அட்சய பாத்திரம் சிறுகதை தொகுப்பு ஆசிரியர் குறித்து:
ஆசிரியர் ராஜாமணி பழனியப்பன் அவர்கள் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் . கடந்த 40 ஆண்டுகளாக இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நகைச்சுவைகளையும் எழுதியுள்ளார். தற்போது தான் அவற்றை தொகுத்தும் வருகிறார்.
இனி அட்சய பாத்திரம் சிறுகதை தொகுப்பு குறித்து :
ஆரம்பகாலத்தில் சிறுகதைகள் எழுதுவோர், பெரும்பாலும் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கதைகளாக எழுத ஆரம்பிப்பர் . அதுபோல இங்கு பல கதைகள் வகுப்பு சூழ்நிலை சார்ந்ததாகவும் , ஆசிரியரின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
13 தலைப்புகளில் சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றில் முதல் கதையான நூறை நோக்கி 1960களில் ஒரு பொருளின் விலை எத்தனை பைசாவுக்கு விற்கப்பட்டது என்பதையும், அதை இன்றைய காலத்தோடு ஒப்பிட்டு மக்களின் வாழ்வும் எப்படி எல்லாம் மாறி இருக்கிறது என்பதை மையமாக வைத்து கதை புனைந்துள்ளார்.
“கௌரவம்” என்ற சிறுகதை ஆண்கள் வீட்டில் வேலை செய்வதற்கு யோசிப்பதையும், அதே பணி செய்யும் இடத்தில் என்றால் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, வீட்டில் செய்ய நினைக்காத வேலையை வேறுவழியின்றி செய்யும் போது உள்ள முரண்பாட்டான சமுதாய நிலையை சுட்டி காட்டியுள்ளார்.
டிக்.. டிக்.. ஆராய்ச்சி கதை எனக்கு மிகவும் பிடித்த கதை . காரணம் என்னவென்றால் நாம் ஒரு தொழிலை தொடங்க, கற்க நினைக்கும் போது அதில் எத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை சொல்லும் விதமாக கதைக்கரு அமைந்தது தான்.
“காலம் கடந்த ஞானம் “ என்ற கதையில் ஒரு கல்லூரி வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர்களிடம் பாடம் படிப்பது போன்ற உணர்வையே தந்தது. இந்த கதையில் கூறப்பட்டுள்ள ‘சிக்கன் சூப் ஃபார் தி சோல் ‘ என்ற புத்தகத்தில் உள்ள ‘ ‘ கலெக்ட் அஸ் மெனி பெபிள்ஸ் அஸ் யூ கேன்’ என்ற கதை எல்லா வகுப்பறைகளிலும் சொல்லப்பட வேண்டிய கதை. மாணவர்களிடம் தன்னம்பிக்கையை விதைக்குமாறு உத்வேகம் தரக்கூடிய நற்சிந்தனை கதை.
வாழ்க்கை சக்கரம் என்ற கதையில் உள்ளவாறு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஏமாற்றினால் அவனும் ஏமாற்றப்படுகிறான் என்ற சூழல் தற்போதைய காலத்தில் சாத்தியப்படுகிறதா என்பது தெரியவில்லை . எனக்கு இந்த கதை எதை நினைவூட்டுகிறது என்றால் …
ஏமாற்றுகிறவன் ஏமாற்றப்படுவான் என்பதைத்தான். அப்படி பார்க்க போனால் இன்றைய சூழலில் ஏழை எளியவர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகளின் செல்வம் சூரையாடப்பட வேண்டும். ஆனால் அங்கோ செல்வம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே தான் சொல்கிறது. அதனால் எனக்கு இந்த கதை சற்று முரணாகவே பட்டது.
மருத்துவராவது நிச்சயம், ஐம்பதில் பெருவாழ்வு, அட்சய பாத்திரம், பாதி கனவு , சாபம் போன்ற கதைகள் எல்லாம் கதைகளாகவே இருந்தாலும் மூடநம்பிக்கையை பரப்புவதாகவே தோன்றியது. அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர் முற்போக்கு சிந்தனையுடன் கதைகளை எழுத வேண்டும். ஆனால் கதைகள் ரசிப்பதற்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது ஒருபுறம் என்றாலும் வாசிப்பவர் மனதில் எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும் என்று தான் எனக்கு தோன்றியது.
நிறைகளை மட்டும் சொல்லிவிட்டு குறைகளை சொல்லாமல் இருப்பது விமர்சனம் அல்ல. அடுத்து வரும் புத்தகங்களில் ஆசிரியர் இதனை களைவதற்கு இவ்விமர்சனம் சிந்தனை மாற்றம் தரும். கதைகளிலும் ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு பொங்கி வழிகிறது.
ஐம்பதில் பெருவாழ்வு என்ற கதையில் வாழ்க்கை சார்ந்த தத்துவங்களை ஆசிரியர் நிறைய தந்துள்ளார் . மனிதன் எப்பொழுதுமே நேற்று அது நிகழ்ந்துவிட்டதே… என்றும், நாளை என்ன நடக்கும் என்று நினைத்துக் கவலைப்படுகின்றோம். கடந்து போனதை நினைத்து வருந்துவதால் அதை மாற்ற முடியாது . எதிர்காலத்தை நினைத்து அது எப்படி இருக்குமோ என்று பயந்து கவலைப்பட்டு இந்த அருமையான நிகழ் காலத்தில் வாழ தவறவிடுகிறோம் என்று அற்புதமான சிந்தனையை தந்துள்ளார்.
மேலும் ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் மூச்சை உள்ளே இழுக்கின்றது . பின் தான் அழுகை. அழுகையை கேட்டதும் உடன் இருப்பவர்களுக்கு எல்லாம் சந்தோஷம் . அதே போல மனிதனின் கடைசி காரியம் மூச்சை வெளியே விடுவது. மூச்சு நின்றவுடன் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் அழுகிறார்கள். இந்த இரண்டு மூச்சுகளுக்கு இடைப்பட்ட காலம் தான் வாழ்க்கை என்று வாழ்வியல் தத்துவங்களை அழகாக எடுத்து கூறி…
வீடு மிகவும் பழசாகிவிட்டால் மாற்றுகிறோம் அல்லவா, அதைப்போல்தான் இந்த உடலும். உடல் பயனுற்றதாகும் போது வேறு உடல் தேடி பிடிக்கிறது ஆன்மா. ஆன்மா அழிவற்றது என்கிறார்.
மிகச் சுருக்கமாக ஒரு கதையை ஆரம்பித்து முடிக்கும் திறன் ஆசிரியரின் கைவந்த கலை. ஆசிரியர் மென்மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.
நூலின் விவரம்:
புத்தகத்தின் பெயர் : அட்சய பாத்திரம்
ஆசிரியர் : ராஜாமணி பழனியப்பன்
பக்கங்கள் : 74
பதிப்பகம் : புஷ்டகா
விலை : 90
தலைப்பு: சிறுகதை
நூல் அறிமுகம் எழுதியவர்:
✍️ பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
02.11.24
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
