நிறத்தால்
குயிலும் காக்கையும்
ஒன்றுதான்!
குரலால்
ஒன்றுபடுவதில்லை!
குயிலின் குரல்
இனிமையென்கிறோம்;
காக்கையின் குரலைக்
கரைச்சல் என்கிறோம்;
அதனதன்
மொழி அறிந்ததைப்போல!
இரண்டும்
பறவைதான்!
காகம்
மிகவும் நெருக்கமான பறவை….
மனிதருக்கு!
நம் வீட்டு மரங்களில்
கூடு கட்டுவதும்
விருந்தினர் வருகையை
அறிவிப்பதும்;
மறைந்துவிட்ட
முன்னோர்கள் காகமாகக்
கற்பனைக் கொள்வதும்….
கைகளில்
உணவு வைத்துப்
பழகி அழைத்தால்
பாசமுடன் வருவதும்!
காகத்தைப்போல
எளிமையாக
எல்லோராலும்
அதன் குரல் எழுப்புவதும்….
தன்னையழைக்கும்
அழைப்பை உணர்ந்து
பறந்து வந்து
பாசம் காட்டுவதும்….
காலையில் கரைந்து எழுப்புவதும்;
காகம் தவிர
வேறெந்தப் பறவை?
குயிலை
கூப்பிட்டுப் பாருங்கள்
முதலில்….
அதன் குரலில்!
குரலும் வராது….
குயிலும் வராது!
காகம்
அப்படியென்ன
கெடுதல் செய்தது?
குயில் கொட்டிக் கொடுத்துவிட்டது?
முள்ளோ…. சுள்ளியோ…
காக்கை
தனக்கான மாளிகையை
தானே கட்டிக்கொள்ளும்!
அதற்குத் தெரிந்த வழியில்.
காக்கையின் கூட்டில்
குயில் முட்டையிடுவதால்
பிடிக்கிறது….
அப்படியான
மனநிலை உலகம்!
குயிலை
கொண்டாடலாம்…
காகத்தை வெறுக்காதீர்கள்.
காகமும் பறவைதான்…
குயிலும் பறவைதான்!
பறவைகளை
பறவைகளாகப் பார்க்கப்
பழகிக் கொள்ளுங்கள்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.