எழுத்தும் புத்தகமும் இல்லாத உலகம் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பார்த்தால் வரலாறு, அறிவியல்,சட்டம் முதலிய மானுட வளர்ச்சிக்கான எந்த சாத்தியமும் அற்றுப் போயிருக்கும். எழுத்தென்பது மொழியின் சித்திர வடிவங்களே.
உலகில் ஏறத்தாழ 7139 மொழிகள் பல்வேறு மக்களால் பேசப்படுகிறது; இவற்றுள் 293 மொழிகளுக்கு எழுத்து அமைப்பு(writing system)இருப்பதாக எத்னோலாக்(ethnologue) வலைதளம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவின் 2022-ஆம் ஆண்டு கணக்குப்படி 142 கோடி மக்கள் தொகையில், 77.7% எழுத்தறிவு உடையவர்கள் ஆவர். இந்தியாவில் மட்டுமே 22 மொழிகள் அலுவல் மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இன்றைய சமுதாய நிலவரப்படி கிட்டத்தட்ட பெரும்பான்மையானோர் எழுத்தறிவு உடையவர்களாக இருக்கிறோம். எழுத்துக்களை நூல்களில்,அச்சிட்ட அறிக்கையில், தொடுத்திறையில், விளம்பர பலகையில் என பலவற்றிலும் பார்த்து படித்து அறிந்து தெரிந்துகொள்கிறோம். ஆகையால் “எழுத்தின்றி அமையாது உலகு” என்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். இப்படிப்பட்ட எழுத்து வடிவம் எவ்வாறு தோன்றின? எவ்விதம் வளர்ந்தன? இதன் வேர்கள் எது? எவ்வாறு கால ஓட்டத்தில் தன்னை புதுக்கிக் கொள்கிறது? போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ளும் பொழுதில் ஆச்சர்யத்தால் நாம் திக்குமுக்காடி போவோம் என்பதற்கு நானே சாட்சி!
ஆதியில் மனிதர்கள் வாய் வழியாக மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொண்டனர். அறிவையும், அனுபவத்தையும் தனது சந்ததிவழியினருக்கு வாய் வழியாகவே கடத்திவிட்டு சென்றனர்.நடமாடும் நூலகமாக திகழ்ந்த தொல்லோரின் ஞாபக சக்திகள் அபரிமிதமானது. “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் மற்றும் கற்றிலன் ஆயினும் கேட்க” என்று வள்ளுவர் ஆணையிட்டது இதற்கு சான்றாகும்.
காப்பியங்களும், கதைகளும், இன்னும் பிற இலக்கிய வகைமைகளும் வாய் வழியாகவே பரப்பப்பட்டு வந்துள்ளது.இந்திய புராணங்களும், இதிகாசங்கள் கி.மு.5ஆம் நூற்றாண்டு வரையிலும் சூதர்களினால் பாதுகாக்கப்பட்டு போதிக்கப்பட்டுவந்துள்ளது.இவ்வாறாக எழுத்து வடிவம் பெறாத கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவை காலவோட்டத்தில் பெரும்பான்மை அழிந்து விட்டிருக்கிறது; எஞ்சியவை மிகச் சொற்பமே.
எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பு மக்கள் கருத்துகளை உணர்த்த பொருள்கள், அமைப்புகள், (குறியீட்டுக் கோள்) கயிற்று முடிச்சு(முடிச்செழுத்து) ,மணிகள் முதலானவற்றை பயன்படுத்தினர்.
ஆதிமனிதன் நாகரீகம் அடைவதற்கு முன்பே சித்திரம் எழுத கற்றுக்கொண்டான்.சித்திர எழுத்தின் வழியே உருவ எழுத்தையும், கருத்தெழுத்தையும், ஒலி எழுத்தையும் தோற்றுவித்தனர். இன்று நம் லிபிகளில்( எழுத்து வடிவம்) சித்திரத்தின் சுவடுகள் சிறிதும் இல்லை; ஆனால் சித்திரமே நமது லிபிகளுக்கு மூலப்பொருள்.
மரமை பெரிதும் சார்ந்திருக்கும் எகிப்தியரே அனைத்து லிபிகளுக்கும் தந்தையர் ஆவர். மெய்யெழுத்துக்களை மட்டுமே ஆண்ட எகிப்தியர்களின் அட்சிரமாலை தேக்கமுற்றது. படையெடுப்பின் வழி செமித்தியர்கள் எகிப்தியரை வீழ்த்தி அவர்களை ஆண்டனர். இடையர்களான செமித்தியர்கள் எகிப்தியரின் லிபியை தனக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டனர்.பின்பு வந்த “பீனிஷியர்கள்” செமித்தியர்களின் லிபியை தன் மொழியின் ஒலியோடு பொருத்தி ஆண்டனர்.
பீனிஷியர்கள் கடல் வாணிபம் செய்பவர்கள்; வாணிபத்தோடு மொழியையும் பிற நாடுகளுக்குச் சென்று பரப்பி வந்தனர். இவ்வழியாக கிரேக்கம், லத்தீன், ஆங்கிலம்,ஐரிஷ் பிரஞ்சு முதலான மொழிகளின் லிபிகள் வளர்ச்சியடைந்தது. நமது திராவிட லிபிக்கும் தோற்றுவாயாக இருப்பது செமித்திய லிபியே. செமித்திய லிபிலிருந்து உருவான “பிராமிய லிபியின் ”திராவிடக்கிளை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பிரிந்ததென்பது சில அறிஞர்களின் கூற்றாகும்.
மேற்கண்ட எழுத்து வடிவத்தின் (லிபி) வரலாற்று உண்மைகள் யாவும் 1798-இல் நெப்போலியன் எகிப்து மீது படையெடுத்தப் பின்பே தெரியவந்துள்ளது. நெப்போலியனின் சிப்பாய்கள் பதுங்குகுலி அமைக்கும் பொழுது ரோசட்டா(rosetta stone)என்ற இடத்தில் “சித்திர எழுத்துகள்” பொறித்த கல்தூண் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் இருந்த சித்திர எழுத்து,சித்திர எழுத்தின் உறுத்திரிபு மற்றும் பண்டைய கிரேக்க எழுத்து போன்றவற்றாலே இந்த எழுத்து வரலாறு வெளி உலகிற்கு புலனாயிற்று. இதை தொடர்ந்து 1840-இல் பால்பாட்டா என்ற பிரஞ்சுக்காரரும், ஆஸ்ட்டன் லேயர்டு என்ற ஆங்கிலேயரும் பண்டைய அசிரியரது (Mesapatomians) நகரங்களின் சிதைவுகளை அகழ்ந்தெடுத்தனர். இந்த அகழ்வாராய்ச்சி, எழுத்து வளர்ச்சியின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
எழுத்தைப் போன்று எண்களின் வரலாறும் சுவாரஸ்யம் மிகுந்தது. பண்டைய மனிதருக்கு நான்குக்கு மேல் எண்ணத்தெரியாது. நான்குக்கு மேல் “பல” என்றே குறிப்பிடுவர். வேடனாய் திரிந்த ஆதி மனிதன் இடையார்களாக மாறிய போது மந்தையிலுள்ள ஆட்டையும், மாட்டையும் கண்காணிப்பதற்கு கணக்குகள் தேவைப்பட்டது.அப்பொழுது தொட்டு தொகுதி, தொகுதியாக (பத்தின் மடங்கு) பிரித்து எண்ணக் கற்றுக் கொண்டனர். விரல் குறியீடுகளில் இருந்து உண்டான சித்திர எழுத்துக்களே உருமாறி, இன்று நாம் உபயோகிக்கும் எண் குறிகளின் வடிவம் எய்தின.
நாகரீக சமுதாயத்தில், முதன் முதலாக சிறப்பாக பயன்படுத்தப்பட்டது “கல்நூலூலேயாகும்” இந்தக் கல்நூலைத் தொடர்ந்து களிமண் பலகைகள் பயன்பாட்டிற்கு வந்தன. எகிப்தியர்கள் ஒருவகை நானர் புல் வகையை கொண்டுத் தயாரித்த “பாப்பிரஸ்”(paper) காகிதத்தையும் பயன்படுத்தினர். ஐரோப்பியர்கள் 16-ஆம் நூற்றாண்டு வரையிலும் மெழுகில் இரும்பானியை கொண்டு எழுதும் முறையை கையாண்டுவந்தனர். பின்பு தோற்கடகாசி பயன்பாட்டிற்கு வந்தது. நமது பண்டைய இந்தியாவில் “பனை ஓலையை” கொண்டு எழுதியிருக்கின்றனர். கி.பி.105-இல் சீனர்கள் காகிதத்தை கண்டுபிடித்தனர்.ஆனால் கி.பி.751-இல் சீனர் அரேபியரிடம் போரில் தோற்றப்பின்னரே காகிதம் செய்யும் தொழில்நுட்பம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
15-ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி இயக்கம் பரவியது. அப்பொழுதே அச்சடிக்கும் தொழிலும் தோன்றியது. தமிழ்நாட்டில் 16-ஆம் நூற்றாண்டில் அச்சடித்த நூல்கள் முதன்முதலாக வெளிவந்தன. இந்தியர் அச்சகம் வைத்து நடத்துவதற்கு 1835-ஆம் ஆண்டு வரையிலும் தடை இருந்தது.இந்தியர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்திருப்பதற்கு இதுவும் காரணமாகும்.
எழுத்தின் வடிவமும், புத்தகமும் கடந்து வந்த பாதைகள் மிக நீளமானவை; சவால்கள் நிறைந்த அவற்றின் பயணத்தை தெரிந்துகொள்வதென்பது மானுட வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு சமமானது. தொல்லோர்கள் புத்தகத்தை பெரிதும் மதித்து பேணிக்காத்து வந்தனர். புத்தகத்தை தெய்வீக அம்சம் பொருத்தி பார்த்தனர். இறந்தவர்களுடன் புத்தகத்தையும் பதப்படுத்தி அடக்கம் செய்தனர்.இறந்தவர் வாசிப்பார் என்பது அவர்களது நம்பிக்கை. எழுத்திலும் தாளிலும் கூட மன்னருக்கும் சாமானியருக்கும் பாகுபாடு இருந்தது. பண்டைய எகிப்தின் டாலமி அரசன் முதல் ஹிட்லர் வரை நூலகத்தையும் நூல்களையும் அழித்து வந்துள்ளனர். இவ்வாறு பல அரிய நூல்கள் தீக்கிரையாகி போய்விட்டது. ஏதோவொரு வகையில் புத்தகங்கள் அவர்களை அச்சமடைய செய்துள்ளது. புத்தகத்தின் சக்தி அளவிடர்கரியது..
இது டிஜிட்டல் மயமாக்களின் யுகம். இன்னும் சில பத்து ஆண்டுகளில் “பேனா” கொண்டு எழுதும் முறை வழக்கொழிந்து போனாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence)இன்னும் பல புதுமையான பாய்ச்சல்களை சாதித்து காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தலைப்பை கொடுத்தாலே தானியங்கியாக எண்ணிலடங்கா கட்டுரைகளையும், இன்னும் பிறவற்றையும் தரவல்லது.இந்த “AI.” கால ஓட்டத்தில் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தகவமைப்பு அவசியம் தானே! நிலைத்திருத்தல் தானே முக்கியம்.
மொத்தம் எட்டு தலைப்புகள் கொண்ட இந்த “ஆய்வுக் கட்டுரை” தொகுப்பில் எழுத்தின் வடிவ தோற்றம் முதல் புத்தகத்தின் கதை வரை அனைத்து தகவல்களையும் தக்க ஆதாரங்களுடன் இந்நூலின் ஆசிரியர் டாக்டர்.எஸ்.இராமகிருஷ்ணன் ஆய்ந்து வழங்கியுள்ளார். மொழி ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மானுடவியலாளர்கள் போன்றோருக்கு மிகுந்தப்பயன் தரும் நூல் இந்த, “புத்தகத்தின் கதை.”
நன்றி!
நந்தசிவம் புகழேந்தி
நூல் பெயர்: புத்தகத்தின் கதை.
ஆசிரியர்:டாக்டர்.எஸ் இராமகிருஷ்ணன்
வெளியீடு:N.C.B. H
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தகவிமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.