V. Marimuthu CPI(M)
V. Marimuthu CPI(M)

ஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘உலக புத்தக தினம்’ கொண்டாடும்படி கேட்டுக் கொண்டது. ஏப்ரல் 23, ஐரோப்பாவில் நவீன இலக்கியக் கர்த்தாக்களான ஷேக்ஸ்பியர் பிறந்த தினம், செர்வாண்டீஸ் இறந்த தினமாகும். ஆங்கில, ஸ்பானிய மொழி எழுத்தாளர்களை முன்னிறுத்தி உலக எழுத்தாளர்கள்அனைவரின் படைப்புகளையும் அனைவரும் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் விதமாய் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தகங்களுக்கும் உயிருண்டு 

“மனிதனைப் போலத் தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு. அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்துவருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அதுஒரு பொருள் மட்டும் அல்ல” என்று மாக்சிம் கார்க்கிகுறிப்பிட்டார். தனது 21வது வயதில் மைக்கேல் பாரடேவின் மின் சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் என்ற நூலைஆழ்ந்து படித்தது தான், தாமஸ் ஆல்வா எடிசன் என்கிறஇளைஞனின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதலை உருவாக்கியது. “வாசிப்பு என்பது எழுத்தாளனுக்கு உணவு மட்டுமல்ல, உயிரைப் போன்றதும் ஆகும். வாசிப்பு உயிரை வளர்ப்பது, மனதை வளர்ப்பது, ஞானத்தைச் செழுமைப்படுத்துவது. வாசிப்பு வறுமையின் முற்றுகையைத் தகர்த்துப் பள்ளிப் படிப்பு தராத அனுபவங்களைத் தந்தது” என்கிறார் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. புத்தகப் பிரியர்களைநாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று கூறுவது உண்டு. அதுவும் ஒரு வகையில் சரி தானே! மண் புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப் பண்படுத்துகின்றனவோ, அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்புரட்டிப் போட்டுத் தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு, சமூகத்தையும் பண்படுத்த உதவுகின்றன.பெட்ரண்ட் ரஸ்ஸல், தன்னுடைய கல்லறையில் தான்ஒரு புத்தகப்புழுவென்று எழுதி வைக்க வேண்டும் என்று கூறி மறைந்தாராம்.

உயிரை விட நேசிப்பவை

நம்மையெல்லாம் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி. சீன யாத்ரிகர் யுவான்சுவாங், ஒருமுறை அரியபுத்தகங்கள் பலவற்றோடு ஹூப்ளி நதியில் படகில்பயணிக்கிறார். படகில் எடை அதிகமாக இருக்கிறது. எடை அதிகம் என்பதால் படகு மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது. படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச் சில புத்தகங்களை நதியில் வீசி விடலாம் எனக் கோரிய போது,யுவான் சுவாங், எனது உயிரை விட நான் நேசிக்கும் வாசிக்கும் புத்தகங்களை நீரில் வீசக் கூடாது எனத்தடுத்து, தானே படகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார். புத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்தஅக்கறையும் இந்த நிகழ்ச்சியும் வியப்புக்குரிய செய்தியாகும்.வாசிக்கவும் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் நூல்களை வாங்குவதற்குத் தன்னை வருத்திக் கொண்டவர்களும் உண்டு. கேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மீகப் புரட்சியாளர் நாராயணகுரு, திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை வாங்கிப் படிப்பதற்காகக் கூலி வேலை செய்தார்.

தூக்கு மேடைக் குறிப்புகள்

மரணம் நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில்கூடத் தனது எண்ணங்களை எல்லாம் எழுத்தாக வடித்தார்,செக்கோஸ்லேவியா நாட்டில் ஏழைத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த ஜுலியஸ் பூசிக். தன்எழுச்சி மிக்க பேச்சாலும் எழுத்தாலும் தன் நாட்டுமக்களுக்கு விடுதலை வேட்கையை ஏற்படுத்தினார். அவருடைய நூல்கள், தொழிலாளர்களிடம் எழுச்சியைத் தூண்டிப் புரட்சியை உருவாக்குவதாக அரசு அவரைச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. அவரைத்தூக்கிலிடவும் தீர்மானித்தது.ஜுலியஸ் பூசிக்கைத் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் அவருடைய காவலுக்கு இருந்த ஒரு வீரர் “நான் உங்கள் அபிமானி ஏதேனும் உதவ வேண்டுமா?” என்று கேட்க, எழுதுகோலும் பேப்பரும் கேட்டார் பூசிக்.அந்தக் காவலாளியும் கொண்டு வந்து கொடுத்தார். ஜுலியஸ் பூசிக் விடிய விடிய தன் எண்ணங்களையும் அனுபவங்களையும் எழுதினார். அதை அந்தக் காவலாளியிடம் கொடுத்து, தன் மனைவியிடம் ஒப்படைக்கக் கூறினார். அவரும் அவ்விதமே செய்தார்.ஜூலியஸ் பூசிக் தூக்கிலிடப்பட்டதற்குப் பின்னர், 1945ம் ஆண்டு, அவருடைய மனைவி அகஸ்டினா அந்தக்குறிப்புகளைத் “தூக்கு மேடைக் குறிப்புகள்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். விடுதலை உணர்ச்சியைத் தூண்டும் அற்புதமான நூல். இந்த நூலைப் போல்இன்னொரு நூல் இல்லை என வரலாறு போற்றுகிறது.

தினசரி பெரும் பகுதி நேரத்தைக் கற்பதிலும் வாசிப்பதிலும் செலவழித்தவர்கள் பலர் உண்டு. அதில் முக்கியமானவர் சமுதாய மறுமலர்ச்சியின் முன்னோடி, சமத்துவக் காவலர், உலகச் சாதனையாளர்கள் வரிசையில் முன் நிற்பவர் அண்ணல் அம்பேத்கர். தன் வாழ்நாள் முழுவதும் கல்வியிலும் படிப்பதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அம்பேத்கர் ஒரு நாளில் 18 மணி நேரத்தைக் கல்வி கற்பதிலும் புத்தகம் வாசிப்பதிலுமே செலவழித்தார். நூலகத்தில் காலையில் முதல் ஆளாகநுழைபவர், கடைசி ஆளாக வெளியேறுவது வழக்கம். அம்பேத்கர் பெற்ற பல்வேறு சிறப்புகளுக்கு அவர் கற்றகல்வியே அடித்தளமானது. ஜவகர்லால் நேரு, பிரதமராக இருந்த சமயம், நாடாளுமன்றத்தில் அவர் பேசும் போது எல்லாம், பல புத்தகங்களிலுள்ள கருத்துக்களை மேற்கொள் காட்டிப் பேசுவதுண்டு. அவருடைய நண்பர் ஒரு நாள்நேருவிடம், “நேரமில்லை, நேரமில்லை என்கிறீர்களே,புத்தகங்கள் “படிக்க மட்டும் எப்படி நேரமிருக்கிறது?”என வினவினார். நேரு சொன்னார், “நேரத்தைத் திருடுகிறேன்” என்று நண்பர் புரியாமல் விழித்தார், நேருவேவிளக்கம் தந்தார். “என் உதவியாளர் நான் உறங்குவதற்கு என்று தினமும் 6 மணி நேரம் ஒதுக்குகிறார். அதில் நான் படிப்பதற்கென்று இரண்டு மணி நேரம் திருடுகிறேன்” என்றார்.

வாசிப்பை நிறுத்தாத பாரதி

வறுமையிலும் வாசிப்பை நிறுத்தாத பாரதி ஒருமுறை எட்டயபுரம் மகாராஜா தமது பரிவாரங்களோடு பாரதியாரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றார். பாரதியார் தனது மனைவி செல்லம்மாளிடம் விடைபெற்றுச் சென்றார். 15 நாட்கள் கழித்து பாரதி வீடு திரும்பினார். பாரதி வீட்டு வாசலில் இரண்டு குதிரைவண்டிகள் வந்து நின்றன. குதிரை வண்டியில் பல விதமான மூட்டை முடிச்சுகள் நிரம்பியிருந்தன. அதைக் கண்டசெல்லம்மாளுக்கு மட்டற்றமகிழ்ச்சி. நல்ல புடவையும் மளிகை பொருட்களும் வெள்ளிச் சாமான்களும் வாங்கிவந்திருப்பதாக எண்ணி வறுமைக்குச் சிறிது காலம் விடை கொடுக்கலாம் என்று எண்ணி மகிழ்ந்தார்.

பாரதி செல்லம்மாளிடம், ராஜா ஐநூறு ரூபாய் கொடுத்தார் எனப் பணப்பையைக் கொடுத்தார். அதன் பின் மூட்டைகள் அவிழ்க்கப்பட்டுத் தரையில் கொட்டப்பட்டன. செல்லம்மாளுக்குப் பெருத்த ஏமாற்றம். தரையில் கொட்டிக் கிடந்தவை அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, இன்னும் பல அரிய நூல்கள் இருந்தன. முகம் வாடிய மனைவியைக் கண்டு, பாரதி, “அழியாத செல்வத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். அழியும் பணத்தை எண்ணிக் கவலைப்படுகிறாயே” என ஆறுதல் படுத்தினார். மரணத் தருவாயில் கூட தான்அறிந்ததை, உணர்ந்ததைப் பிறரும் அறியும் வண்ணம்எழுத்தாய் வடித்தவர்களும் உண்டு. மார்சல் டிராஸ்டு என்பவர் பிரெஞ்சு நாட்டின் மிகப்பெரிய எழுத்தாளர். ஏராளமான நூல்களை எழுதி உள்ளார். அவர் மரணத்தின் பிடியில் படுத்த படுக்கையாக இருந்த போது,அருகில் இருந்தவர்களிடம் தான் எழுதிய புத்தகங்களை எல்லாம் எடுத்து வரச் சொன்னார். அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்தார். அப்புத்தகத்தில் ஒரு கதாபாத்திரத்தின் மரண அவஸ்தையைப் பற்றி எழுதி இருந்தார்.அவர் சொன்னார். “நான் அன்று இப்புத்தகத்தை எழுதும் போது, மரண அவஸ்தையைக் கற்பனை செய்து தான் எழுதினேன். ஆனால், இப்பொழுது நான் மரண வேதனையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகவே, சில பகுதிகளை மாற்றங்கள் செய்து எழுதி விடுகிறேன்” என்று கூறி அந்தப்பகுதியை மாற்றித் திருத்தி அமைத்து எழுதி முடித்தார். உயிரும் அவர் உடலை விட்டுப் பிரிந்தது. புரட்சியாளர்கள் தொடங்கி கொடுங்கோலர்கள்வரை, நூல்களோடும், நூலகங்களோடும் பெரிதும்தொடர்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள். கோகலேதம்முடைய திருமணத்தின் போது, “வரதட்சணைவேண்டாம், உங்கள் திருப்திக்காகக் கொடுக்கவிரும்பினால், புத்தகங்களாகக் கொடுத்து விடுங்கள்” எனக் கோரினாராம்.

நூல்களோடும் நூலகங்களோடும்

கொடுங்கோலனாக விளங்கிய ஹிட்லர் கூட, லண்டன் மீது படையெடுத்த போது, தனது படைகளுக்கு லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள் என அறிவுறுத்தியதாகக் கூறுவார்கள். ரஷ்ய ஜனாதிபதியாக தோழர் லெனின் இருந்த போது, தனது பிறந்த நாளின் போது புத்தகங்களைத் தான் பரிசளிக்க வேண்டும் எனகம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும், தனது நண்பர்களுக்கும் அன்பு வேண்டுகோள் விடுப்பாராம். அப்படிதோழர் லெனின் சேகரித்த நூல்கள் தான் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை நிரப்பி உள்ளன. புத்தகம் குறித்து பல அறிஞர்கள் ஏராளமாகக்சொல்லியும் எழுதியும் உள்ளனர். “உறவுகளிலேயே சிறந்தது புத்தகம் தான்” என கால்டன் குறிப்பிட்டார். பால்சாக் என்ற எழுத்தாளர், தான் அமர்ந்து எழுதும் இடத்தில் பார்வையில் படும்படி, “உலகத்தை நெப்போலியன் வாளால் வென்றார். நான் உலகத்தைப் பேனாவில்வெல்வேன்” என்று எழுதி வைத்திருந்தார். இப்போதும்,எப்போதும் உங்களிடம் புத்தகங்கள் பேசிக் கொண்டேயிருக்கின்றன.

நன்றி: தீக்கதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *