிய வரலாற்றுப் பதிவு இது.

இன்னும் ஏராளமான வளங்கள் கொட்டிக் கிடக்கும் இந்நூலை வாசிக்க மறவாதீர் தோழர்களே. நான் கூறியது ஒரு துளி மட்டுமே.
ஆகச்சிறந்த நூலை நமக்கு வழங்கிய புத்தகக் காதலர் தோழர் ச. சுப்பாராவ் அவர்களுக்கு மிக்க நன்றி! 🙏💕 பெருமகிழ்ச்சி தோழர்!! தங்களின் சொற்களஞ்சியத்தில் இருக்கும் சொற்களை இடையறாது தேடிப் படிக்கிறோம் தொடர்ந்து வழங்குங்கள் தோழர். மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூல் அறிமுகம் எழுதியவர் :
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *