பிரதமர் நரேந்திர மோடி 2022 பிப்ரவரி 07 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் திரும்பிப் பார்க்கின்ற போது அந்த உரை அவருக்குப் பெருமை சேர்த்திருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது குடிமக்கள் அவரிடமிருந்து நாட்டின் மீது அரசியல்வாதி ஒருவர் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையையே எதிர்பார்ப்பார்கள்; அனைத்துக் கட்சிகள், எம்.பி.க்களிடம் அடிப்படையான மரியாதையை அவர் வெளிப்படுத்துவார் என்றே அவரிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமர்தான் அவையின் தலைவர். அவர் அங்கே தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் தலைவராக இருப்பதில்லை. அவரையும், அவரது அரசாங்கத்தின் செயல்பாட்டையும் விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. எதிர்க்கட்சியினர் எழுப்புகின்ற கேள்விகளின் மூலமாக பாராளுமன்றம் மற்றும் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகவே பிரதமரும், அவரது அரசாங்கமும் இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளும் நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்றாலும் பிரதமர் வேறு தரத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறார். திமிர் பிடித்தவராக அல்லது விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவராக பிரதமர் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பிரதமர் மோடியின் அன்றைய பேச்சு பொய்யாக்கியுள்ளது. தன்னுடைய பொறுமையை இழந்து போன அவருடைய பேச்சின் தொனி ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்?’ என்று கேட்பதாகவே இருந்தது. மேலும் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை அதாவது எதிர்க்கட்சியை மிகவும் மலினமாகவே அவர் நடத்தியிருந்தார்.
பிரதமரின் பேச்சிற்கு சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு மிகவும் காரசாரமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பிரதமரை ‘ராஜா’ என்று அன்றைய தினம் ராகுல் விளித்திருந்தார். நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளை பிரதமர் சிறுமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். பன்முகத்தன்மையைப் புறக்கணிப்பது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான பலவீனமான உறவைச் சிதைப்பது குறித்து ராகுலால் மோடி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை ஒன்றிய அரசால் மட்டுமே ஆள முடியாது என்றும், மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகப் பேசியிருந்தார். அரசியலமைப்பு ரீதியாக இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது என்றும், பாஜகவின் பார்வையில் இருப்பதைப் போல அது ஒரு தேசமாக இல்லை என்றும் பிரதமருக்கு ராகுல் நினைவூட்டிக் காட்டினார்.
ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்கள் செல்வந்தர்களுக்கு மற்றொன்று என்று இரு வகை இந்தியா இருந்து வருகிறது என்று ராகுல் கூறிய போது அது பிரதமரைச் சற்றே அசைத்துப் பார்த்தது; அம்பானி, அதானி ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் மூலதனத்தின் மோசமான மையப்படுத்தல் மோடி பொறுப்பேற்றதிலிருந்தே இந்தியாவில் மிகவும் யதார்த்தமான ஒன்றாகி விட்டது என்று கூறினார்.
ராகுல் காந்தி இன்னும் கண்ணியமாகப் பேசியிருந்திருக்கலாம் என்று சொல்பவர்கள்கூட பிரதமர் அவ்வாறாகப் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மோடி நுணுக்கம் அறிந்தவரில்லை. யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் நெட்டித் தள்ளுகின்ற அணுகுமுறையே அவருடைய தனிச்சிறப்பான ஆளுமையாக இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாயைப் போல மோடி ஒன்றும் பாராளுமன்ற மரபுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவர் இல்லை. பாராளுமன்றத்திற்குள்ளே முதன்முறையாக அவர் பிரதமரான 2014ஆம் ஆண்டில்தான் மோடி நுழைந்திருந்தார். ஆனால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசியதன் மூலமும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்த மகத்தான தலைவர்களுடன் உறவாடியதன் மூலமும் தனது அரசியல் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டவராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். அப்போதெல்லாம் சிறுபான்மையினராக இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் குரல் கவனித்துக் கேட்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிய மரியாதையும் தரப்பட்டது. நாடாளுமன்ற அமைப்பு முறையின் சுமூகமான செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் மிகவும் தேவையென்று கருதப்பட்ட அந்த நேருவிய காலத்தின் தயாரிப்பாகவே வாஜ்பாய் இருந்து வந்தார். நேருவைக் கடுமையாக விமர்சித்த போதிலும் நேருவின் பாசத்தை வாஜ்பாயால் பெற முடிந்தது.
ஆனால் இப்போது மோடி வித்தியாசமான காலகட்டத்தின் தயாரிப்பாக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகத் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் முதலமைச்சராக இரும்புக்கரம் கொண்டு குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்தார்; சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை அவர் பொருட்படுத்தியதே இல்லை. தான் தவறு செய்யவே முடியாதவர், கட்சியில் அல்லது வெளியில் இருந்து ஒருபோதும் யாராலும் விமர்சிக்கப்படக் கூடாதவர் என்ற மனநிலையுடனே அவர் இருந்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை – நான் எந்தத் தவறும் செய்வதில்லை; என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; நாட்டை எப்படி நடத்துவது, எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி யாரும் எனக்குக் கற்றுத் தர முயற்சி செய்யக்கூடாது என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறார். ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க முழுக்கப் பொதுக் கண்ணோட்டத்தில் பிரதமரின் அந்த பிம்பத்தை உடைப்பதற்கான முயற்சியாகவே இருந்தது. மோடியின் ஆளுமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே ராகுல் காந்தியின் அந்தப் பேச்சு அமைந்திருந்தது. அதை அலட்சியப்படுத்துவது பிரதமருக்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது.
ராகுல் காந்தி அவரிடமிருந்து தகுந்த பதிலைப் பெறுவார் என்று மோடி பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். நிச்சயம் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவே முயன்றார் என்றாலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறுக்கிட்ட பிறகு அவர் பொறுமையிழந்து விட்டார். தான் இதுவரை யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும், இப்போது காங்கிரஸின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதாகவும் அவர் அப்போது கூறினார். அது தரம் தாழ்ந்த அவரது பேச்சின் ஆரம்பமாக மாறியது. அவர் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பதை எளிதில் காண முடிந்தது.
மோடி எப்போதும் தேர்தல் களத்திலேயே இருக்கும் அரசியல்வாதி. வாக்காளரிடம் பேசுகின்ற வாய்ப்பை ஒருபோதும் அவர் நழுவ விடுவதே இல்லை. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால் அவரைப் பொறுத்தவரை அது வாக்காளர்களிடம் உரையாடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும். எனவே, மக்களவையில் தனது பேச்சில் அறுபது சதவிகிதத்திற்கும் மேலான நேரத்தை காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க மட்டுமே அவர் பயன்படுத்திக் கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ‘காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி. மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் எந்தவொரு நன்மையும் அந்தக் கட்சி செய்திருக்கவில்லை, அதனால்தான் பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாக்காளர்களிடம் அவர் அந்த உரையின் மூலம் கூறினார்.
ஆனாலும் மத்தியில் தனக்குச் சவால் விடக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று மோடி கருதுவதையும் அவரது பேச்சு வெளிப்படுத்தவே செய்தது. காங்கிரஸிற்கு மாற்றாக மத்தியில் பாஜக எதிர்ப்பு முன்னணியாக தன்னுடைய கட்சி உருவெடுத்துள்ளதாகக் கூறி வருகின்றது என்பதாக மம்தா பானர்ஜியின் சாகச அரசியல் பேச்சுகள் இருந்த போதிலும், ‘காங்கிரஸை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது; காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்; இடைவிடாது தொடர்ந்து அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்; மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்து அந்தக் கட்சி நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்’ என்பதில் மோடி மிக உறுதியாக இருந்து வருகிறார். மக்களவைக்குப் பிறகு மாநிலங்களவை என்று மீண்டும் மோடியின் உரையில் பெரும்பான்மை பங்கை காங்கிரஸ் கட்சியே ஆக்கிரமித்துக் கொண்டது ஒன்றும் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. ஆனால், பரம்பரை அரசியல், 1984 கலவரங்கள், நெருக்கடி நிலை, ஏழ்மை என நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் காங்கிரஸே காரணம் என்று வெறியுடன் அவர் குற்றம் சாட்டியது அவரது சிந்தனைச் செயல்பாட்டின் பின்னணியில் உள்ளவற்றையே நமக்கு நினைவூட்டியது.
காங்கிரஸின் மீது மோடி கொண்டிருக்கும் ஆவேசம், காங்கிரஸின் மீதான அவரது மனவேதனை அல்லது வெறுப்பின் பிரதிபலிப்பாக அல்லது நேரு-காந்தி குடும்பத்தின் மீதான வெறுப்பின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கவில்லை. மிகப் பெரிய அரசியல் தந்திரத்தின் பகுதியாகவே அவரது பேச்சு பொதுவாக இருக்கிறது. தனது ‘புதிய பாஜக’ (தி நியூ பிஜேபி) என்ற புத்தகத்தில் காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் இடைவிடாத வெறித்தனமான பேச்சுகள் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தரவுகளை நளின் மேத்தா தந்துள்ளார். பாஜக தனது வெளியுலகத் தொடர்புகளில் – அதாவது பேச்சுகள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகளில் – காங்கிரஸையே அதிகம் குறிப்பிட்டு வருகிறது என்று அவர் எழுதியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்த தரவரிசையில் காங்கிரஸ் என்ற வார்த்தையே அவர்களுடைய பேச்சுகளில் முதலிடத்தைப் பெற்றது. மோடி, பாஜக, வளர்ச்சி போன்ற வார்த்தைகள் பின்தங்கி காங்கிரஸ் என்ற வார்த்தைக்குப் பின்னரே இடம் பெற்றுள்ளன. ‘இந்த பெரிய அரசியல் தொடர்பு மாற்றம் 2016ஆம் ஆண்டில் தொடங்கியது, அதற்குப் பிறகு காங்கிரஸ் தொடர்பான பாஜகவின் பேச்சுகளில் வியத்தகு மாற்றத்தை நம்மால் காண முடிந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸுக்கு எதிரான பேச்சை படிப்படியாக பாஜக அதிகரித்துக் கொண்டே வந்தது. பாஜகவின் தகவல் தொடர்புகளில் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது காங்கிரஸிற்கு எதிரான பேச்சு மற்ற அனைத்து விஷயங்களையும் முந்திவிட்டது’ என்று நளின் மேத்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘காங்கிரஸின் முதன்மையான சித்தாந்த எதிர்ப்பாளராக, தனது போட்டியாளரைப் பற்றி பாஜக அதிகம் பேசுவது மிகவும் இயல்பானது என்றாலும் பாஜகவை காங்கிரஸுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முக்கிய அரசியல் பாடத்தை கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிடுபவர்கள் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகவே காங்கிரஸுக்கு எதிரான அதன் பேச்சுகளில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு இருக்கிறது’ என்று எழுதியுள்ளார்.
எனது பார்வையில் பிரதமர், அவரது கட்சியினரிடம் உள்ள இந்த வெறுப்பு வரப் போகின்ற எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான ஆட்சி எதிர் மனோநிலை மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால், மோடி தன்னை பாதிக்கப்படக்கூடியவராகவே உணருவார். மேலும் காங்கிரஸ் இழைத்துள்ள தீமைகளை வாக்காளர்களும் நாட்டு மக்களும் மறந்து விடக் கூடாது என்றும், அவர்கள் தன்னுடைய தலைமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் நிச்சயம் விரும்புவார். அதற்காக நாகரீகமான விவாதங்கள், உரையாடல்களுக்கு நமது பிரதமர் அதிக அளவிலே தடையை ஏற்படுத்துவார் என்றே நாம் எதிர்பார்க்கலாம். அவர்களிடமிருந்து வேறு என்ன நமக்கு கிடைக்கப் போகிறது?
(‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள அசுதோஷ் satyahindi.com என்ற இணையதளத்தின் ஆசிரியராக உள்ளார்)
https://www.ndtv.com/opinion/pms-speech-reveals-rahul-gandhi-got-under-his-skin-2755902
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.