Bodh-Gaya, 11 November, 2013

எண்ணும்  எழுத்தும்  கண்ணெணத்தகும்  எனும் கூற்று தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடைதாகும்,அதுபோல,கல்வியும்- மருத்துவமும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது ஜனநாயகத்தின் இரு கண்களாய்  அமைந்து  சமூகத்திற்கு அழகு ஊட்டக்கூடியதாகும்.

கல்வியையும் மருத்துவத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நாடுகள் யாவும், அது சோசலிசத்தை குறிக்கோளாகக் கொண்டுள்ள தேசங்களாக இருந்தாலும் சரி, அல்லது தாராளவாதத்தை குறிக்கோளாகக்கொண்ட நாடுகளாக இருந்தாலும் சரி, நிச்சயமாக அது,மனிதவளத்திலும் ஆரோக்கியத்திலும் மேம்பட்ட நாடாக விளங்கும்.

கல்வி என்பது எப்படி ஜனநாயகத்தினை வளர்த்தெடுக்க ஊன்றுகோலாக இருக்கிறதோ அதுபோல மருத்துவமும் நாட்டின் மனித வளத்திற்கு- ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடுவதாகும்.

வளர்ந்த நாடுகள் பலவும் ஒவ்வொரு ஆண்டும்  கல்விக்கும் மருத்துவத்திற்கும் என பட்ஜெட்டில் 6% சதவிகிதத்திற்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்து தனது அடித்தளக் கட்டமைப்பை திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறது.இதன் மூலம்,அங்குள்ள மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ கல்வி அளிக்கப்படுகிறது.அதே போல குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக பொதுமக்களுக்கு மருத்துவ வசதியும் அளிக்கப்படுகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு போட்டியும்-லாபமும் இரு கண்களாகும்.கல்வியிலும் மருத்துவத்திலும் தனியாரை அனுமதிக்குபோது  ஏற்கனவே செயல்பட்டுவந்த  மக்கள் நலனை அடிப்படையாகக்கொண்ட முறையை தலைகீழாக்கி,ஜனநாயத்திற்கும்- மனித வளத்திற்கும்- ஆரோக்கிய வாழ்வுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக அமைந்துவிடுகிறது.

கடந்த நாற்பது வருடங்களில் கார்ப்பரேட்டுகளால், கொள்ளைபோன நாட்டின் மூல வளங்களை(நிலக்கரி,இரும்பு,பெட்ரோல்) : கார்ப்பரேட்டுகள் அடைந்த லாபம் : வெகுமக்களுக்கு செய்துவருகிற பாதகச்செயல்களை(சுற்றுச்சூழல் கேடு) :எண்ணிப்பார்த்தால் கண்கள் இருண்டு மயக்கமே வந்துவிடும்..

மக்களுக்கு ஜனநாயகம் –  மனிதவளம் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கு உத்திரவாதமளிக்க கார்ப்பரேட்டுகளால் முடியாது என்பதனை மக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும். .

கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் போது,அவற்றிற்கான செலவானது  வாழ்வாதாரமற்ற  எளிய மக்களுக்கு கூடுதல் சுமையாகிவிடுகிறது.. இதன் விளைவு,உயர்கல்வி பயில வங்கிகளில் கடன்  மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதற்கு–இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு  என நாட வேண்டியிருக்கிறது. கடன் வட்டிவிகிதமும் இன்சூரன்ஸுக்கான  விதிகள் மற்றும் நிபந்தனைகள் காலத்திற்கேற்றவாறு உயர்ந்துகொண்டே இருப்பதால் மக்கள் சில நேரங்களில் வட்டி / காப்பீடுத்தொகை கட்டுவதற்கு  நிலை தடுமாற வேண்டியிருக்கும்.

Daily Current Affairs 2020 Govt launches Information Platform to ...

அரசு தன் கட்டுப்பாட்டிலுள்ள சேவை மற்றும் உற்பத்தி சார் துறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திடும் போது,அது,சங்கிலி தொடர்போலான கார்ப்பரேட்டுகளின் பெருக்கத்திற்கே வழிவகுக்கும்.இத்தகைய பெருக்கமானது  மக்களை சக்கையாகப்பிழிந்து  லாபத்தை அதிகரிக்கவும்–மக்களின் மீது அதிகாரத்தைச்செலுத்துவதற்கும் வாய்ப்பாகிவிடும்.

கார்ப்பரேட்டுகள் ஈட்டும் லாபம் மற்றும் இந் நிறுவனங்கள் சேவை எனும் பெயரில் மக்கள் மீது செலுத்தும் அதிகாரமும் பெருகிப் பரவலாகிடும் வேளையில், படிப்படியாக அரசு நிர்வாக நடைமுறைகளையும் தங்களது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துவிடுகிறது.

135 கோடிக்குமேலாக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்,  ஒருபக்கம்,கல்வி – மருத்துவமானது தனியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.மற்றொரு பக்கம், ஒவ்வொரு ஆண்டின் பஜெட்டில் இவற்றிற்கென ஒதுக்கப்படும் நிதியின் அளவும் குறைவு.,.

கல்விக்கும் மருத்துவத்திற்கும் முறையான நிதியினை மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கி உள்கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்திக்கொள்ளவில்லையெனில் ஒன்று,எதிர் காலத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்புப்பெறத்தேவையான மனிதவளம் மற்றும் ஆரோக்கியத்தில் கடும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடக்கூடும். இரண்டு, சுற்றுச்சூழல் கேடுகள், இயற்கைப்பேரிடர், வைரஸ் தொற்றுக்காலங்களில் நிலமை எல்லை மீறி  அரசுக்கு கடும் பொருளாதாரச்சுமைகளை உருவாக்கிவிடக்கூடும்.

கார்ப்பரேட்டுகளின் நலன் காக்கும் பொருட்டு, நவதாரளமானது வளர்ந்து வரும் நாடுகளை மக்கள் நலனுக்கான செலவிடப்படும் நிதியில் சிக்கனத்தை கடைபிடிக்கச்சொல்கிறது.பொருளாதார நெருக்கடி காலங்களில் சிக்கனத்தின் பிடி மேலும் இறுகிடுகிறது. இப்படியான சூழலில்,அனைவருக்கும் கல்வி-மருத்துவ வசதி அளிப்பது ஜனநாயகத்திற்கான முதல் துவக்கம் என்பது என்னாகும்?அதுவும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்க  காலத்தில் சாத்தியமாகுமா? வாய்ப்புகள் குறைவுதான்.

கடந்த இருபது வருடங்களில் சீனாவில், சார்ஸ்(2002)  சவுதி அரேபியாவில் மெர்ஸ்(2012) இந்தியாவில்நிபா(2018) சீனாவில் கோவிட்-19 (2019)  மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா(2014-15) ஐந்து வகையான  வைரஸ் தொற்றுக்கள் மேற்கூறிய நாடுகளில் உருவாகி மக்கள் உயிரிழக்க காரணமாகியுள்ளது.

Close-up of a female doctor checking the sick girl with ...

போர் – தீவிரவாதம் – நோய் தொற்று  இம்மூன்றும் உலகளவில் மக்களை த்தொடர்ந்து பாதித்துக்கொண்டே இருக்கின்றன. இம்மூன்றிற்குப்பின்னே இராணுவ பலம்-பொருளாதார பலத்தை வைத்துக்கொண்டு பிற நாடுகளை அடக்கியாள முனையும் அரசுகளும்,லாபவெறிகொண்ட கார்ப்பரேட்டுகளும் இருப்பது நிதர்சன உண்மை. இதனால் ஏற்படும் உயிர்ப்பலி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எளிய மக்களே அதிகம் இரையாகின்றனர்.

கடந்த காலங்களில் உலகளவில்  மக்களை பெருமளவில் கொன்றழித்த,பெரிய அம்மை நோய், தொழுநோய்,இளம்பிள்ளைவாதம் அல்லது போலியோ நோய்கள் தற்போது  கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அது போல,மக்களை பாதித்துவரும் டெங்கு, நெஞ்சகநோய் புற்றுநோய்,சர்க்கரை  உள்ளிட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டுவர ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களை முன்னிலைப்படுத்துகிற ,மக்கள் நலனில் அக்கறை கொண்ட   எந்த அரசும்,பல்வகை மருத்துவ முறைகளுக்கும் முன்னுரிமை தருவதே சிறந்ததாக அமையும்.லாபத்திற்கான மருத்துவ முறைக்கு மட்டும்  முன்னுரிமை அளிப்பதில் அல்ல..

ஆங்கிலத்தில் HEALTH IS WEALTH  என கூறுவதுண்டு..உழைக்கும் மக்களுக்கு ஆரோக்கியம் தாம் செல்வமாக இருக்கிறது.ஆனால் கார்ப்பரேட்டுகளோ செல்வம் இருந்தால்தான் (WEALTH IS HEALTH ) ஆரோக்கியம் என நினைக்கின்றனர்.

உலகளவில்,இராணுவ பலமிக்க,பொருளாதார வளம் மிக்க வளர்ந்த நாடுகளைக்கூட இவ்வைரஸ் தொற்று விட்டுவைக்கவில்லை.அதுபோல ஏழை-பணக்காரர் எனும் பேதமும் பார்க்கவில்லை.வைரஸ் தொற்றையொட்டி எழுகின்ற கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் பிரார்த்தனை  –  பதற்றத்தில் பின்பற்றும் நிரூபணம் ஆகாத வைத்திய முறைகள்  ஆகியன மனதிற்கும்-உடலுக்கும் கேடு விளைவிக்கக்கூடியதாகும். நாடும் – மக்களும்  வளமுடனும்-நலமுடனும் வாழ அனைவருக்கும்  இலவசமாக தரமான மருத்துவம் வேண்டி உறுதிகொள்வது  இத்தருணத்தில் அவசியம்.

நன்றி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *