R.K.நாராயண் - மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)

R.K.நாராயண் எழுதிய “மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)” – நூலறிமுகம்

நூலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பாக,நமது தேசத்தந்தை மகாத்மா அவர்கள் குறித்து,எனது புரிதல்,மதிப்பீடு எல்லோரோடும் ஒத்துப்போகக்கூடியது அல்ல.காரணம், குறிப்பிட்ட இரண்டு சமயத்தவர்களை ஒன்றாக வாழ,பழக, தனது வாழ்நாள் முழுமையும் பாடுபட்டார்.அதற்காக தன் இன்னுயிரையும் துறந்தார்.மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

ஆனால், குறிப்பிட்ட மக்களை மட்டும் ஏன் அவர் “கடவுளின் பிள்ளைகள்”என அழைத்து, அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என தனது தேசத்திற்கு அறிமுகம் செய்தார்?

இந்தியர் எல்லோருமே சாதி, சமயத்தால் வேறுபட்டிருந்தாலும், கடவுளின் படைப்பில் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வு ஏதுமில்லை என்றிருக்கலாமே……

நிற்க, இந்த நாவலில் கதை(நாவல்)மாந்தர்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னால் ஐந்திலிருந்து ஆறு அவ்வளவே.
சிறு வயதில் பெற்றோர்களை இழந்த கதை நாயகன் ஸ்ரீராம், கதை நடக்கும் கேரளாவில் அவனது பாட்டியின் கட்டுப்டுப்பெட்டித்தனமான ஆனால், பாச பராமரிப்பில் வளர்கிறான்.

செல்வத்திற்கு குறையேதுமில்லை. ஆனால்,வெளியுலகத் தொடர்பு, கலைகளில் நாட்டம், ஈர்ப்பு ஏதுமின்றி வளர்கிறான்.
அவனுக்கு அதிக பரிட்சயமானவர் வீட்டையொட்டி இருக்கும் பெட்டிக்கடைக்காரர், மற்றும் உள்ளூர் சேமிப்பு வங்கியின் தலைமை அதிகாரி மட்டுமே.(அவனுக்காக சேமிக்கப்படும் பணம் உள்ள சிறு வங்கி)

ஒருநாள் கடைவீதியில் தேச நலனுக்காக,நன்கொடை பெறும் “காந்தியவாதி” மற்றும் கதாநாயகியான “பாரதி”யை பார்த்த மாத்திரத்தில், மையல் கொள்கிறான்.

கொள்கைப்பிடிப்போ,லட்சிய வேட்கையோ ஏதுமின்றி இருக்கும் அவன், அவள் அன்பைப் பெற “காந்தி”மற்றும் அவர்தம் போதனைகளை பின்பற்ற ஆரம்பிக்கிறான்.

பாரதி முழுமையான,சுத்தமான பல திறன்களை கொண்டு, எக்காரணம் கொண்டும் பொய் உரைக்காத பெண்ணாக உலா வருகிறாள்.
ராம் காந்திய கொள்கைகளில் பெரிய ஈர்ப்பு இல்லாவிடினும் பாரதிக்காக எதையும் செய்யத் துணிந்து, வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.

பாரதி, தமது தேசத்தின் விடுதலைப்போராட்டத்தில்,காந்தி அவர்களின் அறிவுரைப்படி சிறை செல்ல, சிறை செல்ல விரும்பாத அவன் வெளியுலகில் சுற்றித்திரிகிறான்.

நாமனைவரும் நன்கு அறிந்தது போல,விடுதலைக்காக காந்தி “அறவழி/அகிம்சை வழி”மில் பயணிக்க, நேதாஜி அவர்களோ புரட்சி (ஆயுதப் போராட்டம்)வழி தேர்ந்தெடுக்கிறார்.
கதை/நாவலில் நேதாஜி வழியை பின்பற்றுபவர்கள் “பயங்கரவாதி”களாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

நேதாஜி வழி நடக்கும் “புகைப்படக் கலைஞர் “போர்வையில் செயல்படுபவரால், ராம்”மூளைச் சலவை” செய்யப்பட்டு,பயங்கரவாத செயல்களில் (!!??)ஈடுபடுகிறார். நாயகியைப் பார்க்க ராம் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற்றனவா, அவனால் முழுமையான காந்தியவாதியாக மாற முடிந்ததா, அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்ததா,பாட்டி என்ன ஆனார்,என்பதே நாவலின் பிற பகுதிகள்.

இங்கே, காந்தி அவர்கள்,நாவல் முழுக்க பயணிக்காவிட்டாலும் அவரின் சுதந்திர தாகம், அகிம்சை போராட்டம்,தனது சீடர்களை “ஒழுக்க சீடர்களாக” மாற்றி பிறரை வழிநடத்திச் செல்வதென, அவரின் தாக்கம் நிறையவே. நாவலின் துவக்கத்திலும், முடிவிலும் காந்தி நேரடிக் காட்சிகளில் வருகிறார்.

முன்னுரையில் குறிப்பிட்டதைப்போல, காந்தி அவர்கள் மீதான,எனது தனிப்பட்ட ஆதங்கம் இந்த நாவலைப் படித்து முடித்தப்பிறகு கொஞ்சம் குறைந்தது.
பல அறிஞர்களும் சொல்லிச்சென்றதைப்போல, இத்தகைய நபர் ஒருவர், இந்த உலகில் வாழ்ந்தார் என்பது,நம்பமுடியாத ஆச்சர்யத்தை, எனக்கும் கடத்தியது இந்த நாவல்.

ஆசிரியர் அவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை “மால்குடி நாட்கள்”(Malgudi Days) நாவல் மூலமாக, இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பேசப்பட்டவர்,புகழடைந்தவர்.

காந்திய அகிம்சை வழியையும்,நேதாஜியையும் நேரடியாக (கதை மாந்தர்கள்) மூலமாக விமர்சிக்காமல், படிக்கும் வாசகர்களிடமே அதை ஒப்படைத்துவிடுகிறார்.
மொத்தத்தில் ஆங்கில இலக்கணங்களோடு,நாட்டு விடுதலை மற்றும் காதலையும் அழகுணர்ச்சியோடு, ஆங்காங்கே சிறு எள்ளல் துள்ளல்களோடு எழுதிய வகையில்,R K.Narayan. அவர்களுக்கு நாம் போடலாம் ஒரு பெரிய வணக்கம்.

அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் வழியே வாசகர்களோடு அவர் வாழ்கிறார்.

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : “மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)”

நூலாசிரியர் : R.K.நாராயண்

வெளியீடு : Prismbooks Pvt Ltd 

விலை : ரூ.146

நூலறிமுகம் எழுதியவர்:- 

ஆ.சார்லஸ்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *