நூல் அறிமுகம்: ராம் தங்கம் எழுதிய *ராஜவனம்* – செ. விஜயராணிநூல் : ராஜவனம்
ஆசிரியர் : ராம்தங்கம்
வம்சி வெளியீடு
விலை ரூ.70/-

மலை, மழை, நிலா, ரயில், யானை இப்படி இவையெல்லாம் எல்லா வயதினரையும் எல்லாக்காலத்திலும் மகிழ்ச்சியுறச் செய்யும் மகா சக்திகள்.

அந்த வகையில் நான் எனது 23வயதில் இரண்டு (1. சூரியக்கல், 2. கழுதைக்கடவு) மலைக்காடுகளுக்குப் பயணப்பட்ட. பொன்னான நாட்களை நினைவூட்டிய “ராஜவனம்” உருவாக்கிய ராம்தங்கத்துக்கு முதலில் என் வாழ்த்தும் அன்பும்.

அடர்ந்த வனம் அச்சமூட்டுவதாகத் தோன்றினாலும் அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டோமானால் அந்த சொர்க்கத்தின் பேரழகின் பேரின்பத்தை அணுஅணுவாய் ரசித்து அனுபவிக்கலாம்.

இந்த நாவலில் கோபாலுடன் ராஜேஷ், ஆன்றோ ஆகிய மூவரும் ஒரு முறையாவது நந்தியாற்று மூலத்தைப் பார்த்தே விடுவது என்ற லட்சியப் பயணத்தில் நம்மையும் அவர்களோடே காட்டுக்கு அழைத்துச் செல்கிறார் கதாசிரியர்.

அங்கே பயணத்தினூடாக கொண்டைப் பாம்புண்ணிக் கழுகிருக்கும் பகுதி பாம்பு பயமற்றதாக இருப்பதையும், பறவை உட்கார்ந்த நிலையை வைத்தே குஞ்சு பொரித்த பறவையென அவதானிப்பதையும், காட்டுத்தேளை அதன் கொடுக்கை ஜே. சி. பி க்கு ஒப்பிடுவதையும் அருமையெனலாம். காட்டில் மரங்களின் ஊடாக நடக்கும்போது மேல் நோக்கியும் பார்த்துச் செல்ல வேண்டும் என்று எங்களோடு வழித்துணையாக வந்த பழங்குடிகள் சுமையாட்கள் சொன்னது நினைவில் வந்தது. ஏனெனில் சிறுத்தையோ பாம்போ இருக்கலாம் என்பதற்காக. நாங்கள் சென்ற போது கருநாகம் ஒன்று மரக்கிளையில் சுருண்டு படுத்தோ (!) அமர்ந்தோ இருந்ததைப் பார்த்து இதயத்துடிப்பு பலமடங்கு பெருகியது இப்போதும் நினைவில் வருகிறது.

புல்வெளி வட்டமலை வனதெய்வத்தை வணங்கினால் எந்த பயமுமில்லை. எந்த விலங்கும் தீண்டாது என்ற நம்பிக்கை பொய்க்கவும் இல்லை. “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தில் கூட ஏலக்காய் மூட்டையோடு சுமைதூக்கிகள் ஒரு வன தெய்வத்தை வணங்கிச் செல்வதைப் பார்த்திருப்போம்.கோபால்கூறுவதுபோல யாருக்கேனும் ஏதேனும் சிக்கல் வந்தால் முயற்சி செய்தும் முடியாமல் போனால் பேச்சிப்பாறை பாரஸ்ட் செக்போஸ்ட்டில் தகவல் தரவேண்டும் எனச் சொல்வதிலேயே நமக்குக் கிலி தொடங்கிவிடுகிறது. அங்கே குகையில் இருந்த முதுகுப்புறம் இணைந்த இரட்டை நாற்காலியின் ஆச்சரியம் அற்புதம்.

கோபாலுக்கு அப்பாவின் நினைவுகளின்வழி, வனக்காவலரான ராஜசேகரின் அர்ப்பணிப்புமிக்க பணிகளாக யானைகளைப் பாதுகாப்பதாகட்டும், பழங்குடிகளைப் பாதுகாப்பது அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி பயனுறச்செய்வதாகட்டும், வன விலங்குகளிடம் காட்டும் வாஞ்சையாகட்டும், வனத்திற்கோ வனவிலங்குகளுக்கோ எதிராக யார் பங்கம் விளைவித்தாலும் அது அமைச்சரானாலும் நீதிபதியானாலும் அவர்களை எதிர்த்து அவர்களுக்கான தண்டனை பெற்றுத் தருவதில் இப்படியாக ஒரு நேர்மையாளனுக்கு எற்படும் முடிவு பெருஞ்சோகம் தரும் நிதர்சன உண்மையைச் சொல்கிறார்..

கோபால் தான் ராஜசேகரின் மகன் என்பதை அறிந்த காணிக்காரர்களின் அன்பும் கவனிப்பும் அத்தனை இயல்பானதாய் உணரவைக்கிறது. காணிக்காரக் குடியிருப்பில் கோபால் இருந்த அந்தப் பொழுதிலேயே ஒரு பிரசவம், ஒரு பூப்பெய்தல் இவற்றோடு அவர்களின் இயற்கை சார்ந்த மருத்துவ வாழ்வியல் முறையையும் அழகாகச் சொல்கிறார். அதன்பிறகான நந்தியாற்று மூலத்தைப் பார்க்க மூட்டுக்காணி மற்றும் பிலாத்தியுடனும் கோபால் சென்றானா என்பதை படித்துத் தெரிந்து கொள்ளணும்.