நூல்: “ராஜபேரிகை “
ஆசிரியர்: சாண்டில்யன்
வெளியீடு : வானதி பதிப்பகம்
விலை: ரூபாய் 220
மொத்த பக்கங்கள்: 568
வெளியீடு : வானதி பதிப்பகம்
விலை: ரூபாய் 220
மொத்த பக்கங்கள்: 568
முதல் பதிப்பு 1978
15 ஆம் பதிப்பு 2012.
சாண்டில்யன் அவர்கள் சரித்திர கதை எழுதுவதில் மன்னன். அவரின் கதைகளைப் படித்துக் கொண்டே இருக்கலாம் ; ராஜ பேரிகை கற்பனை கலந்த சரித்திர கதை தான் ..
வரலாற்று உண்மையை பக்கப்புலமாக கொண்டு சிறந்ததொரு சரித்திர நாவலை புனைந்திருக்கிறார் திரு சாண்டில்யன் அவர்கள்.
வரலாற்று நூல் எழுதுவது மிகவும் எளிது அன்று ;மிகவும் கடினமானது ;அதிலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உண்மைச் சம்பவங்களுக்கு மாறுபடாமல் நாவலுக்கு ஏற்ற குணநலன்கள் குன்றாமல் எழுதுவது அதிலும் கடிதமான ஒன்று. மேல்நாட்டு ஆசிரியர்களாகிய சர் வால்டர் ஸ்காட் டூமாஸ் போன்றவர் தம் வரலாற்றுக் கற்பனை நாவல்களால் உலக புகழ்பெற்றதோடு தன் மொழிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள்.
திரு .சாண்டில்யன்அவர்கள் தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர் .இயற்கையான நகைச்சுவையும் சிறந்த பாத்திரங்களைப் படை க்கும் திரத்தாலும் நன்றாக கதையை நடத்திச் செல்லும் நலத்தாலும் நல்லதொரு நாவலை தமிழ்நாட்டிற்கு அவர்கள் அளித்திருக்கிறார்கள்..
**********””.
பண்டைக்கால சரித்திரம் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா ?அது அவசியம்தானா? ஏன் ?எதற்காக என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. பண்டைக் காலம் இல்லாமல் நிகழ்காலம் ஏது ? சரித்திரம் இல்லாமல் சமுதாய வளர்ச்சியில்லை.மிருகங்களுக்கு மனிதனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது. அதுதான் வரலாறு.
மனிதன் சரித்திரத்தையும் சம்பிரதாயங்களையும் சிருஷ்டிக்கிறான். அவை ஒரு பெரும் சங்கிலித் தொடராக ஆண்டுகளில் வளர்ந்து கொண்டு போகின்றன .அறிவாளியாக இருப்பவன் அதன் ஆதியையும் பார்க்கிறான் .தான் இருக்கும் இன்றைய நிலையையும் பார்க்கிறான் .அந்த பழைய பெருமைக்கு தன்னை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறான் .அந்த வளர்ச்சியில் பழைய குறைகளை நிவர்த்தி கொள்ள முயல்கிறான் .சரித்திரம் இதற்கு உதவுகிறது . சரித்திர நோக்கில் அறிவு விசாலப்படுகிறது . இலக்கியம் மலருகிறது. வேறு எதிலும் இலக்கியம் மலருவதில்லை.
எனவே சரித்திரம் படிப்பது அவசியமாகிறது. அதையும் சுவையாக படிக்க வேண்டும் என்றால் சாண்டிலியன் எழுத்துக்கள் மூலமாக சரித்திரம் படித்தால் கற்பனை கலந்து நம்மை அவரோடு அழைத்துச் செல்வார்.
********
மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. வங்கத்து பாரதிய பாஷா பரிஷத் தின் விசேஷ விருது பெற்ற நாவல் இது .
முதல் அத்தியாயம் படிக்கும் போது அபாரமாக இருக்கிறது .அரிய தகவல் ஒன்றை தெரிவிப்பதோடு அரங்கன் வாழும் நகரை வர்ணிக்கும் ஆழ்வார் திரு பாடலும் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது மார்கழி மாதத்தில் .அரங்கனின் இரு கண்களும் கோடி மதிப்பு பெறும் வைரக் கற்களால் ஆனது .முதல் அத்தியாயத்தில் நுழையும்போதே அரங்கனின் ஒரு வைரக்கல் காணாமல் போய் இருப்பதாக கதை தெரிவிக்கிறது .அதிர்ந்து போனேன்.

சில படையெடுப்பின் காரணமாக அரங்கன் சிலை ஊர் ஊராக இடம் மாறிச் சென்ற விபரம் அரங்கன் உலா என்கிற ஸ்ரீ வேணுகோபாலன் அவர்கள் எழுதிய கதை மூலம் அறிந்தேன் .இந்த தகவல் எனக்கு புதுமையாக இருந்தது .ஆச்சரியமாக இருந்தது .இதுபோல கணக்கற்ற பல தகவல்கள் நிரம்பிய கதை இது.
(அரங்கனின் கண்ணில் இருந்த ஒரு வைரம் 18வது நூற்றாண்டில் திருடப்பட்டது. பின்னர் ரஷ்யாவில் ஜார் மன்னரின் மணிமகுடத்தில் பிரதான வைரமாக பதிக்கப் பெற்று ” ஆர்லாப் டைமண்ட்” “என்று பிரசித்தி பெற்று விளங்கியது.)
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தை ஆரம்ப சுலோகத்தை கொண்டே கதையை துவங்கப்பட்டுள்ளது . இதில் ஸ்ரீ நிகமாந்த தேசிகனின் பாதுகா சகஸ்ரம்ம் , பிரபந்தங்கள் எல்லாம் இடம்பெறுகின்றன. பல ஜீவ தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்த நூலில் வசதி இருக்கிறது.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ் பற்றியும் அந்த நேரத்தில் தமிழகத்தின் நிலையை பற்றியும் கூறுகிறது ராஜபேரிகை .தமிழகத்தில்தான் வரலாற்றின் மாற்றங்கள் நடந்திருக்கின்றன .அன்றைய நிலையில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமை இல்லாமல் இருந்ததால்தான் பிரிட்டிஷார் வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாட்டையே ஆளும் நிலைக்கு உயர்ந்தார்கள். பிரிட்டிஷாரின் வருகை ஒரு வகையில் இந்தியாவின் ஒற்றுமையை உருவாக்கியது என்றே சொல்லலாம்.
இந்தியாவைச் சீர்படுத்திய பெருமையும் அவர்களையே சாரும். தனித்தனி சிற்றரசர்களாக ஒற்றுமை இல்லாமல் நாட்டை வெவ்வேறு பாதையில் கொண்டு சென்ற நேரத்தில் நாட்டை ஒருநிலைப்படுத்தியவர்கள் என்ற பெருமையும் அவர்களுக்கு உண்டு .ஆனால் நம் கலைச் செல்வங்களைக் கொள்ளை அடித்துக்கொண்டு போனார்கள் என்பதற்கு நாம் வேதனை படத்தான் செய்யமுடியும்.
வியாபார நோக்கோடு வந்தவர்கள் எப்படிப்பட்ட தந்திரத்தை கையாண்டார்கள் என்பதை நோக்க வேண்டும். போரில் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வைர நகை ஒன்றை ராபர்ட் கிளைவ் காணிக்கையாக அளித்தார் என்றால் அவர்கள் நம் மதத்தின் மீதும் நம்முடைய கோயிலில் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதை காட்டுகிறது அல்லவா ?
பிரெஞ்சுப் தேசத்தவர்களும் வியாபாரம் செய்ய வந்தார்கள் .அவர்களால் ஆங்கிலேயரை வெற்றி கொள்ள முடியவில்லை .காரணம் ஆங்கிலேயர்கள் கையாண்ட தந்திரமான போர்முறைகள் தான்.
ராணி மீனாட்சியின் மரணமும் வரலாற்றின் மாற்றத்திற்கு காரணமாகிவிட்டது. இதனால் இந்துக்கள் சிலருடன் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள் . இப்படித்தான் இந்தியாவில் அந்நிய ஆதிக்கம் ஏற்படத் வாங்கிய துவங்கியது . இது எல்லோரும் அறிந்த செய்திதான் .

இன்று சில இடங்கள் சாதாரண ஊர்களாக தோன்றுபவை ,அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களாக விளங்கின .
கடற்கரை ஓரங்களில் ஆங்கிலேயர்கள் அமைத்துள்ள கோட்டைகளையும் துறைமுகங்களையும் இன்றும் நமக்கு ஆச்சரியப்படும்படி அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர் .இதை எல்லாம் இப்படி சொல்லாவிட்டால் நம்மால் அறிந்து கொள்ள முடியாமலேயே போய்விடும்.
இதில் நிகழும் சம்பவங்கள் நம்மை சுற்றியே நிகழ்கின்றன .சென்னை ,காஞ்சி ஆற்காடு, வேலூர் ,கடலூர் ,திருச்சி ,தஞ்சை என்று படிப்பவர்களுக்கு திகைப்பு ஏற்படும் பல இடங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தன என்று அங்கு வாழ்பவர்கள் ஆச்சரியப்படத்தக்க அளவிலேயே ஆசிரியர் கதையை நகர்த்திச் செல்கிறார்.
பிரிட்டிஷாரின் முதல் படையெடுப்பு ஆற்காடு மீதல்ல . தேவிக்கோட்டை
மீதுதான். இது கொள்ளிடத்தின் முகத்துவாரத்தில் இருக்கிறது .நான்கு புறமும் நீர் சூழ்ந்து இருப்பதால் முன்பு தீவுக்கோட்டை என்றும் பிறகு தேவிக்கோட்டை என்றும் அழைக்கப்பட்டது. தேவி கோட்டையை ஒட்டினார் போல் கொடியம்பாளையம் என்ற சோழர்கால துறைமுகம் இருக்கிறது.
சமீப காலத்தில் தமிழகத்தில் நடந்த வரலாற்று கதை இது .வரலாற்று கதை மட்டுமல்ல வரலாற்று பெட்டகம் கூட. அவசியம் நாம் படிக்கவேண்டிய கருவூலம். நம்மவர்கள் எப்படி வீரத்தோடு வாழ்ந்தார்கள் என்பதையும் இது காட்டுகிறது .
இந்த நாவல் இங்கு வந்த வெளிநாட்டவர்கள் நம் தமிழ் மொழியை எவ்வளவு ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு பேசினார்கள் என்பதை எண்ணும் போது நமக்கு உடல் புல்லரிக்கிறது.
ராபர்ட் கிளைவ் கூட தமிழ் பேசி இருக்கிறான் என்னும் போது நமக்கு வியப்பாக இருக்கிறது . ஆனால் உண்மை. அந்த மாபெரும் வீரனின் வாழ்விலும் காதலும் வீரத்தோடு போட்டி போட்டு உள்ளது.
இப்படி நம்மவர் பெருமையையும் இணைத்துக் கொண்டு செல்லும் இந்த நவீன புதினம் இன்றைய மாணவர்கள் அவசியம் படிக்கவேண்டிய அரும் பொக்கிஷமாக திகழும் என்பதில் ஐயமில்லை.