ராஜி வாஞ்சி கவிதைகள்குடக் கூட்டங்கள்….

குறை குடக் கூட்டங்கள் கூடி
நிறை குடத்தை நெட்டித் தள்ளி
நிரம்பிய குடங்களின் நீர்
பரவியோடி பாதி குடமாய்
போனாலும் நிறைகுடம் நிறைகுடமே…
நெளிந்து வளைந்து சொட்டையானாலும்
வழிந்து ஓடி அரையானாலும்
அக்குடங்கள் அக்கம்பக்க
அக்கப்போர்களில் அழுந்தி
பக்குவமாய் பாத்திரத்து நீரை
பத்திரப்படுத்தும் பாங்கினால்
நித்திய நிறைகுடங்களுக்கு
எத்தனை குறைவாய் நீரிருந்தாலும்
எத்தகு வருத்தமில்லை
பத்திரைமாற்றுத் தங்கத்திற்கு
மொத்த நீரும் வடிந்தாலும்
வெறுமையான இடத்தில்
பெருங்கடவுள் நிறைந்தது என
விரும்பி ஏற்று நகரும்.கவிதை 2

முள் கரண்டியொன்று மோதி

டணாரென ஒலியெழுப்ப

திடுக்கிட்டது மனகுருவி

முழுநிலவு பாத்திரத்தொட்டி பார்த்து.

மூழ்கும் ஓசை கேட்காது

முங்கு நீச்சல் போடும்

முக்குளிப்பான் கரண்டிகளும் கிண்ணங்களும்

காணாமல் போனவர் பட்டியலை நிரப்ப

காலம் கடந்து வந்தாலும்

நேயத்திற்கும் அன்பிற்கும்

யாரும் பெயர் மாற்றம் செய்வதில்லை.

ராஜி வாஞ்சி
[email protected]
Face book: Raji Vanchi