திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல் எனப் புலம்பும் நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் அனைத்தும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆம் , நம்மைச் சுற்றி சின்ன சின்ன விஷயங்கள் ( உ. ம் ) ரேஷன் கடை ஊழல் , அரசு கட்டிடம் கட்டுவதில் ஊழல் , சாலை போடுவதில் ஊழல் என இவற்றையே கண்டு பொங்கி அடுங்கும் மனோபாவம் , புலம்பும் மனோபாவம் , கண்டும் காணாமல் போகும் மனோபாவம் ,நமக்கென்ன என்ற மனோபாவம் கொண்டு அணுகும் போது இத்தனை லட்சம் கோடிகளை ஊழலில் பார்த்து அது பற்றி கடந்து போகும் மனோபாவம் கொண்ட கைப்பாவை மக்களாகவே ஆக்கப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.
என்றால் அப்படியே விட்டு விடுவதா ? கூடாது என்று தான் 48 பக்கங்களை ஒரு பெரும் போராட்ட நாட்களோடு கடந்த வருடம் இப்புத்தகத்தை வெளியிட்டது பாரதி புத்தகாலயம். எஸ்.விஜயன் எழுதி ரூ 15க்கு விற்பனைக்கு வந்துள்ளது .
இதில் வருவதெல்லாம் என்னென்ன ? பாதுகாப்பு அமைச்சகம் , விமான உற்பத்தி , இராணுவத் தளவாடம் , அம்பானி , போர் விமானம் , தணிக்கை அமைப்பு , உச்ச நீதிமன்றம் , நிபுணர் குழு
தேர்தல் பத்திரம் (Electoral Bond)
இத்யாதி இத்யாதி ….
விமானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விடும் மக்களே பெரும்பான்மையானவர் நமது நாட்டில் , இவர்களை ஏமாற்றி விடலாம் என்று தான் மக்களைக் காக்க வேண்டிய வேந்தர் கூட்டம் இப்படி வில்லத்தனமான வேலை எல்லாம் தைரியமா செய்யுது.
இப்படிப் பாருங்கள் ..இந்த ரபேல் ஊழலை ஒப்பிடும் போது மினியேச்சர் ஊழல் விவகாரங்களை உள்ளடக்கிய சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். என்றாவது இந்த மினியேச்சர் ஊழல்களைப் புறந்தள்ளாமல் எதிர்க்கத் துணிந்து கேள்வி கேட்கிறோமா ? நமது ஒவ்வொருவரது பணி சார்ந்த துறையிலும் இது போன்ற ஊழல்களை சமீப காலங்களில் ஏராளமாக சந்தித்து வருகிறோம்.
உதாரணம் : கல்வித்துறை … இதில் கூட கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 38 கோடி ஊழல் என்று பல தொலைக்காட்சி , இதழ்களில் தொடர்ந்து செய்தி வந்தது. அது உண்மையா ? பொய்யா ? அல்லது அதன் முடிவு என்ன எதுவுமே பேசப்பட வில்லை. இப்படி சின்ன ஒரு இடத்தில் குறைவான பணப்புழக்கம் உள்ள இடத்திலேயே இத்தனை கோடிகள் ஊழல் , அதுவும் மக்களின் வரிப்பணம் , எதுவுமே கண்டு கொள்ள ஆளில்லாத ஒரு சமூகம் , அப்படி என்றால் பெரிய நாடு , கைக்கு எட்டாத தூரம்காதுக்கு எட்டாத செய்திகள் மக்கள் ஏமாற்றப்பட்டு இவ்வளவு லட்சம்கோடிகளின் ஊழல் ..
டென்டர் வாங்கி ஒரு ஒப்பந்தம் போடுவது தான் முறை எனத் தெரிந்தும் அனைத்தையும் ஒதுக்கி , ஆறு நிறுவனங்கள் சமர்ப்பித்த தொழில்நுட்ப விபரக்குறிப்புகளின் அடிப்படையில் அவற்றை மதிப்பீடு செய்யும் பணி கண்துடைப்பாக நடைபெற்று ,தொழில்நுட்ப பரிசீலனையில் ரசியாவின் மிக்-35 மட்டும்தான் விமானப்படை முடிவு செய்திருந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் விதமாக இருந்த போதிலும் , ரஷ்யா பாரம்பரியமாக தேவையான ராணுவதளவாடங்களை இந்தியாவிற்கு தருவதில் முதல் இடம் வகிக்கும் நாடாக இருந்த போதும் அதைத் தவிர்த்து பிரெஞ்சு நாட்டின் தசால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது முதல் , பல பல முடிச்சுகள் ..
ஏறத்தாழ இராணுவத் தளவாட உற்பத்திக் கொள்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் நடப்பதைப் பதிவு செய்கிறது இப்புத்தகம் , அப்போ தலைமுறை தலைமுறையா மக்கள் ஏமாந்து வருவது பெரும் அவலமில்லையா ?
கல்வி எதுக்கு ? நியாயம் ? மக்களாட்சி ? நீதிமன்றம் ? அரசியல் சாசனச் சட்டம் ? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ? அப்புறம் எதுக்கு நீதி நூல்கள் எல்லாம் சொல்லித் தறீங்க ? யாரை ஏமாத்தறீங்க ?
சட்டப் பூர்வமா ஊழலை அல்லவா இந்த அரசு செய்துள்ளது ?இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விட்டதை நாம் எப்படி அனுமதிப்பது ?
விசாரணைக் கமிஷன்களிலிருந்தும் வழக்கிலிருந்தும் மாட்டிக் கொள்ளாமல் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பட்டு வந்த ஊழலை எப்படி ஏற்றுக் கொள்வது ?
விழிப்புடன் இருப்போம் இனிவரும் நாட்களிலாவது…
குறைந்தபட்சம் நிகழ்கால வரலாற்றை சரியாகக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வாவது ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் உடனடியாகப் படிக்க வேண்டும். வரலாறு தவறாக எழுதப்படாமல் இருக்கவும் கவனமாக வரும் நாட்களை எதிர் கொள்ள வேண்டும்.