நூலறிமுகம்: புதிய மாமிசம் (கவிதைகள்) - ஜெயாபுதீன்

 

 

 

மதுச்சாலையில் பரிமாறுகிறவனின்மீது அன்பு கசியும் கண்களை உடையவனுக்கு சாத்தான் என்று பெயரிட்டிருக்கிற கவிஞரின் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மதுச்சாலையைக் கூட்டிப் பெருக்குகிற நாதியற்ற முதியவனுக்கு ஒரு மதுப்புட்டியை வற்புறுத்திக் கையளித்துப் போகிறான் அந்தச் சாத்தான்.

மனித வெறுப்புகளை வெளிக் காட்டாமல் லாகிரிக்குள் ஆழும் கடவுளையும் மனிதர்கள் குறித்த வசவுகளைப் பொழியும் சாத்தானையும் எதிரெதிரே அமர்த்துதல் எளிதா என்ன.?

நேர்ப் பார்வைக்குச் சாத்தானாய்த் தெரியும் கருணை மிகு மனிதர்கள் சூழ நாம் வாழும் வாழ்வின் காட்சிகளில் மலிந்திருக்கும் தோற்றப் பிழைகள் புரிபடுகின்றன இக்கவிதையில். உண்மையாகவே கொடுப்பதற்கு ஏதுமற்றவரை கடவுள் என்ற பெயரில் கவிதைக்குள் ஏன் வைத்திருக்கிறார்?

“சிவந்து சுழற்றும்
சாத்தானின் கண்களில்
பரிமாறுபவன் மீதான அன்பு குழைகிறது”

இவ்வரிகளில் கவிஞர் RCசந்துரு, கவிஞர் யூமா வாசுகியின் ‘மதுச்சாலையில் உருளும் கோலிக் குண்டுகள்’ கவிதையின் காட்சியில் இறவாப் படிமமாய் உருண்டோடும் கோலிக்குண்டுகளைப் பொறுக்கி, சிறுவனிடம் கையளிக்கும் ஈரமனிதர் களில் ஒருவனின் கண்களைக் கொண்டுவந்து
தன் சாத்தானுக்குப் பொருத்தியிருக்கிறார்.

“என் தரப்பு நியாயங்களை
எடுத்துச் சொல்ல
யாரோ வரவேண்டுமென்று காத்திருந்தால் நான் என்பது
எதற்கு ?”

ஓரிடத்தில் சுயநலங்களைப் பற்றிக் கொண்டு ஓடுகிற நரி வேறோரிடத்தில் மானாகி, தன் தசைகளை,புதிய மாமிசத்தைத் தன்னிலும் பலமிகு விலங்குகளுக்குத் தின்னக் கொடுத்தே ஆக வேண்டிய சூழலையும்,

“குற்றவுணர்ச்சியற்று
மறைவிடத்தில் வைத்து என் தேவைகளைப் பிய்த்து உண்ணத் தொடங்குகிறேன்”

என்ற வரிகளையும் புதிய மாமிசம் கவிதைக்குள் வைத்திருக்கிறார்.

“இரைதேடும்போது
கொலை ஆயுதமாய் மாறும் அப்பறவையின் அலகுகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும்போதுமட்டும்
இலகுவாகி” விடுகிற

கணங்களைப் பதிவு செய்யும் கவிதையில் இருத்தலுக்கான போராட்டம் உயிர்களை எத்தனை கடுமையானவையாக மாற்றி விடுகின்றன என்ற சித்திரம் மேலெழுகிறது.

“வழிகாட்டுபவனின் சுவடுகளைப் பின்தொடர்பவர்களுடன் கலந்து
ஓநாய்களும் ஒன்றாகப் பயணிப்பதைத்தான் கடைசிவரை கண்டுபிடிக்க முடிவதில்லை.”

இன்றைய சூழ்ச்சிமிகுந்த அரசியல் சூழலும், அதிகாரத்தின் கண்களை மீறி எதையுமே முன்னெடுத்துவிட முடியாத கண்காணிப்பின் மாயவலையையயும் ‘பயணத்தின் நடுவே’ கவிதையில் சுட்டியிருக்கிறார்.

வானில் பருந்திடம் பிடிபட்ட. இரைப் பறவையின் மெல்லிறகு, உதிர்ந்த கனமான பருந்தின் இறகு தரைவீழ்ந்த பின்னரும் காற்றிடம் போராடிக் கொண்டிருக்கும் கவிதையில் எளிய மனிதர்கள் ஏதுமற்றவர்களாயினும் அவர்களின்தளர்விலாப் போர்க்குணத்தின் அரசியலைப் பாடுகிறார். கவிஞர்.

கால ஓட்டத்தில் அம்மாவின் அடையாளங்கள் எல்லாமே உதிர்ந்து போக,
“அம்மாவின்ஞாபகமாய் நினைவிலிருப்பது அம்மா மட்டுமே”
எத்தனை காத்திரமாய் எதார்த்தத்தைப் பேசுகிறது.

“மனிதர்கள் பலமிழந்த நேரம் பார்த்து
மரணம்தன் சுயத்தை
வெளிக்காட்டத் தொடங்குகிறது”

இவ்வரிகளை வாழ்வின் பேருண்மையெனக் கொள்ளலாம்.இதை வேறுகோணத்தில் பார்ப்பதென்றால் மனிதர்கள் பலமிழப்பது மரணத்திற்கு நிகரானது. எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் உரமாக பலமாக வாழ்தலைக் குறித்த கவிதையிது.

“புரியாத வயதில்
அழகாய்த்தானிருந்தது வாழ்க்கை”
என்ற வரிகளிலும்,
வயலோரத்தில் நின்று கையாட்டும் சிறுவர்களுக்கு ஓடும் ரயிலுக்குள் ளிருந்து சிறுவனுடன் சேர்ந்து கையசைக்கும் கவிஞர் தன்
கைகளில் ஒட்டியிருக்கும் பால்யத்தின்
நறுமணத்தைக் குறிப்பிடுகையிலும்
நம் வேர்களைமறந்துவிடாத மனங்களுக்குள் ஒட்டிக் கொள்கிறார்.

“அவை வெற்று அதிர்வுகளல்ல
காலகாலமாய் அவர்கள்
உன் மீதேறி
நடந்துசெல்லும் ஓசை” எனும் வரிகளும்

“பூமியில் ஆயுதங்கள்
தலைகுனியும் காலம்
நெருங்குவதாய் இல்லை”

என்கிற ஆற்றாமைவரிகளும் நடப்பு அரசியலை பேசுகின்றன.

தீநுண்மிக்காலத்தில் பிற்போக்கு அரசுகளால் கைவிடப்பட்ட குடிமக்கள் தம் நிலந்தேடித் தேசமெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் நடைவழிப்பிணங்களை அவ்விடத்திலேயே அழுதபடி கைவிட்டு ஒட்டிய வயிற்றுடன் பாதங்கள் தேய நடந்த கொடுங்கதையைப் பதிவு செய்திருக்கும் கவிதையும் உள்ளிருக்கிறது.

மனிதவாழ்வின்,கருணையற்றவர்களால் ஆளப்படும் நிலமொன்றின், சாதி பொருளாதாரம் முதலான ஆயுதங்களால் முடக்கப்படுகிற மனிதத் தொகுதியின் அத்தனை விதமான வலிகளைப் பாடினாலும் அவற்றை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நுட்பங்களையும் பொதிந்த வரிகளால் ஆற்றுப்படுத்தியிருக்கிறார் கவிஞர் சந்துரு.

அத்தனைக்கும் சிகரமாக

“நிலத்தை
ஈரமாக வைத்திருங்கள் போதும்
எப்படி முளைப்பதென்பதை
விதைகள் பார்த்துக்கொள்ளும்”

இடதுசாரித் தன்மையில் நின்று தன் முழுவாழ்வையும் பயன்மிகு கருவியாய் மாற்றி சகமனிதர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தின ருக்கும் சிந்திக்கும் கவிஞரின் கண்கள் கண்ட
சித்திரங்களை, சிந்தித்த சொற்களை நல்ல நூலொன்றாய் பதிப்பித்துக் கையளித்திருக்கும் படைப்புக் குழுமம் தோழர் ஜின்னா அஸ்மி அவர்களுக்கும் நூலை முழுமையாக வாசித்து இந்நூலின் குரலை, நோக்கத்தை,கவிஞரின்
உலகத்தை,கவிமனதை அற்புதமான அணிந்துரையாக்கியிருக்கும் இந்திரன் சாருக்கும்,எம் பெருமைக்குரிய தோழர் கவிஞர் RC சந்துரு அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

நூல் : புதிய மாமிசம் (கவிதைகள்)
நூலாசிரியர்: கவிஞர் சந்துரு ஆர்.சி
பதிப்பகம்: படைப்பு பதிப்பகம் வெளியீடு
நூலைப் பெற: 94893 75575

ஜெயாபுதீன்
கோவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *