Puthiya Velicham புதிய வெளிச்சத்தால்

அறம் சுடர்கிறது

தமிழ் இலக்கிய உலகில் புதிய வெளிச்சமாகப் புறப்பட்டிருக்கிறார் கவிஞர் சக்திவேல். இவரிடமிருந்து அன்பு கசிகிறது, அறிவு மலர்கிறது, மைதி ததும்புகிறது, அறம் சுடர்கிறது.

மரத்தில் இருந்து இலை துளிர்விடுவதுபோல் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கிவருவதுபோல் கவிதை இயல்பாக வரவேண்டும் என்பார் கீட்ஸ். கவிஞர் சக்திவேலின் கவிதையும் இவ்வகையில் இதமாய் மலர்ந்திருக்கிறது.

எழுதுகிறவரின் மரபணு, அவரது எழுத்திலும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இதன்படி சக்திவேலின் உயர்ந்த பண்புகள் யாவும் அவரது எழுத்துக்களில் படிந்து, கவிதையாய் உருக்கொண்டு, காலவெளியில் கைவீசி நடந்து கொண்டிருக்கிறன. கவிஞர் சக்திவேல். முகநூலிலும் கோலோச்சுகிறவர், எட்டுத் திசையிலும் அவரது கிளைகள் விரிந்து பரந்திருக்கின்றன. அதன் வழியே தனது மனத்தைக் கவிதைகளாப் பூத்துத் தள்ளிக் கொண்டிக்கொண்டே இருக்கிறார். அவற்றில் இருந்து கவிதைப் பூக்கள் சிலவற்றை ‘புதிய வெளிச்சம்’ என்ற தலைப்பில் தொகுப்பாக்கி, நம்முன் கடை விருத்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பு இனிய தொகுப்பு. இதயத்தின் ஈரத் தொகுப்பு. அன்பின் ஈரமே இதில் அதிகம் தென்படுகிறது.

இந்தத் தொகுப்பின் முதல் கவிதையே அண்ணையைத்தான் ஆராதிக்கிறது, தாயன்பை ஆராதிகாதவர் யார்? முற்றும் துறந்த பட்டினத்தடிகளையே ‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து’ பெற்ற தாயை எண்ணி, ‘எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்று கதறித் துடிக்கிறார் என்றால் தாயன்பின் முன் நம் எம்மாத்திரம்?கவிஞர் சக்திவேலும், ஏறத்தாழ பட்டினத்தடிகளாரின் அரவணைப்பில் நின்று கொண்டு

‘தாயே….. / என்னுடல் பெருக்க /
உன்னுடல் சிறுத்தது! /என்வாழ்வு செழிக்க /
உன் வாழ்வு இளைத்தது!’
என்று கவிதைக் கண்களால் கசிந்துருகுகிறார்.

இன்னொரு கவிதையில் ‘மடித்திருந்த புடவையில் /
நிலைதிருந்தது /அம்மாவின் வாசனை / என்ற வரியால், அம்மா வாசனையாக மட்டுமே வாழ்கிறார் என்பதை துயரவாசனையோடு
உணர்த்துகிறார்.

அம்மா இல்லாத நிலையில் ,அப்பாவும் மறைந்துவிடுகிறார் கண்ணீர்விட்டுக் கதறும் கவிஞரின் இதயம், அம்மா மறைந்தபோது அப்பாவுடன் சேர்ந்து அழுத நாட்களை எண்ணிப் பரிதவிக்கிறது. எப்படி?

‘அம்மா இறந்தபோது / நீயும் நானும் அழுதோம் / அப்பா! /
நீ இறந்தபோது / நான் மட்டும் அழுதேன் / ஆறுதலின்றி….’ /

என்று அவரது கவிதை தேம்புகிறது, இந்த கையறு நிலை கவிதை அந்த துயரக் காட்சியை நெஞ்சுக்குள் தீட்டி நெகிழவைக்கிறது கல்வியின் அருமையை உணர்ந்த கவிஞர்,

‘அதிகாலை துயிலெழு / அனுதினமும் நீ படி / புரியாத பாடங்கள்கூட / புரிந்திடும் தினம்பாடி ‘ என படிக்கும் பாடம் மனதில்
படிவதற்கான ரகசியத்தை அன்பில் மொழியில் ஆசையாய் போதிக்கிறார்.
‘காலையில் படி! கடும் பகல் படி! மாலை இரவு பொருள்படும்படி’ என்ற
படித்து படித்து படிக்கச்சொல்லும் பாவேந்தரை இந்தக் கவிதை நினைவூட்டுகிறது.

படித்தவர்களால்தான் தேசத்தை எழுந்து நிற்கவைக்கமுடியும் என்பது கவிஞர் சதிவேளின் நம்பிக்கை. ஆனால் தேசம் இப்போது தள்ளாடிகொண்டல்லவா இருக்கிறது

வருவாய் தரும் மதுபானத்தால்தான் ஆட்சி வாகனம் ஓடிகொண்டிருக்கிறது. இதைக்கண்டு எரிச்சலுரும் கவிஞர்………..

நத்தையை பார்த்து சாலை அமைத்தவர்கள் / எறும்பைப் பார்த்து வரிசையில் சென்றவர்கள்…. / என்று உயர்ந்த பண்புகளை மனிதர்கள் கற்றுகொண்டபட்டியலிட்டு விட்டு …. அத்தகைய மனிதர்கள்
இன்று மதுக்கடை வாசலில் பரதேசிகளாய் நிற்கிறார்களே என்று ஆத்திரத்தோடு ஆதங்கபடுகிறார். இவரது இந்த கோபக்கவிதை, மறந்த
என் கல்லுரித் தோழன் பையூர் பாவேந்தனின்… ‘அவன் போதையில் /
அவன் குடும்பம் / தள்ளாடுகிறது / / என்ற கவிதை வரிகளை நினைவூட்டி செல்கிறது.

சமூகத்தின் மீதான அக்கறையைப் பல்வேறு கவிதைகளில் விதவிதமாய் வெளிபடுத்தும் கவிஞர், தன் காதலுக்குரிய மனைவிக்காகவும் கவிதையை உருகுகிறது.

கவிஞர் கட்டட வரைபடத் தொழிலில் இருப்பவர் என்பதால்…. தன் ஆயுள் ரேகையாய் இருக்கும் அந்த தொழிலோடு ஒப்பீட்டு மகிழ்கிறார், எப்படி?

நாள்தோறும் / நான் வரையும் கட்டட வரைபடத்தின்/ கோடுகள் நீ / என்கிறார். எனக்குதெரிந்து மனைவியை எவரும் படம்பிடித்ததாகத் தெரியவில்லை. தமிழுக்கு புது உருவகம் தந்து உதவுகிறது இந்தக் கவிதை. அடுத்து அவரே …’ என் காயங்களின் மருந்து நீ / என்றும் தன் இணையரை உன்னதமாய் உயர்வுசெய்கிறார். இந்தக் கவிதை இருவரது உயரத்தையும் ஒருசேர உணர்த்துகிறது.

இந்த அறவியல் கோலோச்சும் நூற்றாண்டிலும் மூன்றாம் பாலினத்தவரைக் கண்டு முகம் சுழிக்கும் மூடர்கள் அதிகம். அவர்களே தங்களைச் ‘சந்திப்பிழை போன்ற /சந்திப்பிழை நாங்கள் / காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் / என்று தன்னிரக்கம் கொள்வதாய் கவியரசு நா. காமராசன், கவிதை எழுதி காலத்தின் கைதட்டலை, இன்றும்கூட வாங்கிகொண்டிருக்கிறார், நம் கவிஞ்சர் சக்திவேலோ…..

வரதட்சணை / வாங்கி வாழாத /வந்ம்படிகள் /என்றும் ஊரைக் கொளுத்தி / காதலை பி(எ )ரிக்கா / வேடன்தான்கல்கள் / என்றும் அவர்தம் பண்பை பறைசாற்றுவதோடு……

‘எதிர்கால உலகை / ஆளப்போகும் / எட்டாவது நதிசயங்கள் / என் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும் என்ற
ஆசையையும் வெளியிட்டு, திருநங்கையர் உலகின் தேசிய கவியாய்த் தன்னைத்தானே பிரகடனம் செய்துகொள்கிறார்.
உலகின் அச்சாணிகளான உழவர்கள், கண்ணீரை விதைத்துத் துயரத்தை அறுத்துகொண்டிருக்கிறார்கள்,
அவர்களுக்காக வாதிடும் கவிஞரின் கவிதை…..வெதச்ச நெல்லு
வெளையாம விவசாயி சாகுறான்!

வங்கிகடன் தாங்காம தற்கொலைக்கு மாறுறான் எனநிகழ்வின் வலியை, இந்த சந்தக் கவிதை முகத்திலறைகிறது. விவசாயிகளை ஏதுமற்ற ஏதிலிகள் என்றும் அந்தக் கவிதை அழுகிறது.

குழந்தைகளுக்கு சிறகு தரவேண்டிய இன்றைய கல்விமுற,சிறகுகளுக்கு பதிலாய் சிலுவை தருவதைப் பார்த்து புத்தகங்களே / சமர்தாயிருங்கள் / குழந்தைகளைக் / கிழித்துவிடாதீர்கள் / என்று கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளுக்காக பாரம் சுமந்தார்கள். நம் சக்திவேலோ , ‘குழந்தையதிகாரம்’ என்ற கவிதை தலைப்பில் குழந்தைகளுக்கு எந்தந்த விதத்தில் ஆபத்தும் துயரமும் வருகிறது என்பதைப் பட்டியலிட்டு பரிதவிக்க விடுகிறார். குறிப்பாக ஒவ்வொருவரியும் நிகழ்ந்த கொடூரங்களைப் பட்டியலிட்டுப் பதைபதைக்கவும் வைக்கிறது. இதை விவரித்தால், அது தனி நூலாகிவிடுமென்ற அச்சத்தால் அந்த முடிவிலிருந்து மெல்ல நகர்கிறேன்.

பக்கவாதம் தாக்கி படுக்கையில் வீழ்ந்த கவிஞர் சக்திவேல் உரிய மருத்துவத்தாலும் மண் உறுதியாலும் மறுபிறப்பை எய்தியிருக்கிறார். தன் எழுச்சிக்குத் துணை நின்றவர்களுக்கு கைகூப்பும் அவரது கவிதை, தன்னுடைய கையும் காலுமாகவே மாறி நடைபழக்கிய மனைவியை, மறுதாய் என சேவிக்கிறது, அதோடு தன்னை மீட்டெடுத்த மருத்துவர்களுக்கும், பராமரித்த செவிலியர்களுக்கும், மருத்துவமனைத் துப்புரவுப் பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி நெகிழ்கிறது.

இந்த நன்றிக் கவிதை என்னையும் மரணத்திலிருந்து மீட்டெடுத்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் துப்புரவுப் பணியாளர்களையும் நினைவுபடுத்தி நெகிழ்த்துகிறது. ‘நீயும்தான் இருக்கிறாயே….. நன்றி செய்தாயா?’ என்று இந்த கவிதையைக் காட்டி என் மனமே என்னை நானப்படுத்துகிறது.

இந்த கவிஞனுக்கு இவ்வளவு நன்றி உணர்வா? என்று என்மனம் வியப்புறுகிறது.

இந்த கவிதை நூல், ஒரு மாமனிதனை நமக்கு அடையாளப்படுத்துகிறது. அந்த மனிதனுக்குள் இருக்கும் மகத்தான கவிஞனை அக்கறையாய் அறிமுகப்படுத்துகிறது. அந்த கவிஞனின இதயத்துடிப்பை,இலக்கியம் என்ற பெயரில் நம் இதயத்துக்கு நெருக்கமான
இசையாக்குகிறது.

கவிஞர் சக்திவேல், தன் ‘புதிய வெளிச்சத்தால்’ புகழ் வெளிச்சத்தை அடைவார். இந்த நேசக் கவிஞரை நெஞ்சோடு தழுவி மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.

         நூலின் தகவல்கள் 

நூல் : ” புதிய வெளிச்சத்தால்  “

ஆசிரியர் : கவிஞர் சக்திவேல்

 

     நூலறிமுகம்  எழுதியவர் 

      ஆரூர் தமிழ் நாடன்
நக்கீரன் துணை ஆசிரியர்
இனிய உதயம் இணை ஆசிரியர்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *