தரவு மையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்
– ரகுநந்தன்
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின்
(All India People’s Science Network – AIPSN)
மேனாள் அகில இந்திய தலைவர்.
தமிழில்: மோசஸ் பிரபு
ஒவ்வொரு நொடியும் இணைய வெளியில் உருவாகும் கோடிக்கணக்கான தரவுகளைப் பாதுகாத்து முறைப்படுத்தி பயனுள்ள தகவல்களாக மாற்றும் மையங்களே தரவு மையங்கள் (Data Centres) என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த தரவு மையங்கள் அதிகரித்து வருகின்றன. USA மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தரவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதைப் போலவே, இந்தியாவிலும் மின்சாரம், நீர் மற்றும் பிற சுற்றுச்சூழல் வளங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தற்போது பெரும் விவாதங்களை உருவாக்கி வருகின்றன.
ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர நகரமான விசாகப்பட்டினத்தில் அதானி கானெக்ஸ் (Adani Connex) நிறுவனத்துடன் கூகுள் நிறுவனமும் இணைந்து 1 ஜிகாவாட் (1,000 மெகாவாட்) திறன் கொண்ட ஹைப்பர்ஸ்கேல் தரவு மையத்தை அமைத்து வருகிறது. இந்தியாவில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மிகப்பெரிய அளவிலான முதல் திட்டமாக இவை இருப்பதால், மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் தற்போது விவாதமாகியுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஆறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் (சுமார் ரூ.53,250 கோடி) முதலீடு செய்யப்படவுள்ளது. விசாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள மூன்று இடங்களில் இந்த தரவு மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும், ஏர்டெல் நிறுவனம் அதிவேக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்க இத்திட்டத்தில் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளது.
USAவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும் அதிக முதலீடும், மிகப்பெரிய தரவு மையத் திட்டமும் இதுதான் எனக் கூறப்படுகிறது. பல நாடுகளுடன் இணைப்பை ஏற்படுத்த உதவும் கடலடியில் அமைக்கப்பட்ட ஒளியிழை (Optical Fibre) கேபிள்கள் நிலப்பரப்பை அடைந்து, தேசிய தொலைத்தொடர்பு வலையமைப்புடன் இணைக்கப்படும் (Landing Centres) தொழில்நுட்ப வசதி ஏற்கனவே இயங்கி வருகிறது. தற்போது புதிய தரவு மையங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற கட்டமைப்பு வசதிகள் எல்லாம் சேர்த்து, 2026-2030 காலகட்டத்தில் விசாகப்பட்டினம் செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தில் மட்டும் 10 முதல் 15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சிகள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் கணினி (Cloud Computing) ஆகிய துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டுக்கான வாய்ப்பு உருவாகி வருவதைக் காட்டுகின்றன. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ கூற்றுப்படி, 2047ஆம் ஆண்டு வரை வழங்கப்படும் வரிச்சலுகைகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடுகள் இந்தியாவிற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரவு மையங்கள் (Data Centres)
தரவு மையங்கள் என்பது தகவல்களை சேமித்தல், செயலாக்குதல், பகிர்ந்தளித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கிளவுட் (Cloud) சேவைகளை வழங்கும் இணையத்தின் பின்புல (Back-end) உள்கட்டமைப்பாக நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக முன்னேற்றம், தரவு மையங்களின் எண்ணிக்கை மற்றும் பரவல் ஆகிய இரண்டிற்குமான தேவையை பல மடங்கு அதிகரித்துள்ளது.
உலகளவில் தற்போது சுமார் 10,000 முதல் 12,000 வரை தரவு மையங்கள் உள்ளன. அவற்றில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 5,000 தரவு மையங்கள் செயல்படுகின்றன. இவை:
1. மிகச்சிறிய அளவு (Micro),
2. ஓரளவு அதிகம் (சுமார் 100 மெகாவாட்),
3. பெரிய அளவு (சுமார் 200 மெகாவாட்) மற்றும்
4. மிகப்பெரிய அல்லது ஹைப்பர்ஸ்கேல் (Hyperscale) (1,000 மெகாவாட் அல்லது 1 ஜிகாவாட் மற்றும் அதற்கு மேல்) என பல அளவுகளில் உள்ளன.
2024ஆம் ஆண்டில் உலகளாவிய தரவு மையங்களின் மொத்த மின்திறன் சுமார் 122 ஜிகாவாட் (GW) ஆக இருந்தது. இதில் USA மொத்த திறனில் பாதிக்கும் சற்றுக் குறைவான பங்கைக் கொண்டிருந்தது. சீனா சுமார் 20%, ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 12% என்ற அளவில் பங்களிப்பு செய்தன.
2024ஆம் ஆண்டில் உலகளாவிய தரவு மையச் சந்தையின் மதிப்பு சுமார் 243 பில்லியன் USA டாலர் என மதிப்பிடப்பட்டது. இது 2032ஆம் ஆண்டுக்குள் 585 பில்லியன் USA டாலராக உயரும் எனவும், ஆண்டுதோறும் சராசரியாக 11.7% என்ற அளவில் வளர்ச்சி காணும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கிளவுட் சேவைச் சந்தையில் முன்னிலை வகிக்கும் நான்கு முக்கிய இணையத் தரவு நிறுவனங்களில்:
1. அமேசான் (29%),
2. மைக்ரோசாப்ட் (20%),
3. கூகுள் (12%)
ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து உலகின் 63% கிளவுட் சேவைகளை வழங்குகின்றன. இதனுடன், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) உலகம் முழுவதும் பரந்த அளவிலான தரவு மையங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை அதன் சொந்த சேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. சீனா தனது பெரும்பாலான தரவுகளை நாட்டிற்குள்ளேயே சேமித்து வைக்கிறது, இதன் மூலம் தரவுப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
USAவிற்கு வெளியே தரவு மையங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது வேகமாக விரிவடைந்து வருகின்றன. இதற்கு முக்கியமான காரணங்கள்:
1. உலகின் பல்வேறு பகுதிகளில் தரவு மையங்களுக்கான தேவை அதிகரித்திருப்பது.
2. தரவு பெறுவதற்கு ஏற்படும் தாமதத்தை (Data Latency) குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, தகவல்கள் மற்றும் சேவைகள் பரிமாறப்படுவதற்கான நேர இடைவெளியைக் குறைப்பது.
3. பல நாடுகள் தரவு உள்ளூர்மயமாக்கலை (Data Localisation) வலியுறுத்துவது. அதாவது, அந்த நாட்டில் உருவாகும் தரவுகள் அந்நாட்டிற்குள்ளேயே சேமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவது.
4. குறைந்த மின்சாரச் செலவு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பது.
இந்தப் பின்னணியில், இந்தியா மிக முக்கியமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக உருவெடுத்துள்ளது. தரவு உள்ளூர்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் இறையாண்மையை (Digital Sovereignty) வலியுறுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் சுமார் 90 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். உலகின் மொத்த தரவுகளில் சுமார் 20% தரவு இந்தியாவில் மட்டுமே உருவாகிறது. ஆனால், உலகளாவிய தரவு மையத் திறனில் இந்தியா தற்போது சுமார் 3.6% மட்டுமே கொண்டுள்ளது.
தரவு உள்ளூர்மயமாக்கல், இறையாண்மை மற்றும் ஒழுங்குமுறை
தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் உருவாக்கும் மிகப்பெரிய அளவிலான தரவுகள், பெரும்பாலும் USAவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சொந்தமான தரவு மையங்களில் சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இத்தகைய பெருமளவிலான தரவுகள் வணிக இலாபத்திற்காகப் பயன்படுத்தப்படுவதோடு, தற்போது ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகள் மற்றும் தன்னாட்சி முகவர்கள் (Autonomous Agents) ஆகியவற்றை உருவாக்கவும் பயிற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தரவுகள் அரசியலில் செயற்கையாக உருவாக்கப்படும் கருத்து மாற்றம் (Political Manipulation), உளவுத்துறை தகவல் சேகரிப்பிற்காகவும் (Intelligence Gathering) மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் மிகக் குறைந்த வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகின்றன. எனவே, இத்தரவுகளை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், தரவுகள் கட்டாயமாக ஐரோப்பிய நாடுகளுக்குள்ளேயே சேமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை எனினும், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க மிகவும் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அந்தச் சட்டங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் தோன்றிய தனிநபர் தரவுகள் உலகின் எந்த நாட்டில் சேமிக்கப்பட்டிருந்தாலும், அவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றிய தனியுரிமைச் சட்டங்களே பொருந்தும்; அதன்படி அவர்களின் தரவுகள் பாதுகாக்கப்படும்.
இந்தியாவில் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது “டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act, 2023)” ஆகும். ஆனால் இந்தச் சட்டம், இந்தியாவில் உருவாகும் அனைத்து தரவுகளும் கட்டாயமாக இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும் என்று கூறவில்லை. அவற்றின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து சில விதிமுறைகளை மட்டுமே வகுக்கிறது. குறிப்பாக, தனிநபர்களின் நிதி விவரங்கள், மருத்துவத் தகவல்கள் போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகளும், அரசு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தரவுகளும் இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

ஒழுங்குமுறைகள், நடைமுறைகள் மற்றும் அதிகரித்து வரும் எதிர்ப்புகள்
இந்தியாவில் தரவு பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறைகள் இருந்தாலும், அவற்றின் நடைமுறை அமலாக்கம் மற்றும் இந்தியாவிலேயே சேமிக்கப்படும் தரவுகளின் உண்மையான பயன்பாடு இன்னும் பல சிக்கல்களைக் கொண்டதாகவே உள்ளது. குறிப்பாக, நிறுவனங்கள் இந்தத் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து போதுமான வெளிப்படைத்தன்மை இல்லை.
அதேபோல, அரசாங்கம் தனிநபர் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதும் தெளிவாக இல்லை. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் பல குடிமைச் சமூக அமைப்புகள், கண்காணிப்பு (Surveillance), தணிக்கை (Censorship) மற்றும் தனிநபர் தரவுகளின் அரசியல் பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு குறித்து பல கேள்விகளையும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தியுள்ளன. மேலும், அரசாங்கத்திற்கும் பெருநிறுவனங்களுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டணி (Nexus) பொதுநலனுக்கு எதிரானதாக அமையக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் எதிர்ப்புகள்
உலகம் முழுவதும் இந்தப் பிரச்சினைகள் குறித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்தாலும், USA மற்றும் ஐரோப்பாவில் தரவு மையங்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகும். அமெரிக்காவில், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினால், சுமார் 64 பில்லியன் USA டாலர் மதிப்புள்ள தரவு மையத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், நெதர்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் விளைவாக, தொழில்துறை அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 42 பில்லியன் USA டாலர் மதிப்புள்ள தரவு மையத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தரவு மையங்களுக்கு எதிரான முக்கிய காரணங்கள்
தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் எழுப்பும் முக்கிய எதிர்ப்புகள் பின்வருமாறு:
1. பொதுச் செலவினங்கள் குறைக்கப்படும் (Public Austerity) சூழலில், உள்ளூர் நிர்வாகங்கள் தரவு மைய நிறுவனங்களுக்கு அதிகளவில் மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்குவது.
2. மின்வலையமைப்பு (Power Grid), மின்சார விநியோகம் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மீது மிகப்பெரிய அழுத்தம் ஏற்படுத்துவது.
3. தரவு மையங்களை குளிர்விக்க (Cooling) அதிகளவு நீர் தேவைப்படுவதால், ஏற்கனவே நீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் நீர்வளத்தின் மீது கடுமையான அழுத்தம் ஏற்படுவது.
4. இடைவிடாமல் இயங்கும் சர்வர்கள் (Servers) உருவாக்கும் தொடர்ச்சியான இரைச்சல் மாசு (Noise Pollution).
5. தரவு மையங்கள் அமைப்பதற்காக பசுமைப் பகுதிகள் மற்றும் திறந்த வெளிகள் அழிக்கப்படுவது.
குறிப்பாக, ஹைப்பர்ஸ்கேல் (Hyperscale) தரவு மையங்களில் இத்தகைய பிரச்சினைகள் பல மடங்கு அதிகரிக்கின்றன.
இந்தப் பின்னணியில், இந்தியாவும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. போதிய வெளிப்படைத்தன்மை இல்லாமை, ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் ஆகியவை இந்தப் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்: தரவு மையங்கள் குறித்த புதிய கவலைகள்
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்கள் (Data Centres) ஆகியவை நவீன தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்பட்டாலும், இன்று அவை சுத்தமான (Clean), பசுமையான (Green), நவீன (Modern) தொழில்நுட்பங்களாக இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கட்டமைப்புகளாக பார்க்கப்படத் தொடங்கியிருப்பது ஒரு முரண்பாடான நிலையாகும்.
பொதுமக்கள் இந்தத் தொழில்நுட்பங்களை பொதுவாக எதிர்க்கவில்லை. ஆனால், “எங்கள் பகுதியில் மட்டும் வேண்டாம்” என்ற மனநிலையே அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதை NIMBY என அழைப்பார்கள். அதாவது Not In My Back Yard – “என் வீட்டுப் பின்புறத்தில் வேண்டாம்” என்பதே இதன் பொருள்.
மின்சார நுகர்வு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள்
தரவு மையங்கள் செயல்படுவதற்கும் அவற்றை குளிர்விப்பதற்கும் (Cooling) மிகப்பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. இது உலகளவில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் 1 ஜிகாவாட் ஹைப்பர்ஸ்கேல் தரவு மையத் திட்டம் தொடர்பாக இந்த மின்சாரத் தேவைகள் குறித்து அரசு போதுமான அளவில் விவாதிக்கவில்லை.
விசாக் திட்டம் பெருமளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy – RE) மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதில் சுமார் 80% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடிப்படை (Base Load) மற்றும் அதிகப்படியான (Peak Load) மின்தேவைகளை பூர்த்தி செய்யவும், வெப்ப அலைகள் (Heat Waves) ஏற்படும் காலங்களில் கூடுதல் குளிர்விப்பை வழங்கவும், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைச் சமநிலைப்படுத்தவும், புதைபடிவ எரிபொருள் (Fossil Fuel) மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் கூடுதலாக தேவைப்படலாம்.
கூகுளின் 6 பில்லியன் USA டாலர் முதலீட்டில், 2 பில்லியன் USA டாலர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் இந்தத் திட்டத்திற்கான தனி மின்வலையமைப்பு (Dedicated Grid) உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என ஆந்திரப் பிரதேச அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
மறுபுறம், அதானி குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சில நிறுவனங்கள், விசாக் தரவு மையம் 100% அதானியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் மட்டுமே இயக்கப்படும் என்றும், மின்சாரச் சுமையைச் சமநிலைப்படுத்த உள்ளூர் அளவிலான மின்சார சேமிப்பு வசதிகளும், மின்வலையமைப்பை மேம்படுத்துவதற்கான முதலீடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
ஆனால், இத்தகைய கூற்றுகளுக்கான துல்லியமான தொழில்நுட்ப விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கோடைக்காலங்களில் சுமார் 1,500 மெகாவாட் மின்தேவையை சந்தித்து வரும் விசாக் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில், தரவு மையங்கள் பெரும்பாலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தினாலும், அவற்றின் மொத்த மின்சார நுகர்வு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின்விநியோக வலையமைப்புகள் மீது கடுமையான அழுத்தம் உருவாகியுள்ளது.
இதன் விளைவாக, மற்ற தொழில்துறைகளில் பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வுகளைக் குறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்படவிருக்கும் சில விளைவுகள்:
• 2030ஆம் ஆண்டுக்குள் தரவு மையங்களின் மின்சாரப் பயன்பாடு 170% அதிகரிக்கும்.
• உலகளவில் தரவு மையங்களால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் (GHG) மொத்தம் 2.5 பில்லியன் டன் அளவில் கார்பன் டைஆக்சைடு (CO2 equivalent) அளவு அதிகரிக்கக் கூடும்.
• ஏற்கனவே 2022ஆம் ஆண்டில் உலகின் 30-வது அதிகளவு உமிழ்வுகளைக் கொண்டிருந்த முன்னணி ஐந்து தரவு நிறுவனங்களின் உமிழ்வுகளும், வரும் ஆண்டுகளில் மேலும் வேகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
நீர் பயன்பாடு மிகப் பெரிய சவால்
தற்போது இந்தியாவில், தரவு மையங்கள் எவ்வளவு நீரைப் பயன்படுத்துகின்றன என்பதை பொதுமக்களுக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என எந்தச் சட்டமும் வலியுறுத்தவில்லை. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2020ஆம் ஆண்டில் தரவு மையங்களுக்கான வரைவு கொள்கையை (Draft Policy) வெளியிட்டது. ஆனால், அந்தக் கொள்கை இதுவரை இறுதி செய்யப்படவில்லை.
விசாகப்பட்டினம் தரவு மையத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி ஆவணங்களை ஆய்வு செய்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், அந்தத் திட்டத்திற்கு தேவையான நீர் எங்கிருந்து பெறப்படும் என்பது குறித்து எந்தத் தகவலும் அனுமதி ஆவணங்களில் இடம்பெறவில்லை. மேலும், கூகுளும், ஆந்திரப் பிரதேச அரசும் இந்த விவகாரத்தில் போதுமான தகவல்களை வெளியிடவில்லை என்றனர்.
தரவு மையங்களில் இயங்கும் சர்வர்கள் மற்றும் மின்னணு சிப்கள் மிக அதிக வெப்பத்தை உருவாக்குகின்றன. அவை சேதமடையாமல் தொடர்ந்து இயங்குவதற்காக, அந்த வெப்பத்தைத் திறம்பட வெளியேற்றும் பல்வேறு குளிர்விப்பு (Cooling) தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய குளிர்விப்பு முறைகளில் பல, மிகப்பெரிய அளவில் நீர் மற்றும் மின்சாரத்தை நுகர்வதால், அவை சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தரவு மையங்களின் குளிர்விப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் நீர்ப் பயன்பாடு

தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் பழமையான மற்றும் குறைந்த செயல்திறன் கொண்ட குளிர்விப்பு முறை ஆவியாக்கக் குளிர்விப்பு முறையாகும் (Evaporative Cooling). இந்த முறையில், மிகப்பெரிய அளவில் நீர் சுழற்சி முறையில் செலுத்தப்பட்டு, சர்வர்கள் உருவாக்கும் வெப்பத்தை உறிஞ்சி எடுத்துச் செல்கிறது. பின்னர் அந்த நீர் ஆவியாக்கப்படுகிறது. அதன் பிறகு உருவாகும் நீர்த்துளிகள் (Condensate) மீண்டும் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்யும் போது மிக அதிக அளவு நீர் வீணாகிறது.
காற்றுக் குளிர்விப்பு (Air Cooling) முறையும் சில தரவு மையங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்கு மிக அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும், வெப்பமான மற்றும் அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் இந்த முறை போதுமான செயல்திறனை வழங்குவதில்லை.
இதற்குப் பதிலாக, நவீன தரவு மையங்கள், மூடிய சுழற்சி (Closed-loop) குளிர்விப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இதில், ஒருமுறை மட்டுமே நீர் நிரப்பப்படுகிறது. அந்த நீர் வெப்பத்தை உறிஞ்சி, பின்னர் வெப்பப் பரிமாற்றிகள் (Heat Exchangers) மூலம் குளிர்விக்கப்பட்டு மீண்டும் அதே அமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீர் பயன்பாடு கணிசமாகக் குறைகிறது.
மாற்று குளிர்விப்பு முறைகள்
நீரின் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு மாற்று வழிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
• மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்துதல்.
• கடல் நீரைப் பயன்படுத்துதல். ஆனால், கடல் நீரில் உள்ள உப்பு காரணமாக அரிப்பைத் (Corrosion) தடுக்க விலையுயர்ந்த, அரிப்பில்லாத (Non-corrosive) குழாய்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.
• கடல் நீரிலிருந்து உப்பை நீக்குவதற்கு (Desalination) ஆலைகள் மூலம் சுத்திகரித்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
சில தரவு மையங்களில் மூடிய சுழற்சி நேரடி-சிப் (Closed-loop Direct-to-Chip Cooling) குளிர்விப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. இதில், சிறப்பு வகை திரவங்கள் (Special Cooling Liquids) கணினி சிப்களுக்கு மிக அருகில் சுழற்றப்பட்டு, வெப்பத்தை நேரடியாக வெளியேற்றி பின்னர் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இந்த அனைத்து தொழில்நுட்பங்களும் தற்போது வணிக ரீதியாக கிடைக்கின்றன மற்றும் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இவற்றில் நவீன தொழில்நுட்பங்களை நிறுவுவதற்கு ஆரம்ப முதலீட்டுச் செலவு (Up-front Cost) மிகவும் அதிகமாகும். எனவே, இங்கு உள்ள முக்கியத் தடையாக இருப்பது தொழில்நுட்பக் குறைபாடு அல்ல, நிதிச் செலவுதான்.
விசாகப்பட்டினத் திட்டமும் பொதுமக்களின் கவலையும்
விசாகப்பட்டினத்தில் (விசாக்) 1.5 ஜிகாவாட் திறன் கொண்ட ரிலையன்ஸ் (Reliance) தரவு மையத் திட்டம், கடல் நீரை உப்புநீக்கி பயன்படுத்துவதற்காக கூடுதலாக 80 ஏக்கர் நிலத்தை உப்புநீக்க ஆலை (Desalination Plant) அமைக்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் தனது நீர்த் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறைந்தபட்சம் பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.
ஆனால், கூகுள்-அதானி (Google-Adani) கூட்டுத் திட்டம் தங்களது தரவு மையங்களில் நீரை எங்கிருந்து பெறுகின்றன, எவ்வளவு பயன்படுத்துகின்றன, எந்த குளிர்விப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து பொதுமக்களுக்கு எந்தத் தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையில், குறிப்பாக ஏற்கனவே நீர்வள சிக்கலை எதிர்கொண்டிருக்கும் விசாக் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலும், அரசு இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்காமல் இருப்பதாகவும், பிரச்சினையைப் புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒழுங்குமுறை அமைப்பின் சீர்குலைவு (Regulatory Collapse)
விசாகப்பட்டினத்தில் (விசாக்) திட்டமிடப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud) மையம், குறைந்தபட்சம் 6.5 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட பல ஹைப்பர்ஸ்கேல் (Hyperscale) தரவு மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில்:
• விவசாய நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள்,
• மீன்வளப் பகுதிகள் மற்றும் கடலோர நிலங்கள்,
• காடுகள், குறிப்பாக குறிப்பிடத்தக்க அளவிலான ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகள் (Reserved Forests),
• விசாக் நகரின் குடிநீர் வழங்கலுக்கான முக்கிய நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் (Catchment Areas),
• அருகிலுள்ள கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம் (Kambalakonda Wildlife Sanctuary) ஆகியவை அடங்கும்.
இவ்வளவு விரிவான சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருந்தபோதிலும், இப்பிரச்சினைகள் குறித்து போதிய கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, இந்தத் திட்டம் “மிகக் குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள்” எனக் கருதப்படும் Category B2 பிரிவின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்காக (Environmental Clearance) அந்நிறுவனம் ஏப்ரல் 9 அன்று விண்ணப்பித்துள்ளது. அதற்கு வெறும் ஒன்பது நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 18 அன்று, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority – SEIAA) அனுமதி வழங்கியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
உண்மையில், இத்தகைய ஹைப்பர்ஸ்கேல் தரவு மையங்கள், அவற்றின் பரந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, A1 பிரிவு திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டு, முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு (Environmental Impact Assessment – EIA) உட்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகிறார்கள். விசாக் தரவு மையத் திட்டத்தில் காணப்படும் இந்த ஒழுங்குமுறை சமரசங்கள், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு “வணிகம் செய்வதை எளிதாக்குதல்” (Ease of Doing Business) என்ற பெயரில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டதன் விளைவாகவே ஏற்பட்டுள்ளன.
விசாக் திட்டமே எதிர்காலத்திற்கான ஒரு முன்னுதாரணமாக இருக்குமெனில், இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பும் சுற்றுச்சூழல் போராட்டங்களும் அதிகரிக்கக்கூடும்.
📚 எழுதியவர்:

– ரகுநந்தன்
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின்
(All India People’s Science Network – AIPSN)
மேனாள் அகில இந்திய தலைவர்.
தமிழில்: மோசஸ் பிரபு
(https://www.newsclick.in/data-centres-environment-vizag-and-beyond
22 ஜூன் நியூசிக்க்ளிக்கில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

