கதகளி (Kathakali) – நூல் அறிமுகம்
இந்த உலக வாழ்வில் ஒரு மனிதன் பணம் சம்பாதிப்பதற்கான வாசலை ஓரளவுக்கு பட்டுத் தெரிந்து கொள்கிறான். அதேபோல வாழ்க்கையை கட்டமைப்பதற்கான வழியைத் தெரிந்து கொள்கிறான். ஆனால் பயணத்திற்கான வாசலைத் திறப்பதற்கு தவறிவிடுகிறான். பயணிக்க விரும்புபவர்கள் எஸ்.ரா வின் தேசாந்திரியையும், இலக்கற்ற பயணியையும் வாசிக்க வேண்டும். நாம் எங்கே போய்விட முடியும் . எனக்கு பயணிப்பதற்கு எப்போது நேரம் இருக்கிறது என்று பலரும் சொல்லிக் கொள்வது உண்டு. அதிலும் குறிப்பாக பெண்களைச் சொல்லவே தேவையில்லை .
பயணிக்காதவர்கள் எல்லோருமே தங்களுக்கான வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை திறந்து பார்க்க முடியாதவர்களாக அல்லது அதை திறந்து பார்க்கும் சாவியைத் தொலைத்து விட்டவர்களாக இருக்கிறார்கள் . பயணங்கள் செய்யும் போது ஒரு காலியான பாத்திரத்தில் மீண்டும் புதிதாக பல விஷயங்களை நிறைப்பது போல புத்துணர்ச்சியை தரும். ஒரு புதிய மனமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால் அதிகாலை சூரிய உதயத்தை , சூரிய அஸ்தமனத்தைப் பார்க்காத இன்னும் எத்தனையோ மனிதர்களை….
ஏன் எனக்கும் தெரியாது . அதை பார்ப்பதற்கு எங்கே இந்த அவசர உலகத்தில் நமக்கு நேரம் இருக்கிறது என்ற அங்கலாய்ப்பு ஒழிய வேண்டும். பயணங்கள் என்றாலே மது குடிக்கும் கேளிக்கை உலாவாகவே அமைத்துக் கொள்ள மனிதனின் மன ஆழத்தில் பதிந்து போயிருக்கிறது. இது மாற வேண்டும்.
சரி வாருங்கள், ராம் தங்கம் அவர்களின் பயணத்தில் ஒருவராய் நாமும் சங்கமிப்போம். கொடுங்கலூர் கண்ணகியை வழிபாடு செய்துவிட்டு இந்தியாவின் முதல் மசூதியான சேரமான் மசூதியில் ஆரம்பிக்கிறது பயணம். இப்படி ஒரு மசூதி சேரர் கட்டடக்கலை பாணியில் இருக்கிறது . 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானுக்கு தங்க முலாம் பூசப்பட்ட சேரமான் ஜும்மா மசூதியின் மாதிரியைப் பரிசாக வழங்கினாராம். இஸ்லாமிய கருத்துக்கு குத்துவிளக்கு ஏற்றுவது எதிரானது. ஆனால் இந்தியாவிலேயே சரவிளக்கு கொண்ட ஒரே மசூதி இந்த “சேரமான் மசூதி” தான்.
அடுத்ததாக நாம் பார்க்க போவது திருவட்டாறு ஆதி கேசவப் பெருமாள் கோவிலில் நடக்கும் கதகளி (Kathakali). அதற்கு முன் கதகளி என்றால் என்னவென்று நாம் அறிந்ததில் இன்னும் கூடுதல் தகவலை சேர்ப்போம். 17 – 18 ஆம் நூற்றாண்டுகளில் கதகளி உருவானதாகச் சொல்கிறார்கள் . கத என்றால் கதை , களி என்றால் நடனம் . கதகளி இலக்கியம் இசையின் நடிப்பு நடனம் மற்றும் ஓவியம் ஆகியவற்றின் அழகிய கலவையாக இருக்கிறது . கதகளி (Kathakali) ஒரு சுவாரஸ்யமான ஆண்பால் அம்சம் கொண்ட இந்தியாவின் ஒரே நடன வடிவம் ஆகும் . இதில் முக்கியமாக ஆறு வகையான பாத்திரங்கள் உள்ளன. அதேபோல அதில் போடப்படும் ஆடைகளின் நிறங்கள் , உடைகள் ஒவ்வொன்றும் பாத்திரங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
கேரளா என்றதுமே பலரின் நினைவுக்கு வருவது புட்டு , ஆலப்புழா வீடு , பீஃப், தென்னை மரம் , பசுமையான மலைப்பிரதேசங்கள் என்பதோடு கதகளியும் ஒன்றுதான். சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்றாலும் அதன் கம்பீரமும் நடனமும் இசையும் அழகும் இதை ஒரு சிறந்த கலை வடிவமாக இப்போது வரை தன்னை தக்கவைத்து இருக்கிறது. கொச்சிக்கு அருகில் உள்ள கேபி ஜேக்கப் கதகளி சென்டரில் யோகா , ஓவியம் , கதகளி , நடனம் , களரி போன்ற பல்வேறு கலைகளை ஒருங்கிணைக்கும் சங்கமமாக அந்நிலையம் இருப்பது வியப்பிற்குரியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு சுற்றுலா தலங்கள் இருக்கிறது . தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகிற இடமாக பல பகுதிகள் இருந்தாலும் , இது போன்ற பாரம்பரியமான தமிழ் மக்களுடைய நிகழ்த்து கலைகளை அரங்கேற்றும் அரங்கங்கள் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது.
அதன் பிறகு “தெற்கின் சொர்க்கம்” என்று அழைக்கப்படும் கோவளம் கடற்கரை குறித்தான விளக்கங்கள் கோவளத்தை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. பாரா செயிலிங், ஸ்பீட் போட் , சன் பாத் , ஹெர்பல் பாடி டோனிங் மசாஜ் என கோவளம் இன்டர்நேஷனல் பீச்சுக்கு நிகராக மாறி இருக்கும் பொழுது ஒரு மினி கோவாவை நாம் பார்க்காமல் இருந்தால் நம் வாழ்க்கை பயணம் நிறைவுறுமா…?? என்ற எண்ணத்தை நம்முள் ஏற்படுத்தி விடுகிறது.
“கடல் பார்க்கலாம். கடலில் பார்க்க என்ன இருக்கிறது? கடலில் தான் எல்லாம் இருக்கிறது.”, என்கிறார் . உண்மைதான் வெற்றுக் கண்ணோடு பார்க்காமல் ஆழ்மன நிம்மதியோடு ஆழ் கடலை நோக்கினால் , ஆழியும் ஆயிரம் கதைகள் சொல்லும் அல்லவா..!!
நாம் வாழும் பகுதியில் ஒரு இடம் . ஆனால் நமக்குத் தெரியாமல் எங்கோ இருந்து வந்த வேற்றுநாட்டு இளவரசருக்கு தெரிந்திருக்கிறது என்றால் , அதன் பின்னர் அந்த இடத்தின் போது மவுசு கூடுமல்லவா. அதுபோல்தான் 2013 ஆம் ஆண்டு கட்டடக்கலை ஆர்வலரான இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் அவர்களின் வருகைக்கு பின்னர் ஒரு அருங்காட்சியகம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது. இந்த நாட்டுப்புற அருங்காட்சியகம் ஜார்ஜ் தாலியத் – அன்னி ஜார்ஜ் தம்பதியரின் கனவு திட்டம் என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஜார்ஜ் பாரம்பரிய இந்தியக் கலைகளைத் தேடி சென்று தனது சேகரிப்பை தொடங்கி இந்த அருங்காட்சியகத்தை திறந்து இருக்கிறார்.
இப்படி பல அறிய தகவல்களை கொண்டுள்ளது இப்புத்தகம். முடிவில் இரண்டு நேர்காணல்களைக் கொண்டுள்ளது . ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளரை மலையாள உலகம் எப்படி கொண்டாடுகிறது என்பதை அதை வாசிக்கும் போது நம்மால் உணர முடியும். தமிழ்நாட்டில் அத்தனை எளிதாக பெயர் போன எழுத்தாளராக வாழ்ந்துவிட முடியுமா என்ற கேள்விக்கும் விடை அதில் இருக்கிறது.
தன் வாழ்வில் எழுத்து உலகத்தில் கண்ட சறுக்கல்களையும் , கற்ற பாடங்களையும் , இனி வாழ்வை நோக்கி எதிர்கால திட்டத்தை தீட்ட வேண்டிய முக்கிய முடிவுகளையும் ஆசிரியர் நேர்காணல் வடிவில் கூறியிருப்பது , அடுத்த தலைமுறையினரில் எழுத்தாளராய் தடம் பதிக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாய் , வழிகாட்டியாய் அமையும். பிரபலமான எழுத்தாளரான கி.ரா மற்றும் எஸ் ரா அவர்களுடனான சந்திப்புகளையும் வாசித்ததில் நிறைவு.
பயணத்தில் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் இன்னும் எத்தனை இடையூறுகளை அவர் சந்தித்திருக்க நேரிடும் என்ற எண்ணாமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் பயணம் என்றால் இரண்டும் இருக்கும் தான் . தடைகளை மட்டும் கண் கொண்டு பார்த்தோமானால் வாழ்வின் உல்லாசங்களை நிச்சயம் அனுபவிக்காமல் தான் போக முடியும். சரி , பயணத்துக்கு தயாராவோமா..!
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர்: கதகளி (Kathakali)
ஆசிரியர் : ராம் தங்கம் (Ram Thangam)
விலை : ரூ.177
பக்கங்கள் : 112
வகைமை : பயணக் கட்டுரை
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா.விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.