புதுமைப்பித்தன் வரலாறு|puthumaipithan varalaaru - தொ.மு.சி ரகுநாதன்

‘வறுமையும்-புலமையும்’ சொல்லாடலுக்கு மேலும் ஒரு சான்று புதுமைப்பித்தனின் வாழ்வு. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு முன்னோடியான புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தனது நேரிடையான அனுபவத் தொகுப்பில் இருந்து வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன்.

மணிக்கொடி அலுவலகத்திற்கு வருகை தந்த புதுமைப்பித்தனுக்கு இரண்டு ரூபாய் அப்போதைய உணவுச் செலவுக்காக அளிக்கப்படுகிறது. சில நாட்களை அப்பணத்தைக் கொண்டு அவர் சமாளித்து விடுவார் என்று மணிக்கொடி எழுத்தாளர்கள் நினைத்திருக்க, இவர் புத்தகங்களையும், சுருட்டையும் வாங்கி வந்து நிற்கிறார்.

மேற்கண்ட நிகழ்வு எட்டயபுரம் மன்னரிடம் பணிக்குச் சேர்ந்தபின் கிடைத்த பணத்தில் பாரதி, புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததை நினைவுபடுத்துகிறது.

செல்லம்மாவின் துயருக்கு சற்றும் குறைவில்லாதது புதுமைப்பித்தனின் துணைவியார் கமலா அம்மாவின் துயர் என்றால் மிகையில்லை.

மேதமை மிகுந்த படைப்பாளிகள் சமகால வாழ்வில் இருந்து விலகிய கனவுலக சஞ்சாரம் மிகுந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

அரசு வேலை கிடைக்காமை, வக்கீல் ஆக முயற்சி செய்யாமை என்றவாறு தந்தையுடன் முரண்படும் புதுமைப்பித்தன், தனக்குரிய சொத்தினை வாதாடி, அடைந்து நூதன முறையில் உறவினர்களை பழி தீர்க்கிறார்.

மணம் புரிந்த நாளிலிருந்து இறப்பு வரை கமலா அம்மா புதுமைப்பித்தனிற்கு நீடித்த ஆதரவாக இருந்திருக்கிறார். ‘கண்மணி கமலாவுக்கு’ என்ற நூலை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த நினைவு வந்தது. ஒவ்வொரு மடலிலும் உனக்கு என் அன்பு முத்தங்கள், குஞ்சுவுக்கும்! என்று முடித்திருப்பார் புதுமைப்பித்தன்.

தன்மகள் தினகரியின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததால் கடுமையான காச நோயையும் பொருட்ப்படுத்தாமல் புணேயிலிருந்து நீண்ட பயணம் செய்து திருவனந்தபுரம் செல்கிறார். காந்தியை சுட்டுக் கொன்றவர் புணே நகரத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைத்து வருந்துகிறார்.

டி எஸ் சொக்கலிங்கத்தின் மீது கொண்ட அன்பினால், தினமணியில் பார்த்து வந்த வேலையை அவருடன் சேர்ந்து உதறுபவர், அதே நபருடன் ஏற்பட்ட முரணில் ‘தினசரி’ பத்திரிகையில் இருந்தும் விலகுகிறார்.

கல்கியுடன் அவர் நடத்திய கட்டுரைப்போர், அவரது சமரசமற்ற இலக்கியச் செயல்பாடுகளுக்கு சான்றாக அமைகிறது. பொருளாதார நலன் சார்ந்து சிந்தித்து சினிமாத் துறையை நாடுபவர், மணிப்புறாவை அடைய கைப்புறாவையும் இழந்து நின்றார் என்று நயமாக குறிப்பிடுகிறார் தொ.மு.சி ரகுநாதன்.

தியாகராஜ பாகவதரின் படத்தில் பணியாற்றி பெரும் பணம் ஈட்டி இருப்பார் என்று அனைவரும் எண்ணிய வேளையில், உயிர்க்கொல்லி நோயை பெற்றுக் கொண்டு இல்லம் திரும்புகிறார். தழுவல், திருட்டு இலக்கியங்களை உறுதியுடன் எதிர்த்தவர், தனக்குப் பிடித்த பிற மொழி ஆங்கிலக் கதைகளை சிறப்பாக மொழி பெயர்த்து அளித்திருக்கிறார்.

தந்தையின் சொல்லைக் கேட்டு அரசுப் பணியில் இணைந்து பாதுகாப்பான வாழ்வை மேற்கொண்டு மறைந்திருந்தால் இன்று எத்தனை பேரின் நினைவில் நீடித்திருப்பார் என்று எண்ண வேண்டியுள்ளது.

தனக்குப் பிடித்தமானவாறு வாழ இயலாமல் போன பெரும் ஏமாற்றம் அவரிடம் இருந்திருக்கும். அவரையொத்தக் கலைஞர்களைப் போன்றே புதுமைப்பித்தனும் பணத்தை ஈட்டும், கையாளும் திறன்கள் அற்றவராக வாழ்ந்திருக்கிறார்.

பின்னிணைப்பாக இடம்பெறும் தொ.மு.சி ரகுநாதன்-சுந்தர ராமசாமியின் நேர்காணல், இந்நூலின் மிகவும் சிறப்பான பகுதி. மின்னூலில் ஒரு மணி நேர வாசிப்பு என்ற அளவில் இடம்பெறும் இப்பகுதியில்  சுந்தர ராமசாமியின் நுட்பமான கேள்விகளை சிறப்பாக எதிர்கொண்டு மிக எளிமையாக புதுமைப்பித்தன் குறித்து பதில் அளிக்கிறார் தொ.மு.சி ரகுநாதன்.

புதுமைப்பித்தன் என்ற மகத்தான ஆளுமையை ஓரளவுக்காவது புரிந்துகொள்ள இளம்  வாசகர்களுக்கு இப்பகுதி உதவக்கூடும்.

தன்னால் ஏற்கவே இயலாத சமூக கீழ்மைகளை தனது புனைவில் பகடையாக்கியும், வலுவாக இடித்துரைத்தும் செல்கிறார் புதுமைப்பித்தன்.

கீழ்மைகளுக்குரிய தீர்வுகளின் பக்கம் நகரவில்லை அவர். படைப்பாளியாக அது தன்னுடைய பணி அல்ல என்று அவர் கருதி இருக்கக்கூடும் என்று தெளிவுபடுத்துகிறார் ரகுநாதன்.

கம்பீரமான ஆளுமையாகவே நீடித்த புதுமைப்பித்தன், தனது இறுதி நாட்களில், கடிதங்களின் மூலம் பலரிடம் சிறுசிறு உதவிகளைக் கேட்டு எழுதியது தமிழ்மொழி எழுத்தாளர்களுக்கே உரிய சாபம் போலும்.

திருவனந்தபுரத்துக்குச் சென்று புதுமைப்பித்தனைக் காண வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ரகுநாதன், அவரது மரண செய்தியைத்தான் அறிகிறார். மறக்க இயலாத மற்றுமொரு நற்றமிழ் ஆளுமை புதுமைப்பித்தன்.

பள்ளிகளிலும், கல்லூரிகள் பாடப் புத்தகங்களிலும் அவரது கதைகள் இடம்பெற்றுள்ளபோதிலும் அவரது வீச்சு கல்வி தளத்தில் இன்னமும் முழுமையாக உணரப்படவே இல்லை என்று தோன்றுகிறது.

 

நூலின் தகவல்கள் 

 

நூல் : புதுமைப்பித்தன் வரலாறு

ஆசிரியர் :தொ.மு.சி ரகுநாதன்

வெளியீடு : மின்னூல்

பக்கங்கள் :291

 

நூலறிமுகம் எழுதியவர் 

சரவணன் சுப்ரமணியன் 

மதுராந்தகம்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *