ரயில் திரைப்பட விமர்சனம் | Rayil | movie review | Bhaskar Sakthi | https://bookday.in/

ரயில் (Rayil) திரைப்பட விமர்சனம்

தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை கடத்திச் செல்பவர்கள் என நினைத்து வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் இருவரை கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள்..

தொடர்ந்து பத்திரிகைகளில்
பல நாட்கள் பின்வரும்படி..

திருடர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த இரண்டு வாலிபர்களை பிடித்து அடித்து இருக்கிறார்கள் அந்தத் தெரு மக்கள்..

தள்ளுவண்டி டிபன் கடையில் தங்களுடன் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக இரண்டு வட நாட்டு இளைஞர்கள் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள்..

திருப்பூரில் இருக்கும் பனியன் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வடநாட்டைச் சேர்ந்த நபர்களே வேலையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்..

எங்கு பார்த்தாலும் வட மாநிலத்தைச் சார்ந்தவர்களாகவே தெரிகிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் கொங்கு நாடு வடமாநிலங்களின் ஒரு பகுதியாக மாறும் சூழல் உருவாகி வருகிறது.

மயிலாடுதுறை அருகே ஏர் உழுதல், பரம்படித்தல், நாற்று நடுதல் போன்ற வேலைகளில் வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

பல கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் வட மாநில தொழிலாளர்களை அழைத்து வந்து பல பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து இருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வேலையில்லாமல் போகிறது.

சமூக விரோத செயல்களே அற்ற தமிழ்நாட்டில் இவர்களால்தான் தமிழ்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைந்தது போன்றதொரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகள் நிறைந்த தமிழ்நாட்டில் இவர்கள் வந்த பிறகுதான் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தையும் உருவாக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவர்கள் வட மாநில தொழிலாளர்கள்தான் என்கிற ஒரு மாயையை தமிழ்நாடு, தமிழர்கள், தமிழ் மொழி என்று உரக்கப் பேசி உணர்வுகளை வெறியாக மாற்றி, கண்ணில் தெரியாத பெரு முதலாளிகளுக்கு மறைமுகமாக சேவகம்
செய்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்குள் வன்மம் விதைத்து பஞ்சம் பிழைக்க வந்த தொழிலாளர்களை எதிர் திசையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் அந்தக் கூட்டம்.

பாஸ்கர் சக்தி இயக்கிய ரயிலுக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக உணர்கிறேன்.

தமிழ்நாட்டின் மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வரும் குசும்புத்தனமான வேலைகளுக்கு எதிராக மனிதத்தை பேசக்கூடிய நிஜம் நிறைந்த தமிழ் மக்களை கலை அம்சத்தோடு நேர்த்தியாக அறிமுகம் செய்திருக்கிறார் தன்னுடைய ரயில் திரைப்படத்தில்.

மனிதர்கள் ஜோடனை இல்லாதவர்கள்..
இருள் மறைத்து பேசத் தெரியாதவர்கள்..
நிஜம் அழித்து பேசுவதற்கு கூச்சப்படக்கூடியவர்கள்..
மனசு முழுவதும் அன்பின் உயிர் நிலையை பதியம் போட்டு வைத்திருப்பவர்..
கால் போகும் தேசங்கள் எங்கும்
பேரன்பால் மனிதம் விதைக்கச் செய்பவர்கள். சுகந்தம் வீசும்
பெருங்காதல் பூக்களை பெருவெளி எங்கும் பூக்கச் செய்பவர்கள்.. சக உயிர்கள் அனைத்தின் மீதும் நேசம் கொண்டு தங்களின் வடிவான செயல்களால் எக்காலமும் வாழ்ந்து வரக்கூடியவர்கள்
மாமனிதர்களாக. அன்பின் வழியாக உயிர் நிலை கொண்டவர்களாக இம்ம மனிதர்கள்.

அவர்களோடு தான் எலும்பை மறைப்பதற்காகவே தோல் பூசிய மானிடர்களும் இருதயம் துடித்தும் உயிர் காணாத மனிதர்களும் விரல்கள் இல்லா கால்களோடும் கைகளோடும் உருண்டு புரண்டு வன்மம் நிறைந்த நிலையோடு வாழ்ந்து செத்து வருகிறார்கள்.

இயக்குனர் பாஸ்கர் சக்தி மாமனிதர்களைப் பற்றி தன்னுடைய திரைப்படத்தில் வெகு அழகாக நேர்த்தியாக நம்மோடு வாழ்ந்து வரக்கூடிய சக மனிதர்களை, நேசம் மிகுந்தவர்களை, உயிரின் மேல் அளப்பரிய காதல் கொண்டவர்களை படமாக்கி கொடுத்திருக்கிறார்.

எளிய மக்களை உழைக்கும் மக்களை ஏமாற்றி அதிகாரம் செய்ய துடிக்கும் பெரும் செல்வந்தர்களும்.. எதிர் கருத்து பேசுபவர்களின் குரல் வளையை அருத்தெறிய அஞ்சாத கெடுதியான குணம் படைத்தவர்களும் எல்லா காலங்களிலும் ஒருவரோடு ஒருவர் கைகள் கோர்த்து இணைந்தும் காணப்படுவார்கள். வரலாறு எங்கிலும் இதை நாம் வாசித்து இருக்கலாம். இனத்தின் பெயரால் மற்றுமொரு இனத்திற்கு எதிராக கூர் தீட்டிய ஆயுதங்கள் கொடுத்து அதிகார வெறியின் உச்சத்தில் சென்று அழிக்க நினைத்து அழிந்து போன ஹிட்லர் முசோலினி வரலாறுகள் இருக்கிறது.

எல்லோருக்குமான செயல்திறன் இல்லாத அரசுகள் தங்களின் செயலின்மையை மூடி மறைப்பதற்காக அதிகாரத்தில் இருப்பவர்களின் துணைக் கொண்டு பெரும்பான்மை தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள் நாட்டின் சிறுபான்மை குழுவினரே என பிரச்சாரத்தை பரவலாக முன்னெடுப்பார்கள். பெரும்பான்மை மக்களின் பொருளாதாரத்திற்கு போட்டியாக சிறுபான்மையினரே என வன்மத்தோடு பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.

ஜனநாயகத்தின் காவலர்கள் என பேசிக்கொள்ளும் மேற்கத்திய நாடான அமெரிக்காவில் அந்த நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்த.. இருக்கக்கூடிய கருப்பின மக்கள் மீதே பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் பெரும் தாக்குதல் தொடுப்பதும் கொலை செய்வது என்பதும் இன்றும் அன்றாட சம்பவங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மை மக்கள் அது மதம் சார்ந்தோ, அல்லது இனம் சார்ந்தோ, நிறம் சார்ந்தோ தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்டுதான் வந்து கொண்டிருக்கிறார்கள் பெரும்பான்மை குழுக்களால்.

குறிப்பிட்ட குறைந்த அளவு சதவிகிதத்தில் இருக்கக்கூடிய உலக முதலாளித்துவ சிறுபான்மை சமூகம் நடுத்தர மற்றும் உழைக்கும் பெரும்பான்மை சமூகத்தை இனமென்றும், நிறமென்றும், மொழி என்றும் பிரித்து சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை நிலை நிறுத்தி தங்களின் பொருளாதாரத்தை பெரும் வளர்ச்சிக்கு உள்ளாக்கி கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையை இப்பொழுது நாம் இந்தியாவில் நேரடியாக சந்தித்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மையோர் எப்படி அணித்திரட்டப்பட்டு வருகிறார்கள் என்பதை. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று பத்து வருடத்திற்கு முன்னால் வாக்குறுதி அளித்து அதிகார பொறுப்பிற்கு வந்தவர்கள் இப்பொழுது வேலை வாய்ப்பு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு சென்று விட்டது என்கிற பொய்களைப் பேசி சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களிடையே மத துவேஷம் பேசி, கைகளில் கொலை ஆயுதங்களை கொடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதும்.. பெங்களூரில் தமிழர்கள் விரட்டியடிக்கப்படுவதும்.. மலையாளிகளுக்கு எதிராக தமிழர்களை எதிர் நிறுத்துவதும்.. தமிழகத்தில் கூலி வேலை செய்து பிழைக்க வந்திருக்கும் வடநாட்டு எளிய உழைப்பாளி மக்களுக்கு எதிராக தமிழ் மக்களை கூர் தீட்டி பிரச்சாரம் செய்வதும்
எந்த தொந்தரவும் இல்லாமல் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வசதியாக பெரு முதலாளிகள் தங்களின் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக முன் வைத்திருக்கும் ஏற்பாடுகளே இவைகள் அனைத்தும்.

தமிழ்நாட்டில் நுழைந்திருக்கும் வசதி படைத்த வடநாட்டு பெரு முதலாளிகள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தன் வசமாக்கி வைத்திருக்கும் பொழுது.. அந்த வடநாட்டு முதலாளிகளை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் அமைதி காப்பவர்கள் தான் அங்கிருந்து கூலி வேலைக்காக வந்திருக்கக்கூடிய வடநாட்டு இளைஞர்களை “வடக்கன்” என்றும் “பீடா வாயன்” என்றும் கேலி பேசிடச் சொல்லி தமிழகத்தில் இளைஞர்களை உசுப்பேற்றி வைத்திருக்கிறார்கள் முதலாளிகளின் கைக்கூலிகள்.

வறுமையில் இருக்கும் தமிழக இளைஞர்களும் தமிழ் மக்களும்

வயிற்று பசிக்காக இங்கு வந்து வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞர்களை வன்மத்தோடு தங்களின் வாழ்க்கையை சூறையாட வந்திருக்கும் எதிரியாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். பழவேற்காட்டில் நானூறு ஏக்கர் பரப்பளவில் இருக்கக்கூடிய பெரும் காடு உள்ளிட்ட 2000 ஏக்கர் கடல் நீர் பரப்பையும் வளைத்து போட்டு இருக்கும் அதானி குடும்பத்திற்கு எதிராக வாய் திறக்காதவர்கள்தான் அங்கே குறைந்த பட்ச கூலியில் வேலை பார்ப்பதற்காக வந்திருக்கக்கூடிய வடநாட்டு இளைஞர்களுக்கு எதிராக படை திரட்டி கொண்டு இருக்கிறார்கள் தமிழகத்தில்.

எல் அண்ட் டி நிறுவனம் தமிழகம் முழுவதிலும் காண முடிகிறது சாலைகளை நிர்மாணிப்பதற்காகவும் மேம்பாலங்களை கட்டி முடிப்பதற்காகவும் சுரங்கப்பாதைகளை அமைப்பதற்காகவும். அந்த பெரு முதலாளிகளின் கம்பெனிக்கு எதிராக பேசாதவர்கள் , கடும் உழைப்பிற்கான குறைந்தபட்ச கூலியைக் கூட கொடுக்காமல் ஒப்பந்த முறையில் அழைத்து வந்திருக்கக்கூடிய வடமாநில இளைஞர்களுக்கு எதிராக தொடைதட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள் இங்கிருக்கும் பிரதேச உணர்வாளர்கள். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு முழுவதும் வட மாநிலத்து இளைஞர்களால் பறிபோகிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் நிஜமான அரசியல் சூழலை மறைத்து.

அரசியல் பொறுப்பு மிகுந்த இந்த இடத்தை தான் இயக்குனர் பாஸ்கர் சக்தி தன்னுடைய கதையின் கருவாக தேர்வு செய்து இருக்கிறார். அதற்காகவே முதலில் ஒரு சபாஷ் படலாம் இயக்குனர் பாஸ்கர் சக்தி அவர்களுக்கு. தமிழ் மண்ணில் மிகத் தைரியமாக தெளிவாக பேசப்பட்டு இருக்கக்கூடிய இடம் இது. பேச வேண்டிய இடமும் இது.

முதல் படத்தையே மிகச் சரியான தேவையான அரசியல் சூழலில் தயாரித்து அளித்து இருக்கக்கூடிய தயாரிப்பாளர் வேடியப்பன் அவர்களுக்கும் அன்பு முத்தங்கள்.

வறுமையின் சூழலால் தன்னுடைய இளம் மனைவி, பெண் குழந்தை, அப்பா, அம்மா இவர்களை சொந்த ஊரில் விட்டு விட்டு மதுரை தேனி அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக இருந்து வருகிறான் வட மாநில இளைஞன் சுனில். தங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை பறித்துக் கொண்டவர்களில் ஒருவனின் அடையாளமாக சுனில் இருக்கிறான் முத்தையாவுக்குள்.

சுனிலை சந்திக்கும் இடம் எங்கும் அவன் மீது வன்மத்தோடும் கோபத்தோடும் எடுத்தெறிந்து கண்களாலும் உடல் மொழியாலும் வார்த்தைகளாலும் பேசுகிறான் முத்தையாவும் அவனது நண்பனும். நட்புணர்வோடு உதவி செய்ய நெருங்கி வரும் பொழுதும் அவனை சிடுசிடு என்று பேசுவதும் விரட்டி விடுவதுமாகவே தொடர்கிறார்கள் .

அவன் குடியிருக்கும் குடியிருப்பில் இருக்கும் முத்தையாவின் குடும்பமும், முத்தையாவின் மனைவி செல்லம்மாவும் குடும்பத்து பிள்ளையாக அவன் மீது பாசம் கொண்டு தங்களில் ஒருவனாக அவனோடு பழகுகிறார்கள்.

ஒரு நாள் விபத்து ஒன்றில் சுனில் இறந்து போகிறான். வெளி மாநிலத்தில் இருந்து வந்து நம்மூரில் அனாதையாக இறந்து போனவனின் அடக்கத்தை ஊர் கூடி நடத்தி வைக்கிறார்கள். இறுதிச் சடங்கு அத்தனையும் முத்தையாவை தவிர்த்த அவன் குடும்பத்தவரும் மும்பையில் இருந்து கிளம்பி வந்த சுனில் அப்பா அம்மா மனைவி குழந்தையும் ஊர் மக்களின் உதவியோடு அடக்கத்தை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த நம் சொந்தம் ஒருவன் இறந்து போனால் எப்படியெல்லாம் இறுதி ஊர்வலம் மற்றும் சடங்குகளை நடத்தி முடிப்பார்களோ அப்படி நடத்தி முடிப்பார்கள்.

சுனிலின் எதிர்பாராத மரணம். முத்தையா வீட்டில் கிடத்தி வைக்கப்பட்டு இருக்கிறது சுனிலின் சவம் எவரும் அருகில் இல்லாமல். சுனில் விபத்தில் இறந்ததை கேள்விப்பட்டு வந்த முத்தையாவின் மனைவி செல்லம்மாள் “தம்பி.. தம்பி எங்கிருந்தோ வந்து இங்கு அனாதையாக இப்படி கிடக்கிறாயே” என்கிற அழுகை நம்முடைய மனசை வலிக்கச் செய்கிறது. அந்த வலி முழுவதும் கொண்டாட்டமாய் மாறிடும் மனநிலையை இயக்குனர் மிக அற்புதமாக செய்து முடித்து இருப்பார்.
பார்வையாளர்களுக்கு அந்த மனநிலை எப்படி கடத்தி இருக்கிறார் என்பதை நீங்கள் ரயில் ஏறி தெரிந்து கொள்ளலாம்.

மனிதன் ஒருவனின் மரணம் வலியையும் கொண்டாட்டத்தையும் கொடுக்கக்கூடிய அற்புதமான புறச் சூழலை காட்சிப்படுத்தி பார்வையாளரின் மனசுக்குள் நெகிழ்ச்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஊரே அழுது புரண்டு ஒப்பாரி வைக்க சுநிலின் பெண் குழந்தை மட்டும் கண்களால் தன் அப்பாவை கண்ணாடி சவப்பெட்டிக்குள் தேடும் வலி நம் இருதயத்தை விட்டு ஒரு பொழுதும் அகலாது. இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் ஆயிரம் வந்தனங்கள்.

திரைப்படத்திற்குள் வரும் செல்லம்மா பெண் கதாபாத்திரம் சக்தி மிக்கதாக தைரியமிக்கதாக ஆண்களின் திமிர் தனத்தை எதிர்ப்பதாக பேரன்பு கொண்டதாக படைத்திருக்கிறார் இயக்குனர். செல்லம்மா கதாபாத்திரத்தின் வழியாகத்தான் அனாதையாக இருந்த சுனில் அனாதை அல்ல அவனும் இந்த ஊரின் மனிதன் என்பதை உலகுக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர். பெண்களால்தான் இந்த சமூகம் இன்னும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்களால்தான் இந்த சமூகம் பல மாற்றத்தை காண வேண்டி இருக்கிறது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் மனித உணர்வுகளுக்குள் ஊடுருவி மனித மனங்களை கொண்டாட செய்கிறது.. கண்களுக்குள் இருக்கும் கண்ணீர் துளியை வெளியே இழுத்துப் போடுகிறது.

படம் முழுவதிலும் இசை நம்மை தாலாட்டுகிறது.. நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது.. நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. பின்னணி இசை வெகு நேர்த்தியும் அழகும். இசையமைப்பாளருக்கு பேரன்பும் வாழ்த்துக்களும்.

ரயில் முழுவதும் தேனி ஈஸ்வரன் அவர்களின் ஒளிப்பதிவு பார்வையாளர்களுக்குள் சாரல் மழையை பெய்விக்கிறது. கொட்டும் அருவியில் இருந்து பறந்து வரும் தூவனமாக மனதை சிலு சிலுக்க செய்கிறது.

சுனிலின் இறந்த உடல் இரவு நேரமதில் முத்தையா வீட்டிற்கு எதிரில் கிடத்தி வைக்கப்பட்டு இருக்கும். இறந்த உடலுக்கு காவலாக இருக்க வேண்டிய மனிதர்கள் எவரும் மனிதனாக இல்லாத போது அங்கே முத்தையாவின் ஆடு நின்று நிதானித்து பார்வையாளர்களை பார்வை ஒன்றால் பார்த்து, கால் மடக்கி, படுத்து, நிமிர்ந்து பார்ப்பது எதார்த்தமாக இருந்தாலும் “நீங்க எல்லாம் மனுஷங்களாடா” என்கிற கேள்வியை கேட்டு இருக்கிறது மனித மனம் இல்லாத எலும்பை மறைக்க தோல் பூசியிருக்கும் உயிர்களைப் பார்த்து. அந்த தருணத்தை மிக அற்புதமாக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குனரும்.

இந்த பூமிக்கு வந்த அனைவருமே தங்களின் வயிற்று பசியை போக்கிக் கொள்ள வந்த அனாதைகள்தான் என்கிற வசனத்தை சரியாக புரிந்து கொண்டோம் என்றால்
எந்த மனிதர்கள் மீதும் வன்மம் வராது..
வஞ்சம் கொள்ளாது.. காழ்ப்புணர்ச்சி
அண்டாது.. மனிதம் எல்லோரிடமும் நிறைந்து ததும்பும்.. பெரும் காதல் ஊற்றெடுக்கும்.. மனித உயிர்களை நேசிக்க செய்யும்.. எல்லா
உயிர்களின்பால் அன்பு கொள்ளச் சொல்லும்.. மனித பிறப்பை கொண்டாடச் செய்யும்.

ரயில் தமிழ் மண்ணுக்கான படம் மட்டும் கிடையாது.. ரயில் இந்திய மண்ணுக்கான படம்.. ரயில் பஞ்சம் பிழைக்க வெளிநாடு செல்லும் மனிதர்கள் வாழும் படம்..
ரயில் உலகத்திற்கான படம்.

ரயிலில் வரக்கூடிய அத்தனை கதாபாத்திரமும் ஒவ்வொரு மாநிலத்திலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் ஒவ்வொரு நாட்டிலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் உலக மனிதர்கள் எல்லோருக்குள்ளும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

மிக அற்புதமான வசனகர்த்தாவாக தமிழ் திரை உலகிற்குள் தடம் பதித்தவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. ரயில் படத்தின் வழியாக மிகச்சிறந்த இயக்குனராகவும் பரிணாமம் அடைந்திருக்கிறார். அன்பு வாழ்த்துக்கள் தோழர்.

படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். முத்தையாவாக குங்குமராஜ்.. செல்லம்மாவாக வைர மாலா.. சுனிலாக பர்வைஸ்.. நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்கள். தமிழ் திரை உலகம் இவர்களை விட்டு விடக்கூடாது.

அதேபோல் தான் ரமேஷ் வைத்தியாவும். கடைசியில் ஒரு காட்சியில் வந்திருந்தாலும் சுருளிப்பட்டி சிவாஜி மனதில் நிற்கிறார்.

நூல் வெளியீட்டு துறையில் பதிப்பகத் துறையில் பல சாதனைகளை செய்திருக்கக் கூடிய டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேடியப்பன் அவர்கள் ரயில் படத்தை தயாரித்து வெளியிட்டதின் வழியாக தமிழக திரைத் துறையிலும் மிக முக்கியமான பங்களிப்பை செய்து முடித்திருக்கிறார் தமிழ் மக்களுக்கு.

ரயில் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய பேரன்பும் வாழ்த்துக்களும்.. ரயில் பயணம் மாபெரும் வெற்றி பெறும்.

பஞ்சம் பிழைக்க வந்த எவருமே
நம் உழைக்கும் இனம்தான்.

 

இயக்குனர் : பாஸ்கர் சக்தி
தயாரிப்பு : வேடியப்பன்
திரைக் கலைஞர்கள் : வைரமாலா குங்குமராஜ் ,பார்வைஸ் மக்குரு, ரமேஷ் வைத்யா, சுருளிப்பட்டி சிவாஜி மற்றும் பலர்
இசை : S.J. ஜனனி
பாடல்கள் : ரமேஷ் வைத்யா
படத்தொகுப்பு : நாகூரான் ராமச்சந்திரன்

 

எழுதியவர் 

கருப்பு அன்பரசன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. Subramanian

    I remember the days of “ Mullum Malarum “ in late 70’s ; First week no crowd but the movie picked up on hearsay ; Story is also talking on drunkard and his emotional relationships ; Best wishes for commercial success ; Kindly inform weather the movie had achieved that ; I will be happy !!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *