புதுவாழ்க்கை : நூல் அறிமுகம்
– முனைவர் மு. கவியரசன்
ஒரு படைப்பு சார்ந்த விமர்சனப் போக்கு என்பது, தமிழ் இலக்கிய ஆய்விற்கு அடிநாதமாக விளங்குவது தொல்காப்பியரின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள். ஆனால், மேலைநாட்டு அரிஸ்டாட்டிலின் ஆய்வுமுறை காலம், வெளி, பாத்திரங்கள் என்று ஒரு படைப்பின் கட்டமைப்பும், அக்கட்டமைப்பின் உள்ளிருக்கும் பதிவுகளைக் கூறுபோட்டு அதன் நிலைப்பாடுகள் என்ன சொல்ல வருகிறது என்பதை விளக்குவது. அவ்வகையில், ஒரு படைப்பின் உள்ளடங்கிய கட்டமைப்பு உருவாக்கம் என்பது மிக முக்கியமானது. இதனடிப்படையில் எழுத்தாளர் சு. காந்திதுரை அவர்களின் புதுவாழ்க்கை எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் கதைகளின் கட்டமைப்பும், அதற்குள்ளிருக்கும் மையங்கள் எதைப் பதிவுசெய்கிறது என்பதை விரிவாகக் காண முயற்சிச் செய்யலாம்.
முன்னுரை
எண்ணங்களே எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் எனலாம். திறம்பட செய்ய வேண்டிய செயல்களில், அதற்கான எண்ணங்களின் ஒருங்கிணைப்பு அற்றுப்போகும் பட்சத்தில், பெரிய இழப்புகள் நிகழும். அந்நிகழ்வு வாழ்க்கையில் அமையுமானால், பிரிவுகள் – துக்கம் – மன அழுத்தம் என்று வாழ்க்கை ஒரு நிலையில்லாத் தன்மையை வெளிப்படுத்திச் சிதைபடும். இம்மாதிரியான சிதறல்கள், இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் கதை மையங்களில் காணமுடிகிறது. 12 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில், ஒவ்வொரு சிறுகதைகளும், வெவ்வேறு மையங்களைக் கொண்டிருக்கிறது. இச்சிறுகதைகளில் வெளிப்படும் பெரும்பாலான மனிதர்கள், கிராமப்புற மனிதர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். வறுமை, புரிதல், ஏமாற்றம் – அதன் பின்பு மனம் மாறுதல், துக்கம் – துக்கத்தின் பின்னான தலைக்கணத்தால் இழந்த வாழ்க்கை, உறவுகளின் ஏக்கம், கல்வியைப் பற்றிக் கூறும் விதம் என்று கதையமைப்புக் காட்சிகள், ஆழமானக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் மரியாதை, துகினா ஶ்ரீ, புதுவாழ்க்கை ஆகிய சிறுகதைகளில் இருக்கக்கூடிய எண்ணவோட்ட பதிவுகள் எவ்வாறு பதிவாகி இருக்கிறது என்பதை ஆராய்வதும் குறிப்பிடத்தக்கது.
கட்டமைப்பு முறைமை
கதையின் கட்டமைப்பு என்று வருகிறபோது, “ஒரு படைப்பு உருவாக்கப்பட்ட சமூகச்சூழலின் மெய்மைக்குத் தகுந்தாற்போல ஒப்புமையுடைய கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்” (Dr.H.S.GILL, Structuralism and Literary Criticism,P58.) இவற்றுள், அகக்கட்டமைப்பு – புறக்கட்டமைப்பு எனும் இவ்விரு கட்டமைப்புகள் நிலை பெறுகிறது. கதைக்குள் இடம்பெறக்கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் மையங்களை விளக்கக்கூடிய கூறுகளைக் காட்சிகளின் வழியாக உருவாக்கி அமைத்திருப்பது. இவற்றைக்கொண்டு எழுதக்கூடிய வரையறைத் தன்மையை மதிப்பீடு செய்து நகர்வது புறக்கட்டமைப்பு என்றாகும்.
அவ்வகையில், காலங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கதைக் கூற்றின் சொல்முறை அமைப்பென்பது, காலங்களை முன் வைத்தே தீர்மானிக்கப் படுகிறது. கடந்தகாலம் – நிகழ்காலம் எனும் இவ்விரண்டு காலங்களை கதைகளுக்குள் வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதுவாழ்க்கை எனும் இச்சிறுகதை தொகுப்பில் பெரும்பாலான கதைகள் கடந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்தை நோக்கிய தன்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேப்போன்று வெளி சார்ந்த இடச்சூழலை விவரிக்கும் போது, கிரமாப்புற வெளிகளே, கதையின் பின்னனி இடங்களாக பதிவாகியுள்ளது. தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் பாத்திரங்களின் கூற்று அமைப்பு முறையில், முன்னிலை கூற்று முறை சிறுகதைகள், எண்ணிக்கையில் அதிகமாக இடம் பெறுகிறது.
முக்கியமாக, மதுரை வட்டார வழக்குச் சொற்களும், சொலவடைகளும் கதைமாந்தர்களின் வாழ்வியலோடு பொருத்தி, கதை மையங்களுக்குள் அவை பொருந்தும் விதம், ஒன்றை வெளிப்படுத்த – அச்சொலவடைகளைப் பயன்படுத்தும் நேர்த்தி, அந்த மக்களின் வாழ்வியலை அடையாளப் படுத்துகிறது. அதேப்போன்று நடையமைப்பு உத்தியைக் கையாளும் போது, உரையாடலுக்கும் – உரைநடைக்கும் மாறுபாடில்லாத ஒரு தொடர்நிலை எழுத்து வகை – இயல்பான பேச்சுவழக்கு நடையாக அமைந்திருக்கிறது.
மையமும்; எண்ணவோட்ட பதிவும்
மையத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, கதையின் உச்ச நிலையிலிருக்கக்கூடிய தன்மையிலிருந்து வெளிப்படுகிறது. அதுவே கதைக்கான முழுமையான மையப்புள்ளி என்றும், அதனுடைய பரிணாமம் அதன் பின்புலத்திலிருந்து கதைச் சூழலுக்கான வரையறைகளை உற்பத்திச் செய்து, கதாபாத்திரங்களோடு கால நிலையையும் இணைத்து, ஒரு முழுமையான வடிவத்திற்குள் கொண்டமைவது. இவ்வாறாக மையம் என்பது கதைக்கான சிக்கலிலிருந்து வெளிப்படுகிறது. சிக்கல் பல வகைகளில் அடங்கும். தனக்கான சார்புநிலையை பிறருக்குத் திணிக்கும்போது அங்கே சிக்கல் உருவாகிறது. இவ்வுரு வாக்கத்திலிருந்து மைய நிலைப்பாடு எங்கே ஆழமாக பதிவாகிறது என்பதைப் பொறுத்தே, கதைக்கான வகையும் தீர்மானிக்கப்படுகிறது.
இந்த அணுகுமுறை வடிவங்கள் ஒருபுறமென்றாலும், மையங்களை அலசும்போது, பதிவாகியிருக்கக்கூடிய கதைகளின் எண்ணவோட்டங்களையும் விளக்க வேண்டியுள்ளது. அதன் வழிமொழிதலில், மரியாதை எனும் சிறுகதை, கலைக்கூத்தாடிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. இராமநாதன், பழநி, இவ்விரு பாத்திரங்களின் வாயிலாகக் கதையின் உள்கட்டமைப்பு அமைக்கப் பட்டுள்ளது.
கலையைக் காப்பாற்ற வேண்டும். அடுத்தத் தலைமுறைக்கும், தொடர்ந்து அச்சுவடு மறையாமல் பாதுகாத்துக் கடத்தப்பட வேண்டுமென்ற அக்கறை உணர்வுடன் படைக்கப் பட்டிருக்கும் பாத்திரம் இராமநாதன். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். மனைவி காத்தாயியின் ஆலோசனையுடன் கோயிலில் வைத்து இரண்டு மகன்களுக்கும் கூத்தின் கலை நுணுக்கத்தினைப் பயிற்றுக் கொடுக்கிறான். இச்செய்தி கதையின் முதற் பகுதியாக அமைகிறது. இரண்டாவது பகுதியாக பழநியின் அறிமுகமும், அப்பாத்திரத்தின் மனநிலைப் பாதிப்பையும் வெளிப்படுத்துகிறது.
வெள்ளமாயன் கூத்து கலையின் வாரிசாக இராமநாதனின் வம்சாவளிகள் அறியப் படுகிறார்கள். பூமிநாதன் தவில் கலையின் குடும்ப வாரிசாக அடையாளப் படுத்தப்படும் பழநி, அக்கலையைத் தன் தலைமுறைக்குப் பயிற்று விக்காமல், பணத்தைச் சேர்த்த கதையாகக் கதைசொல்லி விவரிக்கிறார்.
“இவுக முப்பாட்டன் தவில் அடிச்சான். அவுக முப்பாட்டன் கூத்துக்கட்டுன்னான். வெள்ளக்காரத் துரைக்குக் கூத்துப் பிடிச்சுப்போய் மெடல் கொடுத்தார். தவிலுக்கு மாலையும் அங்கவஸ்திரம் மட்டும் கொடுத்துட்டுப் போயிட்டான் வெள்ளக்காரத் தொரை. ஒண்ணாயிருந்த குடும்பம் அன்னையில இருந்து ரெண்டு குடும்பமாக கலையாலப் பிரிஞ்சிட்டாங்க. வெள்ளமாயன் குடும்பம் கூத்துக்கலைஞன், பூமிநாதன் கூட்டம் தவில் கலைஞன். கொஞ்சம் காரியமாக இருந்து சொத்தச் சேத்துப்புட்டான் பூமிநாதன். பழநி குடும்பம் ‘கலைஞன்’ என்ற சுவடே தெரியாமல் போய்விட்டது. பழைய பெருசு மட்டுமே, தவில்காரன் பேர்னு… அந்த மூணு நாள் மட்டுமே ஊர் அறிய நிப்பான் பழநி… பழநிய பொருத்தவரையில் மரியாததான்.. வெள்ளைப்பன் (பணம் புழக்கத்தில் இருப்பதால… தவில பூச அறையில் வைச்சுட்டான். இவுக அப்பன் பூமிநாதன். அதுக்குப் பின்ன பிள்ளைகளுக்குக் கத்துக் கொடுக்கல.. மனத்தளவில் பழநி கலைக்கு எதிராகவே வளர்க்கப்பட்டான்” போன்ற இச்செய்திகள் முழுமையான ஒரு புரிதலை வெளிப்படுத்திவிடுகிறது. வெள்ளைக்காரன் செய்த வினளயாட்டு நாளடைவில் இருவேறு கலையின் குடும்பங்கள் பிரிந்து, பின்னாளில் கலை சார்ந்த போட்டியாக, வன்மமாக பழநியின் மனதில் வேரூன்றி வளர்ந்திருப்பதாக கதைக்குள் அப்பாத்திரம் நகர்த்தப் படுகிறது.
“நானும் கருப்பன் மேல சத்தியம் பண்ணுறேன். இந்த வருசம் சோனைக் கருப்பன் முன்னால… வைச்சுக்கிருவம்” போட்டி தீவிரமாக சென்றாலும், இராமநாதனுக்கு இதில் உடன்பாடென்பது கேள்வியாகவே இருக்கிறது. தவில் கலை பற்றிய நுணுக்கங்கள் தெரியாத போது, பழநி கூலிக்கு ஆட்களைக் கொண்டு வந்து வென்றுவிட வேண்டும் என்கிற மனநிலை அழுத்தமாக இருக்கிறது.
ஆனால் கதையின் மூன்றாவதும் இறுதியுமாக வெளிப்படும் காட்சிகள் இதற்கு முன் வெளிப்பட்ட அந்த மனநிலை எவ்வாறு மாற்றம் அடைந்திருக்கிறது. அதற்கு சோனைக் கருப்பசாமி எனும் குலதெய்வம் மேற்கொள்ளும் உத்தி முக்கியமாக பார்க்கப்படுகிறது வீராப்பு, போட்டி மனப்பான்மை என மனதிற்குள் போர்களமிட்டாலும், “பழநி வீட்டில் இருந்த ஆட்டுக்கிடா கயிற அத்துட்டு வந்து தூக்கிப் போட்டதுல்ல… கால் ஒடிந்து நடக்க முடியாம படுத்தப் படுக்கயில கிடந்தான் பழநி. கடவுள் இருக்கான் வேண்டிக்கொண்டான் இராமநாதன். ஆஸ்பத்திரியில இருந்து வந்த பழநி நேர இராமநாதன் வீட்டுக்குப் போய் மன்னிப்பு கேட்டான். ‘இராமநாத என்ன மன்னிச்சிடு. நான்தான் உன்ன எதிரியாப் பாத்துட்டேன்னு’ பழநி கண்ணீர் வடித்தான். பழநி நான் உன்ன எதிரியா ஒரு நாளும் பாக்கல. மேளமும் ஆட்டமும் இணைந்தால் இன்பமாக இருக்கும்”5. கிராமப்புற வாழ்க்கையில் வாழும் மனிதர்களின் பெரும் நம்பிக்கையாக இருக்கிறது குலதெய்வ நம்பிக்கை. வன்மம், போட்டி என்று வந்தாலும், தெய்வமே அதைத் தீர்த்து வைத்திருக்கிறது.
இதிலிருந்து ஒரு முழுமையான கட்டமைப்பு உத்தியை மேற் கூறியவற்றிலிருந்து பகுந்து ஆராயலாம். வெள்ளைக்காரன் – அதன் வழியாக இடம் பெறும் போட்டி வன்மம், பணம் கலையை மறக்கடித்தல், கலை அறிவில்லாமல் தலைமுறையை மழுங்கடித்தல், இராமநாதனின் கலை மீதான அணுகுமுறை, செயல்பாடுகள் அவை முன்னோர்களுக்கான மரியாதை என்று பல விடயங்களைப் பதிவு செய்திருக்கிறது.
துகினா ஶ்ரீ எனும் கதை ஒரு பெண்ணின் வாழ்க்கையில், கடைசிக் காலத்தில், அவளுக்கு ஏற்பட்ட இன்னல் பெரும் வலியினைக் கொடுத்திருக்கிறது. அக்கொடுத்தல் எந்த ரூபத்தில் வருகை தந்து, அவளை நிம்மதியில்லாமல் ஆக்குகிறது என்பது பெருந்துயரம். இரத்த உறவுகள் கூர்முனையாக வெளிப்படும் விதம், அவளின் முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுப்படுத்த வைக்கிறது. இவற்றை விவரிக்கும் ஆசிரியர், கதையின் கட்டமைப்பையும் முக்கியமாக எதிர்நோக்க வைக்கிறார். அதன் வழியாக கதையினையும் நகர்த்துகிறார்.
மூன்று பகுதிகளாக விவரிக்கும் கதைபோக்கில், முதல் பகுதியில் துகினா ஶ்ரீ மற்றும் அவளின் கணவன் சுந்தரம், இவர்களின் குணநல முரண்களை எடுத்துரைக்கிறார். “அவள் என்ன பெண்ணா?. பெண் வடிவம் தாங்கிய ஆண். சுந்தரம் வெள்ளந்தியான மனிதன்”. “வீடு என்னவோ, மிகப்பெரிய வீடு. சுந்தரம் வேலைக்காரன் தான். பலநேரம் என்னடா, குடிக்கிற கஞ்சிக்கும் உடுத்துற வேட்டிக்கும் நாம அடிமைப்பட்டுப் போயிட்டோமே! இப்படி எல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சா ஆட்டைக்குச் சம்மதிச்சிருக்க மாட்டேன். போயும், போயும் இப்படியா வாழ்க்கைப் போகணும். அடக் கடவுளே!”. சுந்தரத்தின் எண்ணவோட்ட பதிவுகள் இங்கே கதைசொல்லியால் முன்வைக்கப் படுகிறது.
அடுத்தப் பகுதியில், துகினா ஶ்ரீயின் திருமண ஏற்பாடு சார்ந்த காட்சிகள் அமைக்கப்படுகிறது. என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், கோபக்காரப் பெண்ணைச் சமாளித்து வாழவேண்டும். அந்த வகையில் சுந்தரம் புகுந்த வீட்டு மாப்பிள்ளையாக சென்றாலும், பல இன்னல்களையெல்லாம் தாண்டிக் காலங்கள் கடக்கிறது. ஊர் மக்களிடத்தில் நற்பெயர் எடுத்திருந்தாலும், மனைவியிடம் எப்போதுமே கீழான நிலைதான். இக்கீழான நிலை காலங்கள் கடந்தபோது, பல இறப்புகள் உறவுகளுக்குள் ஏற்பட்டாலும், மகள் வழியாக சில வார்த்தைகள் வரும்போது அவ்வேதனை, சுந்தரத்தை திசைமாறிப் பயணிக்க வைத்திருக்கிறது. “இளைய மகள் போகிற போக்கில் பழமொழி சொன்னாள். ‘பொட்டச்சி காரியத்தனமும், புலுக்கப்பய நாட்டாமயாம்’ பேசிகிட்டே அவுக அம்மையிடம் எதற்கோ தகராறு பண்ணிக்கொண்டு இருந்தாள்”. பெற்ற மகளிடம் இருந்து வந்த வார்த்தைகள் சுந்தரத்தை நிலைகுலைய வைத்தது உண்மை. புரிதல் இல்லாத வாழ்க்கை, யாரிடம் எதைச் சொல்ல வேண்டும் – எதைச் சொல்ல கூடாது என்ற ரீதியிலான அணுகுமுறை என்பது இக்ககதையில் கேள்வியாக முன் வைக்கப்படுகிறது.
பலநிலையில் ஒன்றாக இருந்த சுந்தரம் இதற்கடுத்து, வாழ்க்கைக்கான பிரிவினை என்பது ஏற்படுகிறது. “தங்கமான புருசனக காப்பாத்தத் தெரியாம விட்டுப்புட்டா?. அவர் கடவுள் மாதிரி. இவ கிடக்கா., காசுப் பணம் யாருக்கு வேணும். நாயிட்டயும் காசு. பேயிட்டயும் காசு.. காசாம் காசு இவ எல்லாம். பலர் சாடை மாடையாகவே பேசினார்கள். எல்லாம் இருந்து அது இல்லயே. அப்ப சுந்தரம் இருக்கானா இல்லையா?. எதுவும் தெரியல”. இவ்வாக்கியங்கள் துயரம் கலந்த பிரிவு நிலையை வெளிப்படுத்துகிறது.
உறவுகளுக்குள் அன்பு, பணம் என்னும் சொல்லாடலுக்குள் மூழ்கடிக்கப் பட்டதால் இவ்விளைவு ஏற்பட்டிருக்கிறது. யாரிடமும், எதற்காகவும் பரிவு இல்லாத காலக்கட்டமாக இன்றைய உறவுநிலை வெளிப்படும் போது குடும்பம் என்கிற கட்டமைப்பு பிளவினை நோக்கியே செல்கிறது. அப்பிளவின் வலியைத்தான் இறுதியில் துகினா ஶ்ரீயும் அனுபவிக்கிறாள். “நான் துகினா ஶ்ரீயாக்கும். யாருக்கு வேணும். மகன்களும் பேரப்பிள்ளைகளும் துகினாஶ்ரீயை உதறிவிட்டார்கள். காலம் ஓடிவிட்டது. உண்மையான உயிர் மட்டுமே உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது உறவைத் தேடி கனத்த இதயத்தோடு”. எனும் இறுதி வரிகள் துகினாஶ்ரீயின் தனிமையான துயரத்தைத்தான் அவளின் எண்ண வோட்டங்களுக்குள் பொருத்திப் பார்க்க வைக்கிறது. கணவனின் மதிப்பு தெரியாமல், வயதான காலத்தில் அவனைப் பற்றியதான நினைப்புகளே வாட்டி வதைக்கிறது.
புதுவாழ்க்கை எனும் சிறுகதையில், ஊர்விட்டு ஊர்வந்து யாருக்கும் தன்னை அடையாளம் காட்டாமல் வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பேசுகிறது. அவள் ஏன் வரவேண்டும்?. அவள் செய்த செயல் என்ன? என்ற கேள்விகள் இருந்தாலும், கணவன் வாக்கே வேதவாக்கு என்று சுயபுத்தி இல்லாமல், அவன் காட்டும் தவறான பாதையில் பயணிக்கிறாள். வசதி வாய்ப்புகள் அவளுக்கான நிறைவை ஏற்படுத்தினாலும், அவ்வாழ்க்கையிலிருந்து மீண்டு நல்லதொரு வாழ்க்கையை வாழ நேர்கிற சூழலை உருவாக்கியவர்களாக அவளின் இரண்டு பெண் குழந்தைகள் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.
கதையின் தொடக்கமும், முடிவும் சீராண ஓட்டத்தில் அமைந்தாலும், பேருந்தின் பயணக் காட்சிகளாகவே விடிந்து மறைகிறது. ராணி – பாஸ்கரன் இப்பாத்திரங்களின் உரையாடல்களே கதையின் மையத்தை விவரிக்கிறது. அவையெல்லாம் கேள்வியும், பதிலுமாகவே இடம்பெறுகிறது. முக்கியமாக “டேய்! அது வாழ்க்கையாடா..போடாப் போ. காவயித்துக் கஞ்சியைக் குடிச்சாலும் உடம்புல ஒட்டுறது தான் ஒட்டும்… அப்ப சாப்பிட்ட சாப்பாட்ட நினச்சா ஈரக்கொலை நடுங்குது. எத்தன பேத்த பலியாட ஆக்கி இருப்பேன். நான் பலியாடானது, என் புருசன் காட்டுன வழி. ஆனா நான் பலருக்கு இந்த சாக்கடைய சுகம்னு, அடையாளங் காட்டிட்டேனே… எல்லா பாவத்த எம் தலையில் போட்டேனே”.
ஒரு காலத்தில் நடத்தைமுறை வேறுபட்டாலும், தன் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி எடுக்கக்கூடிய முடிவு என்பது, அவளின் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்திருக்கிறது. “அடப் பெரியவ பி.ஏ. முடிச்சுட்டா. சின்னவ ப்ளஸ்டடூ படிக்கா. இவளுகளுக்காகத் தானே என்ன மாத்தி இந்த மண்ணிலே மல்லுக்கட்டிட்டு இருக்கேன்”. இவ்வாக்கியங்கள் மிக முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் ராணியைப் பற்றிய செயல்பாடுகள் குழந்தைகளுக்கு தெரியக்கூடிய சூழல் வெளிப்படுமானால், அதனின் பிம்பம் கொடுமையானதாக, கரைபடிந்த ஒன்றாக படியும். அந்நேரத்தில் எழக்கூடிய எண்ணங்களும் விபரீதங்களை நோக்கியே செல்லும். இக்கேள்விகளுக்கு முற்றுப் புள்ளியாகவே சாக்கடையிலிருந்து வெளியேறி புதுமையான வாழக்கையை வாழ, தன் குழந்தைகளுடன் புது அடைக்களத்துடன் வாழக்கூடிய செய்தியாக, துன்பவியலிலிருந்து இன்பவியல் நோக்கிப் பதிவாகிறது.
முடிவுரை
இச்சிறுகதைத் தொகுப்பின் கட்டமைப்பு முறைமை, மையங்களுக்குள் உலாவும் கதாபாத்திரங்களின் எண்ணவோட்டங்கள், அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள், வாழ்க்கையை எவ்வாறு அணுசரிக்கிறார்கள், மக்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், என்பதை விவரிக்கக்கூடிய நிகழ்வுகள் எங்கும் சீர்பட்டுப் போகாமல் அமைந்திருக்கிறது. 12 சிறுகதைளில் பெரும்பாலான மையங்கள், தனிமனித வகை சார்ந்த சாராம்சம் மிகுதியாக பதிவாகி இருக்கிறது. துன்பவியலுக்கான காரணங்கள் கதைக்குள் தென்பட்டாலும், புரிந்துகொண்டு அதிலிருந்து மீண்டு வரும் கதாபாத்திரங்களின் எண்ண அலைகள் இன்பவியலை முன்வைத்து நகர தொடங்குகிறது. அகநிலைத் தன்மைகளை ஆழமாகப் பேசுகிறது. இச்சிறுகதைகள் அனைத்தும் நடைமுறை மனிதர்களின் எதார்த்தமான வாழ்க்கைப் பதிவுகள் எனலாம்.
நூலின் தகவல்கள் :
நூல் : புதுவாழ்க்கை
வெளியீடு : சித்ரா பதிப்பகம் (சென்னை. தொடர்புக்கு – 98422 93915)
நூல் அறிமுகம் எழுதியவர் :
முனைவர் மு. கவியரசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.