எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப் அவர்களின் சில நூல்களை இதற்கு முன்பு வாசித்துள்ளேன். அவரின் நூல்கள் விறுவிறுப்பும் வித்தியாசமும நிறைந்தவை.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு சமீபத்தில் டி.கே.பப்ளிஷர்ஸ் மூலம் வெளிவந்த ‘புத்தக மோகினி பாகம்-1’ என்ற அமானுஷ்ய நூலினை வாங்கி வாசித்தேன்.
இந்த நூல் ஒரு ஆன்மீக அமானுஷ்ய நூல் என்பதைத் தாண்டி ஒரு தகவல் களஞ்சியம் என்று தான் கூற வேண்டும். இந்த கதையில் இளம் தம்பதிகளான மற்றும் கதையின் பிரதான பாத்திரங்களான நாயகி ‘பவித்ரா’ மற்றும் நாயகன் ‘பாஸ்கர்’ இருவரும் தேன்நிலவு கொண்டாட கொடைக்கானல் செல்கின்றனர்.
அங்கே பாஸ்கரின் பால்ய நண்பனான ஆனந்துக்கு சொந்தமான ‘ஆனந்த் வில்லா’ என்ற பங்களாவில் தங்க நேரிடுகிறது.
பங்களாவின் சமையல்கார பெண்ணாக மேரி, வாட்ச் மேனாக வரதராஜன் மற்றும் தோட்டக்காரனாக நாச்சிமுத்து. மூன்று பேரும் கதையின் ஆரம்பம் முதலே திகிலூட்டுகின்றனர்.
இயல்பிலே… புத்தகப்புழுவான பவித்ரா ஒரு ஆவி உலக ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவள் தன் திருமணத்தை முன்னிட்டுத் தன் ஆவி உலக ஆராய்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாள்.
ஆனந்த் வில்லா என்கிற அந்த பங்களா ‘சூசைட் பார்க்’ அருகில் தான் அமைந்துள்ளது. அந்த பங்களாவில் பாஸ்கர்-பவித்ரா தங்கியிருக்கும் ஒரு அறையில் ஒரு மர பீரோ உள்ளது.
அந்த பீரோவில் நிறைய புத்தகங்கள் உள்ளன. அவற்றை பவித்ரா யதார்த்தமாக வாசிக்கிறாள். இப்படியாக அவள் ஒவ்வொரு புத்தகமாக வாசித்துக் கொண்டிருக்கையில் ‘கிருஷ்ண தாச சுவாமிகள்’ எழுதிய ‘மோகினி கன்ம வசியம்’என்ற நூலினை வாசிக்க நேருகிறது.
அந்நூலை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து பாஸ்கர்-பவித்ரா வாழ்க்கையில் அமானுஷ்ய சம்பவங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறத் தொடங்குகிறது.
மோகினி கன்ம வசியம் என்ற அந்த நூலைப் பவித்ராவைப் போலவே பாஸ்கரும் ஒரு கட்டத்தில் வாசிக்கிறான்.
இருவரும் அந்த நூலை வாசித்ததில் இருந்து, அவர்கள் ஒரு அமானுஷ்ய வலையில் மாட்டிக் கொண்டதை உணர ஆரம்பிக்கின்றனர்.
அதே நேரத்தில் அந்த நூலைப் பற்றி அறிந்த ‘அனுமன்’ உபாசகரான ‘லாந்தர் மனிதர்’ என்கிற சிவானந்த சுவாமிகள் பாஸ்கர் மற்றும் பவித்ராவைக் காப்பாற்றப் போராடுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக மோகினி கன்ம வசியம் என்ற அந்த அமானுஷ்ய நூல் அமானுஷ்யமான முறையில் தானாக அந்தரத்தில் எரிந்து சாம்பலாகிறது.
இதனைக் கண்ட பவித்ரா பேரதிர்ச்சி அடைகிறாள். ‘இந்த நூலை வாசித்து யாரும் உயிர் பிழைத்து இல்லை’ என சிவானந்த சுவாமிகள் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். ஏனெனில், இந்நூலைக் காவல் காத்து வருவது ‘மோகினி’ என்றும், அவள் இந்நூலை
வாசிக்கும் எவரையும் அழிக்காமல் விட்டதில்லை என்றும் கூறி மிரள விடுகிறார்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில், ‘பவித்ரா-பாஸ்கர் தம்பதி உயிர் பிழைத்தார்களா?’ என்ற ஒற்றைக் கேள்வியோடு புத்தக மோகினி பாகம்-1 பயணிக்கிறது. வாசிக்கும் நம்மைப் பிரமிக்க வைத்து உடன் பயணிக்கவும் வைக்கிறது.
இளகிய மனம் உடையவர்கள் இந்நூலை வாசிக்காமல் இருப்பது நல்லது. இது ஒரு முன்னெச்சரிக்கை ! குறிப்பாக, இரவில் தனியாக வாசிக்காமல் இருப்பது மிக மிக நல்லது.
ஏனெனில், இந்தப் புதினத்தை ஆசிரியர் அத்துணை துல்லியமாக மற்றும் உணர்வுப் பூர்வமாக எழுதியுள்ளார் என்று தான் கூற வேண்டும். ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இந்நூலை வாங்கி வாசித்து பாருங்கள். ஒரு புது திகில் அனுபவம் கிடைக்கும்.
இந்நூலை சிறப்பாக எழுதிய எழுத்தாளர், சகோதரர் திரு. பெண்ணாகடம் பா. பிரதாப் அவர்களுக்கும் மற்றும் டி.கே. பப்ளிஷர்ஸ்க்கும் வாழ்த்துகள். மிக்க நன்றி.
மோ. ரவிந்தர்
நூல்:-புத்தக மோகினி பாகம்-1 (புதினம்).
பதிப்பகம்:-டி.கே.பப்ளிஷர்ஸ்.
நூல் ஆசிரியர்:- பெண்ணாகடம் பா. பிரதாப்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
![ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - புத்தக மோகினி [பாகம்-1] - மோ. ரவிந்தர்](https://bookday.in/wp-content/uploads/2023/11/photo_2023-11-24_13-11-20-1024x575.jpg)
