India New Agricultural Laws and Implications Book (Puthiya Velan Sattangalum Vilaivugalum) By AIKS State Secretary P. Shanmugam.

புத்தகம்: புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும் – பெ.சண்முகம்வேளாண் சட்டங்களால் வேளாண்மைக்கு பேராபத்து

“ஒரு நாட்டை இன்னொரு நாடு இரையாக்கிக் கொள்ள அனுமதிக்கும் பொருளாதாரம் நீதியற்றதும் பாவமானதும் ஆகும்”

– காந்திஜி

மத்திய பி.ஜே.பி அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. 2020 ஜூன் மாதம் 3ந் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஜுன் 5ந் தேதி குடியரசுத் தலைவரால் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டங்களை சட்டமாக நிறைவேற்றும் வகையில் பாராளுமன்றத்தில் செப்-17ந் தேதி மக்களவையிலும், செப்டம்பர்-20ந் தேதி மாநிலங்களவையிலும் சட்டம் நிறைவேறியது. இந்த சட்டங்களுக்கு செப்டம்பர் 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுக்க வேண்டிய நாளில் குடியரசுத் தலைவர் ஓய்வை ஒதுக்கித்தள்ளி கையொப்பமிட்டுள்ளார். அன்று இரவே மத்திய அரசிதழிலும் இந்த சட்டங்கள் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துவிட்டன.

இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வேதனைகளுக்கு தீர்வு கிடைக்குமா? அல்லது மேலும் விவசாயிகள் வாழ்வை படுகுழியில் தள்ளுமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“நோய்நாடி நோய்முதல் நாடி – அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் – குறள்

இந்த வரையறையை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சட்டங்களையும், உழவர் பெருமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் இந்தச் சிறுநூலில் நாம் பார்ப்போம்.

“காடு வெளஞ்சென்ன மச்சான் – நமக்கு

கையும் காலுந்தானே மிச்சம் என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் நிலையை படம்பிடித்துக் காட்டினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கிறன்றன. 2019-20ம் ஆண்டில் மட்டும் 10,287 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர். விவசாயம் மற்றும் கடன் தொல்லை காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 10000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது அரசு கணக்கு. ஆனால் உண்மையில் எண்ணிக்கை அதிகம். விவசாயம் லாபகரமானதாக இல்லாத காரணத்தால் விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறிக் கொண்டுள்ளனர். விளை நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவதால் விவசாயப் பரப்பளவு குறைந்து வருகிறது. வேளாண் விளைபொருட்களில் 22 வகையான பொருட்களுக்கு மட்டுமே அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அறிவிக்கிறது. இந்த விலையும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் அனைத்து பொருட்களையும் அரசு கொள்முதல் செய்வதில்லை. எனவே, வியாபாரிகளிடம்தான் விற்பனை செய்யவேண்டிய கட்டாயமிருக்கிறது. அவர்கள் அரசு தீர்மானித்த விலையைவிட குறைவான விலைக்குத்தான் வாங்குகிறார்கள். கடன் வலையிலிருந்து விவசாயிகளால் விடுபட முடியவில்லை. மூன்றில் ஒரு விவசாயிக்கு மட்டுமே அரசு நிதி நிறுவனங்களில் விவசாயக் கடன் என்பது கிடைக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் தனியாரிடமும், வியாபாரிகளிடம் மகசூலை தருவதாகக் கூறி முன்பணமாகவும் பெற்றுத்தான் விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர். இடுபொருட்களின் விலை பருவந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இடுபொருட்களுக்கான அரசு மானியம் குறைந்துகொண்டே வருகிறது. பன்னாட்டுக் கம்பெனிகள் இடுபொருட்களின் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய நிலைமைகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க, மீட்க இந்த சட்டங்கள் உதவுமா? என்பதை பார்ப்பதற்கு முன்பாக, மத்திய அரசின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்கிறது, எந்த மாதிரியான காலத்தில் அவசர அவசரமாக இந்த சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பது அவசியம்.

கார்ப்பரேட் காவலனாக மத்திய அரசு

கொரானா எனும் நோய்த்தொற்று உலகம் முழுவதும் நாள்தோறும் பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் மாதம் நோய்ப்பரவலில் இந்திய முதலிடத்திற்கு வந்துவிட்டது. மார்ச் 24 தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் அனைத்தும் திடீரென்று முடக்கப்பட்டு எத்தகைய முன்தயாரிப்புமின்றி அறிவிக்கப்பட்டதால் மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். நம்முடைய வாழ்நாளில் இப்படியொரு நெருக்கடியை இதற்கு முன் எதிர்கொண்டதில்லை.

இந்த நிலையில் மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? நோய்த்தோற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது, மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பது, நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பராமரிப்பது, பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தேவையான பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்வது, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எப்படி மீள்வது, வேலையிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு ஆகப்பெரும் முன்னுரிமை அளித்து செயல்படுவது என்பது தான் அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்த்தது.

ஆனால், மத்திய – மாநில ஆட்சியாளர்கள் மேற்கண்ட எதையுமே செய்யவில்லை என்பதை மனசாட்சியுள்ள எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். மாறாக, “பி.எம்.கேர்ஸ்” என்ற பெயரில் இந்த நெருக்கடியை பயன்படுத்தி பிரதமரே பணம் பார்ப்பதில்தான் கவனம் செலுத்தினார். பெரும் நிறுவனங்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நிதியாகப் பெற்று அதை தனது சொந்த நிதியில் வைத்துக் கொண்டார். இந்த நிதி குறித்து எவரும் விபரம்கூட கேட்க முடியாது என்று விதியை உருவாக்கிவிட்டார். மாநில அரசும், நோய் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் எப்படி கமிஷன் பெறுவது என்பதில் கவனம் செலுத்தினார்களே தவிர, அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணத்தைத் திரட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதை நாமறிவோம். நோயுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி“தன் கையே தனக்குதவி” என்ற நிலைக்கு மக்களைத் தவிக்கவிட்டனர்.

தொழில்கள் முடக்கப்பட்டதால், வேலையிழந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து குழந்தைகளையும், தங்களது சிறு உடைமைகளையும் சுமந்து கொண்டு கால்நடையாக பல ஆயிரம் கி.மீட்டர்கள் நடந்து சென்ற கொடுமையை காண்டோம். நூற்றுக்கணக்கானோர் வழியிலேயே குடிக்க நீர் கூட இன்றித் துடிக்க துடிக்க மரணமடைந்தனர். தண்டவாளத்தில் நடந்துசென்றவர்கள் அதிலேயே இரவு உறங்கிய போது ரயில் அவர்களின் உடல்களில் ஏறி தங்களின் உயிரை இழந்தனர். நாடே பதறித்துடித்தது. பலர் தற்கொலை செய்து கொண்டனர். புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ, கால்நடையாக நடந்து சென்று இறந்தவர்களின் எண்ணிக்கையோ எந்தக் கணக்கும் எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கொஞ்சமும் வெட்கமின்றி பாராளுமன்றத்திலேயே தெரிவித்தது. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் குறித்த விபரம் கூட இல்லை என்பது அலட்சியத்தின் உச்சம். இந்த துயரங்களிலிருந்து மக்கள் மீள்வது அவ்வளவு சுலபமல்ல!

மக்களைப் பற்றிக் கவலைப்படுபவர்களெல்லாம் மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது தான் மத்திய ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகளின், இந்திய பெருமுதலாளிகளின் வியாபாரத்தை, லாபத்தை எப்படி பெருக்குவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிந்தனையிலிருந்து உதித்தது தான் வேளாண் விரோத சட்டங்களும், தொழிலாளர் விரோத சட்டங்களும்.சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம்

செப்டம்பர் 17ந் தேதி இரவு மத்திய அமைச்சரவையிலிருந்து அமைச்சர் சிம்ரத்ஹவுர்பாதல் ராஜினாமா செய்தார். இவர் சிரோன்மணி அகாலிதள கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். சிரோன்மணி அகாலிதளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்டகாலம் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்த முக்கிய கட்சி. ராஜினாமா செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அவர் பேட்டியில் சொன்னது “அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தச் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து இதுகுறித்து பேசுங்கள் என்று நான் கூறினேன். ஆனால், அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. இத்தகைய நிலையில், அந்த அமைச்சரவையில் இருந்து நான் என்ன செய்வது? எனவே. போராடும் எனது விவசாய சகோதரர்கள் சகோதரிகளோடு இருப்பது என்று எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்” என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரவை எவ்வளவு ஜனநாயக பூர்வமாகவும், கூட்டாகவும் செயல்படுகிறது என்பதை இதன் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். அரசின் கொள்கை சார்ந்த பிரச்சனையில் முரண்பட்டு ஒரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடையது. பிறகு அந்தக் கட்சி கூட்டணியிலிருந்தே வெளியேறிவிட்டது.

அமைச்சரவைக்குள் இப்படியென்றால், பாராளுமன்றத்திற்குள் அதைவிட மோசம்! பாராளுமன்ற உறுப்பினர்களில் எதிர்கட்சியை சார்ந்த அனைவரும் இச்சட்டங்களை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புமாறு கோரினர். இது ஒரு சாதாரணமாக கடைபிடிக்கும் நடைமுறைதான். ஆனால் ஆளுங்கட்சி அதை ஏற்க மறுத்துவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரும் பல்வேறு திருத்தங்களை வலியுறுத்தினார்கள். அதை ஏற்கவில்லை. தனக்கிருந்த மிருகபல மெஜாரிட்டியை பயன்படுத்தி குரல்வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். மெஜாரிட்டி இருக்கிறது என்பதாலேயே மக்களுக்கு, நாட்டுக்கு விரோதமான எந்தவொரு காரியத்தையும் ஆளுங்கட்சி செய்வது சரியா என்பதை உங்கள் விவாதத்திற்கே விட்டுவிடுகிறேன். செப்டம்பர்-20ந் தேதி மாநிலங்களவையில் சட்டம் முன்மொழியப்பட்டது. அங்கு ஆளுங்கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சட்டத்தை எதிர்ப்பது அனைவருக்கும் தெரியும். முறையான வாக்கெடுப்பு நடத்தி சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம் நிறைவேறியது என்று அவைதுணை தலைவர் அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவே சில நிமிடங்கள் ஆகிவிட்டன. பாராளுமன்றத்திற்குள் அன்று பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு முடிவு கட்டப்பட்ட காட்சியைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமை பாராளுமன்றத்திற்குள்ளேயே பறிக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் உரிமைக்கான குரலெழுப்பிய குற்றத்திற்காக எட்டுபேர் பத்துநாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து பாராளுமன்ற வளாகத்திற்குள்ளேயே இரவு -பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இப்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு அடாவடித்தனமாக அவசர அவசரமாக சட்டங்களை நிறைவேற்றியது விவசாயிகள் மீது உள்ள அக்கறையினால் தானா?

சட்டவிரோதமான முறையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காமல் ஆளுங்கட்சிக்கு விசுவாசமான, தான் ஒரு சிறந்த “ரப்பர் ஸ்டாம்ப்” என்பதை சட்டத்திற்கான ஒப்புதலை ஞாயிற்றுக்கிழமை வழங்கி நிரூபித்தார் ராம்நாத்கோவிந்த் என்ற பெயர் கொண்ட இந்திய குடியரசு தலைவர். சட்டம் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்த பயப்படும் ஒருவர்தான் வல்லரசு இந்தியாவின் தலைவராக வாய்த்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்வீராக!

கட்டியிருக்கிற கோவணமும் களவாடப்படும்

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி. விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்று அன்றுமுதல் இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எதுவேண்டுமானாலும் காத்திருக்கலாம் விவசாயத்தை தவிர என்றார் நேரு. ஜெய் கிசான், ஜெய் ஜவான் என்று ஒவ்வொரு ஆட்சியாளரும் வெவ்வேறு காலகட்டத்தில் விவசாயத்தை தூக்கி நிறுத்துவதும், விவசாயிகளை பாதுகாப்பது மட்டும்தான் எங்கள் ஆட்சியின் ஆகப்பெரிய குறிக்கோள் என்று கூறாதவர்கள் அரிதிலும் அரிது.

தற்போதைய பிரதமர் மோடி அவர்களும், 2014ம் ஆண்டு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நாம் மறக்க முடியாது. மறக்கக்கூடாது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலை முற்றிலும் தடுக்கப்படும். எப்படி? தேசிய விவசாயிகள் கமிஷன் தலைவர் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில், வேளாண் விளை பொருட்களுக்கு ஒருங்கிணைந்த உற்பத்தி செலவுகளுக்கு மேல் ஐம்பது சதவீதம் (C2+50) உயர்த்தி விலை தீர்மானிப்போம். இடுபொருட்கள் குறைந்தவிலையில் வழங்குவதுடன், கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். நதிகள் இணைப்பின் மூலம் பாசன உத்தரவாதம் என்று உறுதியளித்தார். லட்சக்கணக்கான விவசாயிகள் நம்பி வாக்களித்தனர். ஆட்சியில் அமர்ந்தார்.ஓராண்டு நிறைவு பெற்றது.

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று நினைத்து உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் சந்தையைப் பாதிக்கும். அதாவது நுகர்வோர் பாதிக்கப்படுவர் என்று நீலிக்கண்ணீர் வடித்தது. அப்போதைய அட்வகேட் ஜென்ரல் திரு.முகில்ரோத்தகி அரசின் சார்பில் வழக்கில் ஆஜரானார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று வழக்கு போடுவார்களா? அதை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உத்தரவிடுமா? இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரினார். வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதே கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பினர். அப்போதைய வேளாண்மைதுறை அமைச்சர் ராதாமோகன்சிங் அவர்கள், “தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக ஏதேதோ சொல்லுவோம். அதையெல்லாம் நிறைவேற்ற முடியுமா” என்று கேட்டார். 2018ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அப்போதைய நிதியமைச்சர் திரு.அருண்ஜெட்லி அவர்கள் சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் நாங்கள் வேளாண் விளை பொருட்களுக்கு விலை வழங்கிவிட்டோம் என்றார். மொத்தத்தில் ஏக குழப்பத்தில் உள்ளனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிது. எந்த வாக்குறுதியையும் இவர்கள் நிறைவேற்றவில்லை என்பதும் உறுதி. இப்போது “2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மூன்று சட்டங்களும் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகளிடமிருந்து கட்டியிருக்கிற கோவணமும் களவாடப்படும் என்பது மட்டும் உறுதி.

பழங்குடியின மக்களை தமிழக அரசு புறக்கணிக்கிறது - பெ.சண்முகம் - YouTube

விவசாயிகளை ஏமாற்றும் அரசு

இந்த ஆண்டு நெல்லுக்கான விலையை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு நெல்லுக்கான உற்பத்தி செலவு ஏக்கர் ஒன்றுக்கு 1871 ரூபாய் என்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் தீர்மானித்திருக்கிறது. சுவாமிநாதன்குழு பரிந்துரை அடிப்படையில் 50 சதவீதம் உயர்த்தி தீர்மானித்திருந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூபாய் 2807 என்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அறிவித்தது, கடந்த ஆண்டைவிட 53 ரூபாய் மட்டும் உயர்த்தி சன்னரகத்துக்கு ரூ.1888 எனவும், சாதாரண ரகத்துக்கு ரூ.1868 என்றும் அறிவித்தது. ஏறத்தாழ 920 ரூபாய் குறைவு. தமிழ்நாடு அரசு 2020-2021ம் ஆண்டு மத்திய அரசு விலையுடன் குவிண்டாலுக்கு ரூ.70, ரூ.50 என்று உயர்த்தி அக்டோபர் 1 முதல் தமிழ்நாட்டில் நெல்லுக்கான விலை சன்னரக நெல்லுக்கு ரூ.1958 எனவும், சாதாரண நெல்லுக்கு ரூ.1918 என்றும் நிர்ணயித்திருக்கிறது. ஆனால் கேரள மாநில அரசு இந்தியாவிலேயே மிக அதிகமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750 என்று தீர்மானித்திருப்பது மட்டுமல்லாமல், நெல் உற்பத்தியை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2000 ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. கரும்புக்கு கடந்த ஆண்டைவிட டன் ஒன்றுக்கு 100 ரூபாய் மட்டுமே மத்திய அரசு உயர்த்தியுள்ளது. எனவே, சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் விலை வழங்கிவிட்டோம் என்று மத்திய அரசு பொய்சொல்வதுடன் விவசாயிகளை ஏமாற்றவும் செய்கிறது என்பதற்கு இது உதாரணம்.

22 வகையான வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு அறிவிக்கிறது. அறிவிப்போடு சரி, அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்வதில்லை. இதனால் அரசு அறிவித்த விலை கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. 2019-20 ஆண்டுக்கு பருத்திக்கான குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.56 என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் அரசு பருத்தியை கொள்முதல் செய்யாததால் வியாபாரிகள் கிலோ ரூ.35,36க்கு மட்டுமே வாங்கினர். மாவட்ட நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த குறைவான விலைக்குத்தான் விவசாயிகள் விற்பனை செய்தனர். நெல், கோதுமை போன்ற ஒரு சில பொருட்களை அரசு கொள்முதல் செய்வதால் அரசு அறிவித்த விலை கிடைக்கிறது. இதிலும் கொள்முதல் நிலையங்களில் போட முடியாமல் வியாபாரிகளிடம் விற்கும் விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு 500 முதல் 600 ரூபாய் வரை நட்டமடைகின்றனர்.

எனவே, குறைந்தபட்ச விலையை அறிவிக்கும் அரசு அதை கொள்முதல் செய்ய வேண்டும். அல்லது வெளிச்சந்தையில் ஏற்படும் இழப்பை அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்ச விலை அறிவித்தாலும் அதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. தற்போது மொத்த விவசாயிகளில் சுமார் 10 சதவீதம் விவசாயிகள் தான் குறைந்தபட்ச விலையை பெறுகின்றனர். பெரும்பகுதி விவசாயிகள், வியாபாரிகள் கேட்கும் விலைக்கே தங்களது பொருட்களை விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அரசு இனி அறிவிக்காது என்றால், வர்த்தக நிறுவனங்கள் சொன்னது தான் விலை என்ற நிலை ஏற்படும். அரசுக்கு என்னதான் வேலை. வேளாண் விளை பொருள் விலை தொடர்பான தகவல்களை விவசாயிகளுக்கு தெரிவிப்பார்களாம். அதனால் விவசாயிகளுக்கு என்ன பயன்.? வெங்காயம் 50கிலோ மூட்டை 2000 ரூபாய் என்று அரசு சொல்லியிருக்கிறது என்றால் அப்படியா? அங்கேயே போய் விற்றுக் கொள்ளுங்கள் என்று வியாபாரிகள் சொல்லிப் போய்விடுவார்கள். இதைத்தான் இப்போது விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கப்படுகிறதா?

இந்த சட்டங்களை எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்க்கவில்லை. மாறாக, “பாரதீய கிசான் சங்கம்” என்ற விவசாயிகள் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பா.ஜ.க கட்சியின் விவசாயிகள் சங்கம். இந்த சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.பத்ரி நாராயணன் சௌத்ரி அவர்கள் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிரூபருக்கு பேட்டியளித்தார். அதில் “Those who came up with the legislations were not aware of the grass root reality” என்று சொன்னதுடன், பிரதமர் “குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று கூறியிருக்கிறாரே” என்று கேட்டதற்கு giving verbal assurance put same into bill என்று தெரிவித்தார். அடிமட்டத்தில் விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்ற உண்மையை அறியாதவர்களால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் என்றும், பிரதமர் வார்த்தை அளவிலான உறுதிமொழிகளை கொடுக்கிறார். அதை சட்டத்தில் இடம்பெறச் செய்யுங்கள் என்று நறுக்கென்று தெரிவித்துள்ளார்.

எனவே, அரசியல் காரணங்களுக்காக இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பதற்கு நாராயணனே சாட்சி. மற்றொரு உதாரணம், பிஜேபி அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கிற அதிமுகவின் மூத்த தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அவர்கள் இச்சட்டங்களை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் பதிந்துவிட்ட ஒன்று. தமிழக முதலமைச்சர் அவர்கள் இச்சட்டங்களை ஆதரித்ததுதான் அரசியல் காரணங்களுக்காக என்று வேண்டுமானால் சொல்லலாம்.

வடஇந்திய மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்ட 17ந் தேதியிலிருந்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ரயில்மறியல், சாலைமறியல், முற்றுகை, டிராக்டர் பேரணி, உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்தப் போராட்டங்களில் பங்கேற்கும் விவசாயிகள் அனைவரும் எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்களா? இந்தப் போராட்டங்கள் அனைந்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அறைகூவல் விடப்பட்டு நடைபெறுகிறது. 260க்கு மேற்பட்ட விவசாய சங்கங்கள் இதில் இணைந்துள்ளன. அரசியல் சார்புள்ள, சார்பற்ற மற்றும் இடதுசாரிகள் உட்பட இடம் பெற்றுள்ளனர். எனவே, சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திசைதிருப்பும் நோக்கத்துடன் மேம்போக்காக இத்தகைய பதில்கள் அளிக்கப்படுகின்றன என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. எனவே, உண்மையின் உரைகல் கொண்டு சட்டம் குறித்து பரிசீலிப்போம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்

மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒற்றை ஆட்சி முறையை நோக்கி அது பயணிக்கிறதோ என்ற சந்தேகம் அதன் பல்வேறு நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. இதனுடைய தொடர்ச்சி தான், மாநில அரசுகளை மதிக்காமல் தானடித்த மூப்பாக வேளாண் சட்டங்களை நிறைவேற்றி இருக்கும் செயல்.

இந்திய அரசியல் சாசனத்தில் மத்திய அரசுக்கான அதிகாரம் பட்டியல்-I லும், மாநில அரசுகளுக்கான அதிகாரம் பட்டியல் II லும், இரண்டு அரசுகளுக்குமான பொதுவான அதிகாரம் பட்டியல் III லும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை பட்டியல் II ல் பிரிவு 14லிலும், சந்தை பிரிவு 28லும் மற்றும் பிரிவு 46,47,48லும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் தொடர்பாக பிரிவு 18ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண்மையை மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் வைத்திருப்பதன் காரணம் என்ன? பயிரிடும் முறை, பருவநிலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். வேளாண்மை குறித்து உள்ளூர் மட்டத்திலான அறிவு மற்றும் செயல்திறன் முக்கியம் உள்ளிட்ட காரணங்களால் தான் மாநில அரசுகளுக்கு இது குறித்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் சட்டத்தை மீறும் இந்த செயல் குறித்து தமிழ்நாடு அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்று முடிவு செய்துள்ளது. இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலை அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே, மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து இருக்கவேண்டிய அவல நிலையில் மாநில அரசுகள் வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களிலிருந்து வசூலித்து அனுப்பப்பட்டுள்ள வரியில் மாநிலங்களுக்குரிய பங்கை தர
(ஜி.எஸ்.டி) மத்திய அரசு மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பங்கை தர முடியாது என்று சொன்னது மட்டுமல்லாமல், வேண்டுமானால் மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று இலவச ஆலோசனை வழங்குகிது. மாநில அதிமுக அரசு நமக்குரிய உரிமைகளை வலியுறுத்தத் தயங்குகிறது. மத்திய அரசின் இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதில் சந்தேகமில்லை.

சட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதன் மூலம் அமலுக்கு வந்துவிட்டதாகத்தான் ஐதீகம். எனவே, சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். மூன்று சட்டங்களும் வெவ்வேறு என்றாலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. அதனால் தான் சேர்ந்தார்போல் நிறைவேற்றி இருக்கிறார்கள். இது வேளாண் சட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இந்தியாவின் பெரும்பகுதி மக்களை பாதிக்கக்கூடிய சட்டங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 1. விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம் The Farmers (Empowerment and protection) Agreement on price Assurance and Farm service Act
 2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் The Farmers produce Trade and commerce (promotion and Facilitation) Act
 3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 Essential commodities amendment act 2020

சட்டத்தின் பெயர்கள் மிகநீளமானதாக இருப்பதால் இனி சுருக்கமாக முதல் சட்டம் ஒப்பந்த சாகுபடி சட்டம், இரண்டாவது வேளாண் விளை பொருட்கள் விற்பனை சட்டம், மூன்றாவது அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த மூன்று சட்டங்களையும் அவசர சட்டமாக கொண்டு வந்த போது இதன் நோக்கமாக பிரதமர் தெரிவித்தது,

 1. விவசாயத்துறையில் போட்டியை ஏற்படுத்தவும்
 2. விவசாயிகளுடைய வருமானத்தை பெருக்கவும்
 3. நுகர்வோருக்கு பொருட்கள் தாராளமாக கிடைக்கவும் என்று கூறினார். இந்த உயரிய நோக்கங்களை சட்டம் எந்த வகையில் நிறைவேற்றுகிறது.

இந்த சட்டங்களை படிக்கிற போது, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆம்! நம் முன்னோர்களின் அனுபவமொழி அல்லவா இது!

முதல் சட்டம் சாகுபடியை துவங்குவதற்கு முன்பாகவே, விளை பொருளுக்கு விலையை உத்தரவாதம் செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பது மிகவும் நல்ல சட்டம்தானே! இதை ஏன் எதிர்க்கிறீர்கள். இந்த விலை உத்தரவாதம் என்பது தான் ஒய்யாரக் கொண்டை, உள்ளே இருப்பது என்னவென்று பார்ப்போம்.

அரசு நியமனம் செய்யும் ஒரு பதிவாளரின் முன்னால் விவசாயி அல்லது விவசாயிகள் குழு தனிநபரிடமோ, அல்லது கம்பெனி அல்லது நிறுவனங்களிடமோ எழுத்துபூர்வமான ஒப்பந்தத்தை செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான மாதிரி படிவத்தையும், அதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிடும். இத்தோடு அரசின் கடமை முடிந்தது. அரசின் சார்பில் எவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்கமாட்டார்கள்.

ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், குறிப்பிட்டுள்ள நேரத்தில் பொருளை ஒப்படைப்பது, அந்த பொருளின் தனித்த இயல்பு, தரம், அளவு, ஒப்புக்கொண்ட விலை ஆகியன பொருளை பண்ணையில் வந்து எடுத்துச் செல்ல வேண்டும். போனஸ் அல்லது ஊக்கத்தொகை குறித்து ஏதாவது இருந்தால் அதுவும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பண்ணை சேவை என்ற முறையில் குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்கான விதை மற்றும் இடுபொருட்களை நிறுவனங்கள் வழங்கும். தேவைப்பட்டால் தொழில்நுட்பத்திறன் வாய்ந்த தொழிலாளர்களை நிறுவனங்கள் வழங்கும். இதற்குரிய கட்டணத்தை விலையிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தை மீறி ஏதாவது தாவா ஏற்பட்டால் அரசு சமரசக் குழு ஒன்றை அமைக்கும். அதனிடம் புகார் செய்யலாம். அதில் தீர்வு ஏற்படவில்லையென்றால் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம். அந்தப் புகாரின்மீது 30 நாட்களுக்குள் அவர்கள் தீர்வை சொல்ல வேண்டும். அதிலும் தீர்வு ஏற்படவில்லையென்றால் 30 நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அங்கு விதிக்கப்படும் அபராதம் நிறுவனங்களுக்கு கொடுப்பதாக சொன்ன விலையைப் போல் 1 1/2 மடங்கு விதிக்கலாம். இடுபொருட்களுக்கான உண்மையான கட்டணம் எதுவோ அதைத்தான் நிறுவனங்கள் கோர வேண்டும். ஒப்பந்தத்தை விவசாயிகள் மீறினால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகைக்காக நிலத்தை பறிமுதல் செய்யக்கூடாது. இவை தான் ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தில் உள்ள சுருக்கம்.

கார்ப்பரேட் கம்பெனிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்ய வேண்டுமென்று கேட்கிறார்களோ அதைத்தான் விவசாயிகள் பயிரிட முடியும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட போது பிரிட்டனுக்கு தேவையான பருத்தி, அவுரி, கோகோ போன்ற பயிர்களை பயிரிடுமாறு நமது நாட்டு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அத்தகைய மோசமான நிலை திரும்பவும் இந்த ஒப்பந்த சாகுபடிச் சட்டம் மூலம் ஏற்படும். என்னுடைய நிலத்தில் என்ன பயிரிட வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க முடியாது. உலக சந்தையில் எந்தப் பொருளுக்கு கிராக்கி இருக்கிறதோ, எதில் அதிக லாபம் கிடைக்குமோ அதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வற்புறுத்துவார்கள். நமது நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை நாம் உற்பத்தி செய்ய முடியாது.

அதற்கான இடுபொருட்களை அவர்களே வழங்குவார்கள். அதற்கு அபரிமிதமான விலையையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அந்த இடுபொருட்கள் நமது நிலவளத்தை, நீர்வளத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? அல்லது பாதிக்குமா என்பது குறித்து பரிசோதிக்க எத்தகைய சரத்தும் சட்டத்தில் இல்லை. அவர்கள் கொடுக்கும் விதை மற்றும் உரம், பூச்சிகொல்லி போன்றவற்றின் மூலம் புதிய வகை பூச்சிகள் உருவாகி பாரம்பரியமான நமது பயிர்களை அழித்தால் அதற்காக எவ்விதத்திலும் அந்நிறுவனங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. மனிதர்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கேள்வி கேட்க முடியாது. இப்படியொரு நிலை ஏற்பட்டால் என்ற சந்தேகம் கூட சட்டத்திற்கு வரவில்லை. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்கள் கபளீகரம் செய்துவிடுவார்கள் என்று நாங்கள் சொல்வது காழ்ப்புணர்ச்சியில் அல்ல! அத்தனையும் உண்மை.திருட்டுப் பழி சுமத்திய பெப்சி கம்பெனி

அடுத்து, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் படி பொருட்களை கொடுத்தால் தான் ஒப்புக் கொண்ட விலையை கொடுப்பார்கள். அது சாத்தியமா? என்பதை பார்ப்போம். எந்த தேதியில் பொருளைக் கொடுப்பதாக ஒப்புக் கெண்டிருக்கிறோமோ அந்த குறிப்பிட்ட தேதியில் கொடுக்க வேண்டும். இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்கிற பொருளையே குறித்த தேதியில் தருவதில் பலவிதமான இடைஞ்சல்கள், எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இயற்கையை நம்பி செய்யும் வேளாண்மையில் குறித்த தேதியில் தருவது எப்படி சாத்தியமாகும்?

இரண்டாவது, பொருளின் தனித்த இயல்பு. உதாரணத்திற்கு பெப்சி கம்பெனி உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரித்து லேஸ் (Lays) என்ற பெயரில் விற்பனை செய்வதை அறிவீர்கள். மிகவும் மெலிதாகவும்,பெரிதாகவும் (வட்டமாக) இருப்பதற்கு எங்கள் உருளைக்கிழங்கு தான் காரணம் என்று உருளைக்கிழங்கு விதையை அவர்களே விவசாயிகளிடம் கொடுத்து விளைவித்து கிலோ ரூ.18 என்று வாங்கிக் கொள்கிறார்கள். அந்த மெலிதான தன்மை, சுவை அந்த உருளைக்கிழங்கின் தனித்த இயல்பு. அதுபோல் இல்லாமலோ, உருண்டையாக இல்லாமல் சற்றுநீளமாகவோ வந்தால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல். அடுத்து தரம், பிறகு ஒரு ஏக்கரில் எத்தனை கிலோ அல்லது டன் தருவதாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு இவையனைத்தையும் நிறைவேற்றினால் விலை உத்தரவாதம் என்ற அந்த நிபந்தனை பூர்த்தியாகும். ஒப்புக் கொண்ட விலையை தருவார்கள். இல்லையென்றால் ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாத குற்றத்திற்காக விவசாயி தண்டம் கட்ட வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களிடம் வழக்கு நடத்தி விவசாயிகளால் வெற்றிபெற முடியுமா? அவர்களிடமுள்ள திறமையான வழக்கறிஞர்களுக்கு இணையாக நமது விவசாயிகளால் வழக்கறிஞர்களை அமர்த்த முடியுமா? இதே பெப்சி கம்பெனி
2019 ம் ஆண்டு அந்த கம்பெனியின் உருளைக் கிழங்கு விதையை திருடி விவசாயிகள் பயிரிட்டு விட்டார்கள் என்று கூறி கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்டு வழக்குப் போட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாயச் சங்கங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்ததையொட்டி பிறகு மத்திய அரசு தலையிட்டு வழக்கை வாபஸ் பெற வைத்தது. இந்திய விவசாயிகளுக்கு கிடைத்தது திருட்டுப்பட்டம், வழக்கு. இந்த நிலை தொடர வேண்டுமா? எனவேதான், ஒப்பந்த சாகுபடி என்பது நம் விரலைக்கொண்டே நமது கண்ணை குத்திக் குருடாக்கும் செயல் என்பதை உணர வேண்டும்.

நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் ஒப்பந்த சாகுபடியில் தான் ஈடுபட்டுள்ளனர். சர்க்கரை கட்டுப்பாட்டுச் சட்டம் 1966ன் படி கரும்பு விவசாயிகள் ஆலைகளுக்கு கரும்பு கொடுக்கிறார்கள். ஆலை நிர்வாகம் எப்போது விரும்புகிறதோ அப்போது தான் கரும்பை வெட்ட முடியும். அது பதினைந்து மாதங்களானாலும்! காலதாமத்தால் ஏற்படும் இழப்பை, கூடுதல் செலவை எவரும் ஏற்க மாட்டார்கள். எடையளவு, சர்க்கரை சத்து குறித்த விபரங்கள் ஆலை நிர்வாகம் சொல்வதுதான். சட்டத்தில் கரும்பு அனுப்பிய 15 நாட்களில் பணத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் 15 சதவீத வட்டியுடன் பணத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை இந்தியாவில் எங்காவது கரும்பு விவசாயிகள் 15 நாட்களில் பணம் பெற்றதாகவோ, இல்லை 15 சதவீத வட்டியுடன் பாக்கியைப் பெற்றதாகவோ வரலாறு உண்டா? ஆண்டு தவறாமல் பாக்கி கேட்டு விவசாயிகள் போராடிக் கொண்டு தானே இருக்கிறார்கள். அரசால் முதலாளிகளின் முடியைக் கூட தொட முடியவில்லையே! வருவாய் பறிமுதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் எந்த முதலாளியின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையே! விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. முதலாளிகள் மனம் கோணாமல் நடந்து கொள்வது என்பது தானே ஆட்சியாளர்களின் கொள்கையாக இருக்கிறது.

உள்நாட்டில், அதுவும் மாநிலத்திற்குள் இருக்கும் முதலாளிகள் மீதே அரசு நடவடிக்கை எடுக்க தயங்கி கொண்டுள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்களை கண்டு பயந்துகொண்டல்லவா இருப்பார்கள்? எனவே, இந்தச் சட்டத்தால் ஏற்கனவே வேளாண் விளைபொருள் விற்பனையில் விவசாயிகளுக்கு இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பும், பாதுகாப்பும் பாதிக்கப்படும். விவசாயிகளை நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசு வேடிக்கை பார்க்கும். இந்த சட்டம், நிறுவனங்களுக்கும், அரசுக்கும் சாதகமானதே தவிர விவசாயிகளுக்கு மிக மிக மிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே தான் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

இப்போது இயற்கைச் சீற்றங்களால் வெள்ளம், வறட்சி, பூச்சிதாக்குதல் போன்றவற்றால் பயிர்கள் பாதிக்கும்போது மத்திய – மாநில அரசுகளிடம் போராடி ஓரளவாவது நிவாரணத்தை விவசாயிகள் பெறுகிறார்கள். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால், இத்தகைய நிவாரண உதவிகள் தொடருமா? நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நிறுவனங்களுக்காக பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு எதற்காக நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழும். வெள்ளம், வறட்சி, பூச்சி தாக்குதல், புயல், இயற்கை பேரழிவு மோசமான பருவநிலை, பூமி அதிர்ச்சி, நோய்ப்பரவல் போன்றவற்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்று சட்டம் குறிப்பிடுகிறதே தவிர, ஒரு பருவ விவசாயம் அழிந்து போவதால் விவசாயிகளின் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

புதிய வேளாண் சட்டங்கள்: சாதக பாதகங்கள் - ஓர் அலசல்! | An analysis of the pros and cons of the new agricultural laws

யாருக்கு விடுதலை?

இரண்டாவது சட்டம், வேளாண் விளை பொருள் விற்பனை மற்றும் ஊக்குவிப்புச் சட்டம். இது குறித்து ஆட்சியாளர்களும், ஆதரிப்பவர்களும் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள விவசாயி இந்தியாவின் எந்தவொரு மூலைக்கும் தனது பொருளை கொண்டு சென்று எவரிடம் அதிக விலை கிடைக்கிறதோ அவரிடம் விற்கலாம். 50 ஆண்டுகள் கிடைக்காத விடுதலையை இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். இந்தச் சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களை ஒழித்து விட்டோம். தனியார்கள் வேளாண் விளை பொருள் விற்பனை சந்தையை ஏற்படுத்துவார்கள். அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும் இருக்கும். எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்றுக் கொள்ளலாம் என்று மிகுந்த புளகாங்கிதத்தோடு அளந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தாராள வர்த்தகம் என்பது உலகின் எந்த மூலையில் உள்ள பொருளையும் வேறு எந்த மூலைக்கும் கொண்டு செல்ல முடியும் என்பது தான்.

நமது கேள்வி! ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ, அல்லது மாநிலத்திற்கோ வேளாண் விளை பொருட்களை கொண்டு சென்று விற்பதில் சட்டப்படி இப்போது என்ன தடை? எந்த தடைகளை அகற்றி விவசாயிகளுக்கு நீங்கள் விடுதலையை பெற்றுத் தந்திருக்கிறீர்கள்? எனவே, ஏற்கனவே தடையேதும் இல்லை. ஆனால் விவசாயிகள் யாரும் தங்களுடைய பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சென்று விற்பதில்லை என்பதே உண்மை! ஏனென்றால் நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு-குறு விவசாயிகள். அரை ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பயிர் செய்பவர்கள். இவர்களில் சிறு பகுதியினர் அரசு கொள்முதல் நிலையங்களிலும், மற்றொரு சிறு பகுதியினர் வேளாண் ஒருங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் பெரும்பாலானோர் சிறுவியாபாரிகளிடம் தான் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

மற்றொன்று, அரசு நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்கு கடன் கிடைக்காத நிலையில், இந்த வியாபாரிகளிடம் முன்பணம் பெற்றே விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர். குடும்பத்தில் ஏற்படும் அவசர செலவுகளுக்கும் இவர்களிடமே கடன் பெறுகின்றனர். இந்த நிலையில் மகசூலை அவர்களிடம் கொடுப்பதைத்தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. சொல்லப்போனால், பெரிய வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் இந்த சிறு வியாபாரிகள் அல்லது தரகர்கள்தான் பாலமாக செயல்பட்டு வருகின்றனர். இதைத்தான் ஒழித்துவிட்டோம் என்று இப்போது மத்திய அரசு சொல்கிறது. சரி! இவர்களை ஒழித்துவிட்டு பதிலாக அந்த இடத்தில் யாரைக் கொண்டுவந்து நிறுத்தப்போகிறீர்கள். பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டுகளைத்தானே? தெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேய் நல்ல பேய் என்று ஒரு சொலவடை உண்டு! அது தான் தற்போது நினைவுக்கு வருகிறது. இணைய வழி வர்த்தகத்தை ஊக்குவிக்கப்போகிறோம் என்கிறார்கள். பொருளை வாங்குபவன் யாரென்று பார்க்க முடியாது. விலை பேசுகிறவனுக்குத்தான் பொருள் போகிறது என்பதற்கு உத்தரவாதமில்லை. யாருக்காகவோ யாரோ விலை பேசுவான். பொருள் அனுப்பி மூன்று நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், புகார், வழக்கு நீதிமன்றம் இத்தியாதி தான். பெரும் நிறுவனங்களிடம் விவசாயிகளால் விலை பேச முடியுமா? நமது தாலுகாக்காவில் உள்ள வியாபாரிகளே தங்களுக்குள் கூடிப் பேசிக்கொண்டு, இன்ன விலைக்குத்தான் வாங்குவோம் என்று அறுதியிட்டுச் சொல்லும் போது, அடிமாட்டு விலை என்று தெரிந்தே விவசாயிகள் பொருளை விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் ஈட்ட பார்ப்பார்களா? அல்லது பாவம் விவசாயிகள் கஷ்டப்பட்டு பொருளை உற்பத்தி செய்திருக்கிறார்கள். எனவே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் விலையைத் தீர்மானிப்போம் என்று நினைப்பார்களா?

பகற்கொள்ளை தடுக்கப்படுமா?

கடந்த பருவத்தில் கொடைக்கானலில் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ காப்பிக் கொட்டை 180 ரூபாய்க்கு நிறுவனங்கள் வாங்கினர். நெஸ்லே காபி நிறுவனம் ஒரு கிலோ காபி தூள் 11299 ரூபாய்க்கு என்றும், அமேசான் மூலம் வாங்கினால் 42 சதவீதம் கழிவு போக 6699 ரூபாய் என்றும் நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது. ஆகவே, முதலாளிகளைப் பொருத்தவரை லாபம்; மேலும் லாபம், மேலும் கொள்ளை லாபம் என்று தான் செயல்படுவார்களே தவிர உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பற்றியோ, வாங்கிச் சாப்பிடும் மக்களைப் பற்றியோ சிறிதளவும் கவலைப்படமாட்டார்கள். இந்த புதிய சட்டங்கள் இத்தகைய பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்தப்போகிறதா?

அரசால் நடத்தப்படும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கொள்முதல் நிலையங்களில் ஏராளமான குறைபாடுகள், ஒழுங்கீனங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறைபாடுகளை சரிசெய்து மேம்படுத்தி சிறந்த சந்தையாக மாற்றுவது தானே அரசு செய்ய வேண்டிய வேலை. மாறாக இதற்கு மாற்று தனியார் சந்தையா? என்பது தான் நமது கேள்வி. உதாரணத்திற்கு, அரசு பள்ளிக்கூடத்திற்கும், தனியார் பள்ளிக்கூடத்திற்கும் ஒப்பிட்டால் கட்டமைப்பு வசதிகளில் பெருத்த வேறுபாடு உள்ளது. அரசுப்பள்ளிக்கூடம் படுமோசமாக வைத்திருப்பதற்கு யார் காரணம்? அரசு தானே? இப்படி வைத்திருப்பதன் மூலம் தனியார் பள்ளிகள் வளர்வதற்கு காரணம் அரசுதானே. இந்தப் பள்ளிகளை நடத்துவதும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள்தானே! இதே நிலைமைதான் அரசு சந்தை, தனியார் சந்தையிலும் நடக்கும். பிறகு அரசுப் பள்ளிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று மூடுவிழா நடத்துவதைப் போல, அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்பட்டு முழுக்கவும் தனியார் சந்தைகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படும். பிறகென்ன! அவர்கள் சொன்னதுதான் விலை. வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்படும்.

நமக்கெல்லாம் தெரியும்! தொலைத்தொடர்பு வசதிகளை மக்களுக்கு உருவாக்கித் தந்தது பி.எஸ்.என்.எல் நிறுவனம். நாடு முழுவதும் கடந்த 100 ஆண்டு காலத்தில் விரிந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளதும் பி.எஸ்.என்.எல் தான். இதில் தனியாரைப் புகுத்தினார்கள். ஜியோ நிறுவனம் ஆரம்பத்தில் ஆறு மாதத்திற்கு இணைய தொடர்பு இலவசம் என்றதும் கோடிக்கணக்கானோர் பி.எஸ்.என்.எல்-ஐ துண்டித்து விட்டு அதில் சேர்ந்தனர். அரசு என்ன செய்தது? வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டார்கள். எதற்காக இவ்வளவு ஊழியர்கள் என்று 80 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பிவிட்டது. இப்போது பராமரிப்புக்கே ஆளில்லாமல் மேலும் சீரழிந்து வாழ்ந்து சீரழிந்த வீட்டைப் போல் ஒட்டடை பிடித்து, பூச்சி புழு வாழும் நிலைக்கு அந்த அலுவலகங்கள் ஆகிவிட்டது. ஜியோ காரன் இப்போது அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கிறான். ஜியோவை விட்டால் வேறுவழியில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கு யார் காரணம், அரசு தானே? தனியார் சந்தையில் விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் அரசு தலையிடுமா? அதற்கு ஏதாவது சட்டத்தில் இடமிருக்கிறதா என்றால் இல்லை. அரசு கொள்முதல் செய்யாது! குறைந்தபட்ச ஆதரவு விலையும் தீர்மானிக்காது. தனியார் வியாபாரிகளை மட்டும்தான் விவசாயிகள் நம்பி இருக்க வேண்டுமென்றால் எப்படி அது விவசாயிகளுக்குச்  சாதகமாக இருக்க முடியும். விலை கட்டுப்படியாக வில்லையென்றால், விற்க வேண்டாமே என்று சொல்வது சுலபம். ஆனால் அதை சேமித்து வைப்பதற்கு குடோன்வசதியோ, குளிர்பதனக் கிடங்கு வசதியோ இல்லாத நிலையில், வாங்கிய கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள விவசாயிகள் எப்படி விற்காமல் வைத்திருக்க முடியும்.உதாரணத்திற்கு, காவிரி டெல்டா மாவட்டங்களில அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரங்களில் வாரக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. உடனடியாக அரசு கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் அரசு தீர்மானித்துள்ள விலையை விட 600 முதல் 700 ரூபாய் வரை குறைத்து நெல்லை வாங்கிச் செல்கின்றனர். இதற்குத் தீர்வு என்னவாக இருக்க முடியும். விவசாயிகள் விற்க விரும்பும் அனைத்து நெல்லையும் அரசு கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வது தானே நிரந்தரத் தீர்வாக இருக்கும். தனியார் சந்தை எப்படி தீர்வாக இருக்க முடியும். இச்சட்டப்படி, பேசியபடி பணம் தரவில்லை என்றாலும் பொருட்களைத் தரவில்லை என்றாலும் 25 ஆயிரத்திற்கு குறையாமல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் அபராதக் கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால் ஒவ்வொரு நாளைக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். (11.1)

இணைய வழி வர்த்தகத்தில் பிரச்சனை ஏற்பட்டால் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு நாளைக்கும் பத்தாயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்கிறது. இப்படி அபராதம் செலுத்தி யாராவது விவசாயம் செய்ய முடியுமா அல்லது வியாபாரம்தான் செய்ய முடியுமா? சந்தைக்குள் செல்வதற்கான வரி ரத்து செய்யப்பட்டிருப்பதை பெரும் வரப் பிரசாதமாக சித்தரிக்கிறார்கள். குறைந்தபட்ச விலை கூட உத்தரவாதமில்லாத நிலையில் நுழைவு வரி ரத்தால் விவசாயிகளுக்கு என்ன பெரிய பலன்? மாநில அரசுகளுக்கான வருவாய் நட்டம் என்பது கூடுதல் செய்தி!எது அத்தியாவசியப் பொருள்?

மூன்றாவது சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020. ஏற்கனவே, உள்ள அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ல் தான் இப்போது திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். 55ம் ஆண்டு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வியாபாரிகள் வைத்திருந்தால் அது பதுக்கல் என்று கூறி வழக்கு போட்டு கைது செய்வதற்கு இச்சட்டத்தில் வழிவகை இருந்தது.

தற்போது, அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் அல்ல என்றும், இப்பொருட்களை யார், எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி, சேமித்து வைத்துக் கொள்ளலாம் (பதுக்கல் அல்ல). எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் வைத்திருந்து, விருப்பப்பட்ட போது விற்றுக் கொள்ளலாம் என்று வர்த்தகர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் “சுதந்திர வர்த்தகம்” என்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நமது கேள்வி, இதெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் இல்லையென்றால் வேறு எது அத்தியாவசியப் பொருள்? பசிக்கு மாற்று உணவு தான். உணவைத்தவிர வேறு எதுவுமில்லை. உணவு இல்லையென்றால் பட்டினி கிடந்து சாகத்தான் வேண்டும். உணவுக்கான உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மறுக்க முடியாத உரிமையாகும்.

இந்த உரிமை வாழ்வதற்கான உரிமை மட்டுமல்ல, மனித உரிமைகளிலேயே மையமானதாகும். உணவுப் பாதுகாப்பு என்பதை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இவ்வாறு வரையறுத்துள்ளது. அதாவது, “ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதற்கு அனைத்து மக்களுக்கும்,அனைத்து நேரங்களிலும் தேவையான உணவு கிடைப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொருளாதார ரீதியான வாய்ப்பு என்பதே உணவுப்பாதுகாப்பு”. ஆனால் இந்தியாவில் என்ன நிலைமை? 100 பெண்களில் 70 பேர் ஊட்டச்சத்துணவு இன்மை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளில் ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் ஊட்டச்சத்துணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில் கிராமப்புறங்களில் வாழும் மக்களில் 76 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக்குரிய உணவை பெற முடியாமல் உள்ளனர் என்றும், 52 கோடி பேர் ஊட்டச்சத்துணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

சந்நியாசிகள் எழுச்சி

பதுக்கல் என்பதற்குப் பதிலாக சேமிப்பு என்று சட்டம் வர்ணிக்கிறது. இதனால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முடியாது. பெரும் வியாபாரிகள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அபரிமிதமான விலை உயரும் போது விற்றுக் கொள்ளை லாபமடிப்பார்கள். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத ஏழை மக்கள் பட்டினி கிடந்து சாக நேரிடும். மத்திய தர வருவாய் உள்ளவர்கள் கூட உணவுக்காகவே தங்களது மொத்த வருமானத்தையும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். எப்படி மக்களுக்கு தாராளமாக பொருட்கள் கிடைக்கும் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஒருவேளை என்ன விலை விற்றாலும் வாங்க சக்தி படைத்தவர்களுக்கு தாராளமாக பொருட்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்களோ! மத்திய அரசு, அரசிதழில், இந்தப் பொருட்களெல்லாம் அத்தியாவசியமானவை என்று யுத்தம், பஞ்சம். அபரிமிதமான விலைவாசி உயர்வு, இயற்கை பேரழிவு போன்ற காலங்களில் அறிவிக்கலாம். அறிவிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. சேமித்து வைக்கும் அளவில் மற்றும் அபரிதமான விலைஉயர்வு என்பதில் அரசு எப்போது தலையிடும். தோட்டக்கலை பயிர்களாக இருந்தால் மொத்த விற்பனையின் விலை 100 சதம் உயர்ந்தால், உணவு தானியங்களாக இருந்தால் மொத்த விலையில் 50 சதம் உயர்ந்தால்! இதை எப்படி தீர்மானிப்பார்கள். கடந்த 12 மாதங்களில் விற்ற விலையின் சராசரி அல்லது கடந்த ஐந்தாண்டுகளில் இருந்த விலையின் சராசரியைக் கொண்டு தீர்மானிப்பார்களாம். இதில், சேமித்து வைத்திருப்பது, மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றுவதற்கோ அல்லது ஏற்றுமதி செய்வதற்கோ என்றால் இந்த சட்டம் அதற்கு பொருந்தாது.

1770ல் வங்காளத்தில் பொருட்களைப் பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடுமையாக விலையை ஏற்றி விற்றதால் வாங்க முடியாத ஏழை மக்கள் 35 லட்சம் பேர் பசிக்கொடுமையில் மாண்டு போயினர். வீதிகளெங்கும் பிணங்கள், மீதியிருந்தவர்களும் சத்துக் குறைவினால் நடைப்பிணங்களாகத்தான் இருந்தனர். இந்த நிலையிலும் பிரிட்டிஷ் அரசு வரிவசூலை கறாராக மேற்கொண்டது. இந்தக் கொடுமை கண்டு மனம் பொறுக்காமல் சந்நியாசிகள் பதுக்கலை எடுத்து மக்களுக்கு விநியோகித்தனர். கஞ்சித்தொட்டி திறந்து மக்களின் பசியைப் போக்கினர். “சந்நியாசிகள் எழுச்சி” என்று இந்தப் போராட்டம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகே பிரிட்டிஷ் அரசு ஓரளவு மக்களுக்கு நிவாரணத்தை வழங்கியது. அப்படிப்பட்ட ஒரு நிலைமை தான் நாடு முழுக்க ஏற்படும். ஏற்கனவே வெங்காயம் கிலோ ரூ.250க்கு விற்றதும், அல்லது கிடைக்காமல் போனதால் “தாலிக்குத் தங்கமில்லை. தாளிக்க வெங்காயம் இல்லை என்று” ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்ததை கடந்த காலத்தில் பார்த்தோம்.

தற்போது கடைபிடித்து வரும் உணவுக் கொள்கை மூன்று அமைப்புகளில் சங்கிலித் தொடர் போல் செயல்படுத்தப்படுகிறது.

முதலாவது, கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் விளைபொருள் விலை நிர்ணய கமிஷன் (சி.ஏ.சி.பி) இவ்வமைப்பு விளைபொருட்களுக்கு அடக்கவிலையைவிட குறைவாகத்தான் விலையை பரிந்துரைக்கிறது. அதையும் மத்திய அரசு ஏற்று அறிவிப்பதில்லை. இரண்டாவது, இந்திய உணவுக்கழகம் (எப்.சி.ஐ) கொள்முதல் செய்து இருப்பு வைத்தல் மற்றும் மாநிலங்களுக்கு உணவு தானியங்களை வழங்குதல், மாநில அளவில் நுகர்பொருள் வாணிபக் கழகம், மூன்றாவது ரேசன் கடைகள் இனி இவற்றுக்கெல்லாம் எந்த அவசியமும் இருக்காது. இந்தத் துறைகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழப்பர்.

ஒரு பக்கம் மலைபோல் உணவுப் பொருட்கள் குவிந்திருக்கும். மற்றொரு பக்கம், வாங்கும் சக்தியற்ற விவசாய தொழிலாளர்கள், ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டினி கிடப்பர்.

இதன் விளைவு, விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யாது என்றால் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் எங்கிருந்து வரும். வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கி மலிவு விலையில் ரேசன் கடையில் அரிசி, கோதுமை வழங்குவார்களா? நிச்சயமாக அரசு செய்யாது. பிறகெப்படி? ரேசன் கடைகள் மூடப்படும். வெளிக்கடைகளில் மட்டும் தான் மக்கள் அரிசி, சர்க்கரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள். தற்போது ஒரு கிலோ அரிசி 50ரூ விற்கிறது. அதுவே, கிலோ 200 ரூபாய் விற்றால் என்ன ஆகும்? கற்பனை செய்து பாருங்கள். அதுவும் உணவு தானியங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தான் தர வேண்டும் என்ற நிலை உருவானால் அதை விலை கொடுத்து வாங்க முடியாமல் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிவார்கள். உணவுக்காக அந்நிய நாடுகளிடம் “தட்டேந்தி” நிற்கும் அவலம் எவ்வளவு கொடுமையானது. பிறகு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு நாட்டையே அடிமையாக்கும் நிலை ஏற்படாதா?

உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்), உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்ற உலகளாவிய அமைப்புகள் உலக மக்களின் வாழ்க்கையில் பல்வேறுபட்ட அம்சங்களை கட்டுப்படுத்துக்கின்றன. இவைகள் உண்மையில் ஒரு சில ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் அமெரிக்கா முதன்மையானது என்பது உலகமறிந்த ஒன்று!

Archive News | India first, Indian history, One republic

அமெரிக்காவிடம் கையேந்திய வரலாறு

1954ல் இந்தியாவில் உணவு தானியத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள், அமெரிக்காவிடம் கையேந்தி நின்றது வரலாறு. அமெரிக்கா, தாங்கள் பயன்படுத்த லாயக்கற்றதென்று ஒதுக்கி வைத்திருந்த கோதுமைகளை மிக அதிக விலைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் PL 480 (பொதுச்சட்டம் 480) என்ற திட்டத்தில் இந்தியாவுக்கு அனுப்பியது. கப்பலில் கொண்டு வரப்பட்ட அந்த உளுத்துப்போன கோதுமைக்கு வாடகையாக இந்தியா வழங்கியது மட்டும் 2,90,00,000 ரூபாய். வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் கையேந்தும் இத்தகைய நிலைமை மீண்டும் இந்தியாவுக்கு ஏற்படும். ‘காட்’ ஒப்பந்தத்தில் (கட்டணம் மற்றும் பொது உடன்படிக்கை) 1994ல் இந்தியா கையெழுத்திட்டது. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்புகளின் நிர்ப்பந்தங்களின் விளைவாகத்தான். பன்னாட்டு கம்பெனிகளை இந்திய விவசாயத்தில் அனுமதிக்கும் படுபாதகமான சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றியுள்ளனர். ஏழை எளிய மக்களுக்கு எதிராக, வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய அவர்கள் வற்புறுத்தினால் இவர்களுக்கு எங்கே போயிற்று புத்தி என்று தான் கேட்க தோன்றுகிறது.

ஹெய்ட்டி என்னும் லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் நிகழ்ந்த உணவுக் கலவரங்கள் சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளாக வந்தன. ஹெய்ட்டி நாட்டின் அனுபவத்திலிருந்து இந்தியா படிப்பினைப் பெற வேண்டும் என்பதுதான். முப்பது ஆண்டுகளுக்கு ஹெய்ட்டி உணவு தானிய உற்பத்தியில் அநேகமாக முற்றிலும் சுயதேவை நிறைவேற்றத்துடன் விளங்கியது. ஆனால் சர்வதேச நிதி அமைப்பிடம் (ஐ.எம்.எஃப்) கடன் பெறுவதற்காக அது விதித்த நிபந்தனைகளையெல்லாம் ஹெய்ட்டி ஏற்றுக் கொண்டது. இந்த நிபந்தனைகளில் தாராளமயமாக்கல்கள் திட்டம் முழுமையும் உள்ளடங்கியிருந்தது. அந்நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பிறகு ஹெய்ட்டி அமெரிக்காவிடமிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு தனது கதவுகளைத் திறந்துவிட்டது.

இதுவே, ஹெய்ட்டியின் அரிசி உற்பத்திக்கான செயல்திட்டத்தையெல்லாம் அழித்தது. தொடக்கத்தில் அமெரிக்கா தன்னுடைய அரிசிக்கு ஹெய்ட்டியில் மானியம் அளித்தது. ஹெய்ட்டியில் உற்பத்தியான அரிசியை விட குறைந்த விலையில் தமது அரிசி கிடைக்க செய்வதற்கே அவ்வாறு செய்தது. இதனால் இன்று சர்வதேச விலைகள், பெரும் விவசாயப் பண்ணைத் தொழில் முதலாளிகளால் சூழ்ச்சித்திறனுடன் கையாளப்பட்டு எட்ட முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

இதனால் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலைக்கு ஹெய்ட்டி மக்கள் ஈடுகொடுக்க முடியவில்லை. அதாவது அவர்கள் அந்த விலைக்கு ஏற்ற பணத்தை கொடுக்க முடியவில்லை. இதன் விளைவாகத்தான் உணவுக் கலவரங்கள் வெடித்தன. மற்றொரு லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவையும் இதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நாட்டிலும் பிரதான உணவு தானியமான மக்காச்சோளம் அனைவருக்குமான பொதுவிநியோகத்திட்டத்தில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நாட்டிற்கும் கடன் அளிக்கும் பிச்சனையின் பேரில் உலக வங்கியும், சர்வதேச நிதி அமைப்பும் தங்களுடைய நவீன தாராளமயக்கொள்கைகளை மெக்ஸிகோ மீது திணித்தன. இந்தக் கொள்கைகள் அந்நாட்டின் உணவு தானிய விநியோக முறையை அழித்தது. இன்றைக்கு நிலைமை என்னவெனில் மெக்ஸிகோ தனது உணவு தானியத் தேவைகளுக்கு 1 கோடி டன் அளவிற்கு அதுவும் விண்ணை முட்டும் விலையில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறு அந்த நாட்டில் வறுமையும் சத்துணவு இன்மையும் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகள் உலகம் முழுவதும் அதிக அளவில் பட்டினியை உருவாக்கியிருக்கின்றன. இதற்கு இந்தியா விதிவிலக்கல்ல.

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – இங்கு

வாழும் மனிதருக்கெல்லாம்” என்ற பாரதியின் கவிதை வரிகள் வெறும் கனவாகி அல்லவா போய்விடும்.

“தேனாறு பாயுது, செங்கதிரும் காயுது – ஆனாலும்

மக்கள் வயிறு காயுது” என்ற பட்டுக்கோட்டையின் பாடல்வரிகளின் வலி தொடரவே செய்யும். நாடு முழுவதும் ரேசன் கடைகளை நம்பி சுமார் 75 கோடிப்பேர் உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ அரிசி தேவையென்று அரசே சொல்கிறது. இதில் பெரும்பகுதியானவர்கள் ஆதிவாசிகள், விவசாயத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள். இவர்களின் கதி என்ன?

பதுக்கல் என்பது கடந்த காலத்தில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 100 மூட்டை, 200 மூட்டை பதுக்கி வைத்திருப்பதைப் போல இப்போது இருக்காது. பெரும் முதலாளிகளால் லட்சக்கணக்கான டன்களை சேமித்து வைக்கும் அளவுக்கு மிகப் பெரிய குடோன்களில் இவை இருக்கும்.

கிராமங்கள் போர்க்களமாகட்டும்

இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது அரசுக்கு தெரியாதா? தெரிந்தும் எப்படி இந்த மாதிரியான சட்டங்களை கொண்டு வருகிறார்கள் என்ற கேள்வி எழலாம்! இப்போது அதிகாரத்திலிருக்கும் பி.ஜே.பி ஆட்சியாளர்கள் மக்கள் நலன்களை பற்றியோ, விவசாயிகளின் நலன்களைப் பற்றியோ கவலைப்படுபவர்கள் அல்ல! மாறாக, இந்திய பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதே அவர்களின் கொள்கை.

ஏனென்றால் பெருமுதலாளிகள் தான் அவர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுக்கிறார்கள். தேர்தலில் அந்த பணத்தை வைத்தும், மோசடி செய்தும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். எனவே, மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. எதிர்த்தால், அடக்குமுறை மூலம், அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மறுத்து வழக்கு போடுவது, சிறையிலடைப்பது, அர்பன் நக்சல்கள் என்று முத்திரை குத்துவது, இல்லையென்றால் இந்திய விரோதிகள் என்று தூற்றுவது என்ற நாலாந்தரமான வழிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” – என்ற குறளையோ அல்லது

“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானும் கெடும்” – என்ற குறளையோ ஏற்காதவர்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையின்றி எதேச்சதிகாரமாக செயல்படும் தன்மைகொணடவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஆட்சி அதிகாரத்தையும், பொய், பித்தலாட்டங்கள் மற்றும் பணத்தின் மூலம் எதையும் சாதித்துவிடலாம் என்று அவர்கள் செயல்படுகிறார்கள். உண்மையிலேயே, விவசாயிகள் நலன் காக்கத்தான் இந்த சட்டங்கள் என்றால், விவசாயிகள் பிரதிநிதிகளுடன் விவாதிப்பதில் அரசுக்கு என்ன கஷ்டம். பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப ஏன் பிடிவாதமாக மறுக்க வேண்டும்? ஆகவே, இது அரசின் கொள்கைசார்ந்த முடிவு.

ஆட்சியாளர்களின் கொள்கையை எதிர்த்த போராட்டம்

நிலமும், வேளாண்மையும் கார்ப்பரேட்கள் கையில் சிக்கினால், அது இந்திய பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் மிக மோசமான நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும். நிலத்தை இழக்கும் விவசாயிகள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயரும் அவலம். அங்கு ஒரு கௌரவமான வேலையை அவரால் தேடிக்கொள்ள முடியாது. விவசாயி என்ற கௌரவத்துடன், சுயமரியாதையோடு வாழ்ந்த மனிதன் உயிர்வாழ்வதற்காக கிடைக்கும் வேலையில் தன்னை இருத்திக் கொள்வது என்பது எவ்வளவு கொடுமையானது. விவசாயத் தொழிலாளர்களின் நிலையோ அதை விட மோசமாகும். விவசாயத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே கிடைக்கும் வேலையும் இல்லாமல் போகும். வருமானம் குறைவதால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து பொருளாதாரத்தில் கடும் நெருக்கடி ஏற்படும்.

ஆனால், சந்தைப் பொருளாதாரத்தை வானளாவப் புகழும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. மேலும், மேலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்களை நிறைவேற்ற அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மின்சார திருத்த மசோதா 2020, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்க அறிக்கை 2020 இரண்டும் அந்த வகைப்பட்டதே! இதோடு சேர்ந்து முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்படி சங்கிலித்தொடர்போல உழைக்கும் மக்களுக்கு எதிரான சுற்றுசூழல்களுக்கு கேடு விளைவிக்கும், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் கூச்சமின்றி ஈடுபட்டுள்ளனர். எனவே, மூன்று வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்தப் போராட்டம் என்பது மத்திய பி.ஜே.பி அரசின் வலதுசாரி, பெருமுதலாளித்துவ ஆதரவு கொள்கையை எதிர்த்தப் போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும்.எனவே, விவசாயிகள் ஒன்றுபட வேண்டும். சாதி, மத, பிரதேச உணர்வுகளை புறந்தள்ளி ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் தான் ஆட்சியாளர்களின் இந்தவிரோதமான போக்கை முறியடிக்க முடியும். அகில இந்திய அளவில் 260க்கு மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒத்த கோரிக்கைகளின் மீது சேர்ந்து போராடுவது என்ற நோக்கத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பை உருவாக்கி, மத்திய அரசின் விவசாயிகள் விரோதச் செயல்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து தொடர் போராட்டத்தை அது நடத்திக் கொண்டுள்ளது.

நவம்பர் 26,27 இரண்டு நாட்கள் நாடு முழுவதும், புதுதில்லியிலும் போராட்டக் களம் காண அழைப்பு விடுத்திருக்கிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும், விவசாயிகளுக்கும் கேடு விளைவிக்கும் வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப்பெறும் வரை கிராமங்கள் போர்க்களமாக மாறட்டும்.

விவசாயிகளின் தெலுங்கானா போராட்டத்தை நாம் அறிவோம். ஏர்க்கலப்பையை வீசிவிட்டு துப்பாக்கி ஏந்தி விவசாயிகள் போரிட்ட வீரகாவியம் அது. நிலத்துக்காகவும், மனித உரிமை காக்கவும் நடைபெற்ற போராட்டம் அது. இப்போது, ஒட்டுமொத்த விவசாயம், நிலம், நீர், காற்று, உணவு என எல்லாம் அந்நிய கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கும் ஆட்சியாளர்கள். காவல்துறை, நீதித்துறை, ராணுவம், அரசு நிர்வாகம் அனைத்தும் உடைமை வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் நலன்களை காக்கவே செயல்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் பேரெழுச்சி, கிராமங்கள் தோறும் ஏற்படுவதன் மூலம் தான் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட முடியும். விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுப்போம். வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறச்செய்வோம்!.

போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவது அரசின் நடவடிக்கையில்தான் இருக்கிறது. மத்திய அரசு செய்ய வேண்டியது,

 1. மூன்று வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்
 2. வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை தீர்மானித்து அரசு கொள்முதல் செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்
 3. அனைத்து வகையான விவசாயக் கடனிலிருந்தும் விவசாயிகளை விடுதலைசெய்ய வகைசெய்யும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
 4. மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்கும் வகையில், “அனைத்து மக்களுக்கும் உணவு அடிப்படை உரிமை” என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்.
 5. தேசிய விவசாயிகள் கமிஷன் தலைவர் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி நமது பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் தீவிரப்படுத்துவோம்!இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *