துரித வணிகம் (Q – Commerce) விளக்கம்
துரித வணிகம் என்பது தற்போது நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் ஒரு தனித்துவமான விற்பனை முறையாகும். இந்த துரித வணிக முறையின் மூலம் மக்கள் தங்களது வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தி வரும் அத்தியாவசிய பொருட்களை 10 முதல் 30 நிமிடங்களுக்கு உள்ளாக பெற்றுவிடமுடியும். பொருளாதார தேவைகளுக்காகவும் சமூகத்தில் தங்களது சுயகௌரவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் இன்றைய கால மக்களிடத்தில் துரித வணிக நிறுவனங்கள் மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று பொருட்களை வழங்குவதன் மூலம் சிறந்த மற்றும் துல்லியமான சேவைகளை மக்களுக்கு வழங்கி அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வகையான விற்பனை மூலம் 2 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் நுகர்வோர் தங்களின் வாழ்வில் தினமும் பயன்படுத்தும் மருந்துகள் மலிகைப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் ஆகியனவற்றை எளிதாக பெற்றுவிட முடிகின்றது. மேலும்
இவ்வகையான விற்பனையின் மூலம் நுகர்வோர்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து கொண்டே தங்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த நேரத்தில் பெற்றுவிட முடிகிறது. இதன்மூலம் துரித வணிக விற்பனை நிறுவனங்கள் மக்களுக்கு மிகப்பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும் இந்த சேவையை வழங்குவதற்காக சிறிய வகை பண்டக சாலைகளை நுகர்வோரின் இருப்பிடங்களுக்கு அருகாமையில் அமைத்து அதன்மூலம் மக்களுக்கு சிறப்பான சேவையை துரித வணிக விற்பனையகங்கள் வழங்கி வருகின்றன. எனவேதான் இச்செயல்முறை சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நோக்கம்
இவ்வகையான வணிக விற்பனையில் விற்பனையகங்கள் குறைந்த அளவு மற்றும் மிகவும் முக்கியமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றன. அதுமட்டும் அல்லாமல் தற்போது நுகர்வோரின் கட்டளைகளை அல்லது பணித்தல்களை (Order) பதிவு செய்வதற்கு பிரத்யேகமான செயலியையும் உருவாக்கியுள்ளன. இத்தகைய செயலிகள் மூலம் நுகர்வோர் தங்களின் பணித்தல்களை சொடுக்கிய அடுத்த 30 நிமிடங்களில் தாங்கள் வேண்டிய பொருட்கள் அவர்களின் இருப்பிடம் தேடி வந்து சேர்கிறது. மேலும் இச்சேவையின் துரிதத் தன்மையை உறுதி செய்வதற்கும் பொருட்களை விநியோகிப்பதற்கும் Blinicit, Zepto, Swiggy, Instamart மற்றும் Big Basket Now போன்ற நிறுவனங்களோடு ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன.

நன்மை மற்றும் தீமைகள்
இந்த துரித வணிக விற்பனை மூலம் பெரும் நன்மைகளை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் என இருவரும் பெருகின்றனர். குறிப்பாக நுகர்வோருக்கு நேரம் அதிகமாக சேமிக்கப்படுகிறது. அவசரத் தேவையான பொருட்களை உடனடியாக பெற்றுவிட முடிகின்றது. எண்ணிம (Digital) முறையில் பணப் பரிமாற்றம் நடைபெறுவதால் வணிக நடவடிக்கைகள் எளிமையாகவும் இயல்பாகவும் முடிவடைகிறது.
இதில் பணஇழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாதநிலை உருவாகுகிறது. மேலும் உள்ளுர் (Local) வேலைவாய்ப்புகளை இவ்வகையான வணிகமுறை மேம்படுத்துகிறது.
நன்மைகள் பலவற்றை பெற்றிருந்தாலும் சில நடைமுறைச் சிக்கல்களையும் இத்துரித வணிக விற்பனைமுறை சந்திக்க வேண்டியுள்ளது என்பதையும் மறுக்க முடிவதில்லை. குறிப்பாக இத்தகைய விற்பனை நடைபெறுவதற்கான செயல்பாட்டுச் செலவு (Operational Cost) என்பது மிகவும் அதிகமாக இருப்பதால் சிறு விற்பனையாளர்கள் இம்முறை வணிகத்தை செயல்படுத்துவதில் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இதனால் பெரும் விற்பனையாளர்கள் மட்டுமே இத்தகைய நடைமுறையினை செயல்படுத்த முடிகின்றது. காரணம் இச்செயல்பாட்டு செலவு முறையில் விற்பனையாளர்களுக்குக் கிடைக்கும் லாபம் என்பது குறைவானது எனலாம். மேலும் பொருட்களை உடனடியாக விநியோகம் செய்யவேண்டும் என்ற அழுத்தம் விற்பனையாளர்களிடம் இருப்பது மிகமுக்கியமான குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.
மின் வணிகம் (E–Commerce) மற்றும் துரித வணிகம் (Q – Commerce) – வேறுபாடு
தற்போது வழக்கத்தில் உள்ள மின் வணிக (E–Commerce) முறையில் இருந்து துரித வணிக (Q – Commerce) முறையானது எவ்வகையில் வேறுபடுகிறது என்றால் மின் வணிக முறையில் பணித்தல் (Order) செய்யும் பொருட்களை விநியோகம் செய்வதற்கு 1 முதல் 3 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் துரித வணிக முறையில் குறைந்தது 10 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. மின் வணிக முறையில் அதிகமான பொருட்களை நுகர்வோர்க்கு வழங்க முடிகின்றது.
காரணம் கால அளவு நீட்டிப்பு என்பது அதற்கு உதவியாக அமைகின்றது எனலாம். ஆனால் துரித வணிக முறையில் குறைந்த அல்லது முக்கியமான பொருட்களை மட்டுமே நுகர்வோருக்கு வழங்க முடிகின்றது. காரணம் கால அளவு என்பது மிகவும் குறைவு என்பதால். மின் வணிக முறையில் நுகர்வோரின் பணித்தல்கள் முன்கூட்டியே விற்பனையாளருக்கு தெரிவிக்கப்படுவதால் அதனை விநியோகம் செய்வதற்கான போதுமான காலம் வழங்கப்படுகிறது. ஆனால் துரித வணிக முறையில் குறைந்த காலம் மட்டுமே வழங்கப்படுகிறது. மின் வணிக முறையில் பொருட்களை வழங்குவதற்கு மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு வசதிகள் நிறைய நகரங்களில் உண்டு. ஆனால் துரித வணிக முறையில் அவ்வாறு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.
மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் துரித வணிகமுறை விற்பனையானது நகர்புற மக்களின் உடனடித் தேவைகளை வழங்குவதன் மூலம் சில்லறை வணிகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதுமிகையல்ல. மேலும் நுகர்வோரின் காலம் மற்றும் தேவைக்கு ஏற்ப மாற்றம் இவ்வகையான வணிகமுறையில் உள்ளதால் இன்று நகர்புறங்களில் மிகவேகமாக வளர்ந்து வருவதற்கான மற்றுமொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் காரணிகளில் ஒன்றான இவ்வகையான துரித வணிக விற்பனை முறைகளை வரவேற்பதும் வளர்த்தெடுப்பதும் நம்மைப் போன்ற நுகர்வோர்களின் தலையாய கடமையாகும்.
📚 எழுதியவர்:
உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை,
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி
போடிநாயக்கனூர் – 625582
தமிழ்நாடு
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


தங்களின் கட்டுரை மூலம் துரித வணிகம் பற்றி நல்ல அறிமுகம் ஐயா….
மிக்க நன்றி