புயலுக்குப்பின் (Puyalukku Pin) – நூல் அறிமுகம்
பாரதி புத்தகாலயம் எண்ணற்ற சிறார் நூல்களை வெளியிட்டு சிறுவர்களுக்கான இலக்கிய மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
“புயலுக்குப் பின்” அற்புதமான ஒரு சிறார் நாவல். எழுதியவர் கி. அமுதா செல்வி. இவர் ஏற்கனவே” பசி கொண்ட இரவு” என்னும் சிறுகதை தொகுதியின் மூலம் எழுத்து உலகிற்கு அறிமுகமானவர்.
இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கும் புயலுக்குப் பின் சிறார் நாவல் பெரியவர்களும் படித்து பயன்பெற வேண்டிய சூழ்நிலை பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருக்கிறது.
மருதவனம் என்பது ஒரு கிராமம். 38 ஏரிகள் சூழ்ந்துள்ளன. இந்த ஏரி பாசனத்தை நம்பித்தான் நெற்பயிர் உழவே அங்கு நடக்கிறது.
மகிழ்ச்சியாக வாழும் மக்கள் கொண்ட அந்த கிராமத்தில் திடீரென உருவாகும் சில தொழில் வளர்ச்சியின் காரணமாக குளம் பாழ்பட்டு போகிறது. சகிக்க முடியாத துர்நாற்றமும் வீசுகிறது. அப்படியான ஒரு குளத்தின் பக்கம் ஒரு பள்ளிக்கூடமும் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் இந்த நாற்றத்தை சகிக்க முடியாமல் திணறுகிறார்கள். இதை பெற்றோர்களும் கவனித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள்.
அப்பொழுது மாறன் என்னும் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வு தன்னார்வலர் அந்த கிராமத்திற்காக ஆய்வுக்கு வருகிறார்.
அவருக்கு துணையாக பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளும் பங்கேற்கிறார்கள்.
அந்த கிராம முழுக்க சுற்றி வரும் சுற்றுச்சூழல் தன்னார்வலர் மாறன் அவர்கள் மாணவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்.
குளத்தில் நாற்றம் வர என்ன காரணம்? குளத்தில் வாழும் மீன்கள் ஏன் செத்து விடுகிறத?அருகில் உள்ள கோழிப்பண்ணையின் கழிவுகள் ஏன் இங்கு கொட்டப்படுகிறது? கிராம மக்களின் செயல்பாடுகள் ஏன் ஒன்றும் இல்லாமல் இருக்கிறது? என்பதை குறித்தெல்லாம் மாணவர்களும் மாறனும் நடத்துகிற விவாதங்கள் மிக அருமையானவை.
பறவைகளின் வலசை போதல் பற்றி மிக அற்புதமாக ஒரு விவாதமாக இங்கு வைக்கப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பறவைகள், தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பறவைகள், குஞ்சு பொரித்து தங்கள் கூட்டத்துடன் செல்லும் பெரிய பறவைகள், எங்குமே அமராமல் பல கிலோமீட்டருக்கு பயணம் செய்து வரக்கூடிய பறவைகள் என்றெல்லாம் இந்த புத்தகத்தில் நாவல் வழியாகவே அருமையாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
நாவல் முழுவதும் ஆசிரியர் மாணவ பாத்திரங்களை மிக எளிமையாக கையாண்டு இருக்கிறார். மாணவர்கள் பேசும் மொழியிலேயே கதையை நகர்த்துகிறார். இயல்பாக படிப்படியாக குழந்தைகள் அடையும் மன வளர்ச்சி சூழலியல் அறிவு குறித்து திறம்பட விவரிக்கப்படுகின்றன.
குளத்தை பாதுகாக்க மாணவர்கள் எடுக்கும் பல முயற்சிகள் தோல்வி அடையவே கடைசியில் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது பெற்றோர்களுக்கும் தெரிந்து அவர்களும் இந்த உண்ணாவிரத்தில் கலந்து கொள்கிறார்கள். மீண்டும் ஒரு காந்திய புரட்சி நடந்தேறுகிறது. அரசே நேரடியாக குளத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது என்கிற வாக்குறுதிக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இருக்கிறார்கள்.
பல்வேறு சூழலியல் கருத்துக்கள் பல்வேறு பறவை இனங்கள் பற்றிய கருத்துக்கள் இதில் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் இந்த நாவலை படித்து பல்வேறு அரிய தகவல்களை மனதில் தக்க வைத்துக் கொள்ளலாம். மிகச் சிறப்பான நாவல்.
கமலாலயன் அவர்களுடைய முன்னுரை மிகச் சிறப்பு.
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர்: புயலுக்குப் பின்
நூல் ஆசிரியர்: கி. அமுதா செல்வி
வகைமை : சிறார் நாவல்
பதிப்பகம்: பாரதி புத்தக ஆலயம்
விலை : ரூ 50/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

