தமிழ் வெகுசனப் பரப்பில் தமிழ் சினிமா ஏற்படுத்திய – ஏற்படுத்தி வரும் தாக்கமும் அதன் விளைவுகளும் பாரிய அளவிலானது. திராவிட இயக்கம் தனது கருத்துகளை சினிமா என்ற ஊடகத்தின் வழியாகவும் வெற்றிகரமாக வெகுசனத் தளத்தில் பரப்பியது. ஏதோ ஒரு வகையில், தமிழ்ப்பரப்பில் அதிகாரத்துக்கான நுழைவுவாயிலாகவே தமிழ் சினிமா விளங்கியது – விளங்கி வருகிறது. அது இன்று முதல்வர் ஜோசப் விஜய் வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக, ஒரு சினிமா உருவாக்கும் கருத்தியல் என்பது தமிழ்ச் சூழலில் அதிகாரத்திற்கான சாவியாக அமைந்துவிடும்பட்சத்தில், அந்த சினிமாவை கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வதும் – விமர்சிப்பதும் அறிவார்ந்த சமூகத்திற்கும் சனநாயகவாதிகளுக்கும் இன்றியமையாததாகிறது.
திரைப்படங்களை இடதுசாரி, தலித்திய, பெரியாரியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கருத்தியல்ரீதியாக விமர்சிக்கும் போக்கு கடந்த சில பத்தாண்டுகளாவே தமிழ் அறிவுச் சூழலில் – வெகுசனத்தளத்திலும் – பலரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே ர.முகமது இல்யாஸின் ‘இந்து தேசியம் – இந்திய சினிமா’ என்ற இந்நூலை நாம் அவதானிக்கலாம். இதில் அவர் சிறுபான்மை (இசுலாமியத்) தன்னிலை என்ற அடையாளத்தில் நின்று இக்கட்டுரைகளை முன்வைக்கிறார் என்பது நூலுக்குக் கூடுதல் கனத்தையும் கவனத்தையும் அளிக்கிறது.
நூலில் மொத்தம் 26 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு திரையாக்கத்தை முன்வைத்து விமர்சிக்கிறது. நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுமே இணைய இதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியானவையே. தற்போது சினிமாக்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக இணைய வலைதளங்களில் – சமூக ஊடகங்களில் வெளிவரும் விமர்சனங்கள் உள்ளது என்பது இக்கட்டுரைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
‘சர்கார்’ திரையாக்கத்தை முன்வைத்து ‘விஜய்க்கு ஒரு கடிதம்’ என எழுதப்பட்டுள்ள முதல் கட்டுரையே சிறப்பாக – அதுவும் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு இன்னும் பொருத்தமாக உள்ளது. அக்கடிதத்தில் இருந்து சில வரிகளை இங்கு அப்படியே தருவது சுவாரசியமாக இருக்குமென நினைக்கிறேன்.
‘…சர்கார் இசைவெளியீட்டு விழாவில் ‘முதலமைச்சர் ஆனா நடிக்க மாட்டேன்!’ என்று பேசி எங்களை மகிழ்வித்தீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்டால், ‘சர்கார்’ திரைப்படத்தில் பேசிய அரசியலை, நிஜ வாழ்க்கையிலும் நிகழ்த்திவிடுவீர்கள் என்ற பயம் தோன்றுகிறது…’
‘…ஒவ்வொரு படத்திலும் பிரஸ் மீட் வைத்து அரசியல் பேசி நடிக்கும் நீங்கள், நிஜ வாழ்க்கையில் மக்கள் பிரச்சினைகளை எப்படி பிரஸ் மீட்களில் பேசுவீர்கள் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை…’
‘…நீங்கள் முதலமைச்சராக விரும்பினால், அந்த அப்பாவி ரசிகன் நிச்சயம் உங்களுக்கு உதவுவான். ஆனால் ‘சர்கார்’ படத்தில் பேசிய அதே அரசியல்வாதியாக இல்லாமல் அந்த ரசிகனை மேம்படுத்துவதில்தான் இருக்கிறது உங்கள் எதிர்காலம்…’
‘வடசென்னை’, ‘மாலிக்’ படங்கள் குறித்து ஆசிரியர் எழுதுகையில், ரவுடியிசத்திற்கும் மாஃபியாவுக்குமான வேறுபாட்டை நுணுகி ஆராய்ந்து விளக்கி, எப்படி மாஃபியாக்கள் நிறுவப்பட்ட அரசுக்கு எதிராக நின்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகப் பேசும் நிலையினால், மக்களின் செல்வாக்குப் (அது பயத்தின்பாற்பட்டதாகவும் இருக்கலாம்) பெற்றவர்களாக உருவாகின்றனர் என்று கூறுவது ஒரு மாறுபட்ட பார்வை. பொதுவாக இத்தகைய மாஃபியாக்கள் உருவாகும் தன்மை, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறும் முறைமை குறித்தெல்லாம் இந்தப் பார்வையிலிருந்து விரித்து ஆராய முனைந்தால் அது சமூக இயக்க அறிதலுக்கான ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கும்.
வெகுசனத் தளத்தில் பெரிதாகக் கவனிக்கப்படாத ‘வரனே ஆவஷ்யமுண்டு’, ‘நசீர்’, ‘சீரியஸ்மென்’, ‘குருதி’, ‘சர்தார் உத்தம்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘தல்லுமாலா’, ‘விட்னெஸ்’, ‘ரத்தசாட்சி’ போன்ற திரையாக்கங்கள் குறித்த தனக்கே உரித்தான விமர்சனப் பார்வையுடனான கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
‘டான்’ போன்ற படங்களில் தொடர்ந்து பொறியியல் படிப்பைக் கலாய்ப்பது, பொறியாளர்கள் என்றாலே வேலையில்லாமல் திரிபவர்கள் போன்ற சித்திரத்தை உருவாக்குவது என்ற காட்சியமைப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், மிக வசதியாக யதார்த்தத்தில் அதே பொறியியல் பட்டப்படிப்பு பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகள் பலர் தங்கள் குடும்பங்களை முன்னேற்றியுள்ள கதைகளை மறைத்துவிடுகிறார்கள் எனக் கூறுவது ஒரு முக்கியமான கருத்து. பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள வேலையில்லா நிலையானது உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தின் அடிப்படையில் நிகழ்ந்தது என்பதையும் இத்தகைய திரையாக்கங்கள் கவனத்தில் கொள்வதில்லை என்ற இல்யாஸின் ஆதங்கமும் கவனம் கொள்ளத்தக்கது.
சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, அதிகாரத்திற்கு எதிரான நாயகக் குரல், (இடதுசாரி, தலித்தியம் உள்ளிட்ட) அரசியல் பேசும் பிரதானக் கதைக்களம் என்பவை எல்லாம் எப்படி இப்போது புதிய வணிக சினிமாவுக்கான கச்சாப் பொருள்களாக மாறியுள்ளன என்பதையும் அவ்வாறான கூறுகள் இருந்தாலே அது ஒரு முற்போக்குப் படம் என்று வணிக சினிமாக் களம் முன்வைப்பதை ஒரு முதலீட்டிய தந்திரமாகவே ஆசிரியர் சில கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அது உண்மைதான் என்றாலும், குறைந்தபட்சம் அப்படியாவது வெகுசனத்தளத்தில் இத்தகைய கருத்துகள் பரவலாகட்டும் என்பது நமது அவாவாக இருக்கிறது என்பதையும் மறுக்கவியலாது.
அரசதிகார நிறுவனங்கள் – அமைப்புகள் (நீதித்துறை, காவல்துறை போன்றவை) மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கையான வாக்கு அடிப்படையிலான தேர்தல் நடைமுறை போன்றவற்றின் மீதான ஓர் அவநம்பிக்கை உணர்வு நூல் முழுக்கக் (குறிப்பாக ‘ஜெய்பீம்’, ‘மண்டேலா’ போன்ற திரையாக்கங்களைப் பற்றி எழுதும்போது) காணக் கிடைக்கிறது. அதற்கான ஆசிரியரது நியாயங்கள் (நெடுங்காலமாக விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் எண்ணற்ற இசுலாமிய இளைஞர்கள் சிறையில் வருந்திக்கிடப்பது போன்ற காரணங்கள்) முழுக்க ஏற்கத்தக்கவைதான் என்றாலும் கூட முற்று முழுதாக நீதித்துறை, தேர்தல் போன்றவற்றையும் சனநாயக அமைப்பில் நாம் விலக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது.
‘ஜெய்பீம்’, ‘ஆர்ட்டிகிள் 15’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட பல படங்களில் தற்போது ஒரு ‘மீட்பரின்’ வருகையை எதிர்நோக்கும் வகையில் திரையாக்கம் அமைக்கப்படுவது, பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே ஒரு திரட்சியாக ஒருங்கிணைந்து போராடும் நிலையை மறுதலிக்கும் வகையில் உள்ளதாகவும், ‘மீட்பரின் வருகை’ என்பது ஒரு வகையில் போராட்ட உருவாக்க சூழலையும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்தே உருவாகும் தலைமையையும் புறந்தள்ளுவதாகவும் இருப்பதாகக் கருத இடமுண்டு என்றும் சில கட்டுரைகளில் இல்யாஸ் குறிப்பிடுவது ஒரு வகையில் ஏற்கத்தக்கதுதான் என்றாலும், எல்லா நிகழ்வுகளிலும் நாம் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஒத்த கருத்துடையவர்கள் பேசுவதையும் அவர்களுக்காகச் செயல்படுவதையும் முற்றிலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன். பிரதான எதிரிகளை விட்டுவிட்டு நேச சக்திகளை எதிர்ப்பது என்பது விலகல்வாதத்திற்கே வழியேற்படுத்தி கடைசியில் ஜெயமோகன் போன்றோரை எல்லாம் தலித்திய ஆதரவாளராக முன்னிருத்திவிடும் போக்குக்கே வழிவகுக்கும் என்று அணிந்துரையில் சுகுணா திவாகர் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
வெகுசன சினிமா முதல் ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப்சீரிஸ் வரை தனது தனித்துவமான விமர்சனப் பார்வையை கருத்தியல் தளத்தில் மிக எளிமையான மொழியில் முன்வைக்கிறது ர.முகமது இல்யாஸின் இந்நூல்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “இந்து தேசியம், இந்திய சினிமா” கட்டுரை தொகுப்பு |
| ஆசிரியர்: | ர.முகமது இல்யாஸ் |
| வெளியீடு: | சீர்மை நூல்வெளி |
| விலை: | ₹.160 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அன்புச்செல்வன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

