R Balakrishnan IAS in Sindhuveli Panpaattin Dravida Adithalam Book Review By Prapanchan. Book day website is Branch of Bharathi Puthakalayam.

சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே – எழுத்தாளர் பிரபஞ்சன்



சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
ஆர்.பாலகிருஷ்ணன் 
பக்கம் : 174
விலை : ரூ.150
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை-18; 044- 2433 2424.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sindhuveli-panpattin-thiravida-adithalam-9981/

சிந்துவெளிப் பண்பாட்டின் அடித்தளம், திராவிடப் (Dravida) பண்பாடு என்பதன் கொடை, என்பதை மீண்டும் நம் காலத்து ஆய்வறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் மிகுந்த ஆதார பலத்துடன் நிறுவிப் புத்தகம் வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு: ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’. இந்நூலைப் பற்றி ஐராவதம் மகாதேவன் ‘சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி வெளியாகியுள்ள தமிழ் நூல்களிலேயே சிறப்புவாய்ந்தது எனச் சிலாகிப்பது மிகச் சரியாகும்.

சிந்துவெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரைக் காணக் கிடைக்கும் திராவிடப் பண்பாட்டைப் பற்றிய ஆய்வே, இந்த நூல். வட இந்திய மாநிலங்களிலும், வடமேற்குப் பிரதேசங்களிலும் திராவிடப் பண்பாடு நிலைபெற்றிருக்கும் விதத்தை ஆராய்கிறார் ஆய்வாளர் பாலகிருஷ்ணன். அவருடைய முக்கியமான தரவு, இடப்பெயர் ஆய்வு முடிவாகும். மனிதர் வாழும் இடப்பெயர்கள் மிகவும் தொன்மையானவை. நாகரிகம் தோன்றும் முன்னமே இடப்பெயர்கள் தோன்றிவிட்டன. மொழியாக்கத்தின் தொடக்கநிலையே இடங்களுக்குப் பெயர் சூட்டல்தான். மனிதகுலம், இடப்பெயர்வுக்கு உள்ளாகும்போது, மனிதர்கள் தங்கள் ஊர், இடம், குளம் போன்றவைகளைச் சுமந்துகொண்டே புலம்பெயர்கிறார்கள். சிந்துவெளி மக்கள், (இன்றைய பாகிஸ்தான், வடமேற்கு, ஆப்கானிஸ்தான் போன்றஇடங்களில் இருந்து) குடிபெயர்ந்தபோது, தங்கள் பெயர்ந்த இடங்களின் பெயர்களைப் புகுந்த இடங்களில் வைத்துக்கொண்டார்கள். ஆசிரியரின் ஆய்வின் அடிப்படை இது.

அந்த நாள் 02: சிந்துவெளி சொல்லும் ...

தமிழ்நாட்டில் உள்ள ஆமூர், ஆரணி, கள்ளூர், காலூர், கொற்கை, மானூர், கண்டிகை போன்ற இடப்யெர்வுகள், தற்போது பாகிஸ்தான் எனப்படும் பழைய சிந்துவெளி நிலப் பகுதியில் புழக்கத்தில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஆலூர், ஆசூர், படூர், குந்தா, நாகல், செஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போது ஆப்கானிஸ்தானிலும் பயிலப்படுகின்றன. இந்தப் பகுதியில் பிராகுயி என்கிற திராவிட (Dravida) மொழி இன்னும் பேசப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பேசப்படும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மதிரை போன்ற பெயர்கள் வடமேற்கில் இன்னும் இருக்கின்றன.

சிந்துவெளி நாகரிகம், ஒரு திராவிட (Dravida) நாகரிகம் என்ற கருதுகோளின் அடிப்படையில் – புலம் பெயர்ந்த சிந்துவெளியினர் தங்களது ஊர்ப் பெயர்களான மீள் நிறைவாகக் கொண்டுவந்து, தங்களது புதிய தாயகத்தில் (தென் இந்தியாவில்) பயன்படு்த்தியதும் சங்க இலக்கியத்தில் ஆவணப்பதிவு செய்யப்பட்டது.

திசைகள் பற்றிய சொல்லாக்கத்தில், திராவிட  (Dravida) மொழிகள் மேல் – மேற்கு; கீழ் – கிழக்கு என்ற புவி மைய அணுகுமுறையைக் கையாள்கின்றன. இந்தக் கருத்தியலின் தொடக்க வேர்களைத் தொல்பழங்காலத் திராவிடர்களின் வாழ்விடங்களாகக் கருதப்படும் வடமேற்குப் புலங்களின் (பாகிஸ்தான் மற்றும் ஆப்கன், ஈரான்) காண முடிகிறது.

கோட்டைகள் மேற்கிலும், மக்கள் வாழ் இடங்கள் பள்ளமான, குறைந்த மேட்டு நிலங்களில் அமைந்திருப்பது திராவிடர்க்கும் வடமேற்கு மக்களுக்கும் பொது. மேடான இடப்பகுதி அரண்மனைக்கு அல்லது தலைவன் இருக்கும் இடத்துக்கு. இந்த இருமைப் பண்பு, திராவிடர்கள் – வடமேற்கு மக்களை இணைக்கிறது. கோட்டைப் பகுதி எனப்படும் மேல் நகரம், குடி இருப்புப் பகுதி எனப்படும் கீழ் நகரம் என இருவகை வடிவமைப்பு, சிந்துவெளிப் பண்பாடு. தமிழகக் கோட்டை, மக்கள் ஊர் அங்ஙனமாகவே இருக்கிறது. இவைகள் எதேச்சையாக அமைந்தவை அல்ல. இவைகள் ஆசிரியர் பாலகிருஷ்ணன் கண்டு உணர்ந்த ஆவணங்கள்.

சிந்துவெளி நகரமைப்பின் சமூகப் பின்னணி, முக்கியமான கருகோளாக இருப்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

ஏன் திரையில் நம் வரலாற்றினை பதிவு ...

வாழிடம் என்பது, ‘நிலம்’ மட்டும் அல்ல. அது வாழ்வியல். மற்றும் சமூக உளவியல் சார்ந்த, பலப்பல அகப்புறப் பரிமாணங்கள் கொண்டது. மேல்-மேற்கு- உயர்ந்த மேடை, எல்லாம் ‘மேன்மை’ பொருந்திய அதிகாரப் பகுப்பு. கண்ணகி, மதுரையின் கிழக்கு வாசலில் புகுந்து மேற்கு வாசல் வழியாக – மேற்கு – மேட்டுநிலமான சேர மலை நாடு வெளியேறுகிறாள். புகழ்பெற்ற கடையெழு வள்ளல்கள் எல்லோரும் மலைநாட்டு அதிகாரிகள். தமிழில் மலையைக் குறிக்கும் ‘வரை’ பாகிஸ்தானிலும் அதேப் பொருளில் வழங்குகிறது. கோட்டை என்ற சொல், கட்டமைப்பு, கருத்தியல் சார்ந்தது. அச்சொல், சிந்துவெளி அரப்பா நாகரிகத்தில் இருக்கிறதா என்றால், அதே அர்த்தத்தில் ‘கோட்டா’ என்று வழங்குகிறது.

கோழிகள் பெயரில் தமிழ்நாட்டில்தான் ஒரு தலைநகர் இருக்குமா, என்ன? ‘கோழி’ என்ற பெயரில் சோழர் தலைநகரம் இருந்துள்ளது. அதுவே உறையூர். திருச்சிக்குப் பக்கம் இருக்கிற அந்தச் சின்னஞ்சிறு ஊர்தான். இந்த நகரம் அமைக்கப்பட்ட இடத்தில் சேவலொன்று யானையை எதிர்த்து வீரமுடன் போரிட்டது. கோழியின் வீரத்தைக் கொண்டாட வேண்டாமா? வீரம் உள்ளவர்கள் கோழியாக இருந்தால் என்ன, கோமானாக இருந்தால் என்ன? அந்த மண்ணுக்குக் கோழியூர் என்பதே பெயராயிற்று. சங்கச் சோழர்கள், யானையை எதிர்க்கும் கோழிக்கு மரியாதை செய்யும் வகையாக காசு வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீரச் சேவல் பற்றிய மரபு பல காலம் தமிழர் மனப் பரப்பில் இருந்திருக்கிறது. கோழியூரான உறையூர் பஞ்சவரணேசுவரர் கோயிலில் கோழி சண்டையிடும் புடைப்புச் சிற்பம் காணப்படுவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மொகஞ்சதாரோவில் பொதுவாக நகரைக் குறிப்பதாக கருதப்படும் குறியீட்டுடன், இரண்டு சேவல்கள் அருகருகே இருக்கும் உருவப் பொறிப்புடன் கூடிய முத்திரையொன்று கிடைத்திருக்கிறது. இது அந்நகரின் பெயர் சேவல் நகரம் என்பதைக் குறிப்பதாக சிந்துவெளி ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். கோழிச்சண்டை என்கிற விளையாட்டு மரபு, ‘ஆடுகளம்’ என்கிற திரைப்படமாகவும் வந்துள்ளது என்பதையும் ஆசிரியர் சுட்டுகிறார். தமிழ்நாட்டில், அரசலாபுரம் ஊரில் கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வீரக்கல், ஒரு சண்டைக்கோழிக்காக எழுப்பப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகம் தமிழர் ...

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது சிந்துவெளிப் பண்பாடு. தொடக்கம் முதல் இப்பகுதியில் பண்பாடு திராவிடத்துடையது என்று அறிவுலகம் கூறிக்கொண்டிருந்தது. உறுதியானதும், உலகம் ஒப்புக்கொண்டதுமான இடப்பெயர்ச்சி மற்றும் மேல் – கீழ் வைப்பு முறை ஆய்வுகளில் உலகப்புகழ் பெற்றவர் ஆசியரியர் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட (Dravida) இடப்பெயர்கள் தொடர்ந்து நிலைபெற்றுள்ளன என்ற உண்மையை அறிவியல்பூர்வமாகவும், வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையிலும் இவர் இந்தச் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ நூலில் நிறுவியிருக்கிறார் என்று ஐராவதம் மகாதேவன் முன்னுரைத்துள்ளார்.

ஆர். பாலகிருஷ்ணன் தமிழ் இலக்கிய மாணவர். கடந்த 30 ஆண்டுகளாக, இடப்பெயர் ஆய்வுகளைச் செய்து\வருபவர். சிந்துவெளெிப் பண்பாடு செழித்த வடமேற்கு நிலப் பகுதியில் தமிழில் இன்றுவரை வழக்கில் உள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை முதன்முதலாக ஆய்வுலகத்தில் பார்வைக்குக் கொண்டுவந்தவர்.

1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலாக முழுவதுமாக தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். திராவிட மொழியியலையும், சிந்துவெளிபு் புவி இயலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளைப் படைத்திருக்கிறார் பாலகிருஷ்ணன். இதன் மூலம், சிந்து நகர மக்கள் திராவிட (Dravida) மொழிகளிலேயே பேசியிருக்கவேண்டும் என்ற வரலாற்று உண்மையை நிறுவியுள்ளார்.

இந்த அரிய அழகிய நூலைப் பதிப்பித்திருப்பது பாரதி புத்தகாலயம். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத்தில் ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வு இது.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் ”எமதுள்ளம் சுடர்விடுக” தொடரில் வெளிவந்த கட்டுரை
நன்றி: தமிழ் இந்து



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *