புதுச்சேரி ஆர்த்தி -கவிதை - புதுச்சேரி அழுகையொண்ணு | Poem - Puthucheri Azhugaiponnu

என்னானு அழுதிருப்ப
சொல்லடி நீ எஞ்சாமி ..

ஓநாய்ங்க அடையாளம்
ஓங் காதில் சொன்னேனே ,
மான்தோல போத்திவரும்
மர்மத்தைச் சொல்லலையே!

மிட்டாயி யாருந்தந்தா
வேணான்னுச் சொல்லச் சொன்னன்
தெரிஞ்ச பேயி வந்தா
எச்சரிக்கை பண்ணலியே!?

எளசான குருத்தோலை
எடுத்துக் கிழிச்சானோ?
கஞ்சாவைத் தின்ன அவன்
கட்டையில போவானோ?.
என்வெசனம் தீந்துடுமா?!

போதைக்குப் போகாம
பாதைய மாத்தோணும்..
பொண்ணுகள பாத்தாக்க
காக்கனுன்னும் சொல்லோணும்..

அடிவயிறு எரியுதய்யா
அறத்தச் சொல்லுங்கய்யா..
அறத்துக்கு தொணையாக
மறத்தையும் வெய்யுங்கய்யா..

தற்காப்புக் கலையெல்லாம்
தவறாம சேத்துடுங்க..
தரம்பாக்கும் கல்வியெலாம்
அப்பறமா பாத்துக்கலாம் ..

தாய்மாரே! பெத்தோரே!
பொம்பளப் புள்ளயின்னா
அடங்கி வாழனுன்னும்
ஆம்பளப் புள்ளயின்னா
அடங்காமத் திரியனுன்னும்
சொல்லி வளக்காம
கிள்ளி வளத்துடுங்க ..

வீட்டுல அம்மாவும் அக்காவும் இருக்காங்க..
அவங்களும் அப்பப்போ
வெளியில போவாங்க..
ஒன்னப்போல பயலுகதான்
தெருவெல்லாம் நிப்பாய்ங்க..
என்ன செய்வோம் நாங்கன்னு
எடுத்துக் கொஞ்சஞ் சொல்லுங்க..

எம்புள்ள போயிடுச்சு
எளம்பிஞ்சு கருகிடுச்சு..
இனியொன்னு போகாம
எல்லாரும் பாத்துடணும்..

பொண்ண காக்காம
பொருளாப் பாப்பவன ..
பொங்கி எல்லாரும்
போக்கிரியத் தண்டிக்கணும்…

– சரகு

ஏழுதியவர் 

மு. சரவணக்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *