திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழின் முதல் பெண் பதிப்பாளர். தமிழ்ப் புத்தகங்களை அழகாகவும், நேர்த்தியாகவும் வெளியிடுவதற்காக ‘வாசகர் வட்டம்’ உருவாக்கி, சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர். சில முக்கியப் படைப்பாளிகளை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். புத்தகங்களுக்கென்றே ‘வாசகர் செய்தி’ என்றொரு இதழை நடத்தியவர். காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தியின் மகள். மூத்த எழுத்தாளர்களோடும், அரசியல் தலைவர்களோடும் நெருங்கிப் பழகியவர். இவர், தனது 80 வயதிலும் நிறைய படிக்கிறார்.
புத்தகங்களுக்கென்றே வெளிவரும் நமது ‘புதிய புத்தகம் பேசுது’ முதல் இதழ் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது இதழில் அவரது பேட்டியை வெளியிடுவதற்காக அவரது இல்லத்தில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ஒரு நாற்காலியில் என்னை அமரவைத்து, மற்றொரு நாற்காலியில் அவர் அமர்ந்துகொண்டார்.
‘புதிய புத்தகம் பேசுது’ முதல் இதழ் கிடைத்தவுடனே அதனை முழுவதும் படித்து முடித்திருந்தார். ரொம்ப சந்தோசம் அவருக்கு.
“நாங்கள் (வாசகர் செய்தி) முயற்சி பண்ணினோம். எங்களாலே தொடர்ந்து நடத்த முடியல. அப்போ நிலைமை அப்படி. இப்போ உங்களாலே நடத்த முடியும்’’ என்று உற்சாகப்படுத்தினார். தனது கணவரிடம், “புத்தகம் பேசுது பத்திரிகையிலிருந்து பேட்டிக்காக வந்திருக்கிறார்’’ என்று அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த முதிர்ந்த மனிதர் எனக்கு வாழ்த்து சொல்கிறார்.
அந்தச் சமயம், தன்னைச் சந்திக்க துணைவியாருடன் வந்த ஒருவரிடம் ‘புதிய புத்தம் பேசுது’ ஒரு பிரதியைக் கொடுத்து, “அப்பாவிடம் கொடு; ரொம்ப சந்தோசப்படுவார்’’ என்று கூறி, என்னையும் அறிமுகப்படுத்துகிறார். அவரை அனுப்பி வைக்கிறார். “இவர் ‘சிட்டி’யின் மகன். சிட்டிக்குத்தான் கொடுத்து அனுப்பினேன். சிட்டி ரொம்ப சந்தோசப்படுவார். எங்கள் சோதனை முயற்சி பட்டுப் போயிடல. இப்போ துளிர்விடுது’’ என்கிறார், நெகிழ்ச்சியாக.
சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பின், “வாசகர் வட்டம் பற்றி பேசலாமா?’’ என்று ஆரம்பித்தேன்.
“கொஞ்சம் பொறுங்க’’ என்று எழுந்தவர், உள் அறைக்குள் நுழைந்து இரண்டு கைகள் நிறைய புத்தகங்களை ஏந்திக்கொண்டு வருகிறார். “இதெல்லாம் வாசகர் வட்டம் வெளியீடுகள்’’ என்கிறார், பெருமையோடு.
முப்பது வருடத்துக்கு முன்பு அச்சிப்பட்ட நூல்களா? வியப்பாகத்தான் இருக்கிறது. நூல்களின் ஜாக்கெட்டுகள்கூட வண்ணம் மங்காமல் பளிச்சென்று அப்படியே இருக்கின்றன. இக்காலத்து விஞ்ஞான தொழில்நுட்ப வசதி எதுவுமில்லாமல் அந்தக் காலத் திலேயே அற்புதமாகத் தமிழ் நூல்களை பதிப்பித்திருக்கிறார். இந்த நூல்களில் பல இப்போது வேறு பதிப்பங்களில் எத்தனையோ பதிப்புகளைக் கண்டுவிட்டன. ஆனால், இந்த அழகும் நேர்த்தியும் அவற்றில் என்றுதான் கூறவேண்டும். ஆனால், எல்லா புத்தகங்களிலும் ஒரே மாதிரியான அட்டைப் படம் போடப்பட்டிருந்தது. அது பற்றி அவரிடம் கேட்டேன்.
“கலாசாகரம் ராஜகோபால் வரைந்து கொடுத்தார். ஒரு புத்தகத்துக்குத்தான் கேட்டேன். நல்லாயிருந்தது. எல்லாத்துக்கும் போட்டுட்டேன். வாசகர் வட்ட நூல்களெல்லாம் ஒரே மாதிரியாக இருக்கட்டுமே.’’
சிரிக்கிறார்.
“நீங்க வெளியிட்ட முதல் புத்தகம்…?’’
ராஜாஜியின் ‘சோக்ரதர்’ புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார். “வெளியீட்டு விழாவுக்கு ராஜாஜி கலந்து கொண்டார்’’ என்றொரு கூடுதல் தகவலையும் கொடுத்து விட்டு சற்று மௌனமாகிறார்.
“நீங்க வாசகர் வட்டத்தை ஆரம்பித்த சூழல்…?’’
“சொல்றேன். ஆனா, அரை மணி நேரத்துக்கு மேலே என்னாலே தொடர்ச்சியா பேசமுடியாது’’ என தனது உடல் நலம் குறித்த இயலாமையை வெளிப்படுத்திவிட்டு, தொடங்குகிறார்.
“அது 1960 காலகட்டம். அப்போ ‘மணிக்கொடி’ சீனிவாசன் வீட்டிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பெ.தூரன், பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், லா.ச.ரா, க.நா.சு, சிட்டி இப்படியான இலக்கியவாதிகள் சந்தித்துப் பேசுவார்கள். ஒரு நாள் அந்தச் சந்திப்புக்கு என்னையும் சிட்டி அழைத்துக்கொண்டு போனார். அப்போது நான் கதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். சிட்டி என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இலக்கியவாதிகளுடன் எனக்கு நெருக்கம் அப்படித்தான் கிடைச்சது. தொடர்ந்து அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டேன். 1965ல் அந்த இலக்கியச் சந்திப்பு என் வீட்டிலேயே நடக்க ஆரம்பிச்சுது. அதோ அந்த அறையில் தான் கூடிப் பேசுவோம் (சுட்டிக்காட்டி நெகிழ்கிறார்). ஒரு இலக்கியச் சந்திப்பில், “தரமான தயாரிப்பில் புத்தகங்களைக் கொண்டு வரணும்’’ என்கிற ஆசை நம்ம எழுத்தாளர்களுக்கு வந்துடுச்சி. “அதற்கென்ன செஞ்சாப் போச்சு’’ன்னு காரியத்தில் இறங்கினேன். அப்படி ஆரம் பிக்கப்பட்டதுதான் ‘வாசகர் வட்டம்’. புத்தகம் போடுறதுக்காக வீட்டை அடகு வைத்தேன்.
காமராஜர்கூட வருத்தப்பட்டார். “வீட்டை அடகு வைச்சு கதை புத்தகம் போடணுமா’’ன்னு கேட்டார். “நல்ல புத்தகத்தை வெளி யிடுறதிலேயும், அதை மத்தவங் களுக்கு படிக்கக் கொடுக்கிற திலேயும் கிடைக்கிற சந்தோசம் வேறு எதிலே கிடைக்கும்’’னு கேட்டேன்.
“அப்போது, வேறு எந்த பதிப்பகமும் இப்படியான முயற்சியில் ஈடுபடலைங்களா?’’
“அந்தக் காலத்தில் ரொம்பப் பிரபலமானவங்க எழுதினால் வெளியிடுவாங்க. வாரப் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அதில் தொடர்கதை எழுதுகிறவங்களுக்கு புத்தகம் போடுவார்கள். விற்றுப் போகும். விற்பனையைப் பற்றி கவலைப்படாமல் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர் ‘சக்தி காரியாலயம்’ வை.கோவிந் தன்தான். நான் வேறு சில திட்டங்களை முன்வைத்தேன்.’’
“என்னென்ன திட்டங்கள்?’’
“வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லாருக்-கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய் கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனால, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்குக் கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரி பார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்து விடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்தக் குறையும் வைக்கல. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்…’’
சில நிமிட மௌனம்.
“சரி, ராஜாஜிக்கே அந்த நிலைமை’’ என்றொரு பெருமூச்சோடு தொடர்கிறார்: “ஒவ்வொரு புத்தகம் வெளிவந்ததும் ‘வாசகர் செய்தி’ என்கிற செய்திக் கடிதத்தை வெளியிடுவேன். அதில் புதிதாக வெளிவந்திருக்கும் புத்தகங்கள், வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும்.’’
“எத்தனை சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள்?’’
“தமிழ்க்கூறும் நல்லுலகில் ஒரு இரண்டாயிரம் வாசகர்கள் தமிழுக்குக் கிடைக்க மாட்டார்களா? என்று நம்பினேன். ஐநூறு சந்தாதான் சேர்ந்தது. அப்போ நல்ல நூல்களைப் படிக்கிற பழக்கம் அதிகமா இல்லே.’’
“எத்தனைப் புத்தகங்களை வெளியிட்டீங்க?’’
“பத்து வருசத்திலே 42 புத்தகங்களைக் கொண்டு வந்தேன்.
தி.ஜானகிராமனும், சிட்டியும் எழுதின ‘நடந்தாய் வாழி காவேரி’. இந்தப் புத்தகத்தை எழுதறதுக்காக காவேரி தொடங்குகிற இடத்தி லேருந்து முடிகிற இடம் வரை இரண்டு பேரும் பயணம் செஞ்சு எழுதினாங்க. அதற்கான ஏற்பாடுகளை நானே செஞ்சேன். எனது வெளியீடுகளிலே ரொம்ப முக்கியமானது அது.
லா.ச.ரா.வின் புத்ர, அபிதா, தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்…’’ என்று சற்று நிறுத்தியவர், “அம்மா வந்தாள் நூலைப் பற்றி ஒரு ருசிகரமான தகவல் ஒண்ணு சொல்லட்டுமா?’’ என்றார்.
“சொல்லுங்க…’’
“லா.ச.ரா. ‘புத்ர’-ன்கிற தலைப்புல ஒரு நாவல் எழுதிட்டார். தி.ஜானகிராமனிடம் ஒரு நாவல் எழுதிக் கேட்டேன். வருசத்துக்கு ஆ-று நூல்கள் போட்டே ஆகணும். தி.ஜா.விடம் எந்தக் கதைக் கருவும் அப்போது கைவசம் இல்ல. இருந்தாலும், அவர், “லா.ச.ரா. புத்ர-ன்னு பேரு வைச்சிருக்கார். அதாலே, ‘அம்மா’ன்னு ஒரு நாவல் எழுதித் தர்றேன்’ன்னார். அதுதான் ‘அம்மா வந்தாள்’னு வந்தச்சு. அந்த நாவலை அவரால எழுதவே முடியல. ஆல் இந்தியா ரேடியோவில கடுமையான வேலை அவருக்கு. என்னிடம் ‘காண்ட்ரேக்டை கேன்சல் பண்ணிக்கிறேன்’னார். நான் மாட்டேன் னுட்டேன். பிடிவாதமாகத்தான் ‘அம்மா வந்தாள்’ எழுதி வாங்கினேன்.
“நீங்க முயற்சி எடுக்கலைன்னா ‘அம்மா வந்தாள்’ நாவலை தி.ஜா. எழுதியிருக்க மாட்டாரில்லையா?’’
சிரிக்கிறார்.
“காண்ட்ராக்ட்னு ஏதோ சொன்னீங்களே…?’’
“தமிழில் முதல் முதலா காண்ட்ராக்ட் திட்டத்தை கொண்டு வந்ததே நாங்கதான். முதல் பதிப்பை நான் வெளியிடுவேன். பத்து சதவிகிதம் ராயல்டி கொடுப்போம். இரண்டாவது பதிப்பை ஆசிரியர் விருப்பம்போல வெளியிட்டுக்கலாம்.’’
“எந்தெந்த புத்தகங்களை வெளியீட்டீங்க?’’
“ம்… நீல.பத்மநாபனின் ‘பள்ளி கொண்டபுரம்’, கிருத்திகாவின் ‘நேற்றிருந்தோம்’,
நரசய்யாவின் கடலோடி’, ஆ.மாதவனின் ‘புனலும் மணலும்’,
நா.பார்த்த சாரதியின் ‘ஆத்மாவின் ராகங்கள்’, எம்.வி.வியின் ‘வேள்வித் தீ’
கி.ரா.வின் ‘கோபல்ல கிராமம்’,
இப்படி… ந.பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதி ‘குயிலின் சுருதி’,
v
சா.கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’, அ.மாதவனின் முதல் நாவல் ‘புனலும் மணலும்’ இதெல்லாம் நான் வெளி யிட்டதுதான்.
அதுவரை சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண் டிருந்த லா.ச.ரா.வை நாவல் எழுதவைத்தேன்.
சிறுகதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த சுஜாதாவை அறிவியல் நூல்களை எழுதச் சொன்னேன்.
மலையாளம், தெலுங்கு, இந்தி இலக்கியங் களை எல்லாம் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிஞ்ச நம்ம மக்கள் படிக்கட்டுமேன்னு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.’’
“விலை எப்படி வைச்சீங்க?’’
“விலை ரொம்ப குறைவு. (ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி) இந்தப் புத்தகத்துக்கு விலையைப் பாருங்க. நாலு ரூபாய்தான் போட்டிருக்கேன். எல்லாரும் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதான், கடை விரித்தேன். கொள்வாரில்லை கதைதான்.’’
“நூலகத்துக்கு அனுப்பினீங்களா?’’
“போய்ப் பேசினேன். அவன் ஃபாரத்துக்கு இவ்ளோன்னு கணக்குச் சொல்லி வாங்கிக்கிறேன்னான். விலை மதிப்பில்லாத கவிதைகள், கதைகள்னு சொன்னேன். முடியாதுன்னுட்டான். போடான்னுட்டு வந்துட்டேன். கடைசி வரை நூலகத்துக்கு புத்தகம் கொடுக்கவே இல்லை.’’
மௌனம்.
ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்கிறார், “அக்கறை இலக்கியம்னு இலங்கை, மலேசியா தமிழ் எழுத்தாளர்களுடைய படைப்புகளைத் தொகுத்துப் போட்டேன். இலங்கைத் தமிழர்கள் நிறைய வாங்கினார்கள். சமீபத்திலே, சாமுவேல் டத்தோ ஒரு கூட்டத்திலே சொன்னாராம், “புலம் பெயர்ந்தோர் இலக்கியம்னு இப்போதான் சொல்றீங்க. அப்பவே வாசகர் வட்டத்திலே இது மாதிரி புத்தகங்களை போட்டுருக் காங்க’’ன்னு. இத்தனைக்கும் அவரை எனக்குத் தெரியாது; என்னை அவருக்கு தெரியாது.’’
தொடர்கிறார்: “லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூலை ‘அறிவின் அறுவடை’னு தமிழில் போட்டேன். அதைப் படிச்சுட்டு அமெரிக்கத் தூதரே என் வீட்டுக்கு வந்து என்னிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போனார். உங்களை மாதிரியான ஆட்களும் வந்து பேசிட்டு போறீங்க. நிறைய சோதனை முயற்சிகள் செய்தேன். தொடர்ந்து செய்யத்தான் ஆசை. முடியல. நல்ல புத்தகங்களை வெளியிட்ட மனநிறைவு இருக்கு. இது போதும்னு நினைக்கிறேன்.’’
“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி.’’
“சந்தோசம்.’’
புதிய புத்தகம் பேசுது
செப்டம்பர் 2003
சந்திப்பு : சூரியசந்திரன்
ஆஹா.. மிக அருமை..