சிறுகதை: ராஜலிங்கம் என்கின்ற ராஜி – சத்யா சம்பத்குமார்ப்ரீத்து என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ப்ரித்திவிகாவிற்கு இன்றுடன் பதினேழு வயது முடிகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரில் காவிரி கரையோரமாக இவர்களது பெரிய பங்களா அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி கடலை சென்றடைய வேகமாக ஓடும் காவிரிக்கரையில் தெற்கு நோக்கி இவர்களது பங்களா அமைந்திருக்கும். இதில் மேற்கு புற பெரிய மதில் சுவரில் பின்புறம் நிறைய குடிசை வீடுகள் அமைந்திருக்கும். அப்பகுதியில் ஒரு சிறிய கேட் அமைக்கப்பட்டிருந்தது. எதற்காகவெனில் பிறந்தநாள் போன்ற விழாக்கள் நடைபெறும் பொழுது எஞ்சிய உணவுப்பொருள்களை எப்படியாவது காலி செய்யவேண்டும் என்றால் கேட்டைத் திறந்தால் அங்கிருக்கும் குடிசைவாசி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டுக் கொண்டு வந்து உணவுகளை காலி செய்வதுடன் தோட்டக்கார முனியப்பனுடன் சேர்ந்து மறுநாள் தோட்டத்தை நன்றாக சுத்தப்படுத்தியும் விடுவார்கள்.

அங்கு ஓரளவிற்குப்  படிப்பு வாசனை உள்ளவன் ராஜலிங்கம். அந்த குடிசை பகுதியில் எந்த நேரத்தில் யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் சிறிதும் தயக்கமின்றி உடனே உதவி புரிவான். மேலும் சிறுவர்களை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி வைப்பான்.  அங்கு உள்ள சூழலில் கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் சென்றால் தான் மூன்று வேளை உணவு உண்ண முடியும் .வேலைக்குச் சென்று வரும் பெண்கள் வீட்டு வேலை செய்வது சிரமம் என்று வீட்டிலுள்ள சிறுவர்களிடம் வீட்டு நிர்வாகத்தை திறம்பட செய்ய பழக்கப்படுத்தினான். 

நெருக்கடியான சூழ்நிலையிலும் அப்பகுதி சிறுவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ உதாரணமாக இருந்து அனைவருக்கும் வழிகாட்டினான். அவன் எந்த விழாவிற்கு உணவு உண்ண வந்தாலும் யாருக்கு விழாவோ அவர்களை பாராட்டாமல் செல்ல மாட்டான். அதற்காக வேலையாட்கள் உதாசீனப்படுத்தினாலும் பொருட்படுத்தாது காத்திருந்து வாழ்த்து தெரிவித்துவிட்டுத்தான் செல்வான்.

ப்ரீத்துக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவனது வாழ்த்து நினைவில் உள்ளது. கடந்த நான்கு வருடங்களாக கவனித்துக்கொண்டுதான் இருந்தாள் அவனது நடை, உடை பாவனைகளில் மாற்றங்கள் இருப்பதை.

தோட்டக்கார தாத்தாவிடம் கேட்டதற்கு அவன் பொம்பள சட்டி ஆகிவிட்டான் என்று கூறினார். மேலும் அவனைத்  தலை மேல்  வைத்துக் கொண்டாடிய அப்பகுதி மக்கள் இப்பொழுது அவனைக் கண்டாலே விரட்டி அடிப்பதை மிக வேதனையுடன் தெரிவித்தார்.

அவளுக்கு விளங்கவில்லை மீண்டும் கேட்டதற்கு தாத்தா, தன் வேலையை நிறுத்தி விட்டு அவள் அருகில் வந்து ஆணாக இருந்து இப்பொழுது தன்னை பெண்ணாக நினைத்துக் கொண்டிருப்பவன் என்று கூறி, ‘உனக்கு இது புரியாது மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதேஎன்று தனது வேலையை பார்க்க சென்றார். ‘டிரைவராக வேலை பார்த்து கொண்டிருந்தாரே என்னவாயிற்று? என்று கேட்ட ப்ரீத்துவிடம் இப்படி இருப்பவனுக்கு யார் வேலை கொடுப்பார்கள் வேலையை விட்டு துரத்திவிட்டார்கள். பெற்ற பாவத்திற்காக இவனது தாய் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒருவேளை சோறு போடுகிறாள்என்றார்.

இவள் இதனை யோசித்துக்கொண்டே வீட்டினுள் செல்வதற்கும், பெரிய லாண்டரி நிறுவனத்தில் இருந்து வந்த வேலையாள் சலவை செய்த துணிகளை எடுத்து சொல்வதற்கும்  சரியாக இருந்தது. 

அதைக்  கண்டதும் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது யோசனையை தன் பிடிவாத குணத்தின் உதவியுடன் தந்தையிடம் கூறி சம்மதத்தை பெற்றுக்கொண்டு நேராக தோட்டக்கார தாத்தாவிடம் வந்தாள். ராஜலிங்கத்தை அழைத்து வருமாறு கூறியவளை விசித்திரமாக பார்த்தவரை நீங்கள் முதலில் அழைத்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தாள். அவர் சிறிது நேரத்திலேயே ராஜலிங்கத்துடன் வந்தார்.                       

நான் ஒரு வேலை கொடுத்தால் செய்வீர்களாஇழிவானது என்று நினைக்கக்கூடாது!” என்றவளிடம், “மிகுந்த ரோஷத்துடன் உழைக்கும் எந்தத் தொழிலும் இழிவானதல்ல” என்று கூறினான் . 

இதனை மனதில் குறித்துக் கொண்டவள், “எங்கள் வீட்டில் தினமும் திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் எங்களது ஆடைகளை துவைத்து சலவை செய்து கொடுக்க வேண்டும்” என்று அவனது முகத்தை கவனித்தாள். 

இவ்வளவுதானா என்று பாவனையுடன் கூறியவன், நன்றி பெருக்குடன் கண்ணில் நீர் பெருகக் கைகூப்பி நின்றான் ராஜி என்கின்ற ராஜலிங்கம்.
காரிருளில் இருந்து தவித்தவனுக்கு, தோன்றிய ஒளி சுடராக இதனை பயன்படுத்தி கொண்டான் ராஜா என்கின்ற ராஜி.

தனது உழைப்பாலும், திறமையாலும் திறம்பட வேலை செய்தவனைப் பார்த்த ப்ரீத்துவின் தந்தை தங்களது நிறுவன சலவை வேலை மட்டுமின்றி துப்புரவு மற்றும் பராமரிப்பு வேலையையும் சேர்த்து கொடுத்தார். உடனே அவன் கண் முன் தோன்றியவர்கள் குடிசைப்பகுதி இலைஞர்களே, தான் அழைத்தால் வருவார்களா , பெற்றோர்கள் விடுவார்களா என்று கலக்கியவன் நேராக அப்பகுதி மக்களிடம் சென்று தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை கூறி தங்களது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு நான் உத்தரவாதம் என்று பலவாறாக கூறி தன்னுடன் பணிபுரிய சம்மதம் பெற்றான்.முதலில் ஒரு ஐந்து இளைஞர்கள் மட்டுமே இவனுடன் சேர்ந்து உழைக்க களமிறங்கினார்கள். ப்ரித்துவின் வீடு மற்றும் அலுவலகமும் அனைவரும் நன்றாக பராமரிக்கிறிர்கள் என்று கூறி வியக்கும் அளவிற்கு பளிச்சென்று சுத்தமாகவும், அழகாகவும் இருந்தது. 

காரணம் யார் என்று அறிந்தவர்கள் அவனைக் கண்டதும் தயங்கினர் பின் அவனது உழைப்பே அனைவரையும் அவனிடம் இழுத்தது. இன்னும் சில அலுவலக வேலையும் கிடைத்தது . குடிசைப்பகுதி பெரும்பாலான இளைஞர்கள் இவனுடன் சேர்ந்தனர்.

குடிசைப்பகுதி அனைத்தும் கட்டிடங்களாக மாறின, அனைவரது வாழ்க்கை தரமும் உயர்ந்தது. இவனை உதாசீன படுத்திய அனைவரும் இவனிடம் பேசும் நேரத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இது மட்டுமன்றி தனது பணியை மேலும் சில பெரு நகரங்களில் விரிவுபடுத்த விரும்பினான். அவற்றில் தன்னைப் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து நாங்களும் மனிதர்கள் தான் எங்களாலும் உழைத்து சக மனிதர்கள் போல் இவ்வுலகில் வாழ முடியும் ஏன்? அதற்கு மேல் பல இளைஞர்கள் வாழ வழிகாட்டவும் முடியும் என்று தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கி சிந்தித்துக் கொண்டிருந்தான், அல்ல, கொண்டிருந்தாள் ராஜலிங்கம் என்கின்ற ராஜி.