புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: ச.செந்தில்நாதன் – தமிழ் முற்போக்குச் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் – சைதை ஜெ

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: ச.செந்தில்நாதன் – தமிழ் முற்போக்குச் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் – சைதை ஜெ




‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்து விட்டான்’ என்று அறிவித்து விட்டு, பொது உலகிலிருந்து தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டார் எழுத்தாளர் பெருமாள்முருகன். 2015, ஜனவரியில் இது நடந்தது. எழுத்தாளர் பெருமாள்முருகனின் இந்த அறிவிப்பால் எண்ணற்ற எழுத்தாளர்களைப் போல தானும் அதிர்ந்து போனதாகக் குறிப்பிடும் தோழர் ச. செந்தில்நாதன், ‘தானே மனுதாரராக இருந்து பொதுநல வழக்கு போடலாமா என்று நினைத்தேன். ஆனால் ஒரு அமைப்பில் இருந்து கொண்டு அப்படிச் செய்வது முறையாக இருக்காது என்று என்னுள் ஒரு குரல் கேட்டதால்… தமுஎகச அமைப்பின் பேரில் பொதுநல வழக்குப் போட்டதாக’ கருத்துரிமை போற்றுதும் சிறப்பு மலரில் குறிப்பிடுகிறார்.

எப்போதும் தன் செயலின் மூலம் தனக்கு மட்டும் பெருமை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் தனது அமைப்பிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அமைப்பை முன்னிலைப் படுத்தி சிந்தித்து முடிவுகளை எடுக்கிறவர் தோழர் ச.செந்தில்நாதன்.

அந்த வழக்கில், ‘பேராசிரியர் பெருமாள்முருகன் பயத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது. அவர் இனி எழுதுவதோடு, தனது எழுத்தின் வீச்சை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்… அவர் எதில் சிறந்தவரோ, அதைச் செய்ய அவருள் இருக்கும் எழுத்தாளர் புத்துயிர் பெறட்டும்.’ என்ற வாசகங்கள் அடங்கிய தீர்ப்புரை உலகமுழுவதுமுள்ள கருத்துரிமைப் போராளிகளால் மகிழ்ந்து கொண்டாடி வரவேற்கப்பட்டன. ‘கருத்துரிமைக்கான போராட்டத்தின் உயிர்த் துடிப்பு மிக்க வரலாற்று ஆவணம்’ என்று தீர்ப்புரையை மதிப்பிடும் தோழர் ச. செந்தில்நாதன், தான் வாதாடிய இந்த வழக்கை தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக நினைப்பதாக தனது நேர்காணலில் பதிவு செய்துள்ளார். வழக்கறிஞர் மற்றும் இலக்கியவாதி என்கிற வாழ்நாள் அனுபவச் செறிவிலிருந்து அந்த வழக்கை நடத்தி வெற்றி கண்டார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த வழக்கை நடத்தியதன் மூலம் தனக்கும் தமுஎகச அமைப்பிற்கும் பெருமை சேர்த்தவர் தோழர்.

2022, ஜூன் 5 ம் நாள் நடைபெற்ற தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போது, ‘இது வரை எழுதியது முன்னோட்டம் தான் இனிமேல் தான் என் எழுத்தின் முழு வீச்சையும் வாசிக்கப் போகிறீர்கள். எனது கட்டை விரலில் கைப்பிடித்து எழுதும் வலு உள்ளவரை நான் எழுதிக் கொண்டிருப்பேன்’ என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

‘தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு’ அவர் எழுதிய முதல் நூல். 1967 ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் வெளிவந்த, தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய முதல் விமர்சன நூல் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பதிப்பாளரின் இரண்டாண்டு கால தாமதத்தால் நூல் வருவது தள்ளிப்போய் விட்டது. அதற்கிடையில் இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி, சாலைஇளந்திரையன் ஆகியோர் எழுதிய நூல்கள் வெளி வந்து விட்டன. முதலில் எழுதப்பட்டாலும் பின்னால் வெளிவந்தது என்றாகி விட்டது.

1975 ம் ஆண்டு தமுஎச வை உருவாக்கிய எழுத்தாளர்கள் 32 பேரில் ச.செந்தில்நாதன் இல்லை என்கிற வரலாறு கூட கால தாமதத்தால் ஏற்பட்டது தான். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அழைப்புத் தாமதமாகக் கிடைத்ததும், பயணம் செய்த வாகனம் ஏற்படுத்திய தாமதமும் சேர்ந்து அந்த வரலாற்றுக்குக் காரணமாகி விட்டது.

கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டே வெளி வர அனுமதிக்கப்பட்டன. பல பக்கங்கள் மை பூசப்பட்டு கறுப்பாகவே இருக்குமாம். அப்போது தணிக்கைக்கு ஆட்படாமல் தப்பித்த முற்போக்கு இதழ் ‘சிகரம்’ மட்டும்தான். அதை நடத்தியவர் தோழர் ச.செந்தில்நாதன். சி.பி.ஐ.(எம்) கட்சியின் இலக்கியப் பத்திரிகையான செம்மலர் உள்ளிட்ட பல முற்போக்கு இலக்கிய இதழ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வெளிவர முடியாத காலத்தில் சிகரம், அவர்களின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது. ஐந்தாண்டு காலம் வெளி வந்த சிகரம், தமிழ்நாட்டிலிருந்தும் அதற்கு வெளியிலிருந்தும் தமிழில் எழுதும் பல எழுத்தாளர்களுக்கு புதிய வாசலைத் திறந்தது. அது வெளிவந்த காலத்தின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியது. தோழர் ச. செந்தில்நாதனுக்கு, சிகரம் ச. செந்தில்நாதன் எனும் அடைமொழியை வழங்கியது.

சிகரம் இதழ் ஆரம்பிப்பதற்கு முன்பே 1969 செப்டம்பரில் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ உருவாகி விட்டது. அதன் செயலாளர் தோழர் ச.செந்தில்நாதன். கந்தர்வன், கவிஞர் கண்ணதாசனின் தம்பி இராம. கண்ணப்பன், கார்க்கி மற்றும் ம.ந.ராமசாமி ஆகியோர் நிர்வாகக் குழுவினர். பெயர் பெற்ற எழுத்தாளர்களான அகிலன், தீபம் நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்களெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. எழுத்தாளர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே அவர்களின் எழுத்துக்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. விமர்சனத்தின் வெக்கை தாளாமல் வெளிநடப்புகளும் நடந்திருக்கின்றன. மக்கள் எழுத்தாளர் சங்கம் இலக்கியவாதிகள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1975 ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான போது, மக்கள் எழுத்தாளர் சங்கம் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டது. த.மு.எ.ச உருவாவதற்கானத் தேவையை உணர்த்தியதாக, மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் வீச்சான செயல்பாடுகளை மதிப்பிடலாம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக 17 ஆண்டுகளும் அதன் மாநிலத் தலைவராக 9 ஆண்டுகளும் வழிநடத்தி இருக்கிறார்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ், தமிழ்வழிக் கல்வி போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு போராட்டக் களத்தில் முன்நின்றார். எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்தவர் முற்போக்காளர் வல்லிக்கண்ணன் அவர்கள். அவரது குடும்பச் சூழல் பொருளாதாரத்தில் நலிவுற்ற போது நண்பர்கள் தோழர்களுடன் இணைந்து குடும்ப நிதி திரட்டி வழங்கியதில் மிக முக்கியப் பங்கேற்றார். அதை தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிறைவான நிகழ்வாகவும் கருதுகிறவர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறுகதை மேதை புதுமைப்பித்தன் பெயரில் அறக்கட்டளை அமைத்தது…

பெரிதும் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு அமைத்து தொடர்ந்து செயல்படுத்தி வருவது…

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வாழ்வின் இறுதி நாட்களில் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட போது, அவரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் கோரிக்கையை உரிய முறையில் அரசுக்குக் கொண்டு சென்று பண உதவியைப் பெற்றுக் கொடுத்து நம்பிக்கையூட்டியது…

என தனித்து மிளிரும் அவரது இலக்கியச் செயல்பாடுகள் பல.

இடதுசாரிகளும் முற்போக்கு இலக்கிய அமைப்புகளும், தமிழ் பக்தி இலக்கியங்களுக்குள் குறுக்கீடு செய்து அதன் வரலாற்றுப் பரிணாமத்தைப் புரிந்து கொண்டு களமாட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பல அரிய ஆய்வு நூல்களை எழுதி வருவது மிக முக்கியக் கருத்தியல் செயல்பாடாகும். இந்துத்துவத்தை பண்பாட்டுத் தளத்தில் எதிர்கொள்ள, அதனுடன் முரண்படும் தமிழர் சமய மரபின் பல அடுக்குகளில் படிந்திருக்கும் ஜனநாயகச் சக்திகளை இணைக்கும் செயலுக்கு முன்னுரிமை வழங்கிடச் சுட்டுகிறார். களத்தில் அதற்கான பல முயற்சிகளையும் மேற்கொண்டார்.

தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இந்து சமய வழிபாட்டு முறைகளில் – வட மொழி வேதமும் வைதிக சமயமும் எவ்வித பெரிய அளவிலான எதிர்ப்புமின்றி நேரடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. வடமொழி வேதத்தையும் வைதிக சமயத்தையும் எதிர்த்து நிறுத்திய ஒரு வளமிக்க வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு. அது ஒரு தனித்துவமிக்க வரலாறு. பேணி பாதுகாக்கப்பட வேண்டியதும் கூட.

கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சியில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராகிவிட முடியும். ஆனால் மலையாளத்தில் அர்ச்சனை செய்ய முடியாது. அர்ச்சனை வடமொழியில்தான். தமிழ்நாட்டில் தலித் அர்ச்சகராகவும் முடியும். தமிழில் அர்ச்சனை செய்யவும் முடியும். தமிழ் இலக்கியத்தின் பெரும் பரப்பை தனதாக்கி வைத்திருக்கும் பக்தி இலக்கியத்தின் கொடை அது. தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் வேத விதிகளின் படி கட்டப்பட்டவை அல்ல. தமிழ் ஆகமங்களின் படி கட்டப்பட்டவைகளாகும்.

தமிழ்நாட்டில், வேத சமய வித்தகர்களுக்கும் தமிழ் வழி வழிபாட்டாளர்களுக்கும் இடையே கூர்மையான முரண்பாடுகள் உண்டு. அம் முரண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை என்பது தோழர் ச. செந்தில்நாதன் ஆய்வு முடிவுகள். இந்தத் தளத்தில் ‘அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறு வாசிப்பு’, ‘சைவ வைணவப் போராட்டங்கள் ஒரு மறு வாசிப்பு’, ‘தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்’ ஆகிய ஆய்வு நூல்கள் மைல் கற்களாக அமைந்தவை. தமிழ் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் தோழர் சிகரம் ச.செந்தில்நாதன்.

– சைதை ஜெ

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *