நிர்வாக மேலாண்மை குறித்த ஒரு கட்டுரையில் ‘பிக்மாலியன் விளைவு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. அது என்னவென்று இணையத்தில் தேடியதில் கிடைத்ததையும் புத்தகங்களில் படித்ததையும் தொகுத்துள்ளேன்.
இந்தக் கோட்பாட்டின்படி நமக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தால் நம்முடைய சாதனைகள் மேம்பட்டதாக இருக்குமாம். எடுத்துக்காட்டாக குழந்தைகளிடம் ‘நீங்கள் நன்றாகப் படிக்கிறீர்கள்; நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவீர்கள்’ என்று ஆசிரியர் கூறுவதால் அந்தக் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்களாம். உளவியலாளர் ராபர்ட் ரோசன்தால் அவர்களின் பெயராலும் இது ‘ரோசன்தால் விளைவு’ என்றழைக்கப்படுகிறது..
சரி ஏன் ‘பிக்மாலியன் விளைவு’ என்று கூறப்படுகிறது? கிரேக்க புராணத்தின் படி பிக்மாலியன் என்ற சிற்பி தன்னுடைய நகரத்தில் சில பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதைக் கண்டு ஒட்டு மொத்த பெண்கள் மீதும் வெறுப்பு கொள்கிறான். திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கிறான். ஆனால் ஒரு பெண் சிலையை செய்கிறான். அது மிக அழகாக இருக்கிறது. அதன் மீது காதல் கொள்கிறான். அதை முத்தமிடுகிறான். தழுவிக் கொள்கிறான். பரிசுகள் தருகிறான். ஒரு பெரிய படுக்கையும் அமைக்கிறான். காதல் தேவதை விழாவன்று அந்த தேவதைக்கு காணிக்கைகள் செலுத்தி தன்னுடைய காதலை நேரடியாக சொல்லாமல் தன் சிலையைப் போன்ற பெண் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.
வீட்டிற்கு வந்து வழக்கம் போல் சிலையை முத்தமிடுகிறான். ஆச்சரியப்படும் விதமாக அது உயிர்ப்புள்ள உதடாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிலை உயிர் பெறுகிறது. அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானாம். அதாவது தன்னுடைய சிலை போன்ற பெண் வேண்டுமென்ற அவனது எதிர்பார்ப்பு மெய்யாகிவிடுகிறது.
இந்தக் கதையை பின்பற்றி பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளனவாம். ஷேக்ஸ்பியரின் ‘குளிர்காலக் கதை’(the winter’s tale)யில் ராணி ஹெர்மியோனின் சிலை உயிர் பெறுவதாக சித்தரிக்கப்படுகிறதாம். ஆனால் உண்மையில் அது சிலை இல்லை; ராணியேதானாம். மூட நம்பிக்கைகளை அறிவியல்பூர்வமாக விளக்குவதற்கு ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகத்திலும் ஒரு நிகழ்வை காணலாம். பெர்னால் காடுகள் நகர்ந்து வந்தாலொழிய மேகபத்திற்கு இறப்பு இல்லை என்றும் மேலும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எவராலும் மேக்பத்திற்கு இறப்பு நிகழாது என்றும் கூறப்படும்.
இறுதிக் காட்சியில் மேக்பத்தின் எதிரியும் அவனால் கொலை செய்யப்பட அரசனின் மகனானுமான மேக்டப் தனது வீரர்களுடன் பெர்னால் காடுகளில் மரக்கிளைகளை வெட்டி தங்களை மறைத்துக் கொண்டு மேக்பத்தின் கோட்டையை நோக்கி நகர்ந்து வருவார்கள்.
கோட்டையிலிருந்து பார்க்கும் மேக்பத்திற்கு அது பெர்னால் காடுகள் நகர்ந்து வருவது போல் தோன்றும். அது அவனுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தும். பிறகு மேக்டப்புடன் போரிடும்போது ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எவராலும் தன்னைக் கொல்ல முடியாது என்பான். அதற்கு மேக்டப் தான் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை என்றும் வயிற்றிலிருந்து கிழித்து எடுத்தார்கள் என்றும் கூறுவான்.
விமர்சனப் பார்வையில் நாடகங்களை எழுதிய பெர்னார்ட் ஷா தன்னுடைய ‘பிக்மாலியன்’ நாடகத்தில் மொழியியல் பேராசிரியர் ஒருவர் பூ விற்கும் அடித்தட்டு பெண்ணுக்கு மேல்வகுப்பு ஆங்கில உச்சரிப்பு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கற்பித்து அவளை வேறு ஒரு பெண்ணாக மாற்றுவதாக காட்டியிருக்கிறாராம். இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பிரபல திரைப்படம் ‘My Fair Lady’ எடுக்கப்பட்டுள்ளதாம்.
சாமர் செட் மாமின் ‘Of Human Bondage’ என்கிற புதினத்தில் கால் ஊனமான சிறுவன் பிலிப்சிடம் பாதிரியாரான அவனது சித்தப்பா தினமும் கடவுளிடம் பிரார்த்தித்தால் ஊனம் சரியாகிவிடும் என்கிறார். நம்பிக்கை வைத்தால் மலையையும் நகர்த்தலாம் என்கிற பைபிள் மேற்கோளை கூறுவார். அவனும் தினமும் பிரார்த்திப்பான். ஆனால் ஒன்றும் நடக்காது. தமிழ்ச்செல்வனின் ‘பதிமூணில் ஒண்ணு’ சிறுகதையில் கிராமத்து சிறுவன் ஒருவன் ஆங்கிலத்தில் பெயிலாகிவிடுவான். பாஸ் செய்வதற்காக பிள்ளையாரிடம் வேண்டுவான். பிறகு ஆங்கிலப் பாடத்திற்கு பிள்ளையாரிடம் வேண்டக்கூடாது; கிறித்துவக் கடவுளிடம் தான் வேண்ட வேண்டும் என்று முடிவு செய்வான்.
ஒரு சாதனையை செய்வதற்கு அதில் ஆழ்ந்த ஈடுபாடு வேண்டும் என்பதற்கும் தெய்வீக சக்திகள் அதை முடித்து தந்துவிடும் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்’
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.