வேருக்கு நீர் நாவல் | ராஜம் கிருஷ்ணன் | Verukku Neer Novel | Rajam Krishnan

வறுமையிலும் அறியாமையிலும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள் தங்களுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுகையில் அவரவர் மனங்களின் நிலைப்பாடுகள் எப்படி மாறிப் போகின்றன என்பதை வேருக்கு நீர் விவரிக்கிறது.

தேசத்தை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை சிந்திக்கவும் செயல்படவும் விடாமல் கல்வி அறிவைப் பெறாத வண்ணம் தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு வறுமையிலும் அறியாமையிலும் மக்களை சிறைப்படுத்தியது ஆதிக்கத்தனம். ஏனென்றால் சிறைவாசம் இம்மென்றால் வனவாசம் என்ற கொடுங்கோல் தனத்தை எதிர் கேள்வி கேட்க முடியாமலும் ஒன்று சேர்ந்து போராடுவதற்கான உறுதியும் துணிவும் மனதில் எழாத காரணத்தினாலும் அடிமைச் சகதியில் உழன்று கொண்டிருந்த இந்தியர்களை ஒருங்கிணைக்க அகிம்சை நாயகன் உருவாகிறார்.

அகிம்சையின் வழியே ஆயுதத்தை கையில் எடுக்காமல் மனங்களில் ஒற்றுமையையும் அறிவையும் விரிவு படுத்தி போராட அழைக்கும் காந்தியின் வழியில் தேசமே திரண்டு நிற்கிறது. ஆயுதங்களை கையில் எடுக்காமலும் வன்முறையை பின்பற்றாமலும் அன்பையும் கருணையையும் சகிப்புத்தன்மையையும் ஆயுதமெனக் கொண்டு மனங்களை பிணைக்கும் அகிம்சையின் வழியே மக்களை கிராமத்தை நோக்கி திசை திருப்புகிறார் காந்தி. கிராமத்தை தன்னிறைவாக்கும் திட்டங்கள் வழியாகவும் கல்வியை மக்கள் மனங்களில் விளைவித்து அறியாமை இருளகற்றி அதன் வழியே எல்லா கிராமங்களையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் காந்தியின் திட்டங்கள் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பிக்கின்றன

சுதந்திர போராட்டத்தின் இறுதி காலகட்டங்களில் மத நல்லிணக்கம் சீர்குலைந்து நாடெங்கும் மதக் கலவரங்கள் வெடிக்கையில் காந்தியின் அகிம்சை கொள்கையும் சகிப்புத்தன்மையும் மக்களின் மனங்களில் இருந்து காணாமல் போகின்றன. சகோதரர்களாக நண்பர்களாக உறவினர்களாக வாழ்ந்து வந்த மக்களிடையே மதம் புகுந்து ஒற்றுமையை சீர்குலைத்து வேற்றுமையை விதைக்கிறது. அந்த வகையில் விடுதலைக்காக போராடிய மக்களின் ஒன்றுபட்ட மனமும் தியாகங்களும் அதன் வழியே மக்களிடம் நிலவிய ஒற்றுமையும் விடுதலைக்குப் பிறகு மக்கள் மனங்களில் இருந்து காணாமல் போனது எப்படி? காந்தியின் கொள்கைகள் சுதந்திரம் பெறுவதற்காக மட்டுமே மக்கள் பின்பற்ற துவங்கினரா? தனக்கென விடுதலை உணர்வும் தனக்கான நாடு என்ற கட்டமைப்பும் இந்தியர்களிடம் வந்து சேர்கையில் அவர்கள் காந்தியின் கொள்கைகளையும் அவர் நிலைநாட்டிய திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் கைவிட்டது ஏன்? இன்றைய காலகட்டங்களில் காந்தியின் சிந்தனைகள் மக்களின் மனங்களில் ஏன் மாற்றங்களை உருவாக்கத் தவறின? ஒவ்வொரு தனி மனிதனும் தனது உயர்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகையில் சுயநலம் பெருகி பொதுநலம் அழிந்துவிடும் சூழலில் காந்தியின் சிந்தனைகள் செயலற்றப் போகின்றனவா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது வேருக்கு நீர் நாவல்.

காந்தியுடன் சபர்மதி ஆசிரமத்தில் போராடிய தியாகிக்கு மகளாகப் பிறந்த யமுனா ஊட்டியில் ஒரு மலை கிராமத்தில் அனாதை குழந்தைகளுக்கும் மலைவாழ் சிறுவர்களுக்கும் ஆசிரமம் அமைத்து அவர்களுக்கு கல்வியறிவும் உலக நடப்பும் கற்றுக் கொடுத்து அவர்களை பேணிப் பாதுகாக்கிறார். அதே ஆசிரமத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த துரை என்பவரும் யமுனாவை காந்தியின் கொள்கைகளுக்கு பின்னால் நிலை நிறுத்திய அம்மாவன் ஜோசப் அவர்களின் உதவியால் படித்து பட்டம் பெறுகிறார்.

ஒரு கட்டத்தில் சென்னைக்குச் செல்லும் யமுனா அங்கே பல கூட்டங்கள் வாயிலாக காந்தியின் கொள்கைகளையும் அதன் வழியே நாட்டின் முன்னேற்றத்தையும் மக்களிடம் எப்படி உருவாக்குவது என்பதை சொற்பொழிவாகபா பேசுகிறார். ஆனால் அவரது பெரியப்பா மகன் யமுனாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் யமுனா பெற்றோர்களின் உதவியுடன் துரையை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.

துரைக்கு கல்கத்தாவில் வேலை கிடைக்கிறது. மிகுந்த கனவுகளுடனும் ஒன்றுபட்ட சிந்தனையுடனும் காந்தியின் கொள்கைகள் இருவரையும் ஒன்றிணைக்க கல்கத்தாவில் இல்லறம் நடத்த செல்கிறது யமுனா துரை ஜோடி. அங்கே துரைக்கு அலுவலகத்தின் வாயிலாக புதுப்புது பழக்கங்களும் வசதிகளும் வாய்ப்புகளும் பெருக அவரது மனம் மெல்ல மெல்ல காந்திய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு அன்றாட வாழ்வில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள எவ்விதமெல்லாம் குறுக்கு வழிகளை பின்பற்றுவது என்பதை நோக்கி சிந்திக்க ஆரம்பிக்கிறது.

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை முழுவதுமாக பின்பற்றும் யமுனாவிற்கும் காந்தியின் கொள்கைகளால் எவ்விதமான பலன்களும் ஏற்படப்போவதில்லை என்று உருமாறி நிற்கும் துரைக்கும் மனதளவில் பிரிவினைகள் வெடிக்கின்றன.

இச்சூழலில் சுதந்திரத்திற்கு பிறகான கல்கத்தாவில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. ஒரு சூழலில் துரைக்கு நேரும் விபத்தில் அவரது ஒரு கால் செயலிழக்கிறது. இச்சூழலில் சுய பச்சாதாபத்தாலும் யமுனாவின் மீதான வெறுப்பினாலும் துரை மனதளவில் உடைந்து போகிறார்.

அத்தக சூழலில் யமுனா என்ன முடிவெடுத்தாள் என்பதை வேருக்கு நீர் நாவல் விடை கூறுகிறது.

ஒரு தேசம் வளர்ச்சியடைவதற்கான கட்டமைப்புகள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படவும் கிராமங்களும் தன்னிறைவு பெறவும் எல்லா மனிதர்களும் கல்வி அறிவின் வாயிலாக வாழ்வின் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லவும் தேசத்தின் வளர்ச்சி முக்கியப் பங்காற்றுகிறது. அத்தகு வளர்ச்சி என்பது இயற்கையை மாசுபடுத்தாமலும் சுற்றுச்சூழலை சீர்குலைக்காமலும் இருத்தல் அவசியம். அந்த வகையில் காந்தியின் கொள்கைகள் ஒவ்வொரு தனி மனிதரையும் மதித்து அவர்களது கருத்துகளையும் திட்டங்களையும் செவிமடுத்தல் அவசியம் என்பதை நினைவு கூறுகிறது. ஆனால் அறிவியல் யுகத்தில் வேகமான வளர்ச்சியில் காந்தியின் சிந்தனைகள் தேசத்தை முழுமை அடைய வைக்குமா என்ற ஐயப்பாடு வளர்ந்து வரும் சமுதாயத்தினரிடம் நிறையவே எதிரொலிக்கிறது.

இத்தக சூழலில் அகிம்சாவாதிக்கும் வன்முறையை நாடுபவருக்கும் இடையிலான தொடர்பை விவரித்துச் செல்லும் இந்த நாவல் தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையின் போக்கையும் விவரித்துச் செல்கிறது

உள்ளத்தே சத்தியம் எளிமை தியாகம் அஹிம்சை ஆகிய நற்பண்புகளை சுவராக எழுப்பிக் கொண்டாலே நாம் விடுதலையின் முழு இன்பத்தையும் பயனையும் பெற முடியும் என்பது யமுனாவின் கொள்கை

“”அந்த நாட்களில் தலைவர்கள் தன்னலமற்ற தியாகத்தினாலும் நாட்டுப்பற்றினாலும் எளிய மக்களும் தாம் உயிர் வாழ வேண்டும் என்று மெய்வருந்த சேவை செய்ததினாலும் உருவானார்கள். இந்நாட்களிலோ கூட்டங்களாலும் கோஷங்களாலும் பூமாலைகளாலும் பத்திரிகைகளாலும் உருவாக்கப்படுகிறார்கள். உண்மையான தியாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கூட இந்நாட்களில் இந்த விளம்பரங்கள் இல்லையேல் எடுபடவில்லை. இதனால் கையில் பணம் உள்ளவன் மற்றவர்களை விலைக்கு வாங்கி சாதித்துக் கொள்கிறான். மிருக வலிமை கொண்டவன் பணக்காரர்களை விரட்டி மிரட்டி வன்முறையில் அவனை விலைக்கு வாங்குகிறான் “”என்று இன்றைய சூழலை அன்றே படம் பிடித்து காட்டுகிறது நாவல்.

 

நூலின் தகவல்:

நூல் : வேருக்கு நீர் – நாவல்

ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன்

பதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம்

வெளியான ஆண்டு : ஐந்தாம் பதிப்பு, 2023

பக்கம் : 208

விலை : ரூ. 250/-

 

நூலறிமுகம் எழுதியவர்: 

இளையவன் சிவா @ கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *