ராம் பெரியசாமி கவிதைகள்

ராம் பெரியசாமி கவிதைகள்



கவிதை 1
எழுதுபவனின் கோடாரிகள்
—————————————
எவையெல்லாம் நேசிக்கத் தவறியிருந்தோமென்பதை
இரவின் பெருவெளியைக்காணாத
சிறைகளில் வாழ்பவனின் அமைதிக்குள் எரிகிற நட்சத்திரங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகளில் வந்தமரும் வானம் அதனின் சாயல்
நம் வாழ்வு
தன் வாழ்வின் இருப்புகளிலிருந்து
தன் சிறகுகளை உடைத்து
தனக்காக ஒதுக்கப்படுகிற கூடுகளில் ஔிந்துக்கொள்ளும்
மூன்றாம் அதிகாரத்தின் பிழை
வாழ்வென்பது  ஓடும் தீ
அணைத்து விழுங்கத்தெரிதல் வேண்டும்
வாழ்வென்பது எரியும் நீர்
அழுது  தாகம் கரையத்தெரிதல்
வேண்டும்
இணையாகவே பழுத்துக்கொண்டிருந்த இலைகளிரண்டில் ஒன்றில் விழவே
ஒன்றிற்கு பூமியுடலதிர்கிறது ..
நடுக்கங்களின் வரிக்கோடுகளுடன்
உதிர்ந்த இலை சுவற்றில் சாய
நிழலும் சாய்ந்து விழுகிறது
இது நிழலுக்கான உன்னதங்களில் கடைசியான பிம்பம்
உடைந்த ஒரு புல்லாங்குழலிற்குள்
இன்னும் ஊதவே செய்திடாத ராகங்கள் கடற்கரையில் அஸ்திகளாக கரைக்கப்பட்ட பிரேதங்களின் கரைசல்கள் அல்ல அவை
ஒவ்வொரு மனிதனும் ஒரு வித இசைஞன்
அவனின் மூச்சு சப்தம் அவனுள்
கேட்கின்ற வரை
இங்கே குயிலுக்காகவும் மயிலுக்காகவும் உயிலை எழுதிவைத்தவன் வாழ்ந்த மண்
தீப்பெட்டிக்குள் நமத்துப்போன குச்சிகளுடன் எரிந்து போவதற்காக
நம்மை அடைக்கப்படுகிறபோது
நகரவாழ்வு கோரப்பற்களுடன் புன்னகைக்கத்தான் செய்கிறது
உலோகங்களால் செய்த
சாதியங்களை ஏதாவதொரு
வர்ணங்களில் மேல்தட்டுக்களில்
பழங்களாய் அடுக்கி வைக்கின்றனர்
இருப்பினும்
தீவிரவாதமென்பது
அன்பை ஔித்துக்கொள்வதில்
தான் மிதவாதிகளின் கண்கள்
எரிந்துக்கொண்டிருக்கிறது
தாழ்ப்பாளை உடைப்போம்
திறவுகோலென்பது அறிவும்
அன்பும்  என்பதை உணர்த்த
எழுதுபவனின் கோடாரிகள்  எழுதுவதற்கு தவறியதில்லை
உடலெங்கும் வியாபித்து
அடைத்திருக்கும் புழுக்கங்களை
மூளையின் ஒரு யன்னல் வழியாக
திறந்து நிதர்சனங்களை சுவாசிப்போம்
பிழைக்கத்தானே வந்திருக்கிறோம்
பிழைத்திருப்போம்
பிழைத்திருக்கச்செய்வோம்


கவிதை 2
எரிந்துக்கொண்டிருக்கும் வயிற்றினருகில் மின்மினுத்துக்கிடக்கிறது
ஒரு காலத்தின் சர்ப்பம் …
உள்ளே நுழைகையில் பேரமைதி
வெளிவருகையில் விசும்பலின் சப்தம்
சுகித்திருக்கும் கப்பிய பசி
உணவு வேட்கையின் சுழல்வு
குரல்வளைக்குள்
ஒரு கையளவு
தாழியின் உருளுகை
பாதங்களை பதித்திருக்கிறேன்
வழியறிந்தும் இரங்கலித்தும்
மழித்துக்கொண்டிருக்கிறது அரூபம்
உடலின்நிழல் தூதாய் விழ
இரண்டு செப்பமாய்  கரைகிறது
நாட்கள்
விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்
உட்படுவது  மூப்பின் இளைப்பு …


கவிதை 3
உடைந்த காடுகளின் வழியே
ஒரு ஆறு
முகத்தை கழுவிக்கொள்கிறான்
அவனெனும் நான்
நிழலும் கழுவியதுப்போல் சிணுங்குகிறது
பாதங்களில் ஒட்டியிருந்த மண்துகள்கள் அவ்வளவு
பரிசுத்தம்
எளிதாய் உதிர்வதில்
ஒரு துளி மழையின் நேர்த்தி
மௌன விலங்குகளின்
குமிழிக்கண்கள்
ஒரு நாழிகை
மரங்கள் உற்றுப்பார்க்கிறது
உடலைப்பார்த்தே
பழக்கப்பட்ட கண்கள்
கிழக்கும் மேற்கிற்குமான
சூரியன்
அதன் முகபாவனையை
கழுவிக்கொண்டிருக்கிறது கடல்
ஒரு புள்ளி முடிய ஒரு புள்ளியாய்
தொடர்கிற வாழ்வை
கவ்வியபடியே
உயிர்ப்பிக்கிறது பிரபஞ்சம்


கவிதை 4
சந்தியா காலம்
———————–
எழுத்துக்களோடு பேசத்தொடங்குகிற
மழலையின் குரல் போல்
நனையுமொரு மாலை மழை
கொஞ்சம் கைப்பிடிமண்ணை
கன்னத்தில் வைத்து பருக்களை
அமுக்கிய சந்தியாகாலக் குறிப்புகள்
நந்தியாவட்டப்பூக்களை மோதிரமாய்
அணிந்து  காகித வானூர்திக்குள்
காதலை உள்பெட்டிக்குள் தூதமர்த்திய சிறகாட்சம்
எங்கேனும் ஔிந்து பறந்து மின்மினுத்துக்கொண்டிருக்கும்
பறவையினத்துக்கு விதையூன்றி
படப்படத்த அன்பின் தூயவெளி
சவுக்கார நுரைப்பொங்கின்
வட்டத்தில் பிரபஞ்சக் குழிழ்களை
பறத்தலிட்டு விரல்களால் உடைத்துக்கொண்டிருந்த வான்துறக்கம்
சொப்புச்சாமான்கள் கழுவிக்காய
வைத்தாயிற்று
விறகொடிக்க போன குழந்தையின்
முகத்தில் இறக்கங்களின் சுனை
என்னவெழுதி என்னப்பயனென
எழுபத்தைந்தாவது வயதில்
நாற்பத்திரண்டாவது மாடியின்
பால்கனியில் காலருகே விழுகிறது
வெண்புறாவின் சிறகு
ராம் பெரியசாமி



Show 2 Comments

2 Comments

  1. ராம் பெரியசாமி

    பேரன்பும் மகிழ்வும் நன்றியும் சார் ❤️
    தொடர்ந்து நீங்கள் உற்சாகப்படுத்த கிறீர்கள்
    நாங்கள் மகிழ்ந்திருக்கிறோம்
    கவிதைகளைத் தவிர கைமாறு என்ன செய்வது
    நல்ல கவிதைகளை படைத்து உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்
    அன்பின் பிரியங்கள் சார்

  2. நா.வே.அருள்

    ராம் உங்கள் கவிதைதான் உங்கள் முகவரி. நல்ல கவிஞன் கடலை வந்தடையும் ஆறாகிவிடுகிறான். தொடர்ந்து அனுப்புங்கள். புக் டே தனது வாசல் கதவை உங்களுக்காகத் திறந்து வைத்திருக்கிறது. அன்பும் வாழ்த்துகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *