புத்தம் வீடு [நாவல்] – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : புத்தம் வீடு [நாவல்]
ஆசிரியர் : ஹெப்ஸிபா ஜேசுதாசன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
மண்ணின் மணத்துடன் வட்டார மொழியில் எழுதப்பட்ட யதார்த்தவாத நாவல்
ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925-2012) பர்மாவில் பிறந்தவர். சொந்த ஊர் கன்னியா குமரி மாவட்டம் புலிப்புனம் கிராமம். ஆசிரியர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஹெப்ஸிபா ஆங்கிலம் இலக்கியம் கற்று திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கணவர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர். இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பணி சொல்லில் அடங்காது. தமிழ் இலக்கிய வரலாற்றை “Count Down from Solomon: The Tamils Down the Ages through Literature” என்று நான்கு பாகங்களாக இருவரும் சேர்ந்து எழுதிய ஆங்கில நூல் தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வழங்கிய மிகப் பெரிய கொடையாகும்.
புத்தம்வீடு, அனாதை, டாக்டர் செல்லப்பா, மாநீ ஆகிய நான்கு நாவல்கள் எழுதியுள்ள ஹெப்ஸிபா தமிழ் புனைவிலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளார். ’புத்தம் வீடு’ Lissy Legacy என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரதியாரின் குயில்பாட்டு, சங்க இலக்கியமான நெடுநல்வாடை இரண்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள ஹெப்ஸிபா ’விளக்கு விருது’ பெற்றுள்ளார்.
”ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ நாவல் வெறும் காதல் கதை அல்ல இது; ஒரு யுக மாற்றத்தின் குறியீடு” என்று பாராட்டுகிறார் அம்பை. ஹெப்ஸிபாவின் ‘டாக்டர் செல்லப்பா’ நாவல் தமிழின் முதல் இருத்தலியல் நாவல் எனக் கொண்டாடப்படுகிறது.
ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டினுக்கு இணையாக ஹெப்ஸிபாவைக் கொண்டாடுவோர் உளர். இவ்விருவரும் தாங்கள் நன்கறிந்த குடும்ப உறவுகளுக்குள் எழும் நெருக்கடிகள், விரிசல்கள், அன்புமிகு தருணங்கள் பற்றி மட்டுமே எழுதினர். புற உலகில் நடந்த சமூக, அரசியல் நிகழ்வுகளை முற்றிலுமாகத் தவிர்த்தனர்.
மனித மனங்களின் பலத்தையும், பலவீனத்தையும் தங்கள் நாவல்களில் சித்தரித்தனர். ஆண்-பெண் உறவில் ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலங்கள் ஆகியனவே இவர்களுடைய நாவல்களின் கருப்பொருளாயின.
’புத்தம் வீடு கன்னியாகுமரி மாவட்டத்தின் பனையேறும் நாடார்குல மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் நாவலாகப் பரிணமிக்கிறது. பனை மரங்கள் அடர்ந்திருக்கும் பனைவிளை ஊரின் அழகை, பெருமைகளை வியந்து விவரிக்கும் நாவலின் தொடக்க வரிகள் கவித்துவமானவை. “பனைவிளையில் கண்ணுக்கு எட்டிய தூரம் எல்லாம் பனை மரக்காடு. இடையிடையே ஓலைகளின் சலசலப்பு.
அதனூடே வேறு ஒரு ஒலி. ஒரு மட்டையை இன்னொரு மட்டையால் அடித்து விளையாடுகிற மாதிரி. பனை மரமென்றாலும், அப்பப்பா! சில வேளைகளில் பார்க்கப் பயமாக இருக்கும். இப்படி ஒரு உயரம் எங்கேயிருந்து வந்தது மரத்துக்கு? மரங்களிடையே ‘கோலியாத்’ எனலாம் பனை மரத்தை…..” என்றெழுதி நாவலின் சூழலை அழகுறச் சித்தரிக்கிறார். வாசகர்களைக் கைப்பிடித்து பனைவிளைக்குள் கூட்டிச் சென்று விடுகிறார்.
பனைவிளை ஊரில் இருக்கும் ’புத்தம்வீடு’ என்ற பழைய, பாழடைந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே இந்த நாவலில் கதைக் களமாகி இருக்கின்றன. வாழ்ந்து கெட்ட அந்த வீட்டின் தலைவர் பெரியவர் கண்ணப்பச்சி புத்தம் வீட்டின் முகப்பில் உள்ள அடிச்சுக்கூட்டைத் தாண்டி வெளியே வருவதில்லை. அவரின் குரலுக்கு மறுகுரல் கொடுப்பது பனைவிளை புத்தம் வீட்டின் குலவிளக்கு; பேத்தி லிஸி மட்டுமே. கண்ணப்பச்சியின் மூத்த மகன் குடிகாரன். கதையின் நாயகி லிஸியின் அப்பன்.
இளையவன் என்ன செய்கிறான் என்று குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. மொத்தத்தில் புத்தம் வீட்டு ஆண்கள் மூவரும் சோம்பேறிகள். லில்லி இளையவனின் மகள். லிஸியைவிட பத்து வயது இளையவள். வீட்டின் மருமகள்கள் இருவரும் வாயில்லா ஜீவன்கள். குடும்பத்துக்கான ஒரே வருமானம் அவர்களுக்குச் சொந்தமான பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பனை பொருட்கள் மட்டுமே. இதனைப் போற்றிப் பாதுகாப்பதில் குடும்பத்தில் இருந்த ஆண்கள் யாருக்கும் அக்கறையில்லை.
அவர்களுக்குச் சொந்தமான பனை மரத்திலிருந்து அக்கானி (பதநீர்) இறக்கும் பனையேறி தங்கையனின் குடும்பம் புத்தம் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கிறது. வீட்டுப் பெண்கள் அக்கானியைக் காய்ச்சி கருப்பட்டி செய்கிறார்கள். பனையேறி தங்கையன் நல்ல உழைப்பாளி. புத்தம் வீட்டுக்குப் பக்கத்தில் அரை ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடும் கட்டிக் கொள்கிறான். அவன் மகன்கள் தங்கராஜ், செல்லப்பன் இருவரும் தகப்பனைப் போலவே நல்ல உழைப்பாளிகள். லிஸியும், தங்கராஜும் சிறு வயதில் பள்ளித் தோழர்கள்.
லிஸி பெரியவள் ஆனதும் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். கன்னிப் பெண்களை வீட்டில் அடைத்து வைக்கும் ’இற்செரிப்பு’ எனும் பழக்கம் வீட்டில் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. லிஸியின் அப்பனும், சித்தப்பனும் சம்பாதிக்க வக்கில்லாவிட்டாலும் வீட்டில் அராஜகம் புரிகிறார்கள். புத்தம் வீடு பெண்களுக்குச் சிறையாகிறது.
காலச் சக்கரம் சுழல்கிறது. இந்தியா விடுதலை பெறுகிறது. திருவிதாங்கூர்-தமிழ்நாடு போராட்டம் நடைபெறுகிறது. அந்தச் சுவடுகள் எதுவும் வீட்டில் தெரிவதில்லை. லிஸிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். பனைவிளைக்கு அருகிலிருக்கும் ஒரு வைத்தியர் பெண் பார்க்க வருகிறார். லிஸியைப் பார்க்க வந்தவர் லில்லியை கட்டிக் கொள்கிறேன் என்கிறார். அதெப்படி அக்கா வீட்டிலிருக்க தங்கைக்கு திருமணம் முடிக்க முடியும்? லில்லியைவிட அவர் இருபது வயது மூத்தவர். மணப் பெண்ணின் சம்மதம் எல்லாம் யார் கேட்கிறார்கள். வைத்தியரிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது.
புத்தம் வீட்டுக் கடனையெல்லாம் அடைக்கிறேன் என்கிறார். சகோதரர்களுக்குள் பகைமை மூள்கிறது. வீட்டில் ஒரே குழப்பம். பனைவிளை சர்ச் உபதேசியர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வைத்தியர் வெற்றி பெறுகிறார். லில்லியுடனான திருமணம் இனிதே நடக்கிறது.
பஞ்சும், நெருப்பும் பக்கத்திலிருந்தால் பற்றிக் கொள்வது இயல்புதானே! தங்கராஜ்-லிஸி காதல் மலர்கிறது. தங்கராஜ் பனையேறி என்பதால் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருக்கும் என்றெண்ணி லிஸி திகைக்கிறாள். குடும்பப் பெருமையும், வர்க்க பேதமும் முன்னிற்கும். தன் காதலை அப்பனும், சித்தப்பனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதறிந்து நடுங்குகிறாள். தங்கராஜ் திருமணத்திற்கு நெருக்குகிறான்.
இந்நிலையில் புத்தம் வீட்டில் இடியென இறங்குகிறது ஒரு கொடூர சம்பவம். லிஸியின் சித்தப்பா கொலைசெய்யப்பட்டு வீட்டில் பிணமாகக் கிடக்கிறார். போலீஸின் சந்தேகம் இருவர் மீது விழுகிறது. லிஸியின் அப்பாவும், காதலன் தங்கராஜும் கைதாகிறார்கள். கொலை வழக்கின் திசை மாறுகிறது. லிஸியின் அப்பா விடுதலை ஆகிறார்.
நடைபிணமாக வெளிவரும் அவர் சிறிது நாளில் இறந்து விடுகிறார். கொலை குறித்த மர்ம முடிச்சு அவிழ்கிறது. இறந்துபோன லிஸியின் அப்பாதான் கொலை செய்தார் என்று தெரிய வருகிறது. தங்கராஜ் விடுதலையாகிறான். லிஸி-தங்கராஜ் திருமணம் இனிதே நடக்கிறது. தங்கராஜின் உழைப்பில் புத்தம் வீடு புத்துயிர் பெறும்தானே.
கிட்டதட்ட எழுபதாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தம் வீடு இப்போது வாசிக்கும்போதும் புத்துணர்வைத் தரும் நாவலாகும். பெண்கள் எழுதுவது மிக அபூர்வமாகக் கருதப்பட்ட காலத்தில் ஹெப்ஸிபா இந்நாவலைப் பதினைந்து நாட்களுக்குள் எழுதி முடித்துள்ளார். ஹெப்ஸிபா-ஜேசுதாசன் தம்பதிகள் எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். நாவலைப் படித்துப் பார்த்த சுந்தர ராமசாமி இது ஓர் அற்புதமான படைப்பு. கட்டாயம் அச்சாக வெளிவர வேண்டும் என்று சொல்லியுள்ளார். தமிழ் புத்தகாலயம் நாவலை உடனே வெளியிட்டு சிறப்பு செய்தது. பனையேறிகளின் வாழ்க்கை நாவலில் ஆழமாகவும், அழகுணர்ச்சியுடனும் சொல்லப்பட்டுள்ளது.
நாவல் பனைவிளையில் இருந்த இருவேறு வர்க்கப் பிரிவினைத் தெளிவாகக் காட்டுகிறது. முதல் பிரிவினர் பனை மரங்களுக்குச் சொந்தக்காரர்கள். தங்களுக்கான பனையேறிகளை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கள்ளும், பதநீரும் இறக்கி, விற்று அதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கியுள்ளனர்.
இரண்டாவது பிரிவினர் பனையேறும் சிரமமான தொழிலை மேற்கொள்ளும் பனையேறிகள். சமூக அடுக்கில் பனையேறிகள் கீழ்த்தட்டைச் சார்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இந்த வர்க்க பேதம் கண்ணப்பச்சி முதல் லிஸி வரை மூன்று பரம்பரையிலும் தொடர்வதைப் பார்க்கிறோம். புத்தம் வீடு கடுமையான சமூகப் பழக்கங்கள் மற்றும் தப்பெண்ணங்கள் காரணமாய் சொல்லொண்ணா துயரங்களைச் சந்திக்கும் ஒரு இளம்பெண் தன் மன உறுதியால் இறுதியில் வெற்றி பெறும் கதையைச் சொல்லிடும் செவ்வியல் நாவல் என்பதில் ஐயமில்லை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.