நான் வேறொரு துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். 1995 இல் ‘மோகமுள்’ திரைப்படத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தபோது தமிழ்சினிமாவில் இருந்த பிரபுத்துவமும், புதிய முயற்சிகளை நிந்திக்கின்ற விதமும் மிகுந்த ஏமாற்றங்களையே எனக்குத் தந்தன.

அப்போதுதான் தமுஎகச என்கிற அமைப்புடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. சேலம் அருகில் தனம் என்கிற தலித் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய ‘ ஒரு கண் ஒரு பார்வை’ என்கிற குறும்படத்தை தமுஎகச தன் தோள்களில் எடுத்துச்சென்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் நடந்த தமுஎகச விழாக்கள் அனைத்திலும் திரையிட்டு பிரபலப்படுத்தினார்கள். வர்த்தக ரீதியில் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தின் அந்தஸ்தை எனது குறும்படத்துக்கு தமுஎகச இயக்கம் பெற்றுத்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்போதுதான் இளைஞர்கள் மிகுந்த தமுஎகச இயக்கத்தின் சக்தியை நான் புரிந்து கொண்டேன்.

அடுத்து நான் உருவாக்கிய திரைப்படங்களில் தமுஎகச உறுப்பினர்களை தவறாமல் நான் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். ‘முகம்’, ‘பாரதி’ படங்களில் சென்னை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான இடங்களில் படப்பிடிப்புகள் நடந்த போது அங்கே உள்ள தமுஎகச கிளை உறுப்பினர்கள் பெருமளவில் பங்கெடுத்தார்கள்.

‘பாரதி’ திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்றாலும் சில பிற்போக்காளர்கள் எதிர் பிரச்சாரம் செய்ய முயன்றார்கள். அதை முதலிலேயே யூகித்து திரு சிகரம் ச.செந்தில்நாதன், திரு இரா.தெ. முத்து, திரு. அ.குமரேசன் ஆகியோர் தமுஎகச சார்பாக திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் எதிர் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதத்தில் ‘பாரதி’ படத்திற்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தியதை நான் என்றைக்குமே மறக்கமுடியாது. அதைப்போலவே திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான நகரங்களிலும் ‘பாரதி’ படத்தை மக்களிடம் தமுஎகச எடுத்துச்சென்றது. கோவை நகரில் அமரர் அய்யாசாமி அவர்கள் முன்னெடுத்து நடத்திய ‘பாரதி’ படத்துக்கான ஆதரவு இயக்கத்துக்கு தமுஎகச தோள்கொடுத்து உதவியது. கே.ஜி தியேட்டரில் பாரதி அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடியது.

தமிழ்சினிமாவில் நான் எப்படிப்பட்ட படங்களை எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்க தமுஎகச போன்ற இயக்கங்கள் எனக்கு மிகவும் ஆதாரமாக இருந்தன என்றே சொல்ல வேண்டும். ‘பெரியார்’ ‘ராமானுஜன்’ முதலான தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆளுமைகளை திரையில் கொண்டுவர நான் முடிவெடுத்ததன் பின்னணி அதுதான். பெண்ணியச் சிந்தனைகளை உளவியல் பார்வையோடு எழுதிய
ஆர். சூடாமணியின் ஐந்து கதைகளை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்துக்கு திரு ஆதவன் தீட்சண்யா, திரு இரா.தெ.முத்து மற்றும் தமிழகம் முழுவதுமான தமுஎகச தோழர்கள் நல்கிய அன்பும் ஆதரவும் மறக்க இயலாதது.

சுமார் 25 வருடங்களாக தமுஎகச இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் நன்றாக அறிந்தவன் என்கிற முறையில் அந்த இயக்கத்தைப் பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.

1. தமுஎகச இயக்கம் நல்ல முற்போக்கான சமூகச் சிந்தனையுடைய இளைஞர்களை ஈர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

2. இலக்கியம், சினிமா, நடிப்பு, இசை முதலான பல்துறைகளில் திறமையுள்ளவர்களும் ஆர்வமுள்ளவர்களும் அதில் அதிகம் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

3. தமுஎகச வில் இருந்தவர்களில் பலர் இன்று ஆளுமைகளாக திகழ்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை. பாரதி கிருஷ்ணகுமார், திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமுஎகசவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல Patronage தந்து தமுஎகச அவர்களை வளர்த்திருக்கிறது என்று நிச்சயமாக கூற முடியும். மேலும் எண்ணிறந்த இளைஞர்களை organisational skill உள்ளவர்களாக தமுஎகச வளர்த்திருக்கிறது என்பதும் உண்மை.

4. ஆனால் தமுஎகச போன்ற துடிப்புள்ள கலை இலக்கிய ஈடுபாடு மிகுந்த இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு இயக்கம், இன்னும் பல சாதனைகளை செய்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். கலை இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வம் உள்ளவர்களை வைத்து கலை இரவுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளித்து அவர்களின் திறமைகளை செப்பனிட்டு தமுஎகசவின் BRAND AMBASSADORS களாக பலரை உருவாக்கி இருக்கலாம். கேரளாவில் இது போன்று பல இயக்கங்கள் ஆச்சரியப்படத்தக்க சாதனைகளைச் செய்திருக்கின்றன.

தமுஎகச பட்டறையிலிருந்து தரமான -ஆற்றல் மிக்க- கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைக்கதையாளர்கள், இயக்குநர்கள் நடிகர்,நடிகையர் நாட்டுப்புறக் கலைஞர்கள்….இப்படி எல்லாத் துறைகளிலும் உன்னத ஆளுமைகள் உருவாகியிருக்கலாம்.

எனக்கு இத்தகைய ஆதங்கம் இருப்பதற்குக் காரணம், தமுஎகசவுக்கு எல்லா தகுதிகளும் இருப்பதால்தான். திறமையுள்ள இளைஞர்கள் தமுஎகசவை நோக்கி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடாமல் தீவிரமான பயிற்சி வகுப்புகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் ( Skill Development Programmes) முதலானவைகளை தமுஎகச நடத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை மென்மேலும் வளர்த்து அவர்களை ஆளுமைகளாக ஆக்கினால் வறட்சி மிகுந்த தமிழின் இலக்கியம், சினிமா மற்றும் பிற கலைத்துறைகளில் மிகப்பெரிய புரட்சியை தமுஎகச என்கிற இயக்கம் நடத்திக்காட்ட முடியும். இதுவே என் நம்பிக்கையும், வேண்டுகோளும்.

இயக்குநர் ஞான ராஜசேகரன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்”
  1. திரு.ஞானவேல் பாராட்டும் மேலும் செய்ய வேண்டும் என கூறும் ஆலோசனைகள் கவனிக்க பட்ட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *