கவிதை 1
மறக்காமல் இறந்து விடுங்கள்
எப்போதும் போலே
அழுவதற்கு அவர்களிருப்பார்கள்
மறக்காமல் உயிர்தெழுங்கள்
எப்போதும் போலே
ஆர்ப்பரிக்க அவர்களிருப்பார்கள்
இது பிறவியின் கூடு
ஒரு உள்ளங்கையை
மூடிக்கொண்டால் போதும்
திறக்கும் வரை
திறவுகோலை தேடிக்கொண்டிருப்பார்கள்
நேற்றைய சமாதிக்கு பெய்த மழைக்கு தெரியும்
இவன் இறந்துக்கொண்டேயிருப்பது
இவனுக்காக இல்லை
நேற்றைக்காக …
நிழலை மொய்த்துக்கொண்டிருக்கும்
கொசுக்களுக்காக பின்னப்படுகிற வலை
எல்லா உரையாடல்களின் தொடக்கம்
ஞானம் பெற்றவை விலங்குகள்
அவை அழிக்கும் கற்புகளில்
மனித நேயம்
உண்ணவே முடியாத மீன்களை
வளர்ப்பதும்
உண்ணமுடிந்த மீன்களை வறுப்பதும்
a2 – b2 =(a+b) (a-b)
ஒவ்வொரு செங்கோண முக்கோண கருப்பையிலும் இருமடியைக்காட்ட
ஆக்சிஜன் செலுத்தும் தாய்மையின்
விதிப்படி …
மறக்காமல் இறந்து விடுங்கள்
மறக்காமல் உயிர்த்தெழுங்கள்
கவிதை 2
இரக்கமற்ற இரவு
கனவுகளை சலஞ்சாதிக்கையின்
பிரதிவாதியாக்குகிறது ..
12 ம் எண் திருகி முடுக்கும் கருவிக்காக தயாரிக்கப்பட்ட அச்சாணி
சற்று துருப்பிடித்து இறுகி நிற்கிறது
உடைத்தெறியப்படுவதற்கு
முட்டை ஓடுகளல்லவை
திறந்தவெளி நிந்தைகள்
நவிரத்தை
வழித்துக்கொண்டேயிருக்கும்
வெண்சாமரையின் சிம்மாசனங்களை
ஆட்காட்டி விரல்களில் பூசப்படுகிற
நீல மையினால் தேர்ந்தெடுக்கப்படுபவை…
வயதான வொரு கிழவியை
அம்மா வென்றீரா
பிறமொழியறி தவறில்லை
என்பான் பாரதி
ஆதாரத்திற்கென அத்தனை அடையாளங்களும்
சமர்ப்பிக்கும் வரை
இந்த குளத்தில் நீச்சலடிக்கப்பட்டவர்களென
சான்றிதழ்கள் தருவதை
நீங்கள் எதிர்க்கின்ற வரை
உங்கள் முதுகுளில் புண்களென பச்சை குத்தப்படும் வரை
பிங்கலி( தேசியக்கொடியை வடிவமைத்தவர்) யின் கொடியில்
சுதந்திரமிருக்கிறது
கலவிகளுக்காக தற்கொலைகள்
நிகழ்ந்தது போய்
கல்விகளுக்காகவும்
நிகழ்கிறதென்றால்
கால்களை ” நீட் ” டி யமர்ந்த
சரசுவதியின் வீணை நரம்புகளை
கொஞ்சம் பழுது பார்ப்போம்..
கவிதை 3
நீ தீங்குழல்
கால முதிர்ச்சியின் ஊற்று
சமுத்திர ஒரு துளிக்குள்
விழுங்கிய சஞ்சிதம்
நீ பிறவியொளி
உயிர்பெற்று மூச்சிரைக்கும்
ஊதற் பை
உடலேற்றம் இறக்கிக்
கட்டிய கிணறு
நீ உருவேற்றம்
பிறந்தகத்தின் சுழியம்
அசலனத்தின் நிமித்தம்
தியானத்தின் நித்ய ஓசை
நீ நிறைவு
வான் நீலத்தின் தருண்யை
துளும்பிய குருதி யிறக்கம்
புறசொல் நசிக்கும் சிமிழ்
மௌனத்தின் மிருது
நீ நானாகாரம்
ஏதுமின்மையின் ஜமத்கனி
மூன்று யுக இருள்
நொடிக்கு நொடிக்குள்
பிரசவிக்கும் மரணம்
கவிதை 4
இந்த வானத்தில் தெரியும்
அத்தனை ஓட்டைகளும்
இவர்களால் அடைக்க முடியாத தருணத்தினால்தான்
அதை நம்மிடம்
நட்சத்திரமென அறிமுகப்படுத்தினார்கள்…
ஒரு கிழவனின் பீடி
அவன் நெஞ்சில் கரையாத சளி
இரவை தாழிட்டு விடிந்ததும் பார் என்கிறான்
இன்னமும் தூங்கியே அயர்கிறான் …
அவன் இருதயத்தில் மேல்தர ஓட்டைகள் …
பாசி படிந்த தொட்டி
மோளுவர்கள் அதிகம்
ஒன்று வாக்கியமாக
ஒன்று வரிகளாக
இவர்களின் நேர்நின்று
நீங்கள் பேசாதீர்கள்
இவர்களுக்கு சாதியில்லை
#எழுத்தென #வியாதியிருக்கிறது …
பிரபஞ்ச மிடுக்குகளின் கீழ்
செப்பனிடப்படாத செர்பியன்ஸ் கூட்டம்
நேற்றே அறிவித்த கோழையின்
உதடுகளில் ரசங்களென
பிடுங்கி தின்னப்பட்டவை …
இந்த காற்றை இப்படியே
சுவாசிப்பதற்கு எத்தனை
கட்டளைகள் …
வேண்டாம்
வேண்டுமென லயிக்காதீர்கள்
இந்நேரம் மூச்சுத்திணற
உங்களை அழிப்பதற்கு
யாராவது ஒருவரை நேசிப்பார்கள் …
அவர்களுக்குத் தெரியுமா..
நேசிப்பதற்கான அன்பை இதுவரை எவனும் எழுதவில்லை யென
ராம் பெரியசாமி
அருமை வாழ்த்துகள் நண்பா🌺🌺🌺💐💐💐💐💐💐💗