மழைத் தேநீர்
இந்த மழையின் குளிரில்
உறையும் உடல்.
ஒரு டன் வெயிலை கேட்கிறது.
பிசிறி பாயும் கூதலை விரட்ட
நீ தேநீரோடு வருகிறாய்.
நான் அருந்துவதற்கு
தயாரில்லையென்ற போது
தனியாக சூட்டை பிரித்து தருகிறாய்
நான் பூசிக் கொள்கிறேன் உடல் முழுதும்.
கூல் தேநீர் அருந்துவது
உனக்கான விருப்பம் என்கிறேன்
முணு முணுக்கிறாய்
நெருங்குகிறேன் சமிக்ஞையறிந்து.
மழை இப்படியே பெய்யட்டும்
திறந்து விடு ஜன்னலையென்கிறேன்.
சிரிக்கிறாய்
மின்னல் வெட்டி மறைகிறது.
இப்போது காற்று ஜன்னலை அசைக்கிறது
நீ மூடி விட்டு நகர்கிறாய்
இன்னொரு தேநீர் வேண்டுமென்கிறேன்.
..
மழைக்கு ஒதுங்கிய வானம்

மனசு விரும்பி ஒரு ரம்மியப் பொழுதில்
உடலுக்கு அனுப்புகிறது ஒரு சேதி.
மென்தசை பச்சை நரம்புகளில் எழுகிற ஆசையை.
மடி விரித்து அள்ளிக் கொள்கிறது
பசியோடு காய்ந்து கிடந்த தரிசு நிலம்.
மேகம் முகம் கருத்து விலகி நிற்க
மழை இப்போது கீழிறங்குகிறது.
மழை செய்யும் மாயக் குளிரில் திமிரடங்கி
உடல் சஹாராவின் சூட்டின் வெளியில் நீளுகிறது.
அறை முழுதும் நிகழும் மயான அமைதியில்
அது நெருங்குகிறது வியர்வை நெடி வீச.
வீட்டின் கூரையின் மேல் விழும் மழை
தன் சப்தத்தை திறந்த வெளியில் விடுகிறது.
அதுவொரு ஆதி இசையாய் காதில் கரைகிறது.
இரவு தனிமையை வஞ்சிக்க வாய்ப்பில்லை
அருகிலிருக்கிறாலவள்.
இப்போது ஓதுங்க இடம் தேடும் மழை
முன்பு வானத்தில் வசித்திருந்ததை மறந்திருந்தது.
நானும் என் மனசும் விரும்பிய நிகழ்வை
நடாத்தி விட்டு உறங்கிக் கொள்கிறோம்.
மழை ஞாபகம் வந்திருந்தால் வானத்தில் ஒதுங்கியிருக்கும்.
மழையின் ப்ரியம்

மழை ரம்மியத்தின் இருப்பிடம்
அது மேகத்தை நனைக்காமல் பூமி
வந்ததாயென்றால் இல்லை.
வானம் புன்னகைக்கும் போதெல்லாம்
மேகம் தனது வதனத்தை கருப்பாக்கிக்கொள்ள தவறியதில்லை.
கோபம் வந்தால் மேகம் கருத்துவிடும்
மழையோ அந்த கோபத்தில் நனைந்ததே
கிடையாது.
மென்பரிஷம் எழும் மாய குளிரை
மழை தூண்டி சில்லிட வைக்கும்
போதெல்லாம் அந்த இரவு
விடிந்திடக்கூடாதென மனைவி
பல தடவை வேண்டிருக்கிறாள்.
நானும் தான்.
பிரயத்தனம் செய்கின்ற மழை
மின்னல் இடிகளுடன் விளையாட
பழக்கப்பட்டிருந்தது.
அதனால் என்னமோ
மழைக்கு சப்தமென்றால்
அலாதிப் ப்ரியம்.
ஜே.பிரோஸ்கான்

