மகாத்மா காந்தியே ஒரு கதாபாத்திரமாக நடமாடும் ஆர்.கே.நாராயனின் நாவல் ‘வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா’.
– பெ.விஜயகுமார்.
இந்தியர்களின் ஆங்கிலப் படைப்புகள் (Indian Writing in English) கடந்த இரு நூற்றாண்டுகளாக உலக இலக்கிய வானில் பெருமிதத்துடன் வலம் வருகின்றன. இவ்வகை இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளராக ஆர்.கே.நாராயன் திகழ்கிறார். 1907இல் சென்னையில் பிறந்து மைசூரில் வாழ்ந்த இவரின் புனைவிலக்கியப் படைப்புகள் உலகின் பல மொழிகளிலும் படிக்கக் கிடைக்கின்றன. ‘சுவாமி அன் ஃப்ரெண்ட்ஸ்’ இவர் எழுதிய முதல் நாவல். இதைத் தொடர்ந்து பெச்சிலர் ஆஃப் ஆர்ட்ஸ், தி டார்க் ரூம், தி இங்கிலீஷ் டீச்சர், மிஸ்டர் சம்பத், தி கைடு போன்ற நாவல்களையும், நிறைய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மால்குடி எனும் கற்பனை நகரமே இவரின் அனைத்துப் படைப்புகளுக்கும் கதைக் களனாகும். ‘சுவாமி அன் ஃப்ரண்ட்ஸ்’ நாவலை ’மால்குடி டேஸ்’ என்ற பெயரில் டிவி தொடராக தூர்தர்ஷன் ஒளி பரப்பியது.
ஆர்.கே.நாராயன் 1955இல் எழுதிய ’வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா’ நாவல் 1942இல் மகாத்மா காந்தியின் அழைப்பிற்கிணங்க நாடெங்கிலும் நடந்த ’வெள்ளையனே வெளியேறு’ (Quit India) இயக்கம் தொடங்குவதிலிருந்து இந்தியா விடுதலை பெறும்வரையிலான நிகழ்வுகளைச் சித்தரிக்கிறது. அண்ணல் காந்தியின் கொள்கை மீதான ஈர்ப்பு இளைஞர்கள் ஸ்ரீராம் – பாரதி இருவரையும் இணைத்துக் காதலர்களாகப் பரிணமிக்கச் செய்கிறது. மால்குடியில் தொடங்கி டில்லிவரை நாவல் காட்சிகள் பரந்து விரிந்து செல்கின்றன. நாவலின் நாயகன் ஸ்ரீராம் பெற்றோர்களை இழந்து தன் பாட்டியினால் வளர்க்கப்படுகிறான். பிறக்கும்போதே தாயை இழந்த ஸ்ரீராம், சிறுவயதில் தந்தையையும் இழக்கிறான். ஸ்ரீராமின் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து போரில் உயிர் இறந்ததால் ராணுவத்தில் இருந்து குடும்ப பென்ஷன் அவனுக்குக் கிடைக்கிறது. ஸ்ரீராம் இருபது வயதை அடைந்ததும் தன் பெயரில் இருந்த வங்கிக் கணக்கை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றுகிறார் ஸ்ரீராமின் பாட்டி.
ஸ்ரீராம் பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேராமல் மால்குடி நகரைச் சுற்றி பொழுதைக் கழிக்கிறான். கையில் காசு வந்ததும் வீட்டுக்கு எதிரில் இருக்கும் கன்னி என்பவரின் கடையில் ஏதேனும் பலகாரம் வாங்கிச் சாப்பிடுவதும், பொறுப்புகள் ஏதுமின்றி வீணே அலைவதுமாக இருக்கிறான். ஒரு நாள் தெருவில் ஓர் அழகான பெண் காங்கிரஸ் கொடியை ஏந்திக்கொண்டு தகர உண்டியலைக் குலுக்கியவாறு பணம் திரட்டி வருகிறார். இப்பெண்ணைப் பார்த்த நொடியில் ஸ்ரீராம் மனம் மயங்குகிறது. அவளின் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, துடிப்பான பேச்சு, கொள்கைப் பிடிப்பு, எடுப்பான தோற்றம் அனைத்தும் ஸ்ரீராமை ஈர்க்கின்றன. மகாத்மா காந்தி மால்குடி வருகிறார் என்ற செய்தி தீயெனப் பரவுகிறது நகரில். மால்குடி நகரின் சேர்மன் வீட்டில் காந்தி தங்குவதற்கான ஏற்பாடு நடக்கிறது. சேர்மன் மகிழ்ச்சியில் திளைக்கிறார். காந்தி துப்பரவுப் பணியாளர்கள் தங்கும் குடிசையில் தங்குவேன் என்றதும் எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்கிறார்கள். சரயு நதிக்கரையில் இருக்கும் குடிசைகளில் சில, காந்தியும் அவருடன் பயணிக்கும் சேவா சங்க உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

மாலையில் காந்தியைப் பார்க்கச் செல்லும் ஸ்ரீராம் அங்கு தன் மனதைக் கவர்ந்த அந்தப் பெண்ணைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறான். அவள் பெயர் பாரதி என்றும் காந்தியின் நம்பிக்கைக்குரிய சேவகி என்பதையும் அறிகிறான். அவள் பம்பரமாய் சுற்றி வேலை செய்வதைக் கண்டு வியக்கிறான். காந்தி தங்கியிருக்கும் குடில் அவள் பொறுப்பில் இருக்கிறது. காந்தியின் பயணத் திட்டத்தை அவள்தான் முன்னின்று கவனிக்கிறாள். தானும் காந்தியின் விடுதலை இயக்கத்தில் சேர விரும்புவதாகவும், காந்தியை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் பாரதியிடம் சொல்கிறான். அவனுக்கு விடுதலை இயக்கத்தின் மீதிருந்த ஈர்ப்பைவிட பாரதியின் மீதான காதலே பிரதானம். மறுநாள் காலை மூன்று மணிக்கு காந்தி தங்கியிருக்கும் குடிலுக்கு வரச் சொல்கிறாள். பாட்டியை ஒருவழியாகச் சமாளித்து காலை இரண்டு மணிக்கே காந்தி தங்கியிருக்கும் குடிலுக்கு வந்துவிடுகிறான்.
பாரதியின் தயவால் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஸ்ரீராம், தான் விடுதலை இயக்கத்தில் சேர ஆசைப்படுவதை காந்தியிடம் சொல்கிறான். காந்தி அவனைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டு அவனை அன்புடன் சீராட்டி வளர்த்த பாட்டியின் அனுமதி பெற்ற பின்னரே விடுதலை இயக்கத்தில் சேர வேண்டும் என்று உறுதியுடன் சொல்கிறார். பாட்டி விடுதலை இயக்கம் பற்றி சிறிதும் அறிந்திராதவர். காந்தியின் பெருமைகளை விளக்கிச் சொல்லி அவரின் சம்மத்துடன் காந்தி தங்கியிருக்கும் குடிலுக்கு வருகிறான். அன்று காந்தி மால்குடி நகரிலிருந்து விடைபெறுகிறார். அவருடன் செல்ல பாரதியும் தயாராகிறார். ஸ்ரீராம் தன் காதலை பாரதியிடம் சொல்கிறான்.
அவன் காதலை ஏற்றுக்கொள்ளும் பாரதி, இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில் திருமணம் பற்றி தன்னால் முடிவெடுக்க முடியாது என்றும், காந்தியின் சம்மதுத்துடன் மட்டுமே திருமணத்துக்கு ஒத்துக் கொள்வேன் என்றும் உறுதியாகச் சொல்கிறாள். ஸ்ரீராம் ஏமாற்றம் அடைகிறான். பாரதியின் மீதான காதல் அவனை வாட்டுகிறது. ஆனால் பாரதி விடுதலைப் போராட்டத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறாள். வேறுவழி இல்லாமல் ஸ்ரீராம் சம்மதிக்கிறான். பாரதியின் தூண்டுதலில் விடுதலை இயக்கத்தில் இணையும் ஸ்ரீராம் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்திய விடுதலைக்கு ஒப்படைக்கிறான்.
இயக்கம் அவனுக்குக் கொடுக்கும் வேலை மால்குடி நகரைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதாகும். பெயிண்ட்டும், பிரஷும் எடுத்துக்கொண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்தை வீதிகளில் எழுதிச் செல்கிறான். சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் வெள்ளையர் ஆட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறான். ஆனால் மக்களிடம் விடுதலை வேட்கை கிஞ்சித்தும் இல்லாதிருப்பது கண்டு கவலை கொள்கிறான். திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று பாரதிக்குக் கடிதம் எழுதுகிறான். அவள் வழக்கம்போல் காந்தியின் சம்மதம் கிடைத்த பிறகே நம் திருமணம் என்று பதில் எழுதுகிறாள். காதலுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் அவன் மனம் சிக்கித் தவிக்கிறது.
இதற்கிடையில் ஜகதீஷ் என்ற இளைஞனின் நட்பு கிடைக்கிறது. அவன் மால்குடி நகரில் ஒரு போட்டோ ஸ்டுடியோ நடத்துபவன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தில் உறுப்பினன். ஸ்ரீராமுடன் நன்கு பழகி அவனை தன் இயக்கத்தில் சேர்க்கிறான். மால்குடி அருகிலிருக்கும் மலையில் ஒரு பாழடைந்த கோயில் உள்ளது. அதுவே அவர்களின் மறைவிடமாக இருக்கிறது. கோயிலின் இருளடைந்த கருவறையில் ஒரு வானொலிப் பெட்டியை ரகசியமாக வைக்கிறார்கள். இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைச் செயலகத்துடன் தொடர்பில் இருக்கும் வேலை ஸ்ரீராமுக்குக் கொடுக்கப்படுகிறது. வானொலியில் வரும் செய்திகளை எல்லாம் ஜகதீஷ் கொடுத்த காகிதத்தில் எழுதி வைக்கும் வேலையைத் திறம்படச் செய்கிறான். ஒரு நாள் வானொலி ரிசீவர் மீது ஒரு கரப்பான் பூச்சி உட்கார்ந்து இயந்திரத்தைப் பழுதடையச் செய்கிறது. தலைமைச் செயலகத்துடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
பாரதி ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு மால்குடியின் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தியை ஜெகதீஷ் சொல்கிறான். ஸ்ரீராம் மாறுவேடம் அணிந்து சென்று பாரதியை சிறையில் சந்திக்க ஏற்பாடு செய்கிறான். ஸ்ரீராம் இப்போது இந்திய தேசிய ராணுவ வீரன் என்பதால் காவல்துறை அவனைக் கைது செய்யத் தேடுகிறது. ஊரெங்கும் அவன் படத்தை ஒட்டி கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று போஸ்டர் போட்டுள்ளது. ஸ்ரீராம் மாறுவேடம் பூண்டு பெண்கள் சிறையின் கோட்டைக்கு வெளியே காத்திருக்கிறான். அதிகாலை இரண்டு மணிக்கு பாரதி கோட்டையின் உள்ளிருந்து அவனைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீராம் பெரும் பதற்றத்துடன் பாரதியைச் சந்திக்க காத்திருக்கிறான். அவளைச் சந்தித்ததும் அவர்களின் திருமணம் குறித்து அவளிடம் பேசத் துடிக்கிறான். ஆனால் கோட்டைச் சுவரின் மறுபுறம் ஒரு பெண் காவலாளி வருகிறார். பாரதி எழுதிய கடிதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு போய்விடுகிறாள்.

கடிதத்தைப் பதற்றத்துடன் படிக்கிறான். அவர்களின் திருமணத்துக்கு இன்னும் மகாத்மாவின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று அவள் எழுதியதைப் படித்ததும் கவலை கொள்கிறான். ஸ்ரீராம் உடனே வீட்டுக்குச் சென்று உயிருடன் போராடிக்கொண்டிருக்கும் அவன் பாட்டியைப் பார்க்க வேண்டும் என்றும் பாரதி எழுதியுள்ளாள். மாறுவேடத்தில் ஸ்ரீராம் தன் வீட்டுக்குச் சென்றதும் அவன் பாட்டி இறந்த செய்தியை அறிகிறான். என்ன செய்வது என்று அறியாது தவிக்கிறான். வழக்கம்போல் அவனுக்கு உதவி செய்ய கடைக்காரர் கன்னி முன் வருகிறார். அவரை ஈமக்கிரியைக்கான வேலைகளை எல்லாம் செய்யச் சொல்கிறான். காவல்துறைக்குத் தெரியாமல் சரியான நேரத்தில் வந்து பாட்டியின் உடலுக்குத் தீமூட்ட தான் வருவதாகச் சொல்கிறான். அங்கு சற்றும் எதிர்பாராத நிகழ்வு நடக்கிறது. ஸ்ரீராம் கொள்ளிவைக்கும்போது பாட்டியின் உடலில் அசைவு தெரிகிறது. பாட்டி சாகவில்லை என்றறிருந்து அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பாட்டியை பத்திரமாக வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல அவர்களின் குடும்ப டாக்டர் வருகிறார். அவர்தான் பாட்டியின் மரணத்தை உறுதி செய்தவரும்கூட! ஸ்ரீராம் மயானத்தில் இருக்கும் செய்தி அறிந்து வரும் காவல்துறை அவனைக் கைதுசெய்கின்றனர்.
சிறையில் ஸ்ரீராம் சொல்லொண்ணா துயரைடைகிறான். பல குற்றங்களைச் செய்த கயவர்களுடன் அவன் கொட்டடியில் அடைக்கப்படுகிறான். விடுதலைப் போராளியான அவனுக்கும் மற்ற கைதிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. பாரதியின் நினைவு மட்டுமே அவனுக்கு இதமாக இருக்கிறது. இருப்பினும் அவளைப் பற்றிய செய்தி எதுவும் இல்லை. ஒரு நாள் சிறையிலிருக்கும் ஸ்ரீராமைப் பார்க்க அவனின் குடும்ப நண்பர் வருகிறார். ஸ்ரீராமின் பாட்டி இப்போது பனராஸ் சென்றுவிட்டதாகவும், அங்கு கங்கையில் தினமும் நீராடி, அவரைப் போன்ற கைம்பெண்களுடன் சேர்ந்து கடவுளை வழிபட்டு நிம்மதியாக வாழும் செய்தியைச் சொல்லிச் செல்கிறார்.
நாடு சுதந்திரம் பெற்ற நல்ல செய்தி வருகிறது. தன் லட்சியம் நிறைவேறியது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறான். ஸ்ரீராம் உட்பட அனைத்து அரசியல் கைதிகளும் சிறையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். சிறையிலிருந்து வெளிவரும் ஸ்ரீராம் ஓர் அந்நியனைப் போல் உணர்கிறான். அவனுக்கு எப்போதும் உதவிடும் கன்னியும் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மனம் வருந்துகிறான். எங்கு செல்வதென்று அறியாது தவிக்கிறான். பசி வருத்திட அருகிலிருக்கும் ஹோட்டலுக்குச் செல்கிறான். அவன் நன்கறிந்த அந்த ஹோட்டல் ஊழியன் ஊர் நடப்புகளைச் சொல்கிறான். சுதந்திரம் கிடைத்ததும் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராகவும், வெள்ளையர் ஆட்சிக்கு ஆதரவாகவும் இருந்தவர்கள் எல்லாம் இப்போது தேசப் பற்றாளர்களாக நடித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் அவலத்தை ஹோட்டல் தொழிலாளி சொல்லக் கேட்டு வேதனை அடைகிறான்.
நண்பன் ஜெகதீஷ் நினைவுக்குவர அவன் நடத்தும் போட்டோ ஸ்டுடியோவுக்குச் செல்கிறான். ஜெகதீஷ் விடுதலைப் போராட்டக் காட்சிகளை தான் அழகிய ஆல்பமாக உருவாக்கியிருப்பதைக் காட்டுகிறான். இதுவொரு மிகச் சிறந்த வரலாற்றுப் பெட்டகமாகும் என்று சொல்லி பெருமை கொள்கிறான். ஸ்ரீராமுக்கு இதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. தன் அருமைக் காதலி பாரதி இருக்குமிடம் தெரியாமல் தவிப்பதைச் சொல்கிறான். ஜெகதீஷ் செய்யும் உதவியினால் பாரதி இருக்குமிடம் தெரிகிறது. டெல்லியில் காந்தியுடன் நிவாரணப் பணியில் இருக்கிறாள் என்றறிந்து உடனே டில்லி செல்கிறான்.
பாரதி அவனை வரவேற்க டில்லி ஸ்டேஷன் வருகிறாள். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் ஸ்ரீராம் மனம் பூரிப்படைகிறது. பாரதியிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே துடிப்பு! அதே கொள்கைப் பிடிப்பு! அவள் தங்கியிருக்கும் ஆசிரமத்துக்கு அவனைக் கூட்டிச் சென்று ஒரு குடிலில் தங்கவைத்து உணவளிக்கிறாள். ஆசிரமத்தில் நிறையக் குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்கள். ’’இக்குழந்தைகள் எல்லாம் இந்தியப் பிரிவனைக்குப் பின்னர் நடந்த கொடூர வன்முறையினால் பெற்றோர்களை இழந்த அனாதைகள். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை மகாத்மா எனக்குக் கொடுத்துள்ளார். மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்,’’ என்கிறாள் பாரதி.
நாடு விடுதலையைக் கொண்டாடியபோது காந்தி வங்கத்திலும், பீஹாரிலும் நடந்த கலவரங்களைத் தடுத்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும் கிராமம் கிராமமாகச் செல்கிறார். அவருடன் தானும் கூடச் சென்றதையும், அந்தக் கோரக் காட்சிகள் தன் நெஞ்சைவிட்டு என்றென்றும் நீங்காது என்பதையும் ஸ்ரீராமிடம் சொல்லி விவரிக்கிறாள். அவளின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளைக் கண்டு ஸ்ரீராம் வியக்கிறான்.குழந்தைகள் எல்லாம் பாரதியிடம்,’’அக்கா! அக்கா!’’ என்று கொஞ்சி விளையாடுவதைக் கண்டுப் பரவசம் அடைகிறான். நிவராணப் பணியில் முழுமனதோடு பாரதி ஈடுபட்டுள்ளதைப் பார்த்துப் பெருமை கொள்கிறான்.
நீண்ட ஓய்விற்குப் பிறகு,’’நம்முடைய திருமணத்துக்கு காந்தியடிகள் சம்மதம் தெரிவித்துவிட்டாரா?’’ என்று பாரதியிடம் கேட்கிறான். பிர்லா இல்லத்தில் தங்கியிருக்கும் காந்தி எந்நேரமும் வேலையில் இருப்பதாகக் கூறுகிறாள். மதக் கலவரத்தைத் தடுக்க நீண்ட நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டது அவர் உடலை மிகவும் பாதித்துள்ளது என்கிறாள். ’’நீ சிறையிலிருந்து விடுதலையாகி, டில்லி வந்துள்ள செய்தியை அவர் அறிவார் என்றும் உன்னைச் சந்திக்க விரும்புகிறார்’’ என்றும் பாரதி சொன்னதும் மகிழ்ச்சி அடைகிறான். அவள் சொல்லியது போலவே அவர்களைச் சந்திக்க அடுத்த நாள் நேரம் தரப்படுகிறது. பிர்லா மாளிகையில் ஒரே கூட்டமாக இருக்கிறது. பலரும் காந்தியைச் சந்திக்கக் காத்திருக்கிறார்கள். வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நேர்காணல் எடுப்பதற்கு வந்திருக்கிறார்கள். மேடையின் ஒரு மூலையில் காந்தி உட்கார்ந்திருக்கிறார். நேருவும், படேலும் அவரிடம் ஆலோசனைப் பெற்றுச் செல்கிறார்கள்.
பாரதி – ஸ்ரீராம் சந்திப்பதற்கான நேரம் வருகிறது. மிகுந்த பதற்றத்துடன் ஸ்ரீராம் அவரைக் கும்பிட்டு அமர்கிறான். பாரதி அவளுக்கே உரிய தெளிவான மனதுடன் காணப்படுகிறாள். ஸ்ரீராமின் சிறை வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அக்கறையுடன் காந்தி கேட்கிறார். பாரதியின் அறிவுரையின்படி ஸ்ரீராம் மனந்திறந்து உண்மைகளைச் சொல்கிறான். தான் வழி தவறி அஹிம்சை வழியைத் தேர்ந்தெடுத்ததைச் சொல்லி மன்னிப்புக் கோருகிறான். மகாத்மா அவன் உண்மை பேசியதை மெச்சுகிறார். பாரதி தன்னுடைய திருமணம் குறித்துக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன்.’’என் மகள் பாரதியின் திருமணத்தை நானே நடத்தி வைப்பேன். நாளை இதுவே முதல் நிகழ்வாக இருக்கட்டும். இதோ! பழங்கள், பூக்கள் எல்லாம் தயாராக உள்ளனவே’’ என்று சொல்லி வாழ்த்தி அனுப்புகிறார்.
அடுத்த நாள் மனதில் உற்சாகம் பொங்கிட பாரதியும், ஸ்ரீராமும் பிர்லா மாளிகையில் மகாத்மாவுக்காக காத்திருக்கிறார்கள். அவர் வந்ததும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று வணங்குகிறார்கள். மகாத்மாவும் அவர்களை வணங்குகிறார். கூட்டத்திலிருந்து ஒருவன் அவருக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் சுடுகிறான். கீழே விழும் மகாத்மா அந்த இடத்திலேயே உயிர் துறக்கிறார் என்பதுடன் நாவல் முடிகிறது.
’வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா’ ஆர்.கே.என்.னின் காத்திரமான படைப்பு என்பதில் ஐயமில்லை. நாவலின் முதல் பகுதியை ஆர்.கே.என். அவருக்கே உரிய நகைச்சுவையும், பகடியும் கலந்த நடையில் நாவலை நகர்த்திச் செல்கிறார். நாவலின் இரண்டாம் பகுதி உணர்ச்சிப் பூர்வமாக மாறுகிறது. விடுதலையோடு வந்த பிரிவினைக் காலத் துயரங்கள் நாட்டையே புரட்டிப் போடுவதை ஆர்.கே.என். ஆழமாகவும், அழகாகவும் நாவல் மூலம் ஆவணப்படுத்துகிறார். இவ்வகையில் ’வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா’ ஒரு வரலாற்று நாவலாகவும் பரிணமிக்கிறது. நாவலின் தலைப்பு குறிப்பிடுவதுபோல் இன்றும்கூட மகாத்மாவுக்காகக் காத்திருக்கத்தானே செய்கிறோம்! வெறுப்பு அரசியல் கோலோச்சும் இச்சூழலில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் காந்தி மீண்டும் தோன்றமாட்டாரா என்ற ஏக்கம் ஏற்படுகிறதே!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | வெய்ட்டிங் ஃபார் தி மகாத்மா (Waiting for the Mahatma) |
| ஆசிரியர்: | ஆர்.கே.நாராயன் (R.K. Narayan) |
| வெளியீடு: | Penguin Books Ltd |
| விலை: | ₹.210 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பெ.விஜயகுமார், மதுரை- 18. இமெயில்: vijayakumarmuta@gmail.com |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

