நூல் அறிமுகம்: சந்துரு. ஆர்.சி ‘புதிய மாமிசம்’ (கவிதை) – தயானி தாயுமானவன்

நூல் அறிமுகம்: சந்துரு. ஆர்.சி ‘புதிய மாமிசம்’ (கவிதை) – தயானி தாயுமானவன்




அரூபத்தின் இன்சொல்லாக
பெருத்த மௌனத்தை மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர்….கடலின் மொழியாக.
புதிய மாமிசம்….கவிதை நூலின்
தலைப்பாக.
இரத்தம் பூசிய நாவுகள் நாமும் உணவாக பலியாக தயாராக இருக்கிறது வேட்டையின் கண்கள். மானாக மாறும் நரியை இப்போது நரிகளே சுவைக்கும் இரசவாதத்தில் சொட்டுகிறது மனிதனின் சுயநலம். இது இயற்கை நம்மீது வைத்திருக்கும் கடைசி அத்தியாயம் என்றே தோன்றுகிறது.
தேநீர் தயாரிப்பு போன்று அன்புச்சொல்லை ஏன் தயாரிக்க வேண்டும். உணர்தலே போதும். நிரூபித்தல் அவசியமற்றது என்பதை கேள்விக்கணைகளை அநாயாசமாகக் கடக்கிறார் கவிதையின் ஒற்றையடிப்பாதை.
நத்தைக்கும்
சிறகுகள் முளைக்கலாம்….
துரோகத்தின் வலியை உணரும்போது. ரெயில்
ஜன்னல்களுள்… சிறைபட்டாலும் பால்யம் துளிர்த்துவிடுகிறது காட்சிகளில்…வாழ்வின் முரண் வயதுகளில் ஒட்டிக்கொண்டது. மாறிமாறித் தோன்றும் காட்சிகள்தான் நம்மை கனவுக்கும் நனவுக்கும் இடையே மூச்சுவிட ஆசுவாசம் தருகிறது.
தன் கடைசி வாக்குமூலத்தை சொல்லாமல்….
செல்லும் காதலின் வலி உயிரின் வலி.
மயிலிறகு மலடாயிருக்குமோ? வேறொன்றை அடைகாக்கத்தொடங்கினேன் என்பது எத்தனை வலிமிக்க வரிகள். வாழ்வியல் பால்யத்தின் கனவுகளை சுமந்து திரிகிறது.
இரண்டு எல்லைகளையும் கடக்க முடியாத காத்து கருப்புகள் எங்கள் ஊர் கணவாயை…. கடக்கும்போது….. உணர்ந்த அதே ஆணிகள் அடிக்கப்பட்ட பனைமரத்தின் சலசலப்பு…கவிதையின் உச்சம். இப்போதைய போர் நடக்கும் ரஷ்ய உக்ரைன் எல்லை களுக்கும் அப்படியே பொருந்துவதுதான் கவிதையின் வெற்றி.
முயல்களின் காதுகளைப் போல அனுமதியின்றி தூக்கிச் செல்லும் காலம்….ஆஹா அருமை.
அருவறுப்புகள் கூட ஏமாற்றத்தின்… சுவடுகளால் எனும்போது அழகாகிகிறது….
கடைசி நேர இசைக் குறிப்பில்.
பாழும் கிணற்றில் தவறிய ஆசைகளை
பாதாள கொலுசுகள் மீட்டெடுக்கும்போது உயிரோடு இருக்குமா? என்பது மறைந்திருக்கும் வினாவின் வருத்தங்கள். மரணத்தின் கடைசி நேர இசைக் குறிப்பை வாசிக்கும்போது நம் காதுகள் தான்
செவிடாக.
நிழல் விற்பவன் கவிதை புதிய பார்வையை பதியவிடுகிறது நிழலின் மீது. அதை ஒளித்து வைப்பது சுலபமல்ல. அது உண்மையின் வாக்குமூலம் அல்லவா?
கண்ணாடியில் தெரியும் பிம்பம் எனதல்ல.சர்பங்கள் தப்பித்து செல்கின்றன என்கண்களில் இருந்து. ஒரேயொரு உண்மை மிச்சமிருக்கிறது பொய்களை செலவு செய்த பிறகு அழகான வரிகளும் எதார்த்தங்களின் நிழல் ஒட்டிய வாழ்வும். வார்த்தைகளின் அரூபம் பிரம்மாண்டம். மெளனமாக அமர்ந்திருக்கிறது கவிதை மனதை பிசைந்தபடி.
கரைகளின் உதடுகளை கவ்விச்செல்வது நதியா?
நதிக்குக் கூட கண்ணியமுண்டாம் பெண் என்றதும்.
நதியின் சாயல் மாறலாம்….
ஈர மற்று போகும்
கண்களைப் போல இனி…..
அழுவதற்கு கண்ணீரும் இல்லை, எனும்போது, அழுவதற்கு தயாராகிவிடுகிறது மனது.
ஓட்காவின் நிறம்
கடவுளின் நிறம்….
உண்மைகளின் நிறம்.
சாத்தானின் சாபம் நம்மையறியாது
தொடருகிறது நமது நிழலோடு.
தனித்த காலம் என்பது இருவருக்கும் பொதுவானதுதான். ஆனால் எல்லாம் மறைத்து காய்ந்த சுள்ளிகளை
பூக்க வைப்பவளே
பெண். வற்றிய கிளைகளின் முழுநிலவு அவள்.அருமையான பெண்ணின் குணசித்திரம் வானத்தினும் மேலோங்கி நட்சத்திரங்களை மின்ன வைக்கிறது.
செழுமையும்
வறுமையும்
முரண்கள் எனினும் கூழாங்கல்லிலும் நதியினோசை.
இதை உணராமல் எழுதியிருக்க வாய்ப்பில்லை.
வரிகளில் வந்த சேதி கடுதாசிகளின்
மூட்டையாக…
ஆடுகிறதாம்.
ஒவ்வொருகடிதம் குத்திவைக்கும்போது….
கூடவே ஆடுகிறது அம்மாவின் இதயம்…ஆஹா. உண்மை. மெளனத்தின் வலிபொருந்திய வாழ்வு..விவரம் அறியும் வயது உணர்கிறது அம்மாவின் வலியை.
சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் நம் மனம் தப்பிப்பதை நுட்பமாக படம்பிடித்துக்காட்டுகிறது பேரகராதி – கவிதை.
மறதிகள் சுலபமாகிவிடுகிறது என்பதன் வலியும்….
மிதப்பது கடலில் என்றாலும்
படகுக்குள் கிடக்கும் செத்த மீனைப்போல் வாழ்வு வஞ்சகத்தின் வலிசுமந்தே கிடக்கிறது தீராத வலியோடு.
தூரிகை பிடித்த விரல்கள் வறுமையில் கிடப்பதை ப்ளக்ஸ்போர்டுகள் உணருமா? என்ன.
தேன்தோய்ந்த ஊசிகள்….எத்தனை வஞ்சகமானது வியாபார உலகமடா சாமி என்ற சலிப்பின் மீது ஏறி நிற்கிறது கவிதை. ஏதேனின் தோட்டத்தில் ஏவாளின் கண்கள் எப்போதும் ஆதாமின் பார்வைக்காக காத்திருந்தது உண்மைதான்.அது இருவருக்குமான உலகத்தின் சத்தியம். அண்டார்டிகாவட்டத்தில் இருவர் மட்டும் இருந்திருந்தால் காதல் பனிப்பூ தூய்மையான இரு இதயங்களுக்கு இடையே மட்டும் மலர்ந்து உருகியிருக்கக்கூடும். உண்மையில்….. தனக்கான இதயத்தை யாருக்கும் தெரியாத வகையில் ஒளித்து வைக்கிற முஸ்தீபுகள்…காதலுக்கான சுயம்.
ஒற்றை இழைகளால் செய்யப்படாத இதயம் வலி தாங்கும் கூடாகிறது ….பல இழைகளின் இலாவகம்.. கற்றுத்தந்த வலிகள்.
அற்ப பெருமைகளின் வாசம் கெட்டிப்பட்ட அழுக்கு.நாசியில் கடக்கும் வாசனையோ தொண்டைவரை… எல்லை அறியாது சாதியெல்லை அறியாது பசி..
சுழலுகிறதுநாவுகள்..
நிழலற்று வாழ்வதும்,
நினைவற்று வாழ்வதும் ,ஒன்று தான் …..
என்பது மனதின் இரணம். சில வெளிச்சங்கள் நம் நிழலையும்… விழுங்கிவிடக்கூடும். அசரீரியின் குரல் அது.
கைநழுவிப் போன காதலில்
நிராசைகள்….. சரணடைந்து விட்ட பக்தியில் கரைந்தே விட்டது காதல்.
உடல்கள்தான்
வேறாக.
நியாயங்களை தோற்கடிக்கும்
துரோகங்களின் முப்பது- வெள்ளிக்காசுகள்தான் தீர்மானிக்கிறது வாழ்வின் பரம பத விளையாட்டை. அதிகாரத் தொனிகள் புன்னகைக்கிறது..எப்போதும்,
கடவுளை
விற்பவளை…..
கூடையில்
சுமப்பவளை …..
கருவறை அனுமதிப்பதில்லை…அற்புதங்களின் பேரழகு.
பொம்மை விற்கப்படும்போது.
அது வியாபாரம்.
கடவுளையும் பேரம்பேசி வாங்கி
அடுக்கிவிட முடியும். வணங்கும்போதே அது கடவுளாகிறது. நம்பிக்கையின் சிறு சுடராக.
வறுமை தீரவில்லை கடவுளை சுமந்தும்.
பரம்பரை கௌரவத்தின்
இரத்தக்கறைகளை சுமந்தபடி
ஊர்கூடி வாழ்த்த வாழ்கிறது மீசைகளின் வாழ்வு.
ஊனமாக்கப்படும் காதல்…..கல்லறையில் உறங்காது.. விழித்தே கிடக்கும்.
இரெயிலடிகளில்.
பெண்ணும் நிலமும்
இன்னும் உடமைகளின் அணிவகுப்பில்…
உயிரற்ற பண்டங்கள்.
கடவுளுக்கெதிராய் கலகம் செய்பவளோ….
பூமியின் சமையலறையில்…
நிதர்சன வரிகள்.
பலிபீடத்தில் கிடத்தப்படும் உண்மை….
தியாகியாகிவிடுகிறது. அடவுகள் அருமை.
தடயங்களை ஒளித்து வைத்தவர்களே இங்கு ஒப்பாரி வைப்பவர்களாகவும் இரட்டைவேடம் போடமுடியும். அதுவும் நடிகையெனில் புறவாசலின் இருட்டில் அவள் போனபின்பும் எட்டிப்பார்ப்பது அவளின் அக உலகத்தை. அநீதிகளை வதம் செய்யாத கடவுள்கள் எதற்கு? ஆடுகள் எப்போதும் பலியிடுபவன் நீட்டும் தளைகளுக்கே
தலையாட்டும். அது நாம்தான்…
போதியின் பழுத்த இலை இறங்கும்.. பேரழகு கவிதையின் வடிவங்கள்.
ஆஹா.மனிதன் மீண்டும் குரங்கில் ஒடுங்கினால் பேரழிவுகள் தவிர்க்கப்படலாம். அசைந்தாடும் காலம் அற்புதம்.
பாலையின் பளுவை சுமக்கும் ஒட்டகமும் சாயல் கொள்கிறது புத்தனின் நிதானத்தை.
ஆஹா அருமை.
அப்பாவின் கையசைவு – சர்ப்பத்தின் இரை விழுங்கிய நொடியின் அசைவு..கண்டிப் பற்ற சுதந்திரம் பின்னாளில் நினைவுபடுத்துகிறது குற்ற உணர்வை, பாசத்தை…அம்மாவின் நேசத்தை. வரிகள் சுருங்கிய விசாரிப்புகளில் மெளனத்தின் காதலை. மரித்தவனின் சொற்களில் நெய்யப்பட்ட கவிதையில்…சொற்களின் உதடுகள் உறைந்தே கிடக்கிறது….காலக் குவளையில் துள்ளும் கதைகள்..கவிதைகளாகி.கொஞ்சம் நீலம் பாய்ந்து வஞ்சக உலகின் நிறம் தோய்ந்து.சிலது செவ்வரளியாய் மிரட்டுகிறது…..
பூத்தபடி.
தீய்ந்த கனவுகள் பூத்த….. பசி வேய்ந்த தாழ்வாரங்கள் . நம் கண்களை கொத்தும் அதிகாரம்…. நடுநிசியிலும்,துரத்தலாம்.
வசீகரிக்கிறது முகமூடிகள்.
தந்திரத்தின் கயிறொன்றில் பிணைக்கப்பட்ட உதடுகளும் கைகளும் பொம்மலாட்ட வாழ்வு. வேறொருவரின் கண்களில் இருந்து அதிசயமாய் பார்க்கும் பாடத்தை கற்பிக்கும் வஞ்சகம்…காலம்காலமாய் அவர்கள் நம் மீது நடக்கும் ஓசையென சொல்லாமல் சொல்லுகிறது கவிதை வரிகள். கசியும் கண்ணீர் உதிரமாய் மாறுமுன் ஊர் சேரவேண்டுமென்பதே பெண்ணின் பிரார்த்தனை. ஊர்வலம் போகும் வாழ்வின் இரணம்.
வேர்களின் மிச்சமே மரமும் ….பூவும்… கிளையுமென….
வேராகப் பழகு என பாடம் சொல்லும் வரிகள்.
மனதை ( நிலத்தை,) ஈரமாக வைத்திருங்கள். நல்ல விதைகள் முளைக்கலாம்..அதை விதைகளே பார்த்துக்கொள்ளும்.. பாலைவனக் கனவுகளில் அழுகை துளிர்க்கிறது. ஏமாற்றம் பருகி வாழ்பவனுக்கு மகள் பருவம் எய்தாமல் இருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனை. எத்தனை கொடுமையான வரிகள். நெஞ்சம் நனைகிறது கவிதைகளில்.
கொல்வதற்கு காரணமான
சாதியின் அடையாளங்களை எழுத முடியாத ஒரு மருத்துவ உடற்கூறு ஆய்வறிக்கை…. சிதைந்த நமது சமுதாய அமைப்பை சல்லடையிடுகிறது. சாமான்ய மக்களின் வாழ்வில் ஓட்டைகளே பெரிதாக இருக்கிறது….எதிர்ப்புகள் ஏதுமற்று மெளனித்து கிடக்கும் உண்மைகள் நழுவிவிடுகிறது நெசம்தானே.
.அந்த கடவுளைப்போலவே. இரசவாதம் புரியும் ஜன்னல்கள் குடிசைகளில் எங்கே இருக்கும். வறுமைக்கு ஜன்னல்கள் கூட கிடையாது. சாகசங்கள் குற்றங்களாகாது. எப்போதோ ஒலிக்கிறது பழைய நினைவொன்றில் ஆராய்ச்சிமணி.
மனம் பிறழ்ந்தவனின் மடியில் கிடக்கிறது ஏவாளின் ஆப்பிள். நியூட்டனின் சூத்திரமோ வானத்தில் ஏவப்படுகிறது. பச்சை குத்தப்பட்ட குற்றம் ஆதாமை குறிக்கிறது.
புதிய மாமிசம்
கவிதை நூல்….கவிஞர்களின் உலகில் ஒரு மைல்கல்.
சாமான்ய மக்களின் பலிதீர்க்கப்படும் வாழ்வில் கவிதைக்காரனின் வீதி…….எப்போதும்
தீ பிடித்தே…. கிடக்கிறது….அவனின் மூங்கில் வனம்..தெறித்து விழும் ஆப்பிள்களிலோ ஒட்டிக்கொண்டிருப்பது காதலின் புதிய மாமிசம். சந்துரு.ஆர்.சி. அவர்களின் கற்பனையின் உயரம் ஏதேன் தோட்டம் வரையல்ல…. வானம் ஏகியது. வாழ்த்துக்கள் கவிஞரே. அயராத எழுத்து வாய்க்கட்டும்.
இக்கவிதை நூலை மிக அழகாக வடிவமைத்து வாசகர்களின் கையில் சேர்த்த படைப்பு குழுமத்தார்க்கு வாழ்த்துக்களும் பேரன்பும்.
– தயானி
தாயுமானவன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *