Rajam Krishnan in Kurinjith Then (Novel) Book Review. Book day website is Branch of Bharathi Puthakalayam

நூல் அறிமுகம்: ராஜம் கிருஷ்ணனின் *”குறிஞ்சித் தேன்”* – பா. அசோக்குமார்“குறிஞ்சித் தேன்”
ராஜம் கிருஷ்ணன்
நாம் தமிழர் பதிப்பகம்
கௌரா ஏஜென்ஸீஸ்.
பக்கங்கள் : 352
₹. 180

சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் என்ற சிறப்பம்சம் பெற்ற நூலே இது. விருது பெறுவதற்கான உரிய படைப்பே இதுவென உறுதியாக கூறலாம். குடும்பப் பாங்கான சமூக நாவல்களையே பிரதான படைப்பாகக் கொண்டு எழுதும் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மலையில் வாழும் படுகர் இன வாழ்வியலை அழகாக எடுத்துக் காட்டும் நூலே இது. “குறிஞ்சித் தேன்” என்ற தலைப்பு இந்நூலுக்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறது. ஒரு குடும்பத்தைப் பிண்ணனியாக கொண்டு நாகரிக மாற்றத்தில் படுகர் இனக்குழுவில் ஏற்படும் நாகரிக மாற்றங்களை மிகத் தத்ரூபமாக காட்சிபடுத்திய விதம் பாராட்டுதலுக்குரியது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலரின் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு நாவலை பயணிக்கச் செய்த விதம் நறுமணமூட்டுவதாகவே அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐந்து குறிஞ்சி பருவங்களில் (5 ×12 =60 ஆண்டுகள்) ஜோகி என்ற சிறுவனின் வாழ்வியல் நிகழ்வுகள் வழியாக கதையை விவரித்த விதம் சுவாரஸ்யமான அனுபவமே.

ஜோகி, ரங்கன், கிருஷ்ணன், பாரு என்ற சிறுவர்களின் அறிமுகத்துடன் தொடங்கும் முதல் அத்தியாயம் சிறுவர்கள் குறித்தான நாவலோ என்ற சிந்தனையை எழச் செய்தது. ஆனால் இந்த நான்கு கதாபாத்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு நாவல் விரிந்த விதமே மிக மிக இயல்பானது. ஜோகியின் தந்தையான லிங்கையாதான் கதாநாயகனோ என்று அனுமானித்த எண்ணமும் உடனே காலவதியாகிப் போனது.

உதவாக்கரை அண்ணன் மீதும் அண்ணன் குடும்பத்தினர் மீதும் லிங்கையா காட்டும் பரிவும் பாசமுமே அனைத்து விபரீத வினைகளுக்கும் காரணமாக அமைவதெல்லாம் விதிவசமின்றி வேறேது. திடீரென்று நோய்வந்து வீழ்வதும் மரணம் தழுவும் வரையிலும் அண்ணன் குடும்பத்தின் மீது காட்டும் கரிசனம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதே.

Rajam Krishnan in Kurinjith Then (Novel) Book Review by P. Ashok kumar. Book day website is Branch of Bharathi Puthakalayam

லிங்கையாவின் அண்ணனான ராமனின் கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமான பாத்திரப் படைப்பே ஆகும். இல்வாழ்வில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் உழைப்பிலும் ஈடுபடாமல் இருந்த போதிலும் தம்பியின் மீதும் உறவுகளின் மீதும் காட்டும் பாசமும் அக்கறையும் விசித்திரமானதே… ஆன்மீகப் பாடல்கள் பாடுவதிலும் நடனம் புரிவதிலும் மெய்மறந்து மோன நிலையில் லயிக்கும் காட்சிகள் கவித்துவமானவைகளே..

நாவலின் மைய கதாபாத்திரமாக ரங்கனே ஆட்சி செய்கிறான். கிருஷ்ணன் மீது காட்டும் பொற்மையும் வெறுப்பும் தனிரகம் என்றால் ஜோகியிடம் காட்டும் நேசமும் அக்கறையும் வேறொரு ரகம். பாருவை மணமுடிக்க மும்முனைப் போட்டியில் ரங்கன் வெல்வதும் அதனைத் தொடர்ந்து நிகழும் வாழ்வியல் மாற்றங்களும் கண்ணீர் சிந்த வைக்கக் கூடியவைகளே… நேர்மையென்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு உறவுகளை எல்லாம் தனது வீம்பிற்காகவும் போலி கௌரவத்திற்காகவும் பலியிடும் ரங்கன் கதாபாத்திரம் யாவருக்கும் படிப்பினையைத் தரக்கூடியதே ஆகும்.

அழகான கிராம வாழ்க்கை நாகரிக வளர்ச்சியில் சிக்குண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டுண்டு பரிதவித்து காட்சிகளும் கோணங்களும் மாறி புறத்தோற்றத்தில் அலங்கோலமாகி மனிதர்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டு அல்லோலப்படுவதும் மிக இயல்பாக எடுத்தியம்பியுள்ளார் எழுத்தாளர் அவர்கள். ஹட்டியிலிருந்து முதன்முறையாக படித்து மெத்தையில் வாழ்ந்து கிராமத்தை உயர்த்த பாடுபடும் கிருஷ்ணனின் கதாபாத்திரம் நேர்மையின் உறைவிடமாகக் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

பிளேக் நோய் பரவும் போது லிங்கையா குடும்பத்தினருக்கு மட்டும் தடுப்பூசி வழங்காமல் செல்லும் காட்சி மட்டுமே நெருடலானது. குடும்ப கௌரவப் பகையின் உச்சப்பட்ட வெறுப்பின் அத்தாட்சியாகவே அதனைக் கருதும் சூழலே உண்டாகிறது. ஜோகி குடும்பத்திற்கு மறைமுகமாக கிருஷ்ணன் செய்யும் உதவிகள் எல்லாம் எளிதில் நம்மால் உத்தேசிக்க முடியாத வண்ணம் நாவலை நகர்த்தியதில் எழுத்தாளர் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

சிறுவயது முதலே அப்பாவின் மீதும் உறவுகள் மீதும் பாசமும் நேசமும் கொண்ட ஜோகி இறுதிவரை அங்ஙனமே வாழ்வது மிக நுட்பமான பாத்திரப் படைப்பே ஆகும். பாருவுக்கும் கிருஷ்ணனுக்குமான காதலை உணர்ந்து இணைக்கத் துடித்தும் எண்ணமாகட்டும் இறுதி வரை பாருவுக்கு அனுசரணையாக வாழ்வதாகட்டும்… நிஜ ஹீரோவாகவே ஜொலிக்கிறார் ஜோகி. ஜோகிக்கும் அவன் மனைவி கிரிஜைக்கும் இடையேயான அன்பும் அண்ணன் ரங்கன் மீது காட்டும் நேசமும் மகன் நஞ்சன் மீது காட்டும் பரிவும் மிக உன்னதமாக உணர்வாகவே நாவல் முழுவதும் இழையோடுகிறது.

பாருவின் பாத்திரப் படைப்பு பெண்களின் இயல்பான வாழ்க்கை நெறியைச் சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. ரங்கனின் மனைவியாகவே இறுதிவரை வாழ்ந்து ஜோகியின் மகன் நஞ்சனையே உயிராகப் பாவித்து வளர்த்து வாழ்வின் இறுதிவரை துன்பக்கடலிலேயே உழன்று வாழும் பாருவின் கதாபாத்திரம் பேசும் கருப்பொருள்கள் ஏராளம். காட்டை கழனியாக்கி ஆரஞ்சு மரம் வளர்ந்து மண்ணின் மீது நேசம் வைத்து வாழும் பாரு நம்முன் தீட்டும் சித்திரங்கள் ஏராளம்.

இந்நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பேசும் சங்கதிகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவைகளே… மண்ணின் மீது இருந்த பாசமும் நேசமும் மறைந்து பணப் பயிர்களின் மீது மோகங்கொண்டு மலை மக்கள் தடுமாறும் காட்சிகள் மிக யதார்த்தமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பணத்தின் மீது ஆசை கொண்ட பின்னர் உறவுகள் மற்றும் அண்டை அயலார் மீதிருந்த அன்பும் நேசமும் காலாவதியாகும் தருணங்களை நுட்பமாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் அவர்கள்.தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி மலைமக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை நஞ்சனின் படிப்பு வழியாக விவரித்த நுட்பம் அலாதியானது. பழங்கால வழிபாட்டு முறைகள் ( திருவிழாக்களில் இசை, நடனம், தீ மிதித்தல்), பழக்க வழக்கங்கள் ( பால்மனை புகுதல் சடங்கு இறுதி ஊர்வலத்தில் நடனங்கள், இளந்தாரி கல் தூக்குதல், உணவு பழக்க வழக்கங்கள் ) ஆகியவை நவீன காலத்தில் அடையும் மாற்றங்கள் என நாவல் சுட்டும் சங்கதிகளும் ஏராளம்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் கவித்துவமான வருணனைகள் வழியாக நீலகிரி மலையின் அழகியலையும் பருவ மாற்றங்களையும் விவரித்த விதம் மிக மிக ரசனைமிக்க அனுபவத்தைத் தரவல்லதே. இயல்பாக இருந்த இரு தார முறையைச் சுட்டிக் காட்டவும் தவறவில்லை எழுத்தாளர். வாகன வசதி முதல் மின்விளக்கு வசதி வரை மலை மக்கள் அடைந்த வளர்ச்சிநிலைகளைக் கூறிக் கொண்டே மண்ணின் மீதான பாசத்தைக் காட்டவும் தவறவில்லை எழுத்தாளர்.

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தைத் தாரை வார்க்கத் துணிந்த பாருவும் ஜோகியும் அணை கட்டி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு நிலத்தை இழக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் மண்ணின் மீது மனிதர்கள் கொண்ட நேசத்தை பறைசாற்றக் கூடியதாகவே அமைந்துள்ளது. செல்வச் செழிப்பாக திளைத்த குடும்பத்தின் தலைவன் படுக்கையில் வீழ்ந்த பின்னர் இறுதிவரை எழ முயலும் போராட்டங்களை மிக நுட்பமாக பல்வேறு கோணங்களில் பேசுகிறது இந்த நாவல்.

விதியென்றும் சுருக்கிவிடாமல் ( லிங்கையா மரணம்) வீராப்பின் அவலமென்றும் (ரங்கன்) கருதிவிடாமல் அதீத அக்கறையின் எதிர்பயனோ (அண்ணன் – தம்பி பாசம்) வறட்டு கௌரவத்தின் (கிருஷ்ணனின் பகை) விளைவோ பழமையை பாதுகாக்கும் (தேயிலை பயிரிட மறுத்தல்) வேள்வியோ என்று ஏதேதோ காரணங்கள் நம்முன் தோன்றினாலும் ஜோகியின் வாழ்வியல் சூட்சும ரகசியத்தை நாம் அறிவது கடினமே… எழுப்பும் வினாக்கள் ஏராளமாக இருந்தாலும் நாகரிக மாற்றத்தையும் காலமாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்ற புரிதலே இந்நாவலில் மேலோங்கி நிற்பதாக அடியேன் கருதுகிறேன்.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *