விட்டலாச்சாரியா கதைகளும் பண்பாட்டுச் சதிகளும்: அகஸ்தியர் புனைச்சுருட்டை உடைக்கும் ‘அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை’
பொய்க்கதைகளை உருவாக்கிப் பரப்புபவர்களுக்கு இருக்கும் தெளிவும் விடாமுயற்சியும், கெடுவாய்ப்பாக அந்தப் பொய்க்கதைகளை நம்புபவர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்கும் இருப்பதில்லை. திருமிகு பாலகிருஷ்ணன் அவர்களின் ‘அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை’ புத்தகம் இந்த விசித்திரமான உண்மையைத்தான் நம் முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறது.
ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய புனைச்சுருட்டை நம் தலையில் கட்ட ஒரு கும்பல் தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்கு எதிராக 1930களிலேயே ‘தமிழ் மண்ணில் அகஸ்தியர்’ மற்றும் ‘அகத்தியர் ஆராய்ச்சி’ போன்ற புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனாலும் 2026 இலும் நமக்கு இந்த விவாதம் மீண்டும் தேவைப்படுகிறது.
புத்தகத்தின் முதல் கட்டுரையே மிகச் சரியாகக் கேட்கிறது: “ஏன் இப்போது அகஸ்தியர்?”
நதி, சாபம், அப்புறம் ஒரு ச்சைக்!
அகஸ்தியரை ஒரு பண்பாட்டுத் தலைவராகவும், தொல்காப்பியரின் ஆசிரியராகவும், ஆரியத்தின் அடையாளமாகவும் நிறுத்த இங்கே ஒரு பெரிய சதி நடக்கிறது. இது வெறும் இலக்கியச் சர்ச்சை என்று நாம் கடந்து போனால் அது மிகப்பெரிய ஆபத்து.
அகஸ்தியர் பற்றிப் பரப்பப்படும் கதைகளில் மிக முக்கியமான ஒரு ‘சரடு’ இருக்கிறது. தொல்காப்பியர் அகஸ்தியரின் மாணவராம். அகஸ்தியர் தன் மனைவி லோபாமுத்திரையை அழைத்து வரும்படி தொல்காப்பியரை அனுப்புகிறார். போகும்போது “என் மனைவியை நீ நெருங்கக் கூடாது” என்று நிபந்தனை விதிக்கிறார்.
வழியில் ஆற்றில் பெருவெள்ளம் வருகிறது. ஆபத்தான நேரத்தில் தன் குருவின் மனைவியைக் காப்பாற்ற ஒரு நீண்ட கொம்பின் ஒரு முனையை லோபாமுத்திரையிடம் பிடிக்கச் சொல்லி, மறுமுனையைத் தான் பிடித்து ஆற்றைக் கடக்கிறார் தொல்காப்பியர். உயிரைக் காப்பாற்றிய இந்தச் செயலுக்காக அவர்கள் இருவரையும் அகஸ்தியர் சபித்துவிட்டாராம்.
இதைவிட ஒரு தரந்தாழ்ந்த, சகிக்க முடியாத பொய்க்கதை இருக்க முடியுமா?
இதை வைத்துத் தமிழின் இலக்கண இலக்கிய வரலாற்றைத் திசைதிருப்ப விட்டுவிடலாமா?
வரலாறு முக்கியம், அதை வலை போடப் பயன்படுத்தினால் வாய்மூடிக்கொண்டு இருக்கமுடியாது.
புத்தகத்திலிருந்து ஒரு முக்கியப் பார்வை:
“மரபுக்கதைகள் என்பது உலகளாவிய நடைமுறை. கடந்த காலங்கள் கட்டமைத்த கதை உலகம் அது. இதில் நாம் மட்டும் தனித்து இல்லை. ஆனால் உலகின் பல சமூகங்கள் அக்கதை மரபுகளை அந்தக் காலத்து விட்டலாச்சார்யா படங்கள் என்ற புரிதலோடு கடந்து, அறிவியலின் துணைகொண்டு நடைபோடுகின்றன. ஆனாலும் நம்மில் ஏராளமானோர் அத்தகைய புராணக்கதைகளை ஏதோ அறிவியல்பூர்வமான தரவுகள் போலக் கட்டமைத்துப் பேசிவருவது கவலை அளிக்கிறது.”
389 அகஸ்தியர்கள்?
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் மட்டுமே அகஸ்தியர் எழுதியதாக 389 நூல்கள் இருக்கின்றன. காலம்தோறும் வாழ்ந்து எழுத அகஸ்தியர் என்ன அமுதம் குடித்த சிரஞ்சீவியா? ஔவை என்பதைப் போல அது ஒரு பொதுப்பெயராக இருந்திருக்கலாம். 2026லிலும் ஒருத்தர் அகஸ்தியர் என்று புனைப்பெயர் வைத்துக்கொள்ளலாம். அதனால் என்ன?
ஆனால், இந்த ஒளிந்து வளைந்து தாக்கும் புனைச்சுருட்டுகளின் ஒரே நோக்கம் தமிழின் தனித்துவமான வரலாற்றுப் பாதையைக் குழப்புவதுதான். நாம் தரவுகளின் அடிப்படையில் அறிவார்ந்த ஆயுதத்தை எடுத்தால், இந்த நரிகள் மீண்டும் இருட்டில் சுருண்டு அடுத்த பொந்துக்காகக் காத்திருக்கத் தொடங்கிவிடும்.
“புராணம் என்பது பழங்காலத்து விட்டலாச்சாரியா படம், அதை வரலாறாகப் பேசாதே!” என்று ஒன்று சேர்ந்து உரக்கச் சொல்லவேண்டிய காலம் இது.
புத்தி இருக்கும் இடத்தில் புனைச்சுருட்டுக்கு என்ன வேலை?
சிந்திக்கக் கற்றுத்தரும் மிக முக்கியமான நூல் இது. வாய்ப்பு கிடைத்தால் உடனே வாங்கிப் படியுங்கள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை” |
| ஆசிரியர்: | ஆர். பாலகிருஷ்ணன் |
| வெளியீடு: | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் |
| விலை: | Original price was: ₹.80, 5% Discount price was: ₹.76 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பயணிதரன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

