ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (R.Balakrishnan IAS) சிறகுக்குள் வானம் (Siragukul Vanam Book PDF) - நூல் அறிமுகம் (Book Review in Tamil) - https://bookday.in/

சிறகுக்குள் வானம் – நூல் அறிமுகம்

நூலின்  தகவல்கள்: 

நூல்: சிறகுக்குள் வானம்

ஆசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு : 2023

பக்கம் : 100

விலை : ரூ.120

தமிழ் படித்தவர்கள் தரணியில் நடைபோட வாய்ப்பும் இல்லை வாழ்வும் இல்லை என்ற வழி வழியான வசவுகளை மாற்றிக் காட்டி வெற்றி என்பது படிப்பில் இல்லை படிப்பவரின் வாழ்வின் மீதான பிடிப்பில் இருக்கிறது என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லி வளரும் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகிப் போன வாழ்வினை நமக்குள் நம்பிக்கை தீபமேற்றி வெளிச்சமிடுகிறது சிறகுக்குள் வானம் நூல்.

தமிழ் வழியில் கல்வி பயின்று தமிழை இளங்கலைப் பாடமாகப் பயின்று தனது முதல் முயற்சியிலேயே IAS தேர்வில் வெற்றி பெற்று பல துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். நிதித்துறை, மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, சுற்றுலா, பண்பாடு, தகவல்தொடர்பு, தேர்தல் மேலாண்மை என ஆட்சிப் பணியில் பல நிலைகளில் சிறப்பான பணியால் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பவர் சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்குமான தொடர்பினை அடியொற்றி இந்தியவியல் ஆய்வாளராக மாறி தமிழ்த் தொன்மைகளை ஆராய்ந்து பல நூல்களை எழுதியிருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை வாழும் தலைமுறையினருக்கான முன்னேற்றத்தின் பாதையாக்கி மனவானத்தில் விரித்திருக்கும் சிறகில் நம்பிக்கை மொழியும் உழைப்பின் வழியும் உற்சாகமென ஊற்றெடுக்கின்றன.

ஆழ்ந்த சிந்தனை அயராத உழைப்பு அசைக்க முடியாத தன்னம்பிக்கை தனது கடந்த காலத்தின் வழியே பெற்றுக்கொண்டதை நினைவில் வைத்தே எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொண்ட தைரியம் கனிந்த மனம் எடுத்த காரியத்தைத் திறம்பட முடிப்பதில் மாறாத உறுதி பெருமைப்பட வைக்கும் நேர்மை ஆழ்ந்த தமிழ்ப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்டு தனது வாழ்வின் பொதுநலப் பண்புகளை புதியதோர் உலகம் படைக்க விரும்பும் புதிய தலைமுறையினருக்கு வழங்கும் பாங்கு என நூலின் வழியே தன்னையே உதாரணமாக்கி உற்சாமூட்டும் எழுத்தில் வாசிப்போரை வசப்படுத்துகிறார் நூலாசிரியர்.

சிறகுக்குள் வானத்தை சிறைபிடிக்காமல் வெளியெங்கும் விரிந்திருக்கும் வாய்ப்புகளில் தன்னை வசப்படுத்தி வானத்தையே சிறகாக்கிக் கொண்ட நம்பிக்கை மனத்தினருக்கான புத்துணர்வு விதைகளைத் தூவி வாழ்வின் போக்கில் பொதுநலத்தைப் பேணிநிற்க வழியமைக்கும் வாசல்களைத் திறந்து விடுகிறது நூலின் ஒவ்வொரு வரிகளும்.

இளவயதில் காமராஜரின் அருகில் மேடைப்பேச்சு அதன்வழியே ஆட்சிப்பணித் தேர்வெழுதும் எண்ணத்தைப் பெறுதல் தினமணி நாளிதழில் கிடைத்திட்ட பணியின் இடையே மதுரை சென்னை என இடைவிடாத பயணத்தில் ஆட்சிப்பணித் தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை தன்னை மேடையேற்றிய தனது ஆசான்களுக்கான மரியாதையையும் முறையாக வழங்கி மகிழ்ந்தது வெள்ள நிவாரணப் பணியில் முன்னின்று சேவை செய்தது தேர்தல் காலத்தில் சிறப்பான முன்னெடுப்புகள் மூலம் மக்களாட்சியை வலுப்படுத்த துணை நின்ற தருணம் என 25 தலைப்புகளில் தான் உயர்ந்து நின்ற பொழுதுகளை தமிழின் துணையோடும் தனது எழுத்தின் மீதான பற்றின் நம்பிக்கையோடும் இந்நூலில் விரித்திருக்கும் உழைப்பு எழுத்தாளரின் உழைப்பையும் அதன் மூலமான முன்னேற்றத்தையும் நமக்கும் கடத்துகிறது.

 

 

Buy Siragukul Vanam (சிறகுக்குள் வானம்) Book Online | Siragukul Vanam Book Reviews & Ratings - https://bookday.in/

நூலில் இடம்பெறும் தத்துவங்களை நமது வாழ்விற்கான முன்னேற்றப் படிகளாக்கிக் கொண்டால் எல்லோருக்கும் சிகரங்களை எட்டும் வாய்ப்புகள் கிட்டும்.

வாழ்வில் தீண்டாமைக் கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் கல்வியின் மீதான நம்பிக்கையில் முட்டிமோதி போராடி வெற்றி கண்டு பி.எம்.டபிள்யூ காரில் சென்றாலும் தனது தந்தை அமர்ந்து செருப்புத் தைத்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் கண்கலங்கும் தொழிலதிபர் கதையை வாசிக்கையில் முன்னேற்றத்தின் தடைக்கற்களை உடைத்தெறிய கல்வியே மிகச்சிறந்த ஆயுதமென்பதை எல்லோரும் உணர முடிகிறது.

சிறகுக்குள் வானம் நூலிலிருந்து சில நம்பிக்கைப் பாதைகளை நாமும் வாசித்து நடப்போமே.
*
உண்மையில்
விழித்திருக்கும் போது
காணும்
கனவிற்கு வேறொரு பெயர்தான்
நம்பிக்கை.
*
வாழ்வின் திசைகளைத்
தீர்மானிக்கிற திருப்பங்கள்
வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
அத்தகைய தருணங்களில்
நாம் எடுக்கிற நிலைப்பாடுகளே
நமது வாழ்வின்
தடங்களையும் தளங்களையும்
தீர்மானிக்கின்றன.
*
கனவுகளைச் சுமக்கின்ற
கண்களைக்
கண்டதும் திறக்கின்றன
வாய்ப்புகள் என்னும்
வாசல் கதவுகள்.
*
தானாகவே பேசுவதென்பது
வேறு
தனக்குள் பேசுவதென்பது
வேறு.
*
உயர்ந்த இலக்குகளே
உங்களை
உயரத்திற்கு
உந்திச் செல்லும்
*
பலரது தோல்விக்கு
திறமையின்மையைவிடத்
தீர்மானமின்மையே
பெரிதும்
காரணமாய் உள்ளது.
*
முயற்சியை
வாழும் கலையாய்
வகுத்துக் கொள்ளுங்கள்
வழி தெரியும்
வலி தெரியாது.
*
முதன்மை பெறுவதைவிட
முக்கியமானது
முயற்சி செய்வது.
*
செய்யாத உழைப்பு
சேமிப்பு அல்ல
விரயமாகிப் போன
விசை.
*
கவன உழைப்பில்
கருத்தைச் செலுத்துங்கள்
ஏனெனில்
மணிக்கணக்கைவிட
முக்கியமானது
மனக் கணக்கு.
*
தோல்வியின் காரணத்தை
மற்றவரின்
தோளில் சுமத்துவோரை
வெற்றி ஒருபோதும்
விரும்புவதில்லை.
*
சிரமம் கொள்ளுங்கள்
செய்யும் தொழிலைச்
சிறப்பாகச் செய்ய.
*
நன்று செய்வதென்பதன்
நடைமுறைச் சூத்திரம்
இன்றே செய்வதில்
இருக்கிறது.
*
நேரத்தின் உண்மையைப்
புரிந்து கொண்டவர்கள்
நேரமின்மையைப் பற்றிப்
பேசுவதில்லை.
*
உண்மையில் திட்டமிடப்பட்ட
தாமதம் என்பது
தீண்டத்தகாத கேவலம்.
*
நேரம் தவறுதல்
என்பது கூட
ஒருவகையில்
நேர்மை தவறுதல்தான்.
*
தவறிக் கூட யாரும்
தழுவக் கூடாத மதம்
தாமதம்.
*
அச்சமும் அறியாமையும்தான்
மூடநம்பிக்கைகள் எல்லாவற்றிற்கும்
ஆணிவேர்கள்.
*
வேட்கை இல்லாத
மனம்
வெறுமையின் களம்
ஈடுபாடின்மை
இறப்புக்குச் சமம்
மனக் கோட்டை
கட்டாதவர்கள்
சொந்தமாய்
மண் வீட்டைக் கூடக்
கட்டியதில்லை.
*
போன பாதைகளில்
மட்டும்
போகும் கால்கள்
புதுப் பாதைகள்
போடுவதில்லை.
*
வறுமையைவிடக்
கொடுமையானது
நம்பிக்கை வறட்சி
*
பயன் கருதாமல்
செய்கிற பாராட்டு
ஒரு
பண்பாட்டு நிலைக்களன்.
*
உங்கள்
கைதொடும் உயரத்தைக்
கணக்கிடும் போது
உங்கள்
காலிருக்கும் இடத்தைக்
கொஞ்சம்
கருத்தில் கொள்ளுங்கள்.
*
இருட்டு வணிகர்கள்
ஏதேனும் சொல்லட்டும்
வெளியே உலகம்
வெளிச்சமாகத்தான் இருக்கிறது.
*
முன்னேறும் கனவுதான்
உலகை
முன்னெடுத்துச் செல்கிறது
கால் நடக்கும் முன்பே
கருத்து நடக்கிறது.
*
பறவைகளாயினும்
மனிதர்களாயினும்
சிறகுகள் வெறும்
இறகுகள் அல்ல.

*
கூடுதல் மைல் என்பது
உண்மையில்
கோடு கிழித்து
அடையாளம் காட்டப்படும்
எல்லைக் கல் அல்ல
எதிர்பார்ப்புகளைக் கடந்து
செயலாற்றும் மனிதர்கள்
இயல்பாகச் செல்லும்
வெற்றிக் களம்.

தான் கண்ட கனவை நனவாக்கி அதன் அடிப்படையில் பொதுநலத்தை தனதாக்கி தேசத்தின் நகர்விற்கு சிறப்பான பங்களிக்கத் துடிக்கும் எல்லா கடமைவாதிகளுக்கும் இந்த நூல் நல்லதொரு வழியமைத்துக் கொடுக்கும் கலங்கரை விளக்கமாகிறது.

நூல் அறிமுகம் எழுதியவர்: 

சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள் (Peaks of Short Story Literature) - நூல் அறிமுகம் | Sirukadhai Ilakiyathin Sigarangal Tamil Book Review | https://bookday.in/

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள் (1999) தூரிகையில் விரியும் காடு (நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு ) (2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *