புயலுக்குப் பின் : நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : புயலுக்குப் பின்
எழுத்தாளர்: கி. அமுதா செல்வி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
மின்னஞ்சல் முகவரி: [email protected]
தொடர்புக்கு: 8778073949
தோழர் கி. அமுதா செல்வியின் சிறார் நாவல் ஆகும். “பசி கொண்ட இரவு” என்ற தலைப்பில் பெண்ணியப் பார்வையில் சமூகவியல் சார்ந்த சிறுகதைத் தொகுப்பினை எழுதியிருந்த தோழர் மீண்டும் குழந்தைகளுக்கான ஒரு படைப்பைத் தந்துள்ளார்.
எனது நூலக வாசிப்பின் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வயதில் தமிழ்வாணன் அவர்களின் கத்தரிக்காய் கண்டுபிடித்தான் படக்கதையில் தான் தொடங்கியது. பின்னர் சிறிது காலம் வாண்டுமாமா புத்தகங்களைத் தான் விரும்பிப்படித்தேன்.
அம்புலிமாமா, ரத்னபாலா இதழ்களுக்குப் பின் கோகுலம் கதிர், சுட்டி விகடன் போன்ற இதழ்களே சிறுவர்களுக்கான இதழ்களாக இருந்தன. பின்னர் நாளிதழ்களே சிறுவர் மலர், சிறுவர் மணி என்று வாரந்தோறும் ஒரு இணைப்பைத் தந்தன. சிறுவர் இலக்கியங்களுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டிருந்த போதும் தமிழில் சிறுவர் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் மிகவும் அரிதாகவே காணப்பட்டனர் எனலாம்.
இந்த நூல் சிறுவர்களுக்கான ஒரு குறுநாவலாக வந்துள்ளது. இந்தக் கதையின் முதல் அத்தியாயம் நதியாவின் சூழலியல் பார்வையிலிருந்து தொடங்கி தாரணியின் வீட்டில் வெளிப்படும் சாதியப் பாகுபாட்டில் முடிகிறது. நகரத்திலிருந்து தாரணியின் வீட்டிற்கு வரும் மாறன் என்பவரை அழைத்து வரும் வழியிலேயே கதையின் முடிச்சு விவரிக்கப்பட்டு விடுகிறது.
இரண்டாவது அத்தியாயத்தில் மாறனுடனான கள ஆய்வுப்பணியில் குழந்தைகள் தங்கள் ஊர்ப்பெருமையைக் கூறிக்கொண்டே ஊரின் பிரச்சனையின் தற்போதைய நிலையையும் விவரித்து விடுகிறார்கள்.
மூன்றாவது அத்தியாயத்தில் மாணவர்களைப் “பறவை நடை” அழைத்துச் சென்று சூழலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கும் மெர்லின் டீச்சர், பறவைகளின் மேல் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருக்கும் நதியா, ஓரளவிற்காவது சூழலியல் மேல் அக்கறையைக் கொண்டிருக்கும் மற்ற மாணவர்களின் நகைச்சுவை கலந்த உரையாடல்கள் வழியாக மனிதர்களுக்கும் அவர்களைச் சுற்றி வாழும் உயிர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை மிக அழகாக விவரித்துச் செல்கிறது கதை.
நான்காவது அத்தியாயத்தில் கதைக்குள் ஒரு அழகான புனைவு இணைகிறது. மருதமரத்தின் அடியில் குழந்தைகள் போடும் கூட்டத்தில் பேசும் மீன் இணையும் இடத்தில் குழந்தை இலக்கியத்திற்கான புனைவு சேர்ந்து கொள்கிறது.
ஐந்தாவது அத்தியாயமானது, ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் பிரச்சனையைக் கூட தன்னிச்சையாக சரிசெய்ய முடியாத உள்ளாட்சிகளின் அதிகாரம் மற்றும் அரசியல் குறித்த நிலையைத் தெளிவாக விவரிக்கிறது. குழந்தைகள் தாங்களாகவே தாங்கள் சார்ந்துள்ள பள்ளி, ஊர் மற்றும் இயற்கை உலகின் சூழலியல் சார்ந்த பிரச்சனையைத் தன்னெழுச்சியாக அறம் சார்ந்த ஒரு பட்டினிப் போராட்டமாக மாற்றும் சூழல் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது அத்தியாயம் குழந்தைகளின் பட்டினிப் போராட்டத்தின் வீர்யத்தையும் குழந்தைகளிடம் ஏற்படும் உணர்வு ஊர் மக்களிடம் பரவுவதையும் விவரிக்கிறது. ஊர் மக்கள் தங்களுக்கானதை தாங்களே தங்கள் சுயமுயற்சியால் செய்து கொள்ள தங்கள் தயக்கத்தை உடைத்துக் கொண்டு வரும் இடத்தில் கதை சுபமாக முடிகிறது.
இக்கதையில் பெரிய வில்லத்தனம் எதையும் சினிமா பாணியில் கொண்டு வரவில்லை. ஊர்த்தலைவர், நதியாவின் அப்பா, அம்மா, மகளிர் சுய உதவிக்குழுக்கள், மெர்லின் டீச்சர், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தனிக்கொடி ஆகியோர் நேர்மறையான பாத்திரங்களாக இருப்பதால் கதை பெருஞ்சிக்கல்கள் ஏதும் இல்லாமல் நிறைவடைகிறது.
இரண்டே இரண்டு இடங்களில் காணப்படும் பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். முதல் அத்தியாயத்தின் முடிவில் வரும் ஒரு வரியில் சிவக்குமார் மகா புத்திசாலி தான் என்று தாரணியின் அம்மா நினைத்துக் கொள்வதாக வருகிறது. அது சிவக்குமார் மக புத்திசாலி தான் என்பதாக இருந்திருக்க வேண்டும். இரண்டாவது அத்தியாயத்தில் மாறனிடம் முத்து காண்பிப்பதாக உள்ள வரைபடம் எங்க ஊராட்சி ஒன்றியத்தின் வரைபடம் என்பதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கே ஊராட்சியின் வரைபடம் என்றிருந்திருக்கலாம்.
ஒரு படைப்பாளியின் படைப்பில் இது போன்ற ஓரிரு சிறிய பிழைகள் ஏற்படுவதை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கத் தேவையில்லை.
இது சிறுவர் இலக்கிய உலகில் குழந்தைகளாலும் அறம் சார்ந்த போராட்டங்களால் பெரிய பிரச்சனைகளை வெல்ல இயலும் என்பதான ஒரு நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் விதைக்கும் என கனவு காணலாம்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் பணியாற்றிய மகாலெட்சுமி என்ற ஆசிரியையோடு இணைந்து அவரிடம் பயின்ற குழந்தைகள் சில போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்தாளர் கி. அமுதா செல்வி தான் கூட தான் பணிபுரிந்த திருவாரூர் மாவட்டம், மருதவனம், அரசு உயர்நிலைப் பள்ளியின் அருகேயிருந்த ஒரு குளத்தில் வெங்காயத்தாமரை, காட்டாமணக்குச் செடிகள் அழுகி நாற்றமெடுத்த நிலைியல் நதியா என்ற மாணவி மூலமாக ஒரு அமைதிப் புரட்சிக்குக் காரணமாக இருந்தவர் தான். அந்தக் கதையின் மாறுபட்ட வடிவமே இந்த “புயலுக்குப் பின்” என்ற சிறுவர் குறு நாவல். தோழரின் படைப்புலகம் இன்னும் விரிவடையட்டும். வாழ்த்துகள்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
நா. ரெ. மகாலிங்கம்
விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
புக் டே வலைத்தளத்தில் வரக்கூடிய நூல் அறிமுகம் அனைத்துமே அருமை. அறிமுகஞ்செய்யப்பட்ட நூல்கள் யாவற்றையும் வாங்க தூண்டுகிறது. இனி வருங் காலங்களில் சிறார் இலக்கியமே மிக அவசியம் எனப்படுகிறது. அந்த வகையில் புயலுக்குப் பின் எனும் இந்நூல் முக்கியமாயிற்று. அவசியம் வாங்க வேண்டிய நூல்..நன்றி.